888 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்!



உண்மையா? உடான்ஸா?

பேய் வருது... காமெடி பண்ணுது...’ என இன்னொரு தமிழ் சினிமா வந்தால் ‘உஸ்ஸ்ஸ்... மறுபடியுமா’ என ஒரு ஃபீலிங் வருமே... இப்போதெல்லாம் மலிவு விலை ஸ்மார்ட் போன் பற்றிக் கேள்விப்பட்டாலும் அதே ஃபீலிங்தான் வருகிறது.

‘இப்பத்தானே 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என எல்லோரும் ஓடிப் போய் காசைக் கொடுத்து ஏமாந்தோம்’ என்கிறீர்களா? ‘அது போன மாசம்... இது இந்த மாசம்’ என தில்லாகக் களமிறங்கிவிட்டது ‘டோகோஸ் எக்ஸ்1’ எனும் புரட்சி மொபைல்... இது 888 ரூபாய் ஸ்மார்ட் போன்!

கிட்டத்தட்ட இதுவும் ‘ஃப்ரீடம் 251’ போலத்தான். முன்னது நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் என்றால் இது ஜெய்ப்பூரில் இருந்து கிளம்பியிருக்கிறது. யார் கண்ணிலும் போனையே காட்டாமல் லட்சக்கணக்கானவர்களிடம் முன்கூட்டியே பணம் வசூல் செய்து, மோசடி குற்றத்தில் சிக்கி இப்போது சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் 251 ரூபாய் போன் போல தங்கள் தயாரிப்பும் ஆகிவிடக் கூடாது என்பதில் இந்த நிறுவனம் தெளிவாக இருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை நோ முன்பணம். ஒன்லி புக்கிங்தான். கேஷ் ஆன் டெலிவரி முறையில் மொபைல் வந்து சேரும்.

நாம் பொருளை வாங்கிக் கொண்டு காசு கொடுத்தால் போதும். அதுமட்டுமில்லாமல், ‘எங்கள் போன் இப்படித்தான் இருக்கும்’ என துவக்கத்திலேயே டோகோஸ் எக்ஸ்1 படங்களை இணையத்தில் பரவ விட்டுவிட்டார்கள். போதாக்குறைக்கு வீடியோ ஆதாரமும் வெளியானது. புத்தம் புது பேக்கிங்கைப் பிரித்து இந்த போனை ஆன் செய்து காண்பிக்கும் வீடியோ அது.

கடந்த ஏப்ரல் 27ம் தேதி துவங்கி மே 1ம் தேதிவரை நடந்த இதன் புக்கிங் ஒரு மெகா சக்சஸ் எனலாம். காசா? பணமா? புக்கிங் மட்டும்தானே என எக்கச்சக்கம் பேர் பெயர், முகவரியைப் பதிவு செய்துவிட்டார்கள். 251 ரூபாய் போன் போல இதில் புக்கிங் செய்து நான்கு மாதமெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

‘‘புக்கிங் முடிந்த மறுநாளில் இருந்தே போன்கள் அனுப்பி வைக்கப்படும்’’ என அறிவித்திருக்கிறது இந்த போனைத் தயாரிக்கும் டோகோஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட். ஆக, ‘888 ரூபாய் ஸ்மார்ட் போன்’ என்பது உண்மையா டுபாகூரா என்பது மிக சீக்கிரமே தெரிந்துவிடும்.

‘உண்மையோ, பொய்யோ... இப்படிப்பட்ட மலிவு விலை போன்களை விட்டு மக்கள் கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது’ என்கிறார்கள் டெக் வல்லுநர்கள். அதற்கு கீழ்க்காணும் காரணங்களையும் அடுக்குகிறார்கள்...

* இப்படிப்பட்ட போன்களை விற்பவர்கள் சர்வீஸ், வாரன்டி பற்றியெல்லாம் பேசுவதே இல்லை. மார்க்கெட்டில் பெயர் வாங்கிய பிரபல நிறுவனம் எதுவும் இப்படிப்பட்ட மலிவு விலை ஸ்மார்ட் போன் கோதாவில் இறங்குவதில்லை. இப்படி ஒரு போன் பற்றிய அறிவிப்பு வரும் வரை டோகோஸ் எனும் இந்த நிறுவனத்தை யாருக்கும் தெரியாது.

Docoss Multimedia Pvt. Ltd எனும் இந்த நிறுவனம் இந்த வருடம் மார்ச் 4ம் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.docoss.co, docoss.co.in எனும் அவர்களின் வலைத்தளங்கள் ஏப்ரல் 27ல்தான் பதிவு செய்யப்பட்டன. ஆக, இதுவும் ஒரு அவசர உப்புமா கம்பெனிதான்!

* டோகோஸ் எக்ஸ்1 போனின் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வலம் வந்தாலும் நேரில் அதை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் இன்றுவரை யாருமில்லை! கேஷ் ஆன் டெலிவரி மூலம் வரும் பொருட்களைப் பிரித்துப் பார்த்து பணம் கொடுக்க முடியாது. பணம் கொடுத்தால்தான் பார்சல் தருவார்கள்.

251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என கடந்தமுறை பரபரப்பானபோதே ‘‘இது சாத்தியமே இல்லை’’ என்று சொல்லியிருந்தார் இந்திய செல்லுலார் கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரோ. ‘‘இவற்றில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களின் விலையைக் கணக்கிட்டாலே ஒரு போன் 2300 ரூபாய்க்கு மேல் வரும். அதை விடக் குறைவாக ஒரு நிறுவனம் ஸ்மார்ட் போன் தருகிறது என்றாலே அதில் ஏதோ தவறு இருக்கும்!’’ என எச்சரித்திருந்தார் அவர்.

* இதன்படி பார்த்தால், ரூ.2300க்கு உதிரிப் பாகங்கள் வாங்கி ஒரு போன் செய்து, அதை 1412 ரூபாய் நஷ்டத்துடன் 888க்கு ஒரு நிறுவனம் தருகிறதென்றால், அதன் நோக்கம் விபரீதமாக இருக்கலாம். பொதுமக்களின் பர்சனல் போட்டோ வீடியோக்களைத் திருடுவது, வேண்டிய பிரசாரத்தை சுலபமாக எடுத்துச் செல்வது, ஒரு ரகசிய உளவாளி போல இந்திய ரகசியங்களை அயல் நாடுகளுக்குச் சொல்வது என ஒரு ஸ்மார்ட் போனை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்! விலையைப் பார்க்க வேண்டிய விஷயம் இதுவல்ல... உஷார் மக்களே..!

இவ்வளவு நல்ல போன் இந்த விலைக்கா என 251 ரூபாய் போன் (Freedom 251) விஷயத்தில் பலருக்கும் சந்தேகம் வந்து சுதாரித்துவிட்டார்கள். எனவேதான் இந்த போனில் வசதிகளைக் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள். ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லா விதத்திலும் 251 ரூபாய் போனை விட இது கொஞ்சம் கம்மிதான்.
   

- நவநீதன்