தகுதி
‘‘நம்ம ஆபீஸில் வேலைக்காக விண்ணப்பம் செஞ்சிருக்கவங்க லிஸ்ட் இதுதான் சார். உங்க முடிவுக்காக காத்திருக்கோம்!’’ - உதவியாளர் உமாபதி, எம்.டி கேசவ்விடம் சொன்னார்.‘‘இவங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் தனித்தனியா கூப்பிட்டு, அறிவிருக்கா? பொறுப்பிருக்கா? ஏன் கட்டம் போட்ட சட்டை போட்டே, ஏன் கட் ஷூ போடலைனு கண்டபடி திட்டுங்க... பதிலை பதிவு செஞ்சு என்கிட்ட கொடுங்க!’’ என்று பணித்தார் கேசவ்.
இப்படி சம்பந்தமில்லாமல் திட்டினால் யாருக்குத்தான் கோபம் வராது? இன்டர்வியூவில் ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவில் டென்ஷன் ஆகி கோபத்தை வெளிப்படுத்தினார்கள். ‘‘நிறுத்துய்யா...’’ என ஒருவர் உமாபதியின் சட்டையையே பிடித்துவிட்டார். கோபப்பட்டாலும், அதை வெளிக்காட்டாமல் பொறுமையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி, குறைகளை நிவர்த்தி செய்வதாகச் சொன்னது ரமேஷ் என்பவர் மட்டும்தான்.
‘‘நம்ம வாடிக்கையாளர்கள்கிட்ட நம்ம தயாரிப்புகள் பற்றி குறைகளைக் கேட்டு, பணிவாவும் பொறுமையாவும் பதில் சொல்லும் ‘கஸ்டமர் சர்வீஸ்’ வேலைதானே இது. ஸோ, இதுக்கு தகுதியானவர் ரமேஷ்தான். அவருக்கே ஆர்டர் கொடுங்கள்!’’ என்றார் எம்.டி கேசவ். ‘மனைவி நம்மீது குறைகளை அடுக்கிச் சொல்லும்போது, எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் கஸ்டமர் சர்வீஸ் பணியும்’ என்பது அவர் மனதுக்குள் ஓடியது!
எஸ்.ராமன்
|