அரிய பொருளே அவிநாசியப்பா!அவிநாசி



தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் காலத்துக்கு முன் ஆண்ட அரசர்கள் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான ஆலயங்களை எழுப்பினர். அதில் ஒரு சில கோவில்கள் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது.
அந்தவகையில்  கொங்கு நாட்டில் தேவாரத் திருப்பதிகம் பெற்ற ‘கொங்கேழ்’ தலங்களுள் நடுநாயகமாக மாணிக்கம் போல் வீற்றிருப்பது  ‘திருப்புக்கொளியூர்’ அவிநாசி. அவிநாசிக்குத் தட்சிணகாசிஎன்றும் தட்சிண வாரணாசி என்றும் பெயர் உள்ளதாகத் தலபுராணம் கூறுகிறது.

தேவாரத்தில் சுந்தரர் ‘புக்கொளியூர் அவிநாசியே’ எனக் கூறப்படுவதால் ‘திருப்புக்கொளியூர் அவிநாசி’ என்றழைக்கப்படுகிறது. அவிநாசி (விநாசம் இல்லாதவன், அழிவில்லாதவன்) என்ற இறைவன் பெயராலேயே இத்தலத்தின் பெயர் அழைக்கப்படுகிறது. சுந்தரர் மற்றுமொரு இடத்தில் ‘பொங்காடரவா புக்கொளியூர் அவிநாசியே’ என்றும் ’பூத்தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே’ என மேலும் ஒரு இடத்திலும் குறிப்பிடுகிறார். எனவே, இறைவன் திருவடி அவிநாசி என்றழைக்கப்படுகிறது.

‘அரிய பொருளே அவிநாசியப்பா’ என்று மாணிக்கவாசகரும் பாடுகிறார். அவிநாசி ஆலயத்திற்கு அதிக சிறப்புத் தருவது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றுத் தொடர்புடைய ஒரு அற்புத விஜயம்தான். சுந்தரர் சேரமன்னன் பெருமாள் நாயனாரைக் காண்பதற்காக சோழநாட்டிலிருந்து மலைநாடு செல்லும் வழியில் கொங்கு நாட்டுக்கு விஜயம் செய்கிறார். அவிநாசியிலுள்ள அந்தணர் தெரு வழியே செல்லும்போது ஒரு வீட்டில் மங்கல ஒலியும், அதற்கு எதிர்த்த வீட்டில் ஒப்பாரியும் கேட்கிறது.

இதைப் பார்த்த சுந்தரர் அங்குள்ளவர்களிடம் கேட்க, இரு வீட்டிலுள்ள ஒரே வயதுள்ள இரு குழந்தைகளும் குளத்திற்குக் குளிக்கச் சென்றார்கள், குளிக்கும்போது ஒருவனை முதலை இழுத்துச் சென்றது. இதைப் பார்த்த மற்றொரு குழந்தை தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்துவிட்டான், அவனுக்கு உபநயன நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலை இழுத்துச் சென்ற குழந்தையின் தாய் தந்தையர் மகனை நினைத்து அழுகின்றனர். இதனை சேக்கிழார்

அந்தணாளர் வணங்கி ‘அரும்புதல்வர்
இருவர் ஐயாண்டு
வந்த பிராயத்தினர் குளித்த மடுவில்
முதலை ஒருமகவை
முந்த விழுங்கப் பிழைத்தவனை
முந்நூலணியும் கலியாணம்
இந்தமனை மற்றந்தமனை இழந்தார்
அழுகை’ என்று மிகச் சுருக்கமாக
அழகுபடப் பாடுகிறார்.

குழந்தையை இழந்த பெற்றோர் சுந்தரர் வந்தை அறிந்தவுடன் அவரை வணங்குகின்றனர். அவர்களை உடன் அழைத்துக்கொண்டு அக்குளத்திற்குச் சென்று பதிகம் பாடுகின்றார்.  ‘உரைப்பாருரையுகந்து’ என்று தொடங்கும் பாடலில் ‘கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே’ என்று பாடியதும் முதலை விழுங்கிய குழந்தையை உயிருடன் கரையில் உமிழ்கிறது.

இதனைக் கண்ட பெற்றோருக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர், தவிர அக்குழந்தைக்கும் உபநயம் செய்து வைக்கிறார், சுந்தரர். குளத்தில் அந்தச் சிறுவன் குளிக்கப் போனதை ‘குளத்திடையிழியாக் குளித்த மாணியெனைக் கிறிசெய்ததே’, என சுந்தரர் பாடலில் குறிப்பிடுகிறார்.  ஹரதத்தாசாரிய சுவாமிகள் ‘ஹரிஹர தாரதம்யம் என்ற வடமொழி நூலில் ஒரு சுலோகத்தில் இதைப் புகழ்கிறார்.

முதலையிருந்த குளத்தை தற்போது தாமரைக்குளம் என்றழைக்கின்றனர். கோயிலுக்குத் தெற்கே சற்று தூரத்தில் ஏரியாகக் காட்சியளிக்கின்றது.  பங்குனி உத்திரத்தன்று அவிநாசியப்பர் குளத்திற்குச் சென்று காட்சி கொடுக்கும் திருவிழா நடைபெறுகிறது.  இக்கோவிலில் சித்திரை மாதம் பூர நட்சத்திரத்தன்று பெரிய தேர் உற்சவம் நடைபெறும்.

முதலைவாய் மதலையழைத்த பெருமையை சேக்கிழார் நமிநந்தியடிகள் புராணத்தில் கூறுகிறார். அருணகிரிநாதர் ‘செறிப்பித்த கராவதின் வாய்மக வழைப்பித்த புராணக்ருபாகர திருப்புக்கொளியூருடையார் புகழ் தம்பிரானே’ என்று பாடுகிறார்.

அவிநாசி ஆலயத்தில் சுவையான மற்றொரு நிகழ்வு நடந்துள்ளது, இது கேட்போரை வியக்க வைக்கிறது. குருநாத பண்டாரம் என்பவர் இறைவன் அவிநாசியப்பர் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர். நாள்தோறும் சிவபூஜை செய்பவர். ஒரு சமயம் முதலை இருந்த குளம் பெருமழையினால் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருவாயிலிருந்தது.

ஆனால் பண்டாரம் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் சிவலிங்கத்தின் மீது சிவ பூஜை செய்துகொண்டிருந்தார்.  உடைப்பைத் தடுக்க வந்த அதிகாரிகள் தள்ளிப் போகச் சொன்னார்கள், இதைப் பண்டாரம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதைக்கண்ட அதிகாரிகள் அவர் பூஜை செய்த சிவலிங்கத்தைத் திருக்குளத்தில் எறிந்ததுமன்றி பண்டாரத்தை கூலி வேலைப் பார்க்கவும் பணித்தனர். 

அடைப்பு வேலை முடிந்ததும் சிவலிங்கம் எறியப்பட்டத் திருக்குளத்திற்குச் சென்று தன் ஆத்மார்த்தி மூர்த்தி தன் கைக்கு வரும் வரை இரவு பகலாக கடுந்தவம் இருந்தார். இறைவன் சிவலிங்கத்தை  மீன் வாயிலாகக் கரையில் உமிழச் செய்தார். பண்டாரமும் சிவலிங்கத்தைப் பெற்று ஆனந்தப் பரவசமடைந்தார்.

இக்கோயிலுக்கு மற்றுமொருச் சிறப்பு வருடந்தோறும் மாசி மாதம் முதல் வாரம் தொடங்கி பங்குனி மாதத்திற்குள் மூலவர் அவிநாசியப்பர் மீது சூரிய ஒளி விழுவது வழக்கம். இப்பழமையான ராஜகோபுரம் வழியாக மூலவர் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை பக்தர்கள் பார்த்துச் செல்வர்.

இப்படி பேரும் புகழும் கொண்ட அவிநாசி ஆலயத்தை அப்பர், சுந்தரர்,, வரதவூரடிகள், திருமூலர் , அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் என பலரும் பாடியுள்ளனர்.  இளையான் கவிராயர் என்பவர் 1021 செய்யுள்களையுடைய அவிநாசித்தலபுராணம் இயற்றியுள்ளார். அவிநாசியப்பரை ஆராதிப்போம்.

எஸ். ப்ரதீபா