கார், பைக் ரிப்பேருக்கு ஒரு ஆப்!



மெக்கானிக் என்றாலே நம்மில் பலருக்கும்... பதற்றம், கோபம், பயம், எரிச்சல் எனக் கலவையான உணர்ச்சிகள் எழும். பில் கேட்ஸ் ரேஞ்சுக்கு பில் போட்டது, அவசர நேரத்தில் நாட் ரீச்சபிள் ஆனது, சீதையைக் கவர்ந்த ராவணன் போல சர்வீஸ் விட்ட வண்டியைத் தராமல் நம்மை சுத்தலில் விட்டது... இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ‘அவ்வ்வ்’ அனுபவம்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளியாகத்தான் வந்திருக்கிறது ‘கோபம்பர்’ (gobumpr). சென்னையில் கார், பைக் பழுதுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் இலவச ஆண்ட்ராய்டு ஆப். தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உருவாக்கியிருக்கும் இந்த ஆப், சுமார் 300 மெக்கானிக்குகளை ஒருங்கிணைத்து நம் மொபைல் போனுக்குள் கொண்டு வருகிறது!

‘‘நான் எம்.பி.ஏ படிச்சவன். ‘வாடிக்கையாளர்கள் கடவுள்கள்’னுதான் எங்க சிலபஸ் எல்லாம் சொல்லுது. ஆனா ரியாலிட்டி அப்படி இல்லை. ஒரு முறை கார் பங்சர்னு சர்வீஸ் சென்டர் ஆட்களை வரச் சொன்னேன். அவங்க, ‘பங்சர் எல்லாம் நாங்க போட மாட்டோம்; ஸ்டெப்னியை வேணும்னா மாத்தித் தர்றோம்’னு சொன்னாங்க.

ஆனா, ஸ்டெப்னியும் பங்சர். கடைசியில எதுவுமே செய்யாம ஒரு தொகையை சர்வீஸ் சார்ஜா வாங்கிட்டுப் போனாங்க. ஒரு நல்ல - நியாயமான மெக்கானிக் கிடைக்காம மக்கள் எவ்வளவு சிரமப்படுறாங்கனு அப்போ தெரிஞ்சுது. அதுதான் இந்த ஐடியாவுக்கு விதை!’’ என்கிறார் இந்த ஆப் உருவாக்கியவர்களில் ஒருவரான கார்த்திக். இவரின் எம்.பி.ஏ தோழர் நந்தகுமார், பள்ளித் தோழர் சுந்தர் என மூவரும் இந்த முயற்சியில் கை கோர்த்திருக்கிறார்கள்.

‘‘பங்சர், பிரேக்டவுன், ரிப்பேர், ஜெனரல் சர்வீஸ்... இப்படி நாலு பிரிவா இந்த ஆப்பைப் பிரிச்சிருக்கோம். டவுன்லோட் செய்ததும் உங்க பெயர், வண்டியின் வகை, வண்டி வாங்கிய வருஷம், இ-மெயில் ஐடி, போன் நம்பர்னு எல்லா விவரங்களையும் இந்த ஆப் கேட்கும். அதுக்குப் பிறகு 300 மெக்கானிக்குகள், 24 மணி நேரமும் விழிப்பா இருக்குற ஒரு நெட்வொர்க்ல நீங்களும் இணைக்கப்படுவீங்க.

உங்க வண்டியில என்ன பிரச்னைன்னாலும் இந்த ஆப்ல தெரிவிக்கலாம். நீங்க எந்த ஏரியாவில் நிக்கிறீங்களோ அங்க பக்கத்தில் இருக்குற மெக்கானிக் ஒருத்தர் உடனே ரிப்ளை பண்ணுவாங்க. ‘இதுதான் பிரச்னை... இதை வந்து சரி பண்ணிக் கொடுக்க எவ்வளவு கேக்கறீங்க?’னு கஸ்டமரான நாம கேக்கலாம். மெக்கானிக்குகள் போட்டி போட்டுக்கிட்டு சார்ஜைக் குறைச்சுப் போடுவாங்க. அதில் யாரை வேணும்னாலும் நாம தேர்ந்தெடுக்கலாம். ஆக, இதில் கஸ்டமர்கள்தான் ராஜா!’’ என்கிறார் நந்தகுமார். ஈரோட்டுக்காரரான இவர் இந்த ஆப் உருவாக்கத்துக்காக சென்னைக்கே வந்துவிட்டார்.

‘‘மெக்கானிக்குகளுக்கும் இதில் லாபம் இருக்கு. உட்கார்ந்த இடத்திலேயே அவங்களுக்கு கஸ்டமர்கள் கிடைச்சிடுறாங்க. ‘இந்த மாசம் என்கிட்ட சர்வீஸ் விட்டா குறிப்பிட்ட அளவு ஆஃபர் இருக்கு’ங்கற மாதிரி விளம்பரங்களையும் மெக்கானிக்குகள் இதில் கொடுத்துக்கலாம். மெக்கானிக்குகள் யாரையும் இந்த ஆப்ல நாங்க சும்மா சேர்த்துடலை. சந்து பொந்துகள்ல உள்ள டூவீலர், கார் சர்வீஸ் ஸ்டேஷன்களை எல்லாம் சல்லடை போட்டுத் தேடினோம். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வீஸ் ஸ்டேஷன்களைப் பற்றி ஆய்வுகள் செய்தோம்.

அவங்களோட கஸ்டமர்கள்கிட்டயும், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கற கடைக்காரங்ககிட்டயும் விசாரிச்சோம். ஒரு பழுதான வாகனத்தைக் கொடுத்து சர்வீஸ் செய்யச் சொல்லிக்கூட செக் பண்ணினோம். அப்படி சலிச்சு எடுத்துதான் இப்போதைக்கு 51 கார் மெக்கானிக்குகளையும் 152 பைக் மெக்கானிக்குகளையும் 126 டயர் பங்சர் சர்வீஸ் ஸ்டேஷன்களையும் இந்த ஆப்பில் இணைச்சிருக்கோம்!’’ என்கிறார் சுந்தர். இந்த மூவருமே பொறியியல் படித்து காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள். அவற்றை உதறிவிட்டுத்தான் ஆப் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

‘‘இந்த ஆப் அலைச்சலையும் குறைக்கும். எங்கேயோ இடிச்சு நம்ம வண்டியில ஒரு சின்ன பெண்டு விழுந்திருக்குனு வைங்க. அதை அப்படியே போட்டோ எடுத்து இந்த ஆப்ல போடலாம். அதைப் பார்த்துட்டு எவ்வளவு செலவாகும்னு மெக்கானிக்ஸ் சொல்லுவாங்க. கட்டுப்படியானா கூப்பிடலாம். சில கஸ்டமர்களுக்கு தமிழ்ல டைப் பண்ண வராது.

இங்கிலீஷ்தான் வசதி. ஆனா, சில திறமையான மெக்கானிக்குகளுக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியாது. அதனால வாடிக்கையாளர்கள் போடுற பிரச்னைகளை தமிழ்ல மொழிபெயர்த்துத் தர்ற சர்வீஸும் இந்த ஆப்ல இருக்கு. சர்வீஸ் எப்படி இருந்ததுனு கஸ்டமர்கள் மார்க் போடப் போடத்தான் ஒரு மெக்கானிக்குக்கு மவுசு கூடும்.

அதனால இந்த ஆப்ல எப்பவும் தரமான சர்வீஸ் கிடைக்கும்னு உறுதியா சொல்லலாம்!’’ என்கிறார்கள் இந்த எஞ்சினியர்கள். மெக்கானிக்குகள் போட்டி போட்டுக்கிட்டு சார்ஜைக் குறைச்சுப் போடுவாங்க. அதில் யாரை வேணும்னாலும் நாம தேர்ந்தெடுக்கலாம்.

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்