அவசரம்!
என் அக்காவின் குட்டிப் பெண் ஷிகாவை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது, ரவியைப் பார்த்தேன். ஐந்து வருடங்களுக்கு முன், கல்லூரி வாசலில் ரவியைப் பிரிந்தபோது, எத்தனை காலமானாலும் எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.
இன்று தினமும் அப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டு, நான்தான் காத்திருக்கிறேன். இதோ அவர் பிள்ளையுடன்... கை பிடித்து வருகிறார். அப்படியே அவர் ஜாடை. பெயரைக் கேட்டேன். ‘‘சுரேஷ்’’ என்றார் ரவி. எனக்கு வேறெதுவும் பேசத் தோன்றவில்லை... அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது!
வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொல்லிவிட்டேன். ‘அவர் கை காட்டும் யாரையும் மணந்துகொள்ள ரெடி’ என்று. என் சம்மதத்திற்காக காத்திருந்த குமாருக்கு உடனடியாக போன் போட்டு பேசத் துவங்கிவிட்டார் அவர். மறுநாள் காலையில் ஷிகாவுடன் பள்ளிக்குச் செல்லவில்லை. திரும்பவும் ரவி முகத்தில் விழிக்க விருப்பமில்லை.
‘‘சித்தி’’ - மாலை ஷிகா கத்திக்கொண்டே ஓடிவந்தாள். ‘‘நேத்து வந்தாரே, சுரேஷோட சித்தப்பா... அவர் இன்னிக்கும் வந்திருந்தார். நீ ஏன் வரலைன்னு கேட்டார்’’ என்றாள். ‘சித்தப்பாவா? ஐயோ, நான் அவசரப்பட்டுவிட்டேனா?’ - என் காலின் கீழ் பூமி நழுவியது.
மல்லிகா குரு
|