அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-87



அல்லல் எல்லாம் தீர்ப்பாள்

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பான் என் தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்றி பெம்மானும் என் ஐயனுமே
(பாடல் - 56)

‘‘ இப்பொருள் ’’ : இப்பாடலுக்குள் செல்லும் முன் ‘‘இப்பொருள்’’ என்ற சொல்லை விளக்கம் காண முயல வேண்டும். ஏனெனில், இது ஒரு தத்துவ விளக்கப்பாடலாகும். ஏக தத்துவம் என்ற அத்வைத தத்துவம் விளக்கப்படுகிறது. ஆறு கலைச் சொற்களை கொண்டு அதன் வழி இப்பாடலின் பொருள் புரிந்து கொள்வது ஏதுவாய் அமையும்.

சக்தி தத்துவத்தின்படி இந்த இலக்கணத்தை பொருத்திப் பார்த்தால் பொருள் என்பது ஒன்றை பரப்ரம்மம் அல்லது உமையம்மை என்பதாகும். அறியாமைக்கும் அறிவிற்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்குவது. ஒன்றை வேறு ஒன்றாக அறியும் மயக்க அறிவு. சூழ்நிலை சார்ந்து தெளிவுற அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் என மும்முனை தொடர்பு கொண்டு அறிதலில் ஏற்படும் குற்றம். அதை நீக்கி கொள்ளும் முறையே சமாதானம். அக்குற்றத்தையே ‘‘பொய்யும்’’- என்கிறார், பட்டர்.

ஒவ்வொருவரும் ஒரு பொருளை வெவ்வேறு விதமாய் அறிந்தும் உணர்ந்தும் அனுபவிக்கிறார்கள். ஆனால், அறிய முடியாத உணர முடியாத, வெவ்வேறு தன்மையற்ற இறை உணர்வை, அறிவை ஒரே பண்புடன் அறிந்து, உணர்ந்து, அனுபவிப்பதே உத்தர ஞானம். இதை சாத்திரங்களின் வழி இறைவனை நோக்குவது.

உதாரணமாய் தமிழ்மொழி அறிவை நன்கு கற்று அதன்வழி தமிழில் உள்ள அபிராமி அந்தாதி என்னும் நூலில் அமைந்துள்ள கருத்தைப் புரிந்து கொள்வதை போன்றது. மொழி வேறு, கருத்து வேறு, கருத்தமைந்த செய்யுள் வேறு. இது மூன்றும் ஒருங்கிணைந்தால் மட்டுமே உண்மைப் பொருளை அறிந்து உணர முடியும். அப்படி அறிந்து கொள்ளும் அறிவு. உணரும் அனுபவமே இங்கு மெய்யறிவு என்கிறார்.

‘‘மெய்’’ என்பதற்கு உண்மை என்று பொருள் இதையே பட்டர் ‘‘மெய்யும்’’ - என்கிறார். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவுண்டு. அந்த விளைவு, செயல் செய்பவனை சென்றடையும். அது அனுபவத்தை தரும். உதாரணமாய் தீயை தீண்டுதல் என்ற செயலால் சுடுதல் என்ற பயனை அதை செய்பவன் அனுபவிப்பான். இது ஒன்றை ஒன்று அடுத்து நிகழ்வது. அது போல் பயன் என்பது இறையருளை அறிந்து உணர்ந்து, செயல்பட்டு அனுபவிப்பதை பயனாக கொண்டது.

இப்பாடலை பொறுத்தவரை ‘‘இப்பொருள்’’ என்பது உமையம்மையின் அருள், அனுபவம். இதுவே பயன் இனி பாடலின் வரிகளை சிந்திக்க துவங்குவோம்.
‘‘ஒன்றாய் அரும்பி’’‘‘ஒன்று’’ என்கின்ற சொல் இணைவது என்கின்ற பொருளுடையது. சிவனும், சக்தியும் இரண்டற கலப்பதை ஒன்று என்று சொல்வார்கள். இதையே ‘‘சக்தி தழைக்கும் சிவமும்’’ என்கிறார், பட்டர்.ஒன்று என்ற சொல் கடவுளை குறித்தது. இவ்வுலகம் அனைத்திற்கும் ஒரே கடவுள்தான், ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. அது உமையம்மையே என்கிறது சாக்த தத்துவம். பட்டர் அதை அபிராமி என்கிறார். ‘‘ஒன்றே’’- 30.

ஒன்று என்ற சொல் உலகுக்கு ஒன்றாக இருக்கக்கூடிய அனைத்திற்கும் இடம் அளிக்கின்ற ஆகாயமே! அதாவது வெற்றிடமே, அந்த வெற்றிடமே உமையம்மை என்கிறது வேதம். இதை ‘‘கௌரீமிமாய… பரமேவ்யோமன்னு’’ - என்று வேதமும், ‘‘வெளியே’’- 16 என்று அந்தாதியிலும் சூட்டப்படுகிறது.

ஒன்று என்பது இரண்டு வெவ்வேறு தன்மையுடைய பொருள் ஒன்றில் ஒன்று இரண்டரக் கலப்பதை குறிக்கும். இயக்கமற்ற சிவமும், இயங்கும் உமையும் ஒன்றாக இணைவதனால் சிவம் இயங்கி பலனை தருகிறது. இதை ஆகமங்கள் சக்த்ய ப்ரை ரெய்த சிவ : என்கிறது. உமையிடத்து சிவம் இயங்குகிறார் என்பது பொருள். இதையே அபிராமி பட்டர் ‘‘உமையும் உமையொருபாகரும் ஏக உருவில் வந்து’- 31 என்கிறார்.

ஒன்று என்ற சொல் ஒரு என்ற பொருளிலும் வரும். இது பல பொருள்கள் இருக்கும் நிலையில் ஒன்றை மட்டும் தனித்து பிறவற்றை அதிலிருந்து பிரித்து காட்ட ஒரு, ஒன்று என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். உலகில் பல தெய்வங்கள் இருந்த போதிலும் அவற்றிலிருந்து நீங்கி உமையம்மை ஒருத்தியையே நான் வணங்குவேன் என்று தனித்து சூட்டுகிறார், பட்டர். இதை ‘‘இனியொருதெய்வ உண்டாக’’- 44 என்று கூறுவதிலிருந்தும் அறியலாம்.

ஒன்று என்ற சொல்லை அபிராமி பட்டர் தன் அல்லல் எல்லாம் தீர்க்கும்’’ - 85 இன்பத்தையே வாரி வழங்கும் வாழ்வியல் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யும் என்ற பொருளிலே ‘‘வாழும் படி ஒன்று’’- 47 என்பதாக சூட்டுகிறார்.ஒன்று என்ற சொல் எண்ணும் பெயராகும். அபிராமி பட்டர் இந்த ஒன்று என்ற சொல்லை வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தியுள்ளார்.

அந்த எண் பெயரானது தனக்கென்று சுயப் பொருளின்றி எதைச் சார்கிறதோ... அதைச் சார்ந்து பொருள் பெறும் வல்லமையுடையது. உதாரணமாய் கண் மூன்றும் - 53. மூன்று கண்களை குறித்தது. நான்மறை - 77 வேதத்தை குறித்தது. பஞ்ச பாணம் - 73 ஆயுதத்தை குறித்தது.

பஞ்சமி -77 தேவதை ஒன்றின் பெயரை குறித்தது. ‘‘ஒன்றாய் அரும்பி’’ என்கின்ற இப்பாடலில் ஒன்று என்ற சொல் சிவனோடு இரண்டர இணைந்தவளாயும் உலகில் எண்ணிக்கை நோக்கில் ஒன்றாக திகழ்பவளாயும் காண்போர்க்கு ஒரே பொருளாக தோன்றும் ஆகாயம்  போலவும், இயங்கும். பொருளாயும், இயக்கும் பொருளாயும் இரண்டும் வெவ்வேறாக இருந்தும் பகுத்து உணர இயலாவண்ணம் ஒன்றாய் இருப்பது சிவசத்தியே அனைத்துமாய் உள்ளது என நமக்கு உணர்த்துகிறார். இதையே ஏக தத்துவம் உணர்த்துகிறது. இறைவியின் பண்புகளில் ஒன்றாக ‘ஒன்று’ என்ற வார்த்தை குறிப்பிடுகிறார்.

‘‘பல வாய் விரிந்து’’ - என்பது மூன்று பொருளில் பயன்படுத்தப்படுகிறது.பலவாகவே இருக்கின்ற பொருள். ஒன்றே பலவாக இருக்கின்ற பொருள். பல பொருளாக இருந்தாலும் ஒன்றாக தோன்றுகின்ற பொருள்.இம்மூன்று பொருளிளேயும் அபிராமி பட்டர் இச்சொல்லை பயன்படுத்துகின்றார்.

உதாரணங்களைக் கொண்டே இவற்றை விளங்கிக் கொள்ள இயலும். பலவாகவே இருக்கும் பொருள் என்பது தோன்றிய நாள் முதல் ஆன்மாக்கள் பலவாக இருக்கிறது. எல்லா உடல் தாங்கிய ஜீவன்களுக்கும் ஒவ்வொரு உடல் தனித்தனியாக இருக்கிறது. அனுபவமும் தனியாகவே இருக்கிறது.

பசி, தூக்கம் போன்றவற்றை ஒருவருக்காக இன்னொருவர் செய்ய முடியாது. இதைக் கொண்டே ஆன்மாக்கள் பலவாக இருப்பதை அறிந்து கொள்ளலாம். ஆன்மா என்பது சாக்த சித்தாந்தத்தை பொறுத்தவரை அனுபவிப்பது என்பது பொருள். அந்த அனுபவம் எப்பொழுதும் பலவாறாக இருக்கிறது. அந்த அனுபவத்தையே உமையம்மை என்கிறார் பட்டர். இதை சாத்திரம் பசு வாக்கியம் என்கிறது.ஒன்றே பலவாக இருக்கின்ற பொருள் - ஒவ்வொரு ஆன்மாவும் அனுபவத்தைப் பெற காரணமாக இருப்பது ஒன்று ஆணவ மலம். இந்த மலத்தை ஒரு உதாரணத்தைக் கொண்டு விளங்கிக் கொள்வோம்.

நாம் உண்ணும் அரிசி விளையும்போது நெல்லாகவே இருக்கும். நெல் என்பது அரிசியையும் அதன் மேல் உள்ள தோலையும் சேர்த்து குறிப்பிடும் சொல், அரிசி என்பது நெல்லிலிருந்து தோலை நீக்கிய பிறகு அதற்கு பெயர்.

உமி என்பது நெல்லின் தோலை மட்டும் குறிப்பிடும் பெயர். இது போன்று ஒன்றுடன் ஒன்றுஇணைந்ததே நெல்.இது போன்றே நெல்லுடன் உமிபோல ஆன்மாக்களுடன் ஆணவ மலம் தோன்றியது. அந்த ஆணவ மலமே ஆன்மாக்களுக்கு துன்ப அனுபவத்தைத் தருகிறது. ஆணவ மலத்தை ஞானத்தாலும் நெல்லின் தோலை இயந்திரம் கொண்டு நீக்குவது என்பதாக உணர்க.

ஒரே நெல்லானது கார் அரிசி, அரிசி, பதர், உமி என்று பலவாக தோன்றுகிறது. இதையே ஒன்றே பலவாக இருக்கின்ற பொருள். இதைத் தத்துவம் ‘‘பாசம்’’ என்கிறது. இந்த பாசமானது ஆணவம் ஒன்றே, அனுபவம் ஒன்றே அதுவே கன்மம், மாயை மாயேயம், த்ரோதாயி என்று பலவாக மாறுகிறது.

அனுபவம் ஒன்றே அது மெய்யின்பம், காட்சியின்பம், செவியின்பம், நறுமணயின்பம், புணர்ச்சியின்பம் இவற்றிற்கான துன்பம் என்று பலவாக தோன்றுகிறது. இந்த பலவாய் விரிந்த அனுபவத்தையே ‘‘பலவாய் விரிந்து’’ என்கிறார்.பல பொருளாக இருந்தாலும் ஒன்றாக தோன்றுகின்ற பொருள் - செங்கல், சிமென்ட, நீர், இரும்பு, மரம், மண் இவை வெவ்வேறான பொருட்கள். இவைகளை ஒன்றிணைத்து கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றேயாம். இது பல பொருளாக இருந்தாலும் ஒன்றாக தோன்றுவது வீடு.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்