தயாரிப்பாளர் ஆகும் ஹீரோக்கள்!
கோலிவுட்டில் புது டிரெண்ட்
நடிகர்கள் எல்லாம் ஏதோ பார்ட் டைம் ஜாப் போல தயாரிப்பாளர்களாகவும் வலம் வரும் சீஸன் இது. அட, பெரிய தலைகளை விடுங்கள்... இளம் ஹீரோக்கள் தனுஷ், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், சித்தார்த், அருண்விஜய்...
ஏன் அதர்வா வரை பலரும் இப்போ புரொடியூஸர் ஆகியாச்சு. இன்னமும் தயாரிப்பாளர்களாக மாறாத ஹீரோக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல. எப்படி சாத்தியமானது இப்படி ஒரு டிரெண்ட்? ஹீரோக்களுக்கு ஏன் இந்த புரொடியூஸர் கெட்டப்? என விசாரித்தால் ஆச்சரியங்கள் விரிகின்றன!
‘சமர்’, ‘பட்டத்து யானை’ படங்களின் ரிலீஸ் சமயத்தில்தான் ‘மதகஜராஜா’ படத்திற்கான நிதிச் சிக்கல் எழுந்தது. ‘‘நான் நடித்த எல்லா படங்களுமே குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வந்துள்ளன. ‘மதகஜராஜா’ படம் தாமதமாகிவிட்டது. அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியில்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன்’’ என்று ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ உருவான விதத்தைச் சொல்கிறார் விஷால்.
சித்தார்த் தயாரிப்பாளர் ஆனது வேறு விதத்தில். அடுத்தடுத்து தனது படங்கள் சரியாகப் போகாத நிலையில் குறும்பட இயக்குநர் ஒருவரின் கதை பிடித்துவிட, அதைத் தயாரிக்க தயாரிப்பாளரைத் தேடிப் பார்க்கிறார் சித்தார்த். ‘ஜில் ஜங் ஜக்’ என ஆங்கில டைட்டில் இருப்பதால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என உறுதியாகத் தெரிந்த நிலை... படத்தில் ஹீரோயின் இல்லை... இப்படி ரிஸ்க் ஃபேக்டர்கள் அதிகம் இருப்பதால் துணிந்து தானே தயாரிப்பாளர் ஆனார் சித்தார்த்.
‘‘ ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர்தான் தயாரிப்பதாக இருந்தது. ‘இவரைப் பார்த்தா இந்த புராஜெக்ட்டை கொண்டு போறவர் மாதிரி தெரியல. பாதியிலேயே விட்டுட்டுப் போறவர் மாதிரி இருக்காரே’ என என்னிடம் ஹீரோ விஷ்ணு விஷால் யதேச்சையாக ஒருநாள் சொன்னார். ஒரு கட்டத்தில் அது நிஜமாகிவிட்டது. ‘கவலைப்படாதீங்க, நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்’ என முன்வந்து தயாரிக்க ஆரம்பித்தார் விஷ்ணு!’’ என்கிறார் இயக்குநர் எழில்.
‘ஈட்டி’ ஹிட்டால் ‘கிக்கர்ஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் அதர்வா, ‘‘திறமையான அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் எண்ணத்துடன் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறேன். பட்ஜெட் படங்களை ஆண்டுக்கு இரண்டாவது தயாரிப்பேன்!’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
‘‘இது நல்ல விஷயம்தான். தமிழ் சினிமாவிற்கு இது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.. ஆனால்...’’ என்று பேச ஆரம்பித்தார் திரைப்பட விமர்சகரான ராமானுஜம். ‘‘இளம் ஹீரோக்கள் நடிக்க வரும்போதே சொந்தத் தயாரிப்பு தொடங்கி நடிச்சா அது நல்ல விஷயம். நாலு கோடி ரூபாய் சம்பளம் ஆகுற வரை வெளி தயாரிப்பாளர்களின் படங்கள்ல நடிச்சிட்டு, அடுத்து ஆறு கோடி ரூபாய் பேமென்ட் கேக்கறாங்க. ஹீரோவுக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்துட்டு அப்புறம் அந்தப் படத்தை லாபகரமா விற்க தயாரிப்பாளர்கள் படாத பாடு பட வேண்டியிருக்கு. கேட்ட சம்பளம் கிடைக்காத பட்சத்தில் ஹீரோக்களே சொந்தத் தயாரிப்பில் இறங்க ஆரம்பிச்சிடுறாங்க.
அவங்க தயாரிப்பாளர்கள் ஆனதும், முதல் வேலையா தயாரிப்புச் செலவைக் குறைச்சிடுறாங்க. ‘அந்த ஹீரோ படத்துல வொர்க் பண்றதே பெரிய விஷயம்’னு நினைக்கற டெக்னீஷியன்களை எல்லாம் மட்டமான சம்பளத்தில் கமிட் பண்ணி, அவங்க உழைப்பை ஹீரோக்கள் சுரண்டுற கொடூரமும் இங்கே நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.
குறைந்த செலவில் படத்தைத் தயாரிச்சிட்டு, ஹீரோ மட்டும் அவர் ஆசைப்பட்டபடி ஆறு கோடி சம்பளத்தை எடுத்துக்கிட்டு பெரிய விலைக்கு அந்தப் படத்தை பிசினஸ் பேச ஆரம்பிக்கிறார். ரஜினி ஏன் இன்னும் சொந்தப் படத் தயாரிப்பு விஷயத்தில் தயங்குறார்? காரணம், அவ்வளவு ரிஸ்க் இருக்கு. சொந்தப் படம் தயாரிக்கும் ஹீரோக்கள் நியாயமான விலையில பிசினஸ் பண்ணினா மட்டுமே இங்கே தாக்குப் பிடிக்க முடியும்!’’ என்கிறார் ராமானுஜம்.
‘‘என்னோட இந்தப் படத்துல கிராஃபிக்ஸ் வொர்க் நிறைய தேவைப்படுது. வெளிநாட்டு மேக்கப்மேன் கைவண்ணம் இருந்தால், கேரக்டர் இன்னும் மெருகேறும், பேசப்படும். இவ்வளவும் இருந்தா, படத்தோட பட்ஜெட் எகிறும். துணிஞ்சு இதைச் செய்ய தயாரிப்பாளர்கள் கிடைக்க மாட்டாங்க. அதனாலதான் சொந்தமா தயாரிக்க வேண்டியிருக்கு!’’ என்கிறார் ஒரு ஹீரோ!
‘திருடா திருடி’ உள்பட பல படங்களைத் தயாரித்தவர் எஸ்.கே.கிருஷ்ணகாந்த். இன்னும் இந்த விஷயத்தை விலாவாரியாக அலசுகிறார் இவர். ‘‘ஓவர்சீஸ் மார்க்கெட், சாட்டிலைட், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள்னு எல்லாருமே ஒரு படத்தை வாங்குறதுக்கு முன்னாடி, அது நல்ல கதையா? மணிரத்னம் இயக்கியிருக்காரா?
ஷங்கர் இயக்கியிருக்காரா?னு எதையும் பார்க்குறதில்ல. ‘ஹீரோ யார்?’னுதான் கேக்குறாங்க. என்னுடைய கணிப்புப்படி ஏ, பி, சி என கிரேட் வாரியா மார்க்கெட் உள்ள ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் 71 பேர் இருக்காங்க. அவங்கவங்களுக்கு ஒரு மார்க்கெட் வேல்யூ இருக்கு. ஹீரோக்கள் படத்தயாரிப்பில் இறங்கினா, அதை தயாரிப்பாளர்கள் வரவேற்கணும்.
அவங்க எல்லைக்குள்ளதான் அவங்க படம் பண்ணுவாங்கனு புரிஞ்சுக்கணும். கார்த்தி சொந்தமா தயாரிப்பு நிறுவனம் வச்சிருந்தாலும், பி.வி.பிக்குதான் ‘தோழா’ பண்ணினார். அந்தக் கதைக்குத் தேவையான செலவுகளைச் செய்து தரம் காட்டினதால்தான் படம் ஹிட் அடிச்சிருக்கு. ஒரு பெரிய புரொடியூஸரோட பலம் இதுதான்.
இப்ப சாஃப்ட்வேர்ல மாசம் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குறவங்க, பத்து லட்சம் சேர்த்து வச்சு, படம் எடுக்க வந்திடுறாங்க. இப்படி எல்லாரும் படம் எடுக்க வந்துட்டா, அவ்வளவு படத்தையும் எப்படி ரிலீஸ் பண்ண முடியும்? மக்களும் எத்தனை படத்தைத்தான் பார்ப்பாங்க? சிறு தயாரிப்பாளர்கள் தயாரித்த படம்னு இங்கே 600 படங்கள்கிட்ட ரிலீஸ் பண்ண முடியாம இருக்கு.
தியேட்டர் கிடைக்கலைனு சொல்றாங்க. மாசத்துக்கு நாலு வாரம்தானே இருக்கு. வாரத்துக்கு மூணு படம்னாலும் வருஷத்துக்கு 150 படங்கள் ரிலீஸ் ஆகுறதே அதிகம். யார் வேணாலும் படம் பண்ண வரலாம். ஆனா, ஓரளவாவது பெரிய ஹீரோவுடன் வந்தாதான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும்.
அதுக்காக ஒரே ஹீரோகிட்ட நாலு புரொடியூஸர்கள் ஒரே நேரத்தில் போய் கால்ஷீட் கேட்டா, ஹீரோ சம்பளத்தை ஏத்தத்தான் செய்வார்.
தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை வேணும். சொந்த தயாரிப்பு தொடங்கினாலும் வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள் பக்கமும் ஹீரோக்கள் திரும்பணும். அப்போதான் தமிழ் சினிமா இன்னும் ஆரோக்கியமா இருக்கும்!’’ என்கிறார் கிருஷ்ணகாந்த் முடிவாக!
- மை.பாரதிராஜா
|