பாபங்களை போக்கும் பத்மநாபா ஏகாதசி



செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை

ஏகாதசி என்றால், பதினோராவது திதி என்று பொருள். ஏகம் என்றால் ஒன்று. தசம் என்றால் பத்து. இது இரண்டும் சேர்ந்த நாள் ஏகாதசி. மாதம்தோறும் வளர்பிறையில் ஒரு ஏகாதசியும், தேய்பிறையில் ஒரு ஏகாதசியும் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அந்த ஏகாதசிகளின் பெயர்கள் உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, சபலா ஏகாதசி,
புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமத ஏகாதசி, வ்ரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி,

இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ஸ்மார்த்த ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி. அந்த வரிசையில்  புரட்டாசி மாதம் வளர்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு பாபாங்குச ஏகாதசி என்று பெயர். பத்மநாப ஏகாதசி என்றும் இதனை அழைக்கிறார்கள். சில நூல்களில் விஷ்ணு பரிவர்த்தனை ஏகாதசி என்றும் போட்டிருக்கிறது.

இந்தப் பெயர் குழப்பங்களுள் போக வேண்டாம். புரட்டாசி வளர்பிறை ஏகாதசி என்று நினைத்தால் கூட போதும். அதன் சிறப்பும் பலனும் மாறாது.புரட்டாசி வளர்பிறை ஏகாதசி விரதம்

அகிலத்தில்  தண்ணீர் பஞ்சம் இல்லாது செய்து வளமையைக் கொடுக்கக் கூடியது. இதைக் கடைபிடித்தால், உலகில் வாழும் வரை நல்ல வாழ்க்கையையும், சுகத்தையும், வளமையையும் தரக்கூடியது. வாழ்வின் முடிவில்

பரம பதமாகிய முக்தியையும் தரக்கூடியது.
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்                        
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

 - என்று ஆண்டாள், திருப்பாவையில், முதலில் மழை தான் வேண்டுகின்றாள். உலகில் மழை வளம் சிறக்க வேண்டும் என்று வருண பகவானைப் பார்த்து பிரார்த்தனையைச் செய்தாள். காரணம், மழை வளம் இருந்து விட்டால், நிலவளமும், வன வளமும் இருக்கும். இந்த இரண்டு வளங்களும் இருந்து விட்டால், உலகில் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.

உலகின் வன்முறை அதிகரிக்க, வளங்கள் குறைவதும், வறுமை தலை எடுப்பதும் ஒரு காரணம். அதனால்தான் திருவள்ளுவர் கூட, கடவுள் வாழ்த்துக்குப் பிறகு, வான் சிறப்பு அதிகாரத்தை வலிமையாக வைத்தார்.“விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” - என்று பாடினார்.

மழை பெய்யாமல் போகுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும், பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். இதற்கு ஒரு தீர்வு சொல்கிறது இம்மாத ஏகாதசி விரதம். புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசியின் மூலமாக இந்திரனின் அருளையும், வருண பகவானின் கருணையையும் இணைந்து பெற முடியும். இவர்கள் இருவரையும் உள்ளிருந்து அந்தர்யாமியாக இயக்குபவனாக அந்த எம்பெருமான் உள்ளதால், மகா விஷ்ணுவின் பேரருள் கிடைக்கும்.

ஒருமுறை பார்வதிதேவி, சிவபெருமானிடம் பல்வேறு விரதங்களின் மகிமையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். “இத்தனை விரதங்களைச் சொல்கிறீர்கள். இதில் எது மிகச் சிறந்த விரதம்?” என்று கேட்க, சிவபெருமான் புன்னகையோடு சொன்னார். “தேவி! இந்த விரதங்களிலும் மிகச் சிறந்த விரதம் ஏகாதசி விரதம்தான்.

இந்த ஏகாதசி விரதம் எல்லா தோஷங்களையும் நொடிப் பொழுதில் போக்கக் கூடியது. ஒற்றைக்காலில் நின்று, பல்லாண்டு காலம் தவம் செய்யக் கூடிய யோகிகள், அடைகின்ற  பலனை ஏகாதசி விரதத்தால் எளிய மக்களும் பெற்று விடலாம். உலகத்தில் உள்ள மக்கள் மட்டுமல்ல, மற்ற லோகங்களான சொர்க்க லோகம், பிரம்ம லோகம் போன்ற லோகங்களில் உள்ள தேவர்கள் கூட, இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள் என்று கூறினாராம்.

‘‘லங்கணம் பரம ஔஷதம்’’ என்று வைத்திய சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. (லங்கணம் - பட்டினி, ஒளஷதம் - மருந்து.)  15 நாட்களுக்கு ஒருமுறை ஏகாதசி விரதம் இருப்பதால், மன ஆரோக்கியம் மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமும் கூடுகிறது என்கின்ற உண்மையை அறிந்த நம்முடைய முன்னோர்கள், பாலகர்களையும், வயதான முதியவர்களையும் தவிர, ஆரோக்கியமும் பக்தியும் உள்ள ஒவ்வொருவரும், இந்த ஏகாதசி விரதத்தைக் கட்டாயம் தவறாது அனுஷ்டிக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னார்கள்.

இந்த வருடம் புரட்டாசி ஏகாதசி, முதல் தேதியிலே வந்து விடுகிறது. ஏகாதசியில் மாதப் பிறப்பு வருவது என்பது மிகவும் சிறப்பானது. அதுவும் அன்றைய தினம் பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திர நன்னாள் ஆகும். கிழமையும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக் கிழமையாக அமைந்துள்ளது. புரட்டாசி என்பதால்  எல்லா கிரகங்களுக்கும் தலைமை ஏற்கக்கூடிய சூரியன், அன்று கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி, புதனுடைய ராசியாகும். புதன் பெருமாளுக்குரிய கிரகம் என்பதால், ஏகாதசி விரதத்தை அன்று அனுஷ்டிப்பது அற்புதமானது. சாலச் சிறந்தது.

இந்த விரதத்தை துவங்குபவர்கள், முதல் நாள் தசமியன்று விரதம் துவங்க வேண்டும். அன்றைக்கு மதியம் ஒருவேளை சாப்பிடலாம். இரவில் சாப்பிடக் கூடாது. முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். அடுத்தநாள் காலையில் நீராடி, பகவானுடைய திருநாமங்களைச் சொல்லிக் கொண்டு, விஷ்ணு சகஸ்ரநாமம் முதலிய தோத்திர நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். ஏகாதசி விரதத்தின்போது நல்ல மணமிக்க மலர்களைக் கொண்டு பெருமாளை அர்ச்சனை செய்ய வேண்டும். என்னென்ன மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடுகின்றார்.

‘‘தேனில் இனிய பிரானே! செண்பகப் பூச்சூட்ட வாராய்! மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூ சூட்ட வாராய், பச்சை தமநகத்தோடு பாதிரிப் பூ சூட்ட வாராய், புன்னைப் பூ சூட்ட வாராய், செண்பக மல்லிகையோடு செங்கழுநீர், இருவாட்சி, எண்பகர் பூவும் கொணர்ந்தேன், இன்று இவை சூட்ட வா’’ என்று அன்போடு பல வாசனை மலர்களை சூட்ட வேண்டும். ஆனால், எத்தனை மலர்கள் இருந்தாலும் கூட, அன்றைக்கு துளசியால் அர்ச்சனை செய்வதும், பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவதும் மிகச் சிறந்ததாகும்.

ஆனால், ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. அதுவும் வெள்ளிக்கிழமை என்பதால் நிச்சயமாகப் பறிக்கக்கூடாது. எனவே, முன்னதாகவே அதனைச் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி நாள் முழுக்க விரதமிருந்து, மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி, பெருமாளையும் தாயாரையும் வலம் வந்து வணங்கி, அடுத்து நாள் காலை, துவாதசி பாரணையோடு விரதத்தை முடிக்க வேண்டும். அடுத்த நாள் பாரணைக்கும் ஒரு பெயர் உண்டு. “விஜயா துவாதசி” என்று பெயர். வெற்றிகளை கொடுக்கக் கூடிய துவாதசி பாரணை என்பது ஏகாதசி நிறைவைக் காட்டும் நிகழ்வாகும்.

இந்த ஏகாதசியின் பலனாக நாட்டில் மழை வளமும், நீர் வளமும் பெருகும், கிணறு மற்றும் ஆழ்துளை தண்ணீர் ஊற்றும் பெருகும். அதிகமாகவும் பெய்யாமல் குறைவாகவும் பெய்யாமல் எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்கு மழை பெய்யும். ஆண்டாள் இதனை கருத்தில் கொண்டே, ‘‘வாழ உலகினில் பெய்திடாய்” என்று பாடுகிறாள்.நதிகளில் நீர் பெருகி நாட்டை வளமாக்கும் இந்த ஏகாதசியை அனைவரும் கடைபிடித்து எல்லா நலன்களும் பெற வேண்டும்.

விஷ்ணுபிரியா சுதர்சன்