மகிழ்ச்சிக் கென்று ஒரு மந்திரி!



வித்தியாசம் காட்டும் மத்தியப் பிரதேசம்

அக்பர் அரசவையில் பீர்பாலும், கிருஷ்ண தேவராயர் அரசவையில் தெனாலிராமனும் அமைச்சர்களாக இருந்து நகைச்சுவை உணர்வால் மக்களை எப்படியெல்லாம் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தார்கள் எனப் படித்திருப்போம்.

அப்படியான அமைச்சர்கள் இன்று இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கும் மேலே போய், மகிழ்ச்சிக்கென்று ஒரு துறையை உருவாக்கி மக்களை குஷிப்படுத்த முடிவெடுத்திருக்கிறது மத்தியப் பிரதேச மாநில அரசு!

‘‘பாசிட்டிவ்வான விஷயங்களை மக்கள் மனதில் விதைக்கும்போது மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம் வராமல் தடுக்க முடியும். அதனாலேயே, இந்த மகிழ்ச்சித் துறையை ஆரம்பிக்கிறோம்!’’ என்கிறார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சந்தோஷமாக! இந்தத் துறைக்கு ஒரு அமைச்சரையும் நியமித்து யோகா, தியானம் மற்றும் கலாசார நிகழ்வுகளை ஒருங்கிணைத்து மக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கப் போகிறார்களாம்.

சென்னையில் சிரிப்பு யோகா என்ற புதிய ரூட் பிடித்து சீடர்களைக் கவர்ந்திருக்கும் சிரிப்பானந்தாவிடம் இதைச் சொன்னால் குஷியாகிப் பேசுகிறார். ‘‘இன்னைக்கு வாழ்க்கையே எந்திரத்தனமா ஆகிடுச்சு. அதுல இருந்து மனுஷனை மாத்தணும்னா, சிரிப்புதான் பெஸ்ட் மருந்து. இறுகின மனசைத் தளர்த்த சிரிப்பு அவசியம். தியானம் பண்றப்போ நடக்குற மாற்றங்கள் எல்லாம், சிரிக்கும்போதும் நடக்கும்.

இதனால, கோபம், பொறாமை, அகம்பாவம், கர்வம்னு மோசமான குணங்கள் நம் உடலை விட்டு விலகிடும். மகிழ்ச்சியா இருக்கிறவங்களால வில்லத்தனம்கூட செய்ய முடியாது. அதனால, குற்றங்கள் நிகழ வாய்ப்பே இருக்காது. சிரிப்பு நம்ம கவனத்தையும் ஒருங்கிணைக்க உதவுது. நல்லா சிரிக்கப் பழகிட்டவங்களுக்கு தற்கொலை எண்ணம் எழவே எழாது. அப்படி  மாறின நிறைய பேரை பார்த்திருக்கேன். உண்மையில, எல்லா மாநிலங்களிலுமே மகிழ்ச்சிக்கு உடனடி அமைச்சகம் தேவை!’’ என்கிறார் அவர் சிரித்தபடியே!

சிந்திக்க வைக்கும் சிரிப்புப் பேச்சுக்கு பெயர் பெற்ற ‘பட்டிமன்றம்’ ராஜாவும் இதையே ஆமோதிக்கிறார். ‘‘2016ல் உலகப் பிரபலங்கள் பலர் மரணம் அடைஞ்சதைப் பத்தி சமீபத்துல ஒரு செய்தி படிச்சேன். கடைசி வரியில, ‘கூடுதலான மன அழுத்தமே இதுக்கெல்லாம் காரணம்’னு போட்டிருந்தது. இருக்கிறதை வச்சு நிம்மதியா இருப்போம்னு இன்னைக்கு யாரும் நினைக்கிறதே இல்ல. அடுத்து என்ன நடக்கும்னு கவலைப்பட்டுக்கிட்டே இருக்காங்க. எப்பவும் செல்போன், வாட்ஸ்அப், ஃபேஸ்புக்னு வாழ்றாங்க. மனப் பதிவை விட படப்பதிவையே ரொம்ப விரும்புறாங்க.

அதுல இருந்து வெளியேறி மகிழ்ச்சியை அடைய அடிக்கடி சுற்றுலா போகலாம்... உறவினர்கள், நண்பர்களோட கெட் டுகெதர் பண்ணலாம்... ஆலயங்களுக்குப் போகலாம்... இப்படி நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ, இதைப் பற்றி சிந்திக்கிற அமைச்சகம் வாழ்வின் கட்டாயத் தேவை!’’ என்கிறார் அவர்.

‘‘இப்ப இங்க சிரிப்பைப் பத்தி கூட சீரியஸா பேச வேண்டியிருக்கு!’’ என்ற பன்ச்சோடு ஆரம்பிக்கிறார் நடிகர் விவேக். ‘‘துன்பத்துக்கான அடிப்படையை மாத்தாம மக்களை சிரிக்க மட்டும் சொல்லக் கூடாது சார். இங்க ஒரு பக்கம் வறுமை தாண்டவமாடுது. இன்னொரு பக்கம் நீர்வளமும், விவசாயமும் காணாமல் போயிட்டு இருக்கு. உலகத்துல மகிழ்ச்சியா வாழ்ற நாடுகள் பட்டியல்ல டென்மார்க் முதலிடம் வசிக்குது. அடுத்த இடத்துல, இந்தியாவுக்கு மேல இருக்குற குட்டி நாடான பூடான் இருக்கு.

அங்குள்ள மக்கள் ரொம்ப அன்பாக பழகக் கூடியவங்க. அங்க நம்முடைய ரூபாய் செல்லுபடியாகும். இங்க என்ன மதிப்போ, அதே மதிப்புதான் அங்கேயும். அங்க கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமா கொடுக்கிறாங்க. அடிப்படையான இந்த விஷயங்களை இங்கேயும் இலவசமா கொடுத்துட்டா, உண்மையில மக்கள் மகிழ்ச்சியாகிடுவாங்க. மற்றபடி, பணமோ, வசதியோ, அதிகாரமோ நிச்சயம் மகிழ்ச்சியைத் தராதுப்பா!’’ என்கிறார் நச்சென!

மனதில் மகிழ்ச்சி மிஸ் ஆனால், உடலில் நோய்கள் குடியேறுமா?‘‘ஆம்’’ என்கிறார் மனநல மருத்துவர் ஜெய்குமார். ‘‘இதய நோய், புற்றுநோய், அல்சர்னு உடல்நோய்கள் மன அழுத்ததால அதிகரிச்சிட்டு வருது. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் நாற்பத்தி நாலு வயசுலயே இறந்துட்டார். காரணம், நேரத்தைக் கையாளத் தெரியாத டென்ஷன். இப்படித்தான் பலரும் பணமும் பொருளும் ஏன் சேர்க்குறோம்னு தெரியாமல் ஓடிட்டு இருக்காங்க. ஓய்வில்லாம உழைக்கிறாங்க.

உடலுக்கும் மனதுக்கும் பிடிச்ச வேலையை சந்தோஷமா செய்யப் பழகணும். பொதுவா, உணர்வுகளை வச்சு மனிதர்களை டைப் ‘ஏ’, ‘பி’, ‘சி’னு மூணு வகையா பிரிக்கிறோம். டைப் ‘ஏ’ ரொம்ப உணர்வுகளை வௌிப்படுத்தற ஆட்கள். சின்ன விஷயம்னாலும் கோபம் கொப்பளிச்சிட்டு நிக்கும். இதே டைப் ‘சி’ எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாம உள்ளே வச்சி அழுத்திக்கிட்டே இருப்பாங்க.  டைப் ‘பி’ வகையினர் இந்த ரெண்டையும் பேலன்ஸ் செய்றவங்க. வாழ்க்கை இயல்பாக இருக்க இந்த பேலன்ஸ் அவசியம். 

அதுக்காக எப்பவும் சிரிச்சிட்டு இருக்க முடியாதுதான். கோபம், பயம், எரிச்சல்னு நெகட்டிவ் உணர்வுகளும் மனுஷனுக்கு அவசியம்தான். ஆனா, பாசிட்டிவ் உணர்வுகளை அதிகரிச்சு நெகட்டிவை கன்ட்ரோல் பண்ணத் தெரியணும். அப்புறம், நிறைய பேர் மகிழ்ச்சின்னா ‘என்ஜாய் பண்றது’ன்னு நினைக்கிறாங்க. போதை, செக்ஸ் படங்கள்னு சிலவற்றுக்கு அடிமையாகிடுறாங்க. மது அருந்தும்போது மகிழ்ச்சி கிடைக்கலாம்.

ஆனா, அது இயற்கையா கிடைக்கிறதில்ல. உண்மையான மகிழ்ச்சிக்கு நூல்கள் படிக்கிறது, இசையை ரசிக்கிறது, விளையாடுறது, பயணங்கள் போறதுனு நிறைய விஷயங்கள் இருக்கு. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை ரசிச்சு பண்ணிட்டே இருக்கணும். வாழ்க்கை முழுவதும் வசந்தம் வீசும்!’’ என்கிறார் அவர் முடிவாக! 

கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமா கொடுத்துட்டா, மக்கள் மகிழ்ச்சியாகிடுவாங்க. மற்றபடி,  பணமோ, வசதியோ, அதிகாரமோ நிச்சயம்
மகிழ்ச்சியைத் தராது!’’

* உலக அளவில் மக்கள் அதிக மகிழ்ச்சியோடு வாழும் நாடாகக் கருதப்படுவது பூடான். அங்கே, ‘கிராஸ் நேஷனல் ஹேப்பினஸ்’ என்கிற வார்த்தையை 1972ல் அப்போதைய மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் உருவாக்கினார். பொதுவாக ஒரு நாட்டின் சிறப்பை அதன் உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை வைத்து மதிப்பிடுவார்கள்.

அந்த நாட்டின் மொத்த உற்பத்தி, தனிநபர் வருமானம் என இது எல்லாமே பணம் சார்ந்ததாக இருக்கும். ஆனால், ‘‘மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்காத பொருளாதாரமும் அரசியலும் பயனற்றது’’ என சொன்னார் பூடான் மன்னர்.

‘‘மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு தேசத்தின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டும்’’ என்றார். பூடான் இப்படித்தான் தன்னை மதிப்பிடுகிறது. இந்த முறை உலக நாடுகள் மத்தியில் இப்போது பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.  

* பூடானைப் பார்த்து கடந்த பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மகிழ்ச்சிக்கென்று ஒரு துறையை உருவாக்கி அதற்கு பெண் அமைச்சரை நியமித்துள்ளது. அடுத்து ரஷ்யாவும் இந்தப் பட்டியலில் இணைகிறது.

* பூ 2015ம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, இந்தியா 117வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கிறது ஐ.நாவின் இணையதளம்.

* பூ 2014ம் ஆண்டின் மத்திய குற்ற அறிக்கை, மத்தியப் பிரதேசத்தில் மட்டும் அந்த ஆண்டில் 5,076 பலாத்கார குற்றங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறது.
16.7 சதவீதம் குழந்தைகள் மீதான குற்றங்கள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது அதே அறிக்கை! அதனாலேயே இந்தத் துறையை ஆரம்பிக்கிறது ம.பி.

- பேராச்சி கண்ணன்