ஹீட் அலவன்ஸ் வேண்டும்!
தொழிலாளர்களின் சம்மர் கோரிக்கை
அகவிலைப்படி, போக்குவரத்து, வீட்டு வாடகை, ஓவர் டைம் என பல்வேறு அலவன்ஸ்கள் தெரிந்திருப்போம். ஆனால், ‘ஹீட் அலவன்ஸ்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சும்மா வெளியில் போகிறவர்களையே வெயில் சுட்டெரிக்கும் இந்தக் கோடை நேரத்தில் இப்படியொரு அலவன்ஸ் கேட்டுக் கொடி பிடித்திருக்கிறார்கள் சென்னையிலுள்ள பிரபல கார் ெதாழிற்சாலையின் தொழிலாளர்கள். அதென்ன ஹீட் அலவன்ஸ்? அவர்களிடமே கேட்டோம்...
‘‘இது கோடை காலத்துக்கான சலுகை மட்டுமில்லைங்க. வெப்பத்துல வேலை பார்க்குற தொழிலாளர்களுக்காக ரொம்ப காலமா நாங்க வச்சிட்டு வர்ற கோரிக்கை!’’ என சூடாக ஆரம்பிக்கிறார் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் ‘ரெனோ நிஸான்’ நிறுவன கிளைச் செயலாளர் பிரபாகர்.
‘‘தமிழகத்துல அதிக வெப்பத்தில் வேலைகள் நடக்குற தொழிற்சாலைகள் நிறைய இருக்கு. உதாரணத்துக்கு, கார் தொழிற்சாலைகள்ல உலோகத் தகடுகளை உருக்கி, வார்த்து உருவாக்குகிற பிரிவுல வெப்பம் ஓவரா இருக்கும். சில ஃபவுண்டரிகள்ல 500 டிகிரி செல்சியஸ் வரைகூட வெப்பம் இருக்கும். அங்க வேலை பார்க்கிற தொழிலாளர்கள் எப்பவுமே வெப்பத்தால ரொம்ப பாதிக்கப்படுவாங்க. கூடவே, இந்த கோடை வெப்பமும் சேர்ந்து உடலளவுல அவங்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்குது.
அதுக்காகத்தான், ஹீட் அலவன்ஸ் கொடுங்கனு கோரிக்கையா கேட்குறோம். சென்னையில, ஹூண்டாய், அசோக் லேலண்ட் உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களும், பி.ஹெச்.இ.எல் போன்ற அரசு நிறுவனங்களும் ரொம்ப காலமா ஹீட் அலவன்ஸ் கொடுத்துட்டு வர்றாங்க. அது மட்டுமில்ல...
வெப்பத்துல வேலை பார்க்கிறதால உடலுக்கு தேய்க்க தேங்காய் எண்ணெய், உடலை பலப்படுத்த ஹார்லிக்ஸ், சுத்தம் பண்ண சோப்பு, துடைக்க ஒரு துண்டு, கால்களுக்கு ஷூ, சாக்ஸ் எல்லாம் கூட கொடுப்பதுண்டு. எங்க நிறுவனத்துல கடந்த 2013ல இருந்து கோடை காலத்துல மட்டும் மோர், லெமன் ஜூஸ் தர்றாங்க. ஓவர் டைம் பார்க்கிறவங்களுக்கு ‘ஃபுரூட்டி’ கொடுப்பாங்க. இப்போ, தொழிலாளர்கள் பிரிவுகள்ல வெப்பத்தை குறைக்க மேற்கூரையில் ஒரு சிஸ்டத்தை செயல்படுத்தியிருக்காங்க.
இருந்தும், எங்களுக்கு சலுகை அவசியம் தேவை!’’ என்கிறார் அவர். சீனா போன்ற நாடுகளில் ஹீட் அலவன்ஸ் பல ஆண்டுகளாகவே உண்டு. வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு இது நிரந்தரமாகத் தரப்படும். தொழிற்சாலையின் உள்ளே பணிபுரிகிறவர்களுக்கு கோடைக்காலத்தின் மூன்று மாதங்களில் ஹீட் அலவன்ஸ் தரப்படுகிறது. சம்பளம் போலவே இதுவும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிலாளர்கள் யூனியன் பொதுச் செயலாளரான தர், தொழிற்சாலைகளின் வெப்பம் பற்றியும் அதில் தொழிலாளர் பாதுகாப்பை வலியுறுத்தியும் தொடர்ந்து மனு கொடுத்து வருபவர். ஆதங்கத்தோடு இதைப் பற்றி பேசுகிறார் இவர். ‘‘பொதுவா, தொழிற்சாலைகள்ல வேலை பார்க்கிறவங்களுக்கு தொழில்சார் வியாதிகள்னு சில இருக்கு.
இதுல, வெப்பத்தால வர்ற நோய்கள் நிறைய! வெப்பம் என்பதே கதிர்வீச்சுதானே! அதனால, நுரையீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறுனு பல பிரச்னைகள் ஏற்படுது. கார் தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை முதல்ல, பாடி வெல்டிங் பண்ணுவாங்க. அப்புறம் பெயின்டிங் போய் கடைசியா அசெம்பிளுக்கு வரும். இங்கெல்லாம் வெப்பம் ரொம்ப வெளியேறும்.
இதுல, ஓய்வே இல்லாம தொழிலாளர்கள் வேலை பார்க்குறாங்க. போன மாசம் கூட பெயின்ட் பிரிவுல வேலை பார்த்த ஒருத்தர் இறந்துபோனார். இன்னொருத்தருக்கு காசநோய் வந்துடுச்சு. இதெல்லாம் ஆர்.டி.ஐ போட்டுதான் தெரிஞ்சிகிட்டோம். இது பத்தி தொழிற்சாலை ஆய்வாளர்கிட்ட பலமுறை புகார் பண்ணியும் நடவடிக்கை இல்ல. இதுக்கு நூறோ இருநூறோ ஹீட் அலவன்ஸ் கொடுத்தா சரியாகிடுமா?’’ என்கிறவர், ஹீட் அலவன்ஸுக்கு மாற்றாக சில தீர்வுகளை முன்வைக்கிறார்.
‘‘வெப்பத்துல வேலை பார்க்குறவங்களுக்கு மட்டும் எட்டு மணி நேர வேலையை நாலு மணி நேரம்னு குறைக்கலாம். கொஞ்சம் ஓய்வு கொடுத்து வேலை வாங்கலாம். அப்புறம், வாரம் வாரம் வெவ்வேறு பிரிவுகளுக்குத் தொழிலாளர்களை மாத்தி, அவங்க உடலைப் பாதுகாக்கலாம்.
இப்படி எதையும் செய்யாம ஹீட் அலவன்ஸ் மட்டும் கொடுத்துடுறதால எந்த நன்மையும் விளையாது!’’ என்கிறார் தர் அழுத்தமான குரலில்.இது கோடை காலத்துக்கான சலுகை மட்டுமில்லை. வெப்பத்துல வேலை பார்க்குற தொழிலாளர்களுக்காக ரொம்ப காலமா வச்சிட்டு வர்ற கோரிக்கை!
- பேராச்சி கண்ணன்
|