காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் கடோத்கஜன் காட்டில் பிறந்து களத்தில் முடிந்தவன்



காட்டில் பிறந்தவன்; பாண்டவர்களைச் சுமந்தவன்; விபீஷணனைப் போய்ப் பார்த்தவன்; துரியோதனனிடம் தூது போனவன்; சுருக்கமாகச் சொல்லப்போனால், பாண்டவர்களுக்காகத் தன் உயிரை நீத்த மாவீரன் - கடோத்கசன்.

 பாஞ்சாலி எனும் திரௌபதியின் கல்யாணத்திற்கு முன்பாகவே பிறந்தவன் கடோத்கசன். அரக்கு மாளிகையில், பாண்டவர்களையும் குந்திதேவியையும் தங்க வைத்து, அவர்களை அழிக்கத் தீர்மானித்த துரியோதனன் எண்ணத்தைப் பொய்யாக்கிய பாண்டவர்கள், காட்டில் ஓர் ஆலமரத்தின் அடியில் தாயுடன் தங்கினார்கள்.அனைவரும் வழிநடந்த களைப்பினால் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், அவர்களுக்குக் காவலாக பீமன் மட்டும் விழித்திருந்தான்.

அப்போது பீமன் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தது; ‘‘அரண்மனையில் பலர் பணிவிடை செய்ய, மென்மையான பூப்போன்ற படுக்கையில் படுத்து உறங்க வேண்டியவர்கள், இப்படிக் காட்டில், மரத்தினடியில் தரையில் உறங்கும்படியான அவலம் நேரிட்டு விட்டதே!’’ என்று, அதுவரை துரியோதனன் - திருதராஷ்டிரன் முதலானோர் தங்களுக்குச்செய்த கொடுமைகளை எண்ணிப் பலவாறாகத் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான்.

அதேவேளையில், பரந்து விரிந்த அக்காட்டில் ஓர் ஆச்சா மரத்தில் ஏறியிருந்த கொடியவனான ஹிடிம்பன் எனும் ராட்சசன், பாண்டவர்களைப் பார்த்தான்; பார்த்தவுடன் அவன் நாக்கில் எச்சில் ஊறியது; தன் சகோதரியான ஹிடும்பையை அழைத்தான்.‘‘ஆகா! நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போதுதான், என் மனத்திற்குப் பிடித்தமான உணவு கிடைத்திருக்கிறது. மனிதவாடை என் மூக்கைத் துளைத்து, என் நாவில் எச்சில் ஊறுகிறது. அதோ! அங்கிருக்கும் மனிதர்களை எல்லாம் கொன்று, அவர்களைக் கொண்டு வா இங்கு!  இருவருமாகச் சேர்ந்து தின்போம்’’ என்று கட்டளையிட்டான் ஹிடிம்பன்.

ஹிடும்பையும் உடனே புறப்பட்டாள்; பாண்டவர்களில் நால்வரும் குந்தியும் உறங்க, பீமன் காவல் காத்துக் கொண்டிருந்தான். பீமனைப் பார்த்ததும் ஹிடும்பையின் மனம், அவளை அறியாமலே பீமனிடம் சென்று விட்டது.

என்ன அழகு! என்ன அழகு! கருமைநிறம்; நீண்ட கைகள்; சிங்கம் போன்ற தோள்கள்; சங்கு போல் கழுத்து; தாமரைமலர் போன்ற கண்கள் ஆகியவை கொண்டு, பெரும் தேஜசுடன் விளங்கும் இவன்(பீமன்) எனக்குக் கணவனாக வேண்டியவன். ஆகையால் என் சகோதரனான ஹிடிம்பன் சொன்ன கொடிய செயலை, நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

‘‘மேலும், இவர்களைக் கொல்வதன் மூலம், எனக்கும் என் சகோதரனுக்கும் சற்று நேரம் வயிறு நிறையும். இவனைக் கொல்லாமல் இருந்தால், பல ஆண்டுகள் காலம் நான் ஆனந்தமாக இருப்பேன்’’ என்று எண்ணினாள், ஹிடும்பை.

நினைப்பு மட்டும் இருந்தால் போதுமா? அது செயலாக வேண்டுமல்லவா?
 தன் எண்ணத்தை உடனே செயல்படுத்தத் தொடங்கினாள் ஹிடும்பை; தன் ராட்சச வடிவத்தை விட்டுவிட்டு, அழகான பெண்ணாக மாறினாள்; உயர்ந்த ஆபரணங்களும் மென்மையான ஆடைகளும் கொண்ட அழகிய வடிவில்,மெல்ல நடந்து,பீமனை நெருங்கித் தலைகுனிந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் பீமன் வியந்தான்; ‘‘ஆள் அரவமில்லாத இந்தக்காட்டில், இவ்வளவு அழகோடு - தனியாக வந்து நிற்கின்றாளே! யாரிவள்?’’ என எண்ணினான்.

அதற்குள் இன்னும் சற்று நெருங்கிய ஹிடும்பை, ‘‘ஆணழகரே! நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? தேவதைகளைப்போல இங்கு படுத்திருக்கும் இவர்கள் யார்? நடுத்தர வயதில் இருக்கும் இந்தப் பெண்மணி யார்? இந்தக்காட்டில் கூட, தன் வீட்டில் படுத்துத் தூங்கு வதைப்போல் தூங்குகிறாளே! இவள் உங்களுக்கு என்ன உறவு?‘‘இது ராட்சசர்கள் வசிக்கும் கொடுமையான காடு என்பது உங்களுக்குத் தெரியாதா?’’ பாவ எண்ணம் கொண்ட ஹிடிம்பன்எனும் அரக்கன், வசிக்கும் இடமல்லவா இது? என் சகோதரனான அவன், உங்கள் அனைவரையும் கொன்று தின்னும் எண்ணத்துடன் தான், என்னை இங்கு அனுப்பினான்.

 ‘‘அப்படி வந்த நான்,உங்களைப் பார்த்ததும் உங்களை மணம் செய்து கொள்ள விரும்பினேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! மனிதர்களைத் தின்னும் அந்த அரக்கனிடம் இருந்து, உங்களை நான் காப்பாற்றுவேன். விண்ணில் பறக்கும் சக்திகொண்ட என் விருப்பத்தைத் தள்ளாதீர்கள்!’’ என வேண்டினாள் ஹிடும்பை.

அதை மறுத்தான் பீமன்; ‘‘பெண்ணே! இதோ! இவர் என் மூத்த சகோதரர். இவர்தான் எனக்குத் தெய்வம்; குருநாதரும் இவர் தான். இவரே இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. அப்படியிருக்க, மூத்தவரான இவருக்கு முன்னால் நான் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. என்னை நம்பித் தூங்கிக் கொண்டிருக்கும் தாயாரையும் சகோதரர்களையும் ராட்சசர்களுக்கு இரையாகக் கொடுத்து விட்டு, காமுகனைப்போல உன் பின்னால் வர மாட்டேன் நான்’’ என்றான் பீமன்.

 ஹிடும்பை தொடர்ந்தாள். ‘‘கவலைப்படாதீர்கள்! உங்களையும் உங்கள் தாயாரையும் நான் தப்பிக்கச் செய்கிறேன். உங்கள் சகோதரர்களை விட்டு விடுங்கள்! என்னுடன் வாருங்கள்!’’ என்றாள்.

பீமன் குரலில் கடுமையைக் காட்டினான். ‘‘என் சகோதரர்களை விட்டுவிட்டு, நான் வாழ விரும்பவில்லை. பேசாதே! போய்விடு இங்கிருந்து’’ என்றான்.அடுத்த யோசனை சொன்னாள் ஹிடிம்பை. ‘‘உங்கள் விருப்பம் எதுவோ, அதை அப்படியே செய்வேன் நான். மனிதர்களைத் தின்னும் அந்த அரக்கனிடமிருந்து, நான் உங்களைக் காப்பாற்றுவேன். எழுப்புங்கள் அவர்களை!’’ என்றாள்.

பீமன் மறுத்தான்.‘‘ உன் சகோதரனிடம் பயந்துகொண்டு நான், சுகமாகத் தூங்கும் இவர்களை எழுப்ப மாட்டேன்.மேலும் எனக்கு உன் சகோதரனிடம் பயம் கிடையாது. அரக்கர், மனிதர், கந்தர்வர், யட்சர் எனும் யாராலும் என் பராக்கிரமத்தைத் தாங்க முடியாது.  உன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! மனிதர்களைத் தின்னும் உன் சகோதரனையே இங்கு அனுப்பினாலும் சரி!’’ என்றான்.

அந்த நேரத்தில்... ஹிடிம்பன் கொதித்தான். மரத்திலிருந்து இறங்கினான்; கைகளை ஒன்றுடன் ஒன்று அறைந்து கொண்டான். ‘‘என்ன இது? இவள் (ஹிடும்பை)போய், வெகு நேரம் ஆகி விட்டது. இன்னும் காண வில்லையே! எந்த அறிவு கெட்டவன் இப்போது எனக்கு இடையூறு செய்தான்? ஹிடும்பையும் பயப்படவில்லை. இன்னும் திரும்ப வில்லையே அவள்!’’ என்று கூவியபடியே ஓடிவந்தான், ஹிடிம்பன்.

கோபத்துடன் ஓடிவரும் அண்ணனைக் கண்டு ஹிடும்பை பயந்தாள். ‘‘ஆ! வீரரே! அதோ! என் சகோதரன் வெகு வேகமாக ஓடி வருகிறான். நான், சொல்வதை அப்படியே செய்யுங்கள்! ராட்சச பலம் கொண்ட நான், எண்ணியபடியெல்லாம் செயல்படுவேன். உங்கள் அனைவரையும் தூக்கிக்கொண்டு, நான் ஆகாயவீதி வழியாகச் செல்வேன்’’ என்றாள் ஹிடும்பை.அவளை அமைதிப்படுத்தினான் பீமன்.

‘‘பெண்ணே! பயப்படாதே! நீ பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இவனை நான் கொல்வேன். அந்த ராட்சசப் பதரால், என் முன்னால் நிற்க முடியாது. வலுவான என் கண்களையும் பரந்து விரிந்த மார்பையும் உறுதியான என் கால்களையும் பார்! சாதாரண மனிதனாக என்னை எண்ணாதே!’’ என்றான்.அவர்கள் இருவரும் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே, ஹிடிம்பன் அங்கு வந்து விட்டான். வந்தவன், தன் சகோதரியான ஹிடும்பை அழகான மானிடப் பெண் வடிவில் இருப்பதைக் கண்டு, மேலும் கோபம் கொண்டான். நடந்ததைப் புரிந்து கொண்டான்.

‘‘ஹிடும்பையே! காமமோகம் கொண்டு, என் கோபத்திற்கு நீ பயப்படாமல் இருக்கிறாய். இவர்களை மட்டுமல்ல. இவர்களுடன் சேர்த்து, உன்னையும் நான் இப்போதே கொல்லப் போகிறேன்’’ என்ற ஹிடிம்பன், பாண்டவர்களைக் கொல்ல ஓடி வந்தான்.

அவனைப் பார்த்த பீமன், ‘‘நில்! நில்!’’ என்று கூறிச் சிரித்தபடியே பேசத் தொடங்கினான். ‘‘அறிவு கெட்டவனே! நன்றாகத் தூங்கும் இவர்களை எழுப்புவதால், உனக்கு என்ன லாபம்? என்னுடன் சண்டை செய்வதை விட்டுவிட்டு, உன் சகோதரியை கொல்வேன் என்று வாய் வீரம் பேசுகின்றாயே! ‘‘பெண்ணைக் கொல்லக்கூடாது என்பது தெரியாதா உனக்கு? என்னுடன் சண்டைக்கு வா! நொடிப்பொழுதில் உன்னைக் கொன்று, இந்தக் காட்டை அரக்கர் நடமாட்டமே இல்லாதபடிச் செய்து காட்டுகிறேன்.  ‘‘என்னால் கொல்லப்படும் உன் உடலை, கழுகுகளும் பருந்துகளும் நரிகளும் இழுத்துப் போகட்டும்’’ என்றான் பீமன்.

அதைக்கேட்ட ஹிடிம்பன், ‘‘அற்பனே! வீணாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதே! இப்போது என்னுடன் சண்டை போடும் போது, என் பலத்தைத் தெரிந்து கொள்வாய் நீ! தூங்கிக் கொண்டிருக்கும் இவர்களை, இப்போது கொல்லப் போவதில்லை. முதலில் உன்னைக்கொன்று உன் ரத்தத்தைக் குடிப்பேன்.

அதன்பின் இவர்களைக் கொல்வேன். கடைசியாக, எனக்கு எதிராகச் செயல்பட்ட, ஹிடும்பையையும் கொல்வேன்’’ என்று கூவினான்.கூவிய ஹிடிம்பன் பீமனை நோக்கி ஓட, பீமன் ஓடிவந்து ஹிடிம்பனின் கைகளைப் பிடித்து, தூரமாக இழுத்துப் போனான். அது, பெரும்பாம்பைக் கவ்விய கருடன் அதை இழுத்துக் கொண்டு போவதைப்போல இருந்தது.

உறங்கிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் - தாய் ஆகியோரின் உறக்கம் கெடக்கூடாது என்ற எண்ணத்தில், தூரமாக இழுத்துப் போன பீமனை, ஹிடிம்பனும் பலம்கொண்ட மட்டும் தாக்கினான்.

 ஓரளவு தூரம் வந்தவுடன் பீமனும் ஹிடிம்பனைத் தாக்க ஆரம்பித்தான். கடும் யுத்தம் நடந்தது. காட்டில் இருந்த பெரும்பெரும் மரங்கள்,  சிறுகுன்றுகள் ஆகியவைகளை எல்லாம் பிடுங்கி, அவற்றின் மூலமாக அவர்கள் அடித்துக் கொண்டதில் அக்காடு, ஆமை முதுகுபோல வெறுமையாக ஆனது.பீமனும் ஹிடிம்பனும் போட்ட சண்டையில் எழுந்த பெரும் ஓசையில், குந்தியும் தர்மர் முதலானவர்களும் உறக்கம் கலைந்து விழித்துக் கொண்டார்கள்.கண் விழித்த அவர்கள் பார்வையில் பேரழகு கொண்ட ஹிடும்பி தெரிந்தாள்; வியப்படைந்தார்கள்.

வியப்பு விலகாமலேயே குந்தி, ஹிடும்பியை நோக்கி பேசத் தொடங்கினாள். ‘‘தெய்வப்பெண் போல இருக்கிறாயே! யார் நீ? அப்சரசா? இந்த வனத்தின் தேவதையா? யார் நீ? எதற்காக இங்கு நிற்கிறாய்? சொல்!’’ எனக் கேட்டாள்.ஹிடும்பி பணிவாகப் பதில் சொல்லத் தொடங்கினாள். ‘‘அம்மா! இருண்ட இந்தக் காடு ஹிடிம்பன் எனும் ராட்சசனுக்கும் எனக்கும் இருப்பிட
மானது. நான் அவன் சகோதரி. உங்களை எல்லாம் கொன்று, கொண்டு வரும்படி என் சகோதரன் என்னை  அனுப்பினான்.

‘‘அதற்காக இங்கு வந்த நான், உங்கள் பிள்ளையை (பீமனை)ப் பார்த்தேன். மனம் விரும்பி அவரை மணம் செய்து கொள்ள விரும்பினேன். அதற்குள் தாமதமானதால், இங்கு வந்த என் சகோதரன், உங்கள் பிள்ளையுடன் போரிடத் தொடங்கி விட்டான். அவர்கள் சண்டை போடுவதைப் பாருங்கள்!’’என்றாள் ஹிடும்பி.அதைக் கேட்ட தர்மர் முதலானவர்கள், சண்டை நடக்கும் இடத்தை நெருங்க, அர்ஜுனன் மெள்ளச் சிரித்தபடி, ‘‘பீமா! பயப்படாதே! களைத்துப்போன நாங்கள், விவரம் அறியாமல் உறங்கி விட்டோம். உனக்கு உதவிசெய்ய நான் இருக்கிறேன். ராட்சசனைக் கொன்று விடுகிறேன். கவலைப்படாதே!  நகுலனும் சகாதேவனும் தாயாரைக் காப்பாற்றுவார்கள்’’ என்றான்.

பீமனோ மிகவும் அலட்சியமாக,‘‘அர்ஜுனா!  நீ சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிரு! அவசரப்படாதே! என் கையில் அகப்பட்ட இவன், இனிமேல் உயிருடன் இருக்க முடியாது. ‘பீமன் கையில் அகப்பட்ட ராட்சசன், அர்ஜுனன் பராக்கிரமத்தால் இறந்தான்’ எனும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்து விடாதே! பயப்படாதே அர்ஜுனா! இவனை உயிருடன் விடமாட்டேன் நான்’’ என்று கர்ஜித்தான்.

அர்ஜுனன் விடவில்லை. ‘‘பீமா! பிறகு ஏன் தாமதம் செய்கிறாய்? சீக்கிரம் கொல் அவனை! இங்கேயே அதிக நேரம் இருக்க முடியாது. நாம் போகவேண்டும். இரவு முடிந்து இதோ! கீழ் வானம் சிவக்கப் போகிறது. அந்த நேரத்தில் ராட்சசர்களுக்குப் பலம் அதிகமாகும். ராட்சசன் மாயை செய்வான். இவனைச் சீக்கிரமாகக் கொல்ல வேண்டும். முடிந்தால் கொல்! இல்லாவிட்டால் இவனை என்னிடம் விடு! நானே கொன்று விடுகிறேன்’’ என்றான் அர்ஜுனன்.

அதற்கு மேல் நேரத்தை வளர்க்கவில்லை பீமன்; ராட்சசனைத் தூக்கித் தரையில் போட்டு, அப்படியே தேய்த்துக் கொன்றான். ஹிடிம்பன் பேரிரைச்சலுடன் இறந்தான். அதன் பின்னும் பீமன் வெறி அடங்கவில்லை; ஹிடிம்பனின் தலையைத் திருகிப் பிய்த்தெடுத்து, ஆகாயத்தில் வீசினான். அப்போது ஹிடும்பை, முனிவர்கள், தேவர்கள் என அனைவரும் பீமன் செயலைக்
கொண்டாடிப் பாராட்டினார்கள்.அதன்பின் குந்தியும் பாண்டவர்களும் அங்கிருந்து புறப்பட, ஹிடும்பையும் பின் தொடர்ந்தாள். அவர்கள் திரும்பிப் பார்க்க, தன் எண்ணத்தைக் குந்தியிடம் வெளிப்படுத்தினாள் ஹிடும்பி.

 ‘‘அம்மா! உங்கள் மகனை (பீமனை) மணக்க விரும்பும் என்னை ஒதுக்காதீர்கள்! ஏற்றுக் கொள்ளுங்கள்! நான் ராட்சசி அல்ல. சாலக் கடங்கடி எனும் ஈசுவரி நான். என்னை ஏற்க மறுக்காதீர்கள். உங்கள் அனைவரையும் நான் பாதுகாப்பேன். அது மட்டுமல்ல. நடந்தது, நடப்பது, நடக்கப் போவது என முக்காலங்களும் அறிந்தவள்தான்.இனிமேல் நடக்கப் போவதையும் சொல்கிறேன். கேளுங்கள்! அருகிலேயே ஒரு சிறந்த குளம் இருக்கிறது.

நீங்கள் அந்தக் குளத்தில் நீராடிவிட்டு, மரத்தின் கீழ் படுத்திருப்பீர்கள். வியாச பகவான் வந்து, உங்கள் துயரத்தை நீக்குவார். துரியோதனனால் நீங்கள் ஊரைவிட்டுப் போனதும், காசியில் மாளிகையில் கொளுத்தப்பட்டதும், விதுரரால் நீங்கள் காப்பாற்றப்பட்டதும் வியாச பகவானுக்கு ஞான திருஷ்டியால் தெரிந்திருக்கிறது. அவர் வந்து உங்களுக்கு அருள் புரியப் போகிறார்.

ஆகவே, நான் உங்கள் பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி கொடுங்கள்!’’ என்றாள் ஹிடும்பை.குந்தியும் தர்மரும் ஆலோசித்து அனுமதி தந்தார்கள். ஹிடும்பையும் பீமனை மணந்தாள். அவர்களுக்குப் பிறந்தவன்தான், தலைசிறந்த வீரனான கடோத்கஜன். அதாவது குந்தியின் முதல் பேரன் என்றால், அது கடோத்கஜன் தான். கடோத்கஜன் வரலாறை அடுத்த இதழிலும் பார்க்கலாம்.

(தொடரும்)

பி.என். பரசுராமன்