கடக லக்னத்துக்கு சந்திரனும் குருவும் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் 37
சந்திரனும் குருவும் இணைந்திருக்கும் அமைப்பை ‘குரு சந்திர யோகம்’ என்று ஜோதிட நூல்கள் பறைசாற்றுகின்றன. சாத்திரங்களுக்கும் வேதங்களுக்கும் உபநிஷத ஞானத்திற்கும் உரியவரே குரு பகவான்.
இவரோடு சர்வகலாபிதன் என்கிற சந்திரன் சேரும்போது ஒரு ஒழுங்குமுறை ஏற்படுகிறது. ஜாதகத்தில் இந்த சேர்க்கை பெற்றவர்கள், தோற்றப் பொலிவோடு இருப்பார்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளுக்கு ஒன்றும் குறையிருக்காது. மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள்.
சிறிதளவுகூட தங்கள் தகுதியைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள். ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ என்பது போல இவர்கள் வாழ்க்கை முழுவதுமே இருப்பார்கள். சுய மரியாதை, கௌரவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் ‘இதுக்கு அப்பா என்ன நினைப்பாங்க?’, ‘அம்மா என்ன சொல்வாங்க’ என எல்லாவற்றையும் யோசனை செய்து கொண்டே இருப்பார்கள்.
தனது இமேஜ் குறித்து மிகுந்த கவனத்தோடு இருப்பார்கள். தன்னை யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவே ஒழுக்கசீலராக வாழ்வார்கள். கடகத்தில்தான் குரு உச்சமாகிறார். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று குரு பார்வையையும் பெருமைப்படுத்தியே பேசுகின்றன ஜோதிட நூல்கள். கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, குருவும் சந்திரனும் இணைந்து எந்தெந்த இடத்தில் இருந்தால் என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என இனி பார்க்கலாம்...
கடக லக்னமான ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான சந்திரனும், குருவும் சேர்ந்திருந்தால் வளமான வாழ்க்கை அமையும். இவர்கள் பிறந்த பிறகு அந்த வீடே செழிப்பு பெறத் தொடங்கி விடும். மிகவும் நேர்த்தியான உடைகளையே அணிவார்கள்.
சிறு வயதிலிருந்தே எல்லாமே இவர்கள் வாழ்க்கையில் திட்டமிட்டபடி நடக்கும். யாரிடம் என்ன பேச வேண்டுமென்றுகூட கணக்கு வைத்துக் கொள்வார்கள். எப்போதும் ஏதேனும் திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். தினசரி வாழ்க்கையை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ள மாட்டார்கள். சிறிய வயதிலேயே பள்ளியில் நிறைய பரிசுகளை வாங்கிக் குவிப்பார்கள்.
சிம்மமான இரண்டாம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைந்தால் கண்களில் ஒரு தீட்சண்யம் இருக்கும். பேச்சில் கூர்மை இருக்கும். ஆரம்பக் கல்வி முதலே நல்ல பள்ளியில் சேர்ந்து படிப்பார்கள். கழுத்தில் சிறு செயினாவது தங்கத்தில் அணிந்து கொண்டிருப்பார்கள். ஒரு விஷயம் பிடிக்கவில்லை எனில் சட்டென்று அதை வெளிப்படுத்தியபடி நகர்ந்து விடுவார்கள்.
பள்ளியில் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக இருப்பார்கள். தங்களைவிட பெரியோர்களிடம் நெருக்கமாகப் பழகுவார்கள். இலக்கிய ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சாத்திரங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். சொன்ன சொல்லை எப்படியாவது நிறைவேற்றுவார்கள். இவர்கள் வலது கண்ணில் தொந்தரவு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கன்னியில் குரு பகவானும் சந்திரனும் சேர்ந்திருந்தால் துணிவு மிக்கவர்களாக இருப்பார்கள். யார் என்ன சொன்னாலும் பொறுமையாகக் கேட்கும் பக்குவம் இருக்கும். நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.
இளைய சகோதரர் மீது உயிரையே வைத்திருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையை இவர்கள் உயர்த்துவார்கள். இவர்களுக்கு காதில் சீழ் வடிந்தாலோ அல்லது காதில் ஏதாவது பிரச்னை வந்தாலோ உடனே கவனிக்க வேண்டும். நல்ல வேலையாட்கள் இவர்களுக்கு அமைவார்கள். வருடக் கணக்கில் இவர்களிடமே வேலை செய்வார்கள்.
இவர்களைப் போல ஒரு விஷயத்திற்காக முயற்சி செய்பவர்கள் யாருமே இல்லையென்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு முயற்சி உடையவர்களாக விளங்குவார்கள். பெரும்பாலும் சாந்த சுபாவத்தோடு இருக்கவே முயற்சிப்பார்கள். பலரும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இவர்களிடம் வந்து ஆலோசனை கேட்டு அதன்படி செல்வார்கள். பள்ளிக் காலத்திலிருந்து வந்த நண்பர்களே இவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நெருக்கமாக இருப்பார்கள்.
துலாம் ராசியில் குருவோடு சேர்ந்த சந்திரன் கொஞ்சம் தாயாருக்கு அடிக்கடி ஏதேனும் உடல்நிலையில் பிரச்னைகளை தந்தபடி இருப்பார். தாயார் மிகுந்த செல்வம் மற்றும் செல்வாக்கோடு இருந்தாலும், தாயாரோடு சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை இருக்கும். நகரத்தில் வசித்தாலும் சொந்த ஊரில் நிலபுலன்களோடு இருப்பார்கள். நகரமாக இருந்தாலும் வீட்டில் பசு வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
அதேபோல வீட்டில் கிணறு இருந்தால் மிகவும் பிடிக்கும். வாசனைத் திரவியங்களை அதிகமாக உபயோகப்படுத்துவார்கள். தோட்டம், பண்ணை வீடு என்று மத்திம வயதுக்கு மேல் சேரும். மந்திரங்களின் மகத்துவம் அறிந்தவராக இருப்பார்கள். மந்திர ஜபத்திற்கு பழகுவார்கள். தாய்வழிச் சொந்தங்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். புராணங்களைப் படிக்கவும் சொற்பொழிவாற்றவும் ஆசைப்படுவார்கள். விவாதம் செய்ய மிகவும் விரும்புவார்கள்.
விருச்சிக ராசியானது சந்திரனுக்கு நீச வீடாகும். ஆனால், அது செவ்வாயின் சொந்த வீடாக இருப்பதால் குரு மிகுந்த வலிமையை அடைகிறார். இவர்களுக்கு நல்ல வாரிசுகள் அமைவார்கள். தாய், தந்தையரின் புகழைக் கூட்டும் அளவிற்கு வளர்வார்கள். தாய்மாமன் வழியில் நிறைய நன்மைகள் உண்டு.
சந்திரன் நீசமாவதால் தேவையற்ற சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்டு குழப்பத்தோடு திரிவார்கள். மூதாதையர்கள் மீது மிகுந்த மரியாதையோடு இருப்பார்கள். அவர்களின் கனவுகள், ஆசைகள் என்னென்ன என்று கேட்டு நிறைவேற்றுவார்கள். சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுவார்கள். அன்னதானத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள்.
தனுசு ராசியில் குருவும் சந்திரனும் இருந்தால் உடம்பில் ஏதேனும் சிறுசிறு தொந்தரவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தேவையில்லாமல் எல்லோரையும் நம்பி கெடுவார்கள். உடன்பிறந்தவர்களே ஏமாற்றுவார்கள். ஏதேனும் அவப்பெயர் வந்து சேரும். வீணாக எதிரிகளோடு மோதிக் கொண்டே இருப்பார்கள். குரு இங்கு ஆட்சி பெற்றிருந்தாலும், ஆறாம் இடமாக இருப்பதால் சுற்றியுள்ளவர்களே இவர்களை சிக்க வைப்பார்கள். இவர்கள் எல்லா விஷயத்திலும் பொறுமையோடும் அமைதியோடும் இருந்தால் நிச்சயம் நன்மையே நடக்கும்.
மகரத்தில் குருவும் சந்திரனும் இருந்தால் பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வாழ்க்கைத்துணை அமைவார். கலையுணர்வு மிக்கவராக இருப்பார். அதிலும் மரபார்ந்த இசை, நாட்டியம் என்றிருப்பார். இவர்கள் அன்னிய தேசத்தில் வேலை தேடி அங்கேயே செட்டில் ஆவார்கள். பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். எந்த வேலையில் இருந்தாலும் மக்கள் மத்தியில் ஏதேனும் ஒரு திறமையோடு விளங்க ஆசைப்பட்டு வித்தையைக் கற்றுக் கொள்வார்கள். இவர்கள் ஆணாக இருந்தால் பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்கு மேலதிகாரியாக இருப்பவர்களோடு ஏதேனும் பிரச்னை வந்தவண்ணம் இருக்கும்.
கும்பத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அனுபவ ஞானியாக இருப்பார்கள். தத்துவ ஞானத்தோடு திகழ்வார்கள். மிகச் சிறந்த ஓவியராக வரும் வாய்ப்பு உண்டு. அடிக்கடி பிரயாணம் செய்தபடி இருப்பார்கள். அதனால் லாபமும் அடைவார்கள். இவர்களில் சிலருக்கு உயரமாக இடங்களுக்குச் செல்லும்போது மனோபயம் ஏற்படுவதுண்டு. பூர்வ ஜென்மங்களைக் குறித்து நிறைய ஆராய்ச்சி செய்வார்கள். இவர்கள் இரவு நேரப் பயணங்களின்போது உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மீனமான ஒன்பதாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமரும் வாய்ப்பு பெற்றவர்கள், இந்திரனைப் போல வாழ்வார்கள். ஏனெனில், குரு இங்கு ஆட்சி பெறுகிறார். இவர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்த வண்ணம் இருப்பார்கள். தந்தையை விஞ்சு வார்கள். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் போல தந்தை தொடங்கிய நிறுவனத்தை எங்கேயோ எடுத்துக்கொண்டு செல்வார்கள். நல்ல திடகாத்திரமாக, கம்பீரமான உடற்கட்டைக் கொண்டிருப்பார்கள். என்ன செய்தாலும் அதில் தனித்துவத்தோடு திகழ வேண்டுமென்று விரும்புவார்கள். பூர்வ புண்ணிய பலன் என்று சொல்வார்களே, அதைப் பூரணமாக இவர்கள் அனுபவிப்பார்கள்.
மேஷத்தில் குருவும் சந்திரனும் இருந்தால் யாரிடமும் கை கட்டி வேலை பார்க்கப் பிடிக்காது. இதனாலேயே வேலையில் ஒரு நிரந்தரத் தன்மை இல்லாமல் இருப்பார்கள். வேலையையும் விட முடியாமல், வேறு வேலைக்கும் முயற்சி செய்யாமல், ஒரு விசித்திரமான மனோநிலையில் இருப்பார்கள். கல்வி நிறுவன ஊழியர், வங்கி வேலை, கல்லூரிப் பேராசிரியர் என்றெல்லாம் வேலை பார்ப்பார்கள்.
ஆனால், எந்த வேலையில் ஈடுபட்டாலும் ஒரு திருப்தியின்மை இருந்து கொண்டேயிருக்கும். எனவே, மத்திம வயதிற்குப் பிறகு சொந்தமாக ஏதேனும் தொழிலைத் தொடங்கி நடத்துவார்கள். ரிஷபத்தில் குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் மூத்த சகோதரர்களால் மிகுந்த நன்மை இருக்கும்.
அநேக விதமாக வருமானங்கள் வந்தவண்ணம் இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் பூமியாக இல்லாமல் வீடுகளாக கட்டிக் கொடுத்து சம்பாதிப்பார்கள். சேமிக்கும் குணம் இருக்கும். திடீரென்று செல்வச் செழிப்பு கூடும். பெண்களுக்கான ஃபேன்சி ஸ்டோர், துணிமணிகள் விற்கும் கடைகள் வைத்தால் நல்ல லாபம் அடையலாம்.
மிதுனத்தில் குருவும் சந்திரனும் இருந்தால் வாழ்க்கையே பரமபத விளையாட்டாகத்தான் இருக்கும். திடீரென்று வளர்ச்சியும் எதிர்பாராத சறுக்கலுமாக இருக்கும். இவர்கள் தங்களுடைய பேரில் எந்த சொத்தையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
பிழைக்கத் தெரியாத மனுஷன் என்று பெயரெடுப்பார்கள். அப்பாவியாக பல சமயம் நடந்து கொண்டு கோட்டை விட்டுவிடுவார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கூட்டமே இருக்கும். மத்திம வயதிற்குப் பிறகு முற்றிலும் ஆன்மிக வாழ்க்கையில் இறங்குவார்கள்.
குருவும் சந்திரனும் சேர்ந்தால் பெரும்பாலும் நற்பலன்களைத்தான் தரும். ஏனெனில், இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் நட்புக் கிரகங்கள்தான். ஆனாலும், சில இடங்களில் குரு பகவான் மறையும்போது எதிர்மறை பலன்களைத் தருவார். அப்போதெல்லாம் பெரியதாக எதுவும் பிரச்னை இல்லாவிடினும் மன உளைச்சலை அதிகப்படுத்துவார்.
உள ரீதியாக பிரச்னை வரும்போது உடல்ரீதியாகவும் அது பாதிக்கும். எனவே, அதுபோன்ற சமயங்களில் நீங்கள் செல்ல வேண்டிய தலமே திருநாவலூர் ஆகும். இறைவனின் திருப்பெயர் பக்தஜனேஸ்வரர். இறைவி மனோன்மணி. இங்கு நின்ற கோலத்தில் ரிஷபத்தில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இத்தலம் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பாதையில் கெடிலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
(கிரகங்கள் சுழலும்...)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
|