அருணகிரி உலா-117 - காஞ்சி மாவடிக் கந்தனைப் போற்றுவோம்காஞ்சி மாநகரின் கவின்மிகு சைவத் திருக்கோயில்கள் எண்ணிலடங்கா. அவற்றின் நடுநாயகமாக விளங்குவது ஏலவார் குழலி அம்மையுடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில். ஆம்ர = மா. மாமரத்தடியில் ஈசன் அம்பிகைக்குக் காட்சி கொடுத்ததால் ஏகாம்பரேஸ்வரர் என்று பெயர் பெற்றார். மாமரத்தடியில் பெற்றோருடன் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானை, அருணகிரியார், தனது க்ஷேத்ரக் கோவைப் பாடலில் ‘கம்பைமாவடி மீதேய சுந்தர’ என்று விளிக்கிறார்.

கயிலையில் அம்பிகையும் சிவபெருமானும் அமர்ந்திருந்தனர். அரனார் தேவியிடம் கூறினார். ‘‘உயிர்கள் உய்ய வேண்டும் எனும் கருணையினால் அருள் சக்தியாகிய உன் அம்சமாகவே உருக்கொள்வோம். ஆனால் உலகம் உன்மயமாகும் போது அதற்கு உயிரும் ஒளியும்  எம்மிடமிருந்து தான் வரும். பகலும் இரவுமாக ஒளி தருபவை என் கண்களே! உயிராய் இருப்பது நானே’’ என்றார்.

இதன் உண்மையை அறிய எண்ணி தேவி விளையாட்டாக பின்புறமாக வந்து பெருமான் கண்களை மூடிய போது சூரிய - சந்திரரான அவரது இரு கண்களும் மூடப்பட்டன. உலக முழுதும் இருண்டது. படைப்புத் தொழிலும் நின்றது. இறைவனுக்கு ஒரு கணமென்பது பிரபஞ்சத்திற்கு பல்லூழி காலமாதும். தேவி உடனே கைகளை எடுத்து விட்டாள். இதற்குப் பரிகாரமாக இறைவன் அம்பிகையைத் தவம் செய்திருக்கும்படி ஆணையிட்டார்.

‘‘இரு சுடர் தமக்காதரமாகிய எது கஞ்சத்
திருவிழி புதைத்தவாற்றால் படைப்பாதிச் செய்கை மாறி
உருகெழு தீமை நின்னை உற்றதால் அதற்குத் தீர்வு
மருமலர்க் குழலினாய் நீ மரபுளி இயற்றல் வேண்டும்.’’
- காஞ்சி புராணம்.

தேவியும் உடன் ஐயனை வணங்கி, பத்ரிகாசிரமத்தில் ஒரு குழந்தையாய்த் தோன்றி காத்யாய முனிவரால் வளர்க்கப் பெற்று ‘காத்யாயினி’ என்று பெயர் பெற்றாள். அம்பிகை தக்க வயதை அடைந்ததும் அவளது அவதார காரணத்தை உணர்ந்த முனிவர் அவளுக்கு யோக தண்டம், ஐபமாலை, தீப ஸ்தம்பம், புலித் தோல், புத்தகம், வறுத்த பயறு, கங்கை மண், கங்கா தீர்த்தம், குடை, விசிறி, இரண்டு சாமரங்கள் போன்றவற்றை அளித்து தென்திசையில் சத்யவ்ரத க்ஷேத்ரம் எனப்படும் காஞ்சிபுரத்தில் ஐயனைக் குறித்துத் தவம் செய்யும் படிக் கூறி அனுப்பி வைத்தார்.

காத்யாயினி தேவி காசியை அடைந்த பொழுது அங்கு பெரும் பஞ்சம் நிலவுவதைக் கண்டாள். உயிர்களுக்கு மனமிரங்கி அன்னதானத்தை மேற்கொண்டு அவர்களைக் காத்தாள். எனவே, அங்கு அன்னபூரணி என்று பெயர் பெற்றாள். தெற்கு நோக்கிப் பயணித்த அன்னை, காஞ்சித் தலத்தை வந்தடைந்தபோது அவர் கொண்டு வந்த பொருட்களில் முனிவர் கூறிய சில மாற்றங்கள் ஏற்பட்டன. கங்கை மணல் லிங்கமாகவும், குடை நாகாபரணமாகவும், விசிறி கிளியாகவும், ஜபமாலை வில்வ மாலையாகவும், சாமரங்கள் இரு பெண்களாகவும் மாறின, இதுவே முனிவர் குறிப்பிட்ட தலம் என்றெண்ணிய அம்பிகை நதிக்கரையில் மணல் லிங்கம் அமைத்துப் பூசித்தாள்.

இரு பெண்களையும் காவல் வைத்து, பஞ்சாக்னியை வளர்த்து அதன் மேல் ஊசி முனையில் நின்று தவம் புரிந்தாள். அம்பிகையைச் சோதிப்பதுபோல் தனது திருமுடியிலுள்ள கங்கையை இறக்கி விட்டார் எம்பெருமான். தேவி நடுக்க முற்றாள். [‘கம்ப’ எனும் சொல் நடுக்கத்தைக் குறிப்பதால் அந்நதி கம்பாநதி என்று அழைக்கப்படலாயிற்று] நந்தி சைலம் எனும் மலையை அடைந்து அங்கிருந்து ஏகமுகமாயத் தேவி தவம் புரியும் இடத்தை நோக்கி வந்தாள் கங்கை. தேவியின் தோழி அவ்வெள்ளத்தை விசுவ பக்ஷணம் என்னும் கபாலத்தில் உள்ளடக்கினாள்.

சிவபெருமான், கபாலத்தில் அடங்கி இருந்த வெள்ளத்தை ஆயிரம் முகத்தோடு மகா பிரளயமாய் வெளிவரச் செய்தார். உடனே அம்பிகை, கம்பை நதிக்கரையில் தான் அமைத்து வைத்திருந்த மணல் லிங்கத்திற்கு ஊறு வரக்கூடாதே என்றஞ்சி, தம்மிரு கரங்களாலும் வெள்ளம் வராமல் அணைபோல் தடுத்து, முழங்காலை ஊன்றி, லிங்கத்தைத் தழுவிக் கொண்டாள்.

அம்பிகையின் முலைகளும் கை வளையல்களும் தன்மீது அழுந்தப் பெற்ற அதே நேரத்தில், நான்கு வேதங்களையே கிளைகளாகக் கொண்ட ஒரு மாமரத்தடியில் சிவனாக தழுவக் குழைந்த தலைவனாக ‘ஏகாம்பரேச்வரர்’ [ ஒரு மாமரத்தடியில் தோன்றியாசன்] எனும் ‘பெயர் பெற்றார். ‘‘குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கை வல்லி’’ என்பார் அபிராமி பட்டர்.வம்பறா எனத் துவங்கும் திருப்புகழில் அன்னை தவம் புரிந்ததை அருணகிரியார் பாடுகிறார்.

‘‘கம்பராய்ப் பணி மன்னு புயம் பெறுகைக்குக்
  கற்புத் தவறாதே,
கம்பையாற்றினில் அன்னை தவம் புரி கச்சிச்
சொக்கப் பெருமாளே’’
 - என்கிறார்.
மற்றொரு திருப்புகழில்,
‘‘இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து
இடபமேல் கச்சிவந்த உமையாள் தன்
இருளை நீக்கத் தவம் செய்தருள நோக்கிக் குழைந்த இறைவர்’’
[ ‘அறிவிலா’ எனத்துவங்கும் பாடல்]

அன்னையைக் குழையத் தழுவிய சிவபிரான் பின்னர் தேவியின்
கரிய நிறம் போக்கி பொன் நிறமுடைய கவுரி ஆக்கினார்.
‘‘நகி கொளகத்திற் பயந்து கம்பர் மெய்
கருக இடத்திற் கலந்
திருந்தவள் கஞ்சபாதம்
கருணை மிகுத்துக்
கசிந்துளங் கொடு
கருதுமவர்க்குப் பதங்கள் தந்தருள் கவுரி’’
- ‘சலமலம் விட்ட’ திருப்புகழ்.

பொருள்: ‘‘கம்பா நதி பெருகி வர, அகத்தில் பயந்து சிவலிங்கத் திருமேனி வெள்ளத்தில் கரையுமே என உள்ளத்தில் அச்சமுற்று சிவலிங்கத்தைத் தழுவி இறைவனது திருமேனி பச்சென்ற நிறத்தை உடைய இடப்பாகத்தில் கலந்து விளங்கியவரும், தனது திருவடித் தாமரைகளை உளம் கசிந்து நினைக்கும் அடியார்களுக்கு நிறைந்த கருணையுடன் இந்திர பதம், பிரம்மபதம், விஷ்ணுபதம், ருத்ரபதம் முதலான சிறந்த பதங்களைத் தந்தருள்பவளும் ஆகிய பொன்னிறமுடைய காமாட்சித் தாயார், ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சிலிர்ப்பூட்டும் மாவடிக் காட்சியைக் காணலாம். ஏகாம்பரர் அன்னைக்குக் காட்சியளித்த தலம் இது. மாமரம் விளங்கும் மேடையின் இருபுறமும் வெளியே விநாயகரும் அறுமுகனும் வீற்றிருக்கின்றனர்.

சிலபடிகள் ஏறிச் சென்றால் முருகனுடனும் உமையுடனும் ஐயன் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தர் கோலத்தைக் கண்டு மகிழலாம். இவரைத்தான் அருணகிரியார் ‘கம்பை மாவடி மீதேய சுந்தர’ என்று பாடியிருக்கிறார். தவிர மாவடிக் கந்தனுக்கென தனிச் சந்நிதியும் அருகே கோயில் மண்டபத்தில் அமைந்துள்ளது.

2004ஆம் ஆண்டு மாமரத்திலிருந்து திசுக்களை வைத்து மரபணு தாவர முறையில் புதிய கன்றுகளை உருவாக்கிக் கோயில் நந்தவனத்தில் நட்டனர். மண் தர பரிசோதனை செய்து உரிய முறையில் பாதுகாத்து பழைய மரம் மீண்டும் உருவாக்கப்பட்டது. வேளாண் துறையால் இப்பணி மேற்கொள்ளப்பட்டு பழைய மரமும் நன்றாகத் துளிர் விட்டுள்ளது. குழந்தைப் பேறு வேண்டி வருபவர்கள் இங்கு தொட்டில் கட்டி வைக்கின்றனர். மரம் உள்ள மேடையைச் சுற்றியுள்ள அகழியில் அவ்வப்போது எளிய முறையில் திருமணங்களும் நடத்தப்படுகின்றன.மாவடியில் நின்று மாவடிக் கந்தர் துதியைப் பாடலாம்.

‘‘மூவிரு முகங்கள் போற்றி !
முகம் பொழி கருணை போற்றி !
 ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி ! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி ! அன்னான்
 சேவலும் மயிலும் போற்றி !
திருக்கை வேல் போற்றி போற்றி !
- கந்தபுராணம்.

 மாவடிக் கந்தனின் தனிச் சந்நிதி வாசலில் கீழ் வரும் திருப்புகழ் எழுதப்பட்டுள்ளது.

    ‘‘அற்றைக்கிரை தேடி அத்தத்திலும் ஆசை
பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ
வெற்றிக்  கதிர் வேலா வெற்பைத் தொளை சீலா
கற்றுற்றுணர் போதா கச்சிப் பெருமாளே’’

பொருள் : அன்றன்றைக்கு உணவு தேடி பொருளில் ஆசை கொண்டு உழலாமல், பற்றற்ற பரம்பொருள் மீது பற்று வைக்க மாட்டேனோ? வெற்றியையே அடையும் ஒளி மிகுந்த வேலை உடையவனே! கிரௌஞ்ச மலையை தன் வேலால் தொளைத்த தூயவனே! ஞான நூல்களை கற்று அதன் மூலம் பரம்பொருளை உணர்கின்ற அடியார்களால் போற்றப்படுபவனே! காஞ்சிபுரத்தில் வாழும் பெருமையனே !

[எந்தப் பொருள் மீதும் ஆசை ஏற்பட்டு தவிக்காத பற்றுக் கோட்டினை அடியேன் பெற அருள்வாயாக!]மரத்தருகில் தனிச்சந்நிதியில் இருக்கும் அறுமுகனையும் தேவிமாரையும் வணங்குகிறோம். சந்நதி வாசலில் உள்ள வட்டமான பாறையின் மேல் மலரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டதும் ‘‘வட்டப் புஷ்பத்தய மீதே வைக்கத்தக்க திருபாதா’’ எனும் திருப்புகழ் வரிகள் நினைவுகள் வரும். விசேஷ நாட்களில் முருகனின் உற்சவமூர்த்தியை இப்பாறையின் மேல் வைத்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

கோயிலில் ‘‘வெள்ளி மாவடி’’ எனும் அறிவிப்புப் பலகையைக் காணலாம். இறைவன் அம்பிகைக்குத் தரிசனம் தந்ததைச் சிறப்பிக்கும் பொருட்டு முற்காலத்தில் மரத்தாலான தேரில் மாவடி சேவை நடத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் காந்தி சாலை ஜவுளி வியாபாரிகளின் உபயத்தால் வெள்ளி வாகனத்தில் மாவடிக் காட்சி அமைக்கப்பட்டு வருடந்தோறும் பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளன்று மாபெரும்  அலங்காரங்களுடன் வெள்ளி மாவடி சேவை எனும் வைபவத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

மாவடியின் பெருமையைக் கச்சியப்ப முனிவர் தமது காஞ்சி புராண நூலில், இறைவனே கூறுவதாகப் பின்வருமாறு பாடுகிறார். ‘‘இரக்கமே பருத்த அடிமரமாகவும், தவமே பிரியும் கிளைகளாகவும், சொல்லும் வேத பாடம் ( யாப்பு) நெருங்கும் இலைகளாகவும் ஆகி, எங்கும் விரியும் தருமம் உட்பொருளாகவும், இறைவனே அதன் உயிராகவும், அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பயன்கள் கனியாகவும் அமைந்த மாமரம் இதுவாகும். உமையே, நீ இம்மரத்தின் கீழ் அமர்ந்து எம்மைப் பூசிப்பாயாக’’ என்று இறைவனே அம்மாமரத்தின் பெருமையை உமையம்மைக்கு எடுத்துக் கூறுகிறார்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி