இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன்-75 மலைக்க வைக்கும் மலையப்பன்



உலகத்தில் விளங்குகின்ற எண்ணற்ற ஆலயங்களில் முதன்மை இடத்தில் முத்திரை பதிப்பது எது? திருப்பதி வேங்கடவன் திருக்கோயிலே என்றால் அனைவருமே ஆம்! ஆம்! என்று தானே ஆமோதிப்பார்கள்! நம்மாழ்வார் அன்றே இதை அறிந்து வைத்திருக்கிறார்.
அதனால்தான் ‘நிகரில் புகழாய்! உலகம் மூன்று உடையாய்! எனப் பாடுகிறார்.திருமால் அர்ச்சாவதார மூர்த்தியாக -அதாவது விக்கிரகமாக விளங்குவதற்கென்றே திருமலை கருட பகவானால் பூமிக்கு எடுத்து வரப்பட்டது.கும்பிட்டு வணங்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனைகளை ஈடேற்றும் தெய்வத்தை...

‘‘வடவேங்கட மாமலையில் உறைவோனே !
 வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
 வேண்ட வெறாதுதவும் பெருமாளே!’’
- என அற்புதச் சொற்பதங்களில் ஆராதித்து மகிழ்கிறார் அருணகிரிநாதர்.

ஆண்டுக்குச் சுமார் ஐநூறு கோடியைத் தங்கமாகவும்; பணமாகவும் தங்களது காணிக்கையாகத் தருகிறார்கள் பக்தர்கள்! அப்படியென்றால், அந்த பக்தர்களுக்கு எத்தனை கோடியை ஈட்டித் தந்திருப்பார் வெங்கடாஜலபதி என எண்ணிப் பார்த்து நாம் இன்பம் அடையலாம். அத்தகைய திருமலை இறைவனை அதிகாலையில் நாம் அனைவரும் தொழுது வழிபடுவதற்கென்றே தோன்றிய தோத்திரம்தான் ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம்.

அந்த வெங்கடேச சுப்ரபாதத்தில்தான் எத்தனை காவிய நயங்கள்! திருமாலின் கல்யாண குணங்கள்! வடமொழி சுப்ரபாதத்தின் ஓசைச் சிறப்புடனேயே செம்மொழித் தமிழில் இப்பள்ளியெழுச்சி பரிணமிக்கிறது. சுந்தரத் தமிழில் விளங்கும் இந்தச் சுப்ரபாதத்தை ஸ்ரீவெங்கடாஜலபதி அதிகமாகவே விரும்புவார். ஏனென்றால், பைந்தமிழ் பயில்வோரின் பின் பாம்புப் படுக்கையைச் சுருட்டிக் கொண்டு நடந்தவர்தானே, நாராயணன்!

‘‘சுப்ரபாதம்’’ பிறந்த கதையை அறிவோமா !
 இன்றைக்கு அறுநூற்று என்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணன் சுவாமிகள் இயற்றியதுதான் ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம்.

வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் இருவரின் பரிபூரணமான ஆசியைப் பெற்ற அண்ணன் சுவாமிகள் சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூரில் அவதரித்தார். காஞ்சி வரதராஜ பெருமாள் கைங்கர்யங்களிலும், திருவேங்கடமுடையானுக்குத் திருத்தொண்டு ஆற்றுவதிலும், ஆர்வம் மிகக் கொண்டிருந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணன் சுவாமிகள் பாடிய திருப்பள்ளி எழுச்சியே சுப்ரபாதம் என்னும் பெயரில் சுந்தர கீதமாக எட்டுத் திசைகளிலும் இன்று எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. மற்ற கோயில்களில் பாடப்படும் சுப்ரபாதங்களுக்கு இதுவே முன்னோடியாக அமைந்துள்ளது. ஆனால், அண்ணன்
சுவாமிகளுக்கு முன்னோடியாய் அமைந்தவர் யார் தெரியுமா?
ஆதிகவி வால்மீகி பகவான் தான்!

வேள்விக்குக் காவலாக அமைய விஸ்வாமித்திர மகிரிஷி ஸ்ரீராம லட்சுமணர்களை ஆரண்யத்திற்கு அழைத்துச் செல்கிறார். சித்தாசிரமத்தை அடையும் முன்பு இரவில் காட்டிலேயே தங்குகிறார்கள் மூவரும்! அதிகாலை சூரியன் உதிக்கத் தொடங்கும் அருணோதய நேரத்தில் சூரியகுல திலகனை ‘கௌஸல்யா ஸூப்ரஜா ராமா’ எழுந்திரு! என்கிறார், மாமுனிவர்.

எனவே, வால்மீகியாரின் வாக்கியத்தைத் தொடக்கமாகக் கொண்டு அண்ணன் சுவாமிகள் பாடிய சுப்ரபாதம் தமிழில் திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன் அவர்களால் சிறப்புற வழங்கப்பட்டுள்ளது. அருணோதய நேரத்தில் எழுந்து அசுங்குளிர அனைவரும் பாடுவோம் சுப்ரபாதம்! ஏனென்றால், இது அற்புதச் சொற்பதத்தில் அமைந்துள்ள அரிய வேதம்!

திருவேங்கடவன் திருப்பள்ளி எழுச்சி

1.கௌசலையின் மணிவயிற்றில்
கண்மலர்ந்த ராமா!
கதிர் உதிக்கக் கண்டோம்! நீ
கண்துயில லாமா!
செவ்வையுடன் தேவர்கள்தம்
கடன்முடிக்க எழுக!
திருமாலே! காலை ஒளி
போல அருள் பொழிக!

2. கோவிந்தா! நீ விழித்தால்
குவலயமே விழிக்கும்!
கொடியினிலே கருடப்புள்
கோலமதும் செழிக்கும்!
தேவிதிரு மகள் காந்தா
திருவருளைப் பொழிவாய்!
திரிபுவனம் சுபமாக
ஸ்ரீதரனே எழுவாய்!

3. மலைநாதன் மனங்கவர்ந்து
மகிழும் ஸ்ரீதேவி!
மதுகைட பரை அழித்த
அவன் யார்பில் மேவி
நிலையாக அருள் தருவாய்
அலர்மேலுத் தாயே!
நிர்மலப்பூங் காலைஇது
கண்மலர்க நீேய!

4. நிலவினிலே தாமரை போல்
 நிலவும் இருவிழிகள்!
நிமலனிடம் அன்பர்புகழ்
நிகழ்த்துகின்ற மொழிகள்!
கலைமகளும் இந்திரையும்
மலைமகளும் ஒன்றாய்க்
கரங்குவித்து வணங்குகிறார்
வாழ்க நீயும் நன்றாய்!

5. ஆகாய கங்கையிலே
அரவிந்தம் பறித்து
அத்ரி முதல் எழுமுனிவர்
உன்அருளைக் குறித்து
வேகமுடன் வந்துள்ளார்
வேங்கடவா! சேவை
விளங்கவேண்டும்! விழிதிறந்து
கேட்பாய் புகழ்ப் பாவை!

6. சண்முகனும், சிவனாரும்
தேவர்களும் போற்றிச்
சாற்றுகிறார் உன்னுடைய
மகிமையினை ஏற்றி!
முன்னிலையாய்ச் சந்நிதியில்
 தேவகுரு நின்று
மொழிகின்றார் பஞ்சாங்கம்
கேட்டெழுக நன்று!

7. காலை இளம் பரிதியினால்
பொழுது புலர்கிறது!
காலடியைத் தொழுவதற்கே
பூக்கள் மலர்கிறது!
சால இளம் தென்றல்உன்றன்
சந்நிதியின் மேலே!
சாற்றுகிறோம் வந்தனங்கள்
விழித்தெழுவாய் மாலே!

8. ஐயன்உன்றன் முன்னிலையில்
பஞ்சவர்ணக் கிளிகள்
அரங்கேற்றும் உன்நாமம்!
சிந்தைமகிழ் ஒலிகள்!
மெய்மறந்து பக்தரெலாம்
நிற்கின்றார் கேட்டு!
வேங்கடவா! விழிமலர்வாய்!
வேண்டுகோளை ஏற்று!

9. நகருவதும் பகருவதும்
தன்தொழிலாய் ஆன
நாரதரும் நிலையானார்
நின்னடிகள் காண!
மிகநல்ல உன்சரிதம்
வீணைமூலம் சொல்லி
வித்தகரும் மகிழ்கின்றார்
எழுகநீயும் பள்ளி!

10. செங்கதிரோன் உதித்ததனால்
கமலமலர் விரியும் !
சிறைவாசம் கண்டவண்டு
வௌியில்வந்து திரியும் !
பொங்கிருளில் சேவையின்றி
வண்டுகட்கு ஏக்கம் !
புலர்கால் எழுந்ததினால்
புதுமை கீதம் ஆர்க்கும் !

11. ஆயர்பாடி மங்கையர்கள்
தயிர்கடையும் ஒசை !
அன்பர் நான்கு திக்கினிலும்
உனைப்பரவும் பூசை !
மாயனுன்றன் திருச்செவிக்கு
இவையும் கேட்க விலையா?
மலர்ந்ததி காலை! இன்னும்
துயில்வதுமோர் கலையா?

12. குவளைமலர் தனதுநிறம்
உன்னதென்று சொல்லும்!
கூடுகின்ற வண்டுகளோ
அதன் நிறத்தை வெல்லும்!
கவலையின்றி வண்டுகளும்
பூக்களும் களிக்க
கண்மலர்வாய் மாயவனே
திசைகள் எக் களிக்க!

13. மெய்யன்பே மேனியெனும்
அலர்மேலாம் மங்கை
மேவுகின்ற மார்பினனே!
அருளுகஉன் செங்கை!
வையகமே வந்தாய்நீ
வைகுண்டம் விட்டு!
வளர்மாலே எழுந்திடுவாய்
துயிலுவதை விட்டு!

14. ஐம்முகனும், இந்திரனும்,
நான்முகனும் சேர்ந்து,
அன்புடனே தொழவந்தார்
உன்வடிவைத் தேர்ந்து!
பொய்கையிலே நீராடிப்
பொலிகின்றார் அவர்கள்!
புலர்கவிழி! பொழிக அருள்!
நலம் பெறுவார் அவர்கள்!

15. தேவர்களும், முனிவர்களும்
திருமுன்னர் பணிந்தார்!
திருமலையின் எழுபெயரைச்
சித்தத்தில் அணிந்தார்!
சேஷ, சைல, வேங்கடமா
மலைஎன்றே ஓதித்
திருக்கோயில் பணிகின்றார்!
எழுக ஆதி ஜோதி!

16. அரன், இந்திரன், இயமான், வாயு,
அக்னியோடு, வருணர்,
அருங்குபேரன், நைருதியாம்,
எண்திசையோடுறுநர்
இருகையும் கூப்பியுள்ளார்!
இடவேண்டும் ஆணை!
எம்விழிகள் பருகட்டும்
தரிசனமாம் தேனை!

17. கருடநடை, சிம்மநடை,
துரகநடை என்று
கருணையனே ! உன்றன்உலா
நடைபெறுவ துண்டு!
அருமையான அந்நடையால்
ஆக்கம்பெற எண்ணி
அவர்களெல்லாம் வந்துள்ளார்
ஆலயத்தை நண்ணி!

18.தேவருடை வாழ்வினிலும்
மேவுகின்ற கோள்கள்,
திருமலையான் பக்தரெனில்
பணிவர் அவர் தாள்கள்!
சேவை செய்யும் அவர்களும்உன்
திருவருளுக் காகச்
சேர்ந்துள்ளார்! விழித்தெழுவாய்
சிந்தை நிறைவாக!

19. நவக்கிரகங்கள் முக்தியினை
நாடிடாமல் என்றும்
நாரணன்உன் திருமலையே
நாடி இங்கு ஒன்றும்
பலமற்றார்க் குதவுகிறார்!
அவர்தலைமேல் பாதம்
பதிப்பதற்கு எழுக என்றே
பகர்ந்தோம் சுப்ர பாதம்!

20. தானதர்மம் செய்து சொர்க்கம்
போகஉள்ள மாந்தர்
தனித்து பக்தி செய்து மோட்சம்
சாருகின்ற மாந்தர்
வீடுபெறப் போகையிலே
விளங்கு சிகரம் கண்டு
மீண்டும் இந்தக் கூண்டடைந்தார்
நீ எழுக நன்று!

21. நின்னைக் காண நாகராஜன்
பட்சிராஜன் வந்தார்!
நித்ய சூரி பற்பல பேர்
நினை வணங்குகின்றார்!
அன்னை என ஆகி எம்மை
அரவணைப்பாய் நீயே!
அடியவர்கள் பயன்பெறவே
காலை விழிப்பாயே!

22. அடைந்தவர்கள் அனைவருக்கும்
அபயம் உன்றன் நாமம்!
அதனை நெஞ்சில் அணிபவர்க்கு
எப்பொழுதும் க்ஷேமம்!
கடைக்கண்ணின் கருணையொன்றே
எங்கள் இலக்காகும்!
கண்விழிப்பாய் மாயவனே!
முன்னைவினை போகும்!

23. நீலமேனி அழகினிலே
திருமகள்தான் ஒன்றி
நினைவிழந்தாள்! நின்னைக் காலைத்
துயிலெழுப்ப லின்றி!
கோலமங்கை தனங்களிலே
கூடிவிட்டாய் நீயும்!
குணக்குன்றின் மழையின்றேல்
எங்கள் உளம் காயும்!

24. இந்நிலத்தைக் காப்பதற்கே
ஒன்பதவ தாரம்,
இதுவரைக்கும் கண்டவனே
கல்கி அவ தாரம்
மண்ணுலகம் உய்வதற்கே
எப்போது தோன்றும்?
வந்துபக்தர் காத்துள்ளார்
கண்விழிக்க வேண்டும்!

25. பொன்குடத்தில் ஆகாய
கங்கைப் புனல் வாங்கிப்
புனிதமான மணம் ஊட்டித்
தம்தலைமேல் தாங்கி -
வண்ணமணி வாசலிலே
உன்னவர்கள் உள்ளார்!
வரந்தரவே உன்னையல்லால்
வேறு யாரே வல்லார்!

26. எழுந்திடுவாய் நீ என்ற
எக்களிப்பில் வானில்
இறக்கைவிரிக்கும் பறவை
குரல் கொடுக்கும் தேனில்!
செழுமைநிறக் கமலங்கள்
மலர்கிறது பாராய்!
சீனிவாச மூர்த்தியே நீ
துயிலெழுந்து வாராய்!

27. இருவிழிகள் மலர்ந்ததும் நீ
திருவடிவம் காண
இமையவர்கள் கண்ணாடி
ஏந்தியுள்ளார்! ஞான
அருளாளர் நிற்கின்றார்
அகம் உனக்கே ஆக்கி!
அணிமாலே! அருள் புரிக
அன்பர் வினை நீக்கி!

28. ஏழுமலை சிகரம் மீது
இலங்கும் அன்புச் சிகரம்
என்னவேஉன் சந்நிதியை
பக்தர் நெஞ்சம் பகரும்!
ஆழிமகள் உறைவிடமே!
அருளின்மூலச் சுடரே!
அழகுவிழி மலர்ந்திடும்
அற்றதெங்கள் இடரே!

29. கதிர் உதிக்கும் காலையிலே
இதைப் படிக்கும் புவியார்
கல்விசெல்வம் மேவிடுவார்
கவலையிலே தவியார்!
முதற்பொருளாம் சீனிவாச
மூர்த்தியினைப் பற்றி
மொழிந்திடும் இப் பாடலினால்
எழுந்தவுடன் வெற்றி!

(தொடரும்)