மலைகுனிய நின்றவனுக்கு மரக்காலால் அமுது



திருவேங்கட மாமலைமீது நின்றவாறு அருளும் மலையப்பசாமிக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. திருவேங்கடவன், ஏழுமலையான், பாலாஜி, கோனேரி, வேங்கடாசலபதி, வேங்கடவேதியன், கோவிந்தன் என்றெல்லாம் அழைக்கப்பெறும் அப்பெருமானைத் தமிழ் மக்கள்  ‘‘மலைகுனிய நின்றான்’’ என்ற ஒரு சிறப்புப் பெயரால் குறிப்பிட்டதை திருப்பதி திருமலைக் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக திருமலை மீது அவன் நின்ற வண்ணமே அருள் பாலிக்கின்றான். சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்து காடுகாண் காதையில்...

வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்

பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

 - என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டு அப்பெருமானின் தோற்றப் பொலிவினை நமக்குக் காட்டியுள்ளார். அருவிகள் திகழும் வேங்கடம் எனும் உயர்ந்த மலையின் உச்சியில், சூரியனும் சந்திரனும் விண்ணில் திகழ அவை இடைப்பட்ட அந்த நிலப் பகுதியில் பட்டுப் பீதாம்பரம் தரித்து வில்லினை ஏந்தி கருமேகம் போன்ற தோற்றத்துடன் பகைவர்களை அழிக்கும் ஆற்றலை உடைய சக்கரத்தையும், பால் போன்ற வெண்மை நிறமுடைய சங்கினையும், தாமரைப் பூவினையும் கையில் ஏந்தியவராய் மார்பினில் அழகிய ஆரம் அலங்கரிக்க பொலிவுடன் செம்மையான கண்களையுடைய நெடியோனாகிய திருமால் நின்ற வண்ணம் காட்சி தருகின்றார் என்பதே அவர்தம் கூற்று.

ஓங்கு உயர் மலையத்து உச்சி மீது அவர் நிற்பதால் அம்மலையே தலைகுனிந்து அவரை வணங்கி நிற்கின்றது. அதனால்தான் நம் தமிழ் மன்னர்கள் அப்பெருமானுக்கு ‘‘மலை குனிய நின்றான்’’ எனத் திருநாமம் சூட்டி மலையப்ப சுவாமியை ஆராதித்தனர். பண்டு இவ்வாறு சூட்டப் பெறும் பெயர்களை உயர்வுடைய, புனிதமுடைய பொருட்களுக்கு சூட்டிப் போற்றுதல் என்பது தமிழ் மக்களின் மரபாக இருந்துள்ளது.

திருநாவுக்கரசர் எனும் வேளாளரைத் தன் தெய்வமாகக் குருவாக கருதியவர் அப்பூதி அடிகளார் எனும் சீலமிகு அந்தணர். திங்ளூரில் வாழ்ந்த அவர் தன் ஞானாசிரியரான அப்பரடிகளை நேரில் காணாமலேயே தான் வைத்த தண்ணீர்ப் பந்தலுக்கும், தன் புதல்வர்களுக்கும், தன் இல்லத்திலுள்ள அத்தனை பொருட்களுக்கும் ‘‘திருநாவுக்கரசு’’ என்ற பெயர் சூட்டி வாழ்ந்தார் என்பதை சேக்கிழார் பெருமான், ‘‘மனைப்பால் உள்ள அளவைகள், நிறைகோல், மக்கள், ஆவொடு மேதி மற்றும் உள எல்லாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகலாற்றார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். அப்பூதியடிகளார் தன் மனையிலுள்ள எடைக் கற்கள், முகத்தல் குவளைகள், தராசு, தம் புதல்வர்கள், பசுக்களோடு எருமைகள் போன்ற அனைத்திற்கும் திருநாவுக்கரசர் என்ற பெயரைச் சூட்டி அழைத்தார் என்ற மரபினை தெளிவாகக் கூறியதோடு அதனை அற ஒழுக்கமாக கருதிய மாண்பினையும் அவரே நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

சேக்கிழார் சோழ மன்னனின் தலைமை அமைச்சராகத் திகழ்ந்தவர். எளிய அடியார் ஒருவர் தாம் போற்றிய அருளாளர் பெயரை எந்த அளவுக்கு மதித்தார் என்பதைச்
சுட்டும் போது ‘‘நாமம் சாற்றும் அவ் ஒழுகலாற்றால்’’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார். அவர் காலத்தில் திகழ்ந்த சோழ மன்னர்கள் அனைவரும் அந்தந்த ஆலயத்து ஈசன் பெயரினைத் தான் முகத்தால் அளவுக் கருவிகளுக்கும், எடைக் கற்களுக்கும், பிற பொருட்களுக்கும் பயன்படுத்தியதைக் கல்வெட்டுக்களில் குறித்து வைத்துள்ளதோடு, அதன்படியே அழைத்தனர் என்பதையும் அறிய முடிவதோடு, அதனை ஓர் உயர்ந்த நெறியாக, வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதையும் அறிகிறோம். இம்மரபினை பின் வந்த தமிழ் வேந்தர்களும் போற்றி ஒழுகினர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

திருவேங்கடவனை ஆராதித்த தமிழ்மன்னர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க மன்னவனாகத் திகழ்ந்தவன் கோனேரி ராயன் என்பவனாவான். இவன் இயற்பெயர் வைத்திய நாத காளிங்கராயன் என்பதை திருமழபாடியிலுள்ள அம்மன்னவனின் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. கி.பி. 1471 கர ஆண்டில் தொடங்கிய இவளது தனியாட்சி 1485 வரை தொடர்ந்தது. சோழ மண்டலம் மற்றும் தொண்டை மண்டலம் ஆகிய பகுதிகள் இவன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாக விளங்கின. ‘‘கோனேரிராயன்’’ என்ற பெயர் பொறிப்போடு இவன் வெளியிட்ட காசுகள் பல நமக்குக்
கிடைந்துள்ளன.

சைவம், வைணவம் ஆகிய இருசமய நெறிகளையும் ஒரே நிலையில் ஏற்றுக் கொண்டவன். செய்யாறு என அழைக்கப்பெறும் திருவோத்தூர் திருக்கோயிலுக்கு திருப்பணிகள் பல புரிந்து இவன் தன் பெயரால் ‘‘கோனேரி ராயன் திருமதில்’’ என்ற கருங்கல்லாலான திருமதில் ஒன்றினை அவ்வாலயத்திற்காக எடுப்பித்தான். அதில் அவன் தன் உரிமை மகளிர் இருவரோடு பல்லக்கில் அமர்ந்து பவனி வரும் சிற்பக் காட்சியினை அமைத்தான். பல்லக்கிற்குக் கீழாக அவன் பெயர் எழுதப் பெற்ற கல்வெட்டு காணப் பெறுவதோடு யானைப் படை, குதிரைப் படை, காலாற் படை, ஒட்டகம் ஆகியவை அவன் உலா செல்லும் காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கோனேரி ராயனை சில வரலாற்று ஆசிரியர்கள் வைணவ சமயத்திற்கு எதிரானவன் எனக் கட்டமைத்து விட்டனர். அவன் அரங்கன்பாலும், திருவேங்கடவன்பாலும் மிகுந்த பக்தி கொண்டவன் என்பதை கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன.திருவரங்கம் கோயிலில் சொக்கப்பானை வாசல் என்ற திருக்கோபுரமொன்றுள்ளது.

அவ்வாயிலுக்கு கோனேரி ராயன் தன் கொடையாக மரக்கதவுகளை செய்து அளித்தான். மேலும், திருவரங்கனுக்கு நாள்தோறும் உதய காலத்தில் அமுது படைத்திட அவன் விரும்பினான். ஒவ்வொருநாளும் ஒரு தளிகை தயிர் அன்னம் பெருமாளுக்கு தன் பெயரால் அமுது செய்திட வேண்டி பிச்சாண்டார் கோயில் எனும் ஊரில் மூன்று வேலி நிலத்தை அளித்து அதன் வருவாயிலிருந்து சந்திரன் சூரியன் உள்ளளவும் அப்பணி தொடர வழிவகை செய்தான். இச்செய்திகளைக் குறிப்பிடும் அவன் கல்வெட்டு தயிர் அன்னம் என்பதை ‘‘முச ரோதரம்’’ எனக் குறிப்பிடுகின்றது.

திருவரங்கனுக்கு திருக்கதவமும், தயிர் அன்னமும் சமர்ப்பணம் செய்த கோனேரிராயன் திருவேங்கடவனுக்கு நாள்தோறும் தன் பெயரால் திருப்போனகம் (திருவமுது) சமர்ப்பிக்கப் பெறவேண்டும் என விரும்பினான். அதற்காக இரண்டு ஊர்களையே தானமாகக் கொடுத்ததோடு அச்செய்தியினை திருமலை வேங்கடவன் திருக்கோயில் இரண்டாம் திருச்சுற்றில் தமிழ்க் கல்வெட்டாகவும் பொறிக்கச் செய்தான். அச்சாசனம் கூறும் செய்திகளை இனிக் காண்போம்.

கி.பி. 1493ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தொன்பதாம் நாளாகிய சகாப்தம் ஆயிரத்து நானூற்று ஒருபத்து அஞ்சின் மேல் செல்லா நின்ற பிற மாதீச சம்வத்சரத்து சிம்ம நாயற்று பூர்வபட்சத்து சப்தமியும் சோமவாரமும் பெற்ற அநிழத்து நாளில் இச்சாசனம் கல்வெட்டாகப் பொறிக்கப் பெற்றுள்ளது. சோழ நாட்டு அரசன் கோனேரி ராஜாவின் பெயரால் நாள்தோறும்
திருப்போனகம் எனப்பெறும் திருவமுது படைப்பதற்கென திருமலை திருக்கோயில் ஸ்தானத்தார்கள் கோனேரி ராயனிடம் இருந்து பெற்ற ஊர்கள் பற்றி அச்சாசனம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

‘‘சோழ மண்டலத்து காவேரி யாற்றுக்கு தென்கரை திருவாரூர் உசாவடி உய்ய கொண்ட சோழ வளநாட்டில் மேற்கூறு திருமிகைச்சூர் பற்றில் மருத்துவக்குடி கிராமம் ஒன்றும், சோழ மண்டலத்தில் சாலியக் கோட்டத்தில் வாழைக்குலைச்சேரி கிராமம் ஒன்றும் ஆக கிராமம் இரண்டு’’ என்று குறிப்பிடுகின்றது. இவற்றின் வருவாயிலிருந்து நாள்தோறும் ‘‘மலைகுனிய நின்றான்’’ என்று மரக்காலால் ஒரு மரக்கால் அமுதும், நெல் அமுது, பயிற்றமுது, உப்பமுது, மிளகமுது, கறியமுது, தயிரமுது ஆகியவைகளும் பாக்கு ஆறு நூறும், வெற்றிலை ஆயிரத்து இருநூறும் கொண்டு வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

இக்கல்வெட்டு சாசனத்தால் திருவேங்கடவனுக்கு அமுது அளக்கப்பட்ட மரக்காலின் பெயர் ‘‘மலை குனிய நின்றான்’’ என்பதை அறிகின்றோம். வேங்கடவனின் இத்திருநாமம் எத்தனை அழகுடையதாய் இருக்கின்றது என்பதை அறிவதோடு கடவுள் பணியில் பயன்படுத்தப் பெறும் பொருட்களுக்குக் கூட கடவுள் பெயரினையே இட்டு அழைக்கும் மரபு தொடர்ந்து இருந்துள்ளது என்பதை திருவேங்கடத்துக் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது.

-முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்