நாத பிரம்மம் ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்



பணக்காரர்களுக்குப் பிரச்சனையே கிடையாது; படித்தவர்களுக்கு நோயே வராது; உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்குக் கவலையே இல்லை - என்று பெரும்பாலும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் கடுகளவு கூட உண்மையில்லை. பிரச்னைகளும் நோயும் கவலையும் யாரையும் விட்டு வைக்காது.
உடலால் மட்டுமல்ல; உள்ளத்தாலும் மிக மிக உயர்ந்தவர்களையும் அவையெல்லாம் ஆட்டிப் படைத்திருக்கின்றன. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்க்கலாம். (இனி அவரை ‘தீட்சிதர்’ என்றே பார்க்கலாம்).

தீட்சிதரின் அவதாரத் திருத்தலம் திருவாரூர். அங்கே தீட்சிதர் வாழ்ந்திருந்த காலம்; தீட்சிதரின் அழுத்தமான - எளிமையான பக்தியும்; சங்கீதத் திறமையும்; நற்குணங்களும் அவருக்குப் பெரும்புகழை அளித்திருந்தன. ஒரு சமயம் தீட்சிதர் தம் சீடர்களுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சீடர்களில் கமலம் எனும் பெண்ணும் இருந்தாள். அவள் திருவாரூர் கோயிலில் நாட்டியம் ஆடும் திருத்தொண்டினைச் செய்து வந்தாள்; நல்ல வசதியான நிலையிலும் இருந்தாள்.

அதே நேரம்... சமையற்கட்டில் தீட்சிதர் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள், கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார்கள். காரணம்? வீட்டில் சமைப்பதற்கு ஏதுமில்லை; என்ன செய்வதென்றும் தெரியவில்லை. வேறு வழியே தெரியாத தீட்சிதரின் மனைவி, கமலத்தை மெள்ள உள்ளே அழைத்து விஷயத்தைச் சொன்னாள்; ‘‘கமலம்!  வீட்டில் நிலைமை சரியில்லை. சமைக்க எதுவும் இல்லை. பட்டினி கிடக்கும்படியாக என்று கேட்டாள்.
அதைக் கேட்ட கமலம் கண் கலங்கினாள்; ‘‘அம்மா! என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நானிருக்கிறேன்; கவலையே வேண்டாம். என் கைகளில் இருக்கும் தங்க வளையல்களை அடகு வைத்துப் பணம் வாங்கி வருகிறேன். அதை வைத்து உங்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொள்ளுங்கள்!’’ என பதில் சொன்னாள்.

கமலம் பேசிய வார்த்தைகள், வெளியிலிருந்த தீட்சிதரின் காதுகளில் விழுந்தன; ‘‘ப்ச்! என்ன இது? சீடர்களை நாம் பராமரிக்க வேண்டியது போக, அவர்கள் பராமரிப்பில் நாம் இருக்க வேண்டிய நிலையா வந்துவிட்டது?’’ என்று எண்ணி வருந்தினார். அதே சமயம் கமலம் வெளியே வந்தாள். அவளிடம் தீட்சிதர், ‘‘கமலம்! என்ன செய்ய நினைக்கிறாய்? உன் வளையல்கள், எங்களுக்குச் சில நாட்கள் சோறு போடும். வாழ்நாள் முழுதும், நீ எங்களை காப்பாற்ற வேண்டிய நிலை வந்தால், உன்னிடம் என்ன மிஞ்சியிருக்கும்?’’

‘‘நம் எல்லோருக்கும் உணவளித்துக் காப்பாற்றுபவர் கடவுளல்லவா? நான் உண்மையான பக்தனாக இருந்தால், திருவாரூர் தியாகேசர் என்னைக் கைவிட மாட்டார். எனக்குத் தேவையானபோது, அவர் கண்டிப்பாக உதவி செய்வார்.

ஆகையால், உன் நகைகளை அடகு வைக்காதே! என் சங்கீதத்தைச் சீடர்களுக்கு விற்று, பிழைப்பை நடத்துகிறேன் நான் என, அடுத்தவர்கள் பேசும்படியாகச் செய்து விடாதே!’’ என்று சொன்ன தீட்சிதர், தன் வழக்கப்படித் தரிசனம் செய்யக் கோவிலுக்குச் சென்று விட்டார்.

கோவிலுக்குப் போன தீட்சிதர், திருவாரூர் தியாகேசரைத் துதித்துக் கீர்த்தனை பாடி, வீடு திரும்பினார்; திரும்பியவருக்கு வீட்டில் அதிசயம் காத்திருந்தது. வீட்டில் ஏராளமான உணவுப்பொருட்கள் இருந்தன. எப்படி?தஞ்சாவூரைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர், தன் பரிவாரங்களுடன் திருவாரூர் வருவதாக இருந்தார். அவரை வரவேற்று விருந்து வைப்பதற்காக உள்ளூர் அதிகாரி, பல வகைப்பட்ட உணவுப்பொருட்களைப் பெருமளவில் சேர்த்து வைத்திருந்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாகத் தஞ்சாவூர் அதிகாரி, திருவாரூர் விஜயத்தை ரத்துசெய்து விட்டதாகக் காலையில் தகவல் வந்தது. உள்ளூர் அதிகாரி திகைத்தார்; சேர்த்து வைத்த உணவுப் பொருட்களை என்ன செய்வது? யோசித்தவருக்கு ஒரு வழி புலப்பட்டது; ‘‘உத்தமமான பக்திமான்; தியாகேசரைத் துதித்து ஏராளமான கீர்த்தனைகள் பாடியவர்; திருவாரூர் திருத்தலத்திற்குப் புகழ் சேர்ப் பவர்; அப்படிப்பட்ட உத்தம ஜீவனான தீட்சிதர் வீட்டிற்கு அனுப்பிவிடலாம்’’ என்ற எண்ணம் தோன்றியது.

அதன் விளைவாகவே, அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் தீட்சிதர் வீட்டிற்கு அனுப்பப்பட்டன. ஆலயத்தில் இருந்து வீடு திரும்பிய தீட்சிதர், அங்கிருந்த உணவுப் பொருட்களைப் பார்த்துவிட்டு, ‘‘ஆகா! தியாகராஜப் பெருமான் காப்பாற்றிவிட்டார் பார்!’’ என்று சொல்லி, தியாகேசரைத் துதித்தார். அடியார்களுக்கும் துன்பம் வரும். ஆனால், ஆண்டவன் அதை வெகு விரைவில் தீர்த்து வைப்பார் என்பதை விளக்கும் இந்நிகழ்ச்சி, 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்தது.  

திருவாரூருக்கு அருகில் கீழ்வேளூர் எனும் ஊர் உள்ளது. அங்கே மிகவும் பழைமையான சிவன் கோவிலில் ‘ஆகாச லிங்க’ வடிவாக சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இத்திருக்கோவிலுக்கு தீட்சிதர் தரிசனம் செய்யச் சென்றார்; வெறுங்கையுடன் போகவில்லை; ‘அட்சயலிங்க விபோ’எனும் கீர்த்தனையை எழுதி,அங்கே ஈசன் முன்னால் பாடுவதற்காக எடுத்துச் சென்றார்.       
 
தீட்சிதர் அக்கோவிலுக்குப் போன நேரம், பூஜையை முடித்த அர்ச்சகர் கருவறைக் கதவுகளை மூடிவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய தீட்சிதர், ‘‘சுவாமி! திருவாரூரில் இருந்து, இங்கே சுவாமி தரிசனம் செய்வதற்காகவே வந்திருக்கிறேன். தயவுசெய்து கர்ப்பக்கிருகத்தின் கதவுகளைச் சற்றுநேரம் திறந்து வைக்குமாறு வேண்டுகிறேன்’’ என்றார்.
    
குருக்களோ பரிகாசம் செய்தார்; ‘‘ஐயா! தரிசனம் செய்யவேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். நாளைக்குத் தரிசனம் செய்து கொள்ளலாமே! சுவாமி எங்கே ஓடிவிடப் போகிறார்?’’ என்று கேலியாகப் பேசினார். தீட்சிதர் வருத்தப்படவில்லை; ‘‘கதவுகள் மூடியிருந்தால் என்ன? சிவபெருமான் செவிகளில் அடியேன் பாடல், விழாமலா போகும்?’’ என்றபடி, அங்கேயே அமர்ந்து ‘அட்சய லிங்க விபோ’ எனும் கீர்த்தனையைப் பாடத்
தொடங்கினார்.

தீட்சிதரின் பாடலில் மெய்மறந்த ஊர் மக்கள் அனைவரும் சிறுகச்சிறுக வந்து, தீட்சிதரைச் சூழ்ந்து அவர் பாடலை ரசிக்கத் தொடங்கினார்கள்.   கேலிபேசிப் பரிகாசம் செய்த அர்ச்சகரும், தீட்சிதரின் பாடலில் தன்னை மறந்தார். பாடல் முடிவடையும் நேரம்; அனைவரும் அதிசயிக்கும் விதமாக, கருவறையின் கதவுகள் தாமாகவே திறந்துகொண்டன; உள்ளே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த விளக்கொளியில், அனைவரும் ஈசனைத் தரிசித்தார்கள். அர்ச்சகரோ அப்படியே, தீட்சிதரின் திருவடிகளில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அவருக்கு ஆசி கூறிய தீட்சிதர், கண்குளிர ஈசனைத் தரிசித்து விட்டுத் திருவாரூர் திரும்பினார்.        

அடியார்களுக்கும் தடைகள் வரும். அவர்கள் துவளாமல் உறுதியாக இருப்பார்கள்; தாமாகவே விலகும் தடைகள் என்பதை விளக்கும் நிகழ்வு இது. அடுத்தவர்களுக்காக வாழ்வதில், அடியார்களுக்கு அளவில்லாத ஆனந்தம் உண்டாகும். தீட்சிதர் மட்டும் விதிவிலக்கா என்ன? சாத்தூர் என்ற ஊரிலிருந்து எட்டயபுரத்தை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருந்தார் தீட்சிதர்; அர்ச்சகர்கள் சிலரும் அவருடன் போய்க் கொண்டிருந்தார்கள். கோடைக்கால வெப்பம் உச்சியில் இருந்தது. எட்டயபுரம் செல்லும் வழியில், பூமி காய்ந்து வெடித்திருந்தது. அந்த வழியில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கிராமத்தை நெருங்கினார்கள்; எல்லையிலிருந்த தோப்பில் தங்கினார்கள்.

தீட்சிதருக்குத் தாங்கமுடியாத தாகம் உண்டானது. அதற்குள்ளாகத் தோப்பின் உரிமையாளரும் ஊர்ப்பெரிய மனிதருமானவருக்கு, தீட்சிதர் தம் தோட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது; ‘‘தெய்வாம்சம் கொண்ட சங்கீதமேதை ஒருவர், என் தோப்பில் தங்குவது பெரும் பாக்கியம்! பெரும் பாக்கியம்!” என்றபடியே விரைந்து வந்தார் தோப்பிற்கு. வந்தவர், தீட்சிதருக்கு மரியாதை செலுத்தி உபசரித்தார்; தீட்சிதரின் தாகம் தீரக் குடிநீர் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.  குடிநீர் அருந்தித் தாகம் தீர்ந்ததும் தீட்சிதர், ஊர்ப் பெரிய மனிதரிடம், ‘‘இந்தப் பக்கமெல்லாம் ஏன் இவ்வளவு வறட்சி? குடிப்பதற்குத் தண்ணீர் கிடைப்பது கூடக் கஷ்டமாக இருக்கிறதே; ஏன்?’’ எனக் கேட்டார்.

‘‘பல வருடங்களாக மழையே இல்லை. சுவாமி! அதனால்தான் எல்லா இடங்களும் வற்றி - வறண்டுபோய் விட்டன. கஷ்டம் சொல்லி, முடியவில்லை’’ என்றார், ஊர்ப் பெரியவர். அதைக் கேட்டதும் தீட்சிதரின் மனம் உருகியது; தோப்பை விட்டு வெளியேறி, அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்றார்; அங்கே விசேஷ பூஜைகள் செய்து, அம்பாளின் அருள் வேண்டி ‘ஆனந்தாம்ருத கர்ஷணி’ எனும் கீர்த்தனையைப் பாடினார்.

‘‘அம்மா! தேவீ! அருளின் இருப்பிடமான நீ, இந்தப் பகுதி மக்களுக்கு, மழைபொழிய வேண்டும் என்பதற்காக உன்னை வேண்டுகிறேன். உடனே, இங்கு மழை பொழியச் செய்! மழை பொழியச் செய்!’’ எனும் கருத்தமைந்த அப்பாடலைப் பாடி முடித்ததும்; ஆகாயத்தில் கருமேகங்கள் கூடின; பெரும் மழை பெய்யத் தொடங்கியது.

அதுவரை அப்பகுதி மக்கள் பார்க்காத அளவிற்குப் பெரும் மழை பெய்தது.தீட்சிதர் பாடிய அப்பாடல் அவராலே உருவாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல! அப்பாடல் பாடப்பட்ட ‘அமிருத வர்ஷிணி’ ராகமும் தீட்சி தரால் உருவாக்கப்பட்டதுதான். ஆம்! அமிர்தவர்ஷிணி ராகத்தை உருவாக்கியவர் தீட்சிதரே! அருள் உள்ளம் கொண்டவர்களின் விருப்பத்தை அப்போதே ஆண்டவன் தீர்த்து வைப்பார் என்பதை விளக்கும் நிகழ்வு இது.

1834ம் ஆண்டு. தீபாவளிக்கு முந்தைய நாள். அதிகாலையில் எழுந்த தீட்சிதர், வழக்கமான யோகப் பயிற்சிகளை முடித்துவிட்டு, நீராடச் சென்றார். அப்போது அவருக்குக் காசி அன்னபூரணி தேவீ, நேருக்கு நேராகக் காட்சி தந்தார். பார்த்த தீட்சிதர் பிரமித்தார்; குருவின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. தீட்சிதர் காசிக்குச் சென்றிருந்தபோது, அவருடைய குருநாதரான சிதம்பரநாத யோகியார், தீட்சிதரை அன்னபூரணி சன்னதியில் நிற்க வைத்து, ‘‘இந்த அன்னபூரணி, இவ்வுலக வாழ்க்கையில் உனக்குத் தேவையான உணவை அளிப்பாள்;அது மட்டும் அல்ல! முக்தியையும் அருள்வாள்’’ என்று சொன்னது நினைவிற்கு வந்தது.

தம் இறுதிக்காலம் நெருங்கி விட்டதை உணர்ந்தார் தீட்சிதர். உடனே நீராட்டத்தை முடித்துக்கொண்டு, நவாவரண பூஜையையும் முடித்து, ‘ஏஹி அன்னபூர்ணே’ எனும் புன்னாகவராளி ராகக் கீர்த்தனையைப் பாடினார்.பூஜை முடித்து வெளியே வந்தால், தீட்சிதரைப் பார்ப்பதற்காக எட்டயபுரத்து மன்னர் வந்திருந்தார்; வந்த மன்னர் மிகுந்த பதற்றத்துடன் இருந்தார். அவரைப் பார்த்ததும் தீட்சிதருக்கு வியப்பு உண்டானது; ‘‘இந்த நேரத்தில் மன்னர், நம்மைப் பார்க்க வரமாட்டாரே! பதற்றத்துடன் வேறு காணப்படுகிறார்! ம்! என்ன ஆயிற்று?’’ என்று நினைத்தார் தீட்சிதர்.

அதைப் புரிந்து கொண்டதைப்போல மன்னர் பேசத் தொடங்கினார்; சுவாமி! அடியேனின் பட்டத்து யானையான ‘காங்கேயன்’ எனும் யானைக்குத் திடீரென்று மதம் பிடித்து விட்டது. மதம்பிடித்த அது, சங்கிலியை அறுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு ஓடிப்போய் நிற்கிறது. என்ன முயற்சி செய்தும், யாராலும் அதை அடக்க முடியவில்லை.‘‘இதைப் பார்த்தால், எனக்கு ஏதேனும் பெரும் தீங்கு உண்டாகுமோ என்று அச்சமாக இருக்கிறது. அதைத் தெரிவித்து, உங்களிடம் ஆசிபெற்றுப் போகலாம் என்றுதான் வந்தேன்’’ என விவரித்தார் மன்னர்.

அவருக்கு ஆறுதல் சொன்ன தீட்சிதர், ‘‘மன்னா! உனக்கு ஓர் ஆபத்தும் வராது’’ என்றார் தீட்சிதர். சற்று திருப்தியடைந்த மன்னர், ‘‘சுவாமி! என் ராஜ்ஜியத்திற்கு ஏதாவது இடையூறு வந்து விடுமோ?’’ எனக் கேட்டார்.‘‘மன்னா! உங்கள் ராஜ்ஜியத்திற்கும் ஒரு தீங்கும் வராது. இது நிச்சயம்!’’ என்றார் தீட்சிதர்.தீட்சிதரை வணங்கிய மன்னர், ‘‘மகிழ்ச்சி குருநாதா! மகிழ்ச்சி குருநாதா! எல்லாம் தங்கள் அருள்’’ என்று விடை பெற்றார். சற்று நேரத்தில் தீட்சிதரின் சீடர்கள், அவருடைய கீர்த்தனை களைப் பாடத் தொடங்கினார்கள். அப்போது தீட்சிதர், ‘‘இன்று சதுர்தசி. அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினம். அம்பாள் கீர்த்தனைகளைப் பாடுங்கள்!’’ என்றார்.

சீடர்களும் ‘மீனாட்சி மேமுதம் தேஹி’ எனும் கீர்த்தனையைப் பாடி முடித்தார்கள். அதைக் கேட்ட தீட்சிதர், ‘‘அம்பிகை என்னுடைய உலக பந்தங்களையெல்லாம் இப்போது, நீக்கிவிடப் போகிறாள் என்று தோன்றுகிறது.இன்னொரு முறை இதே கீர்த்தனையைப் பாடுங்கள்!’’ என்றார்.
சீடர்கள் பாடினார்கள். அப்பாடலில் உள்ள ‘மீனலோசனி பாசமோசனி’ எனும் வார்த்தைகளைப் பாடும்போது, தீட்சிதர் தம் உடலை நீக்கிவிட்டு, அம்பிகையின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார். சற்று நேரத்திற்குள், மன்னரின் பட்டத்து யானை மதம் நீங்கி, இயல்பு நிலைக்குத் திரும்பியது; அமைதியாக அரண்மனைக்குத் திரும்பியது.

தீட்சிதரின் முடிவைக் கேட்ட மக்களும் மன்னரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மன்னர் கதறினார்; ‘‘சுவாமி! இன்று காலை உங்களைத் தரிசித்தபோது, என்றுமில்லாத ஒரு புதுவிதமான சோபை உங்கள் முகத்தில் தெரிந்தது. என் புத்தியோ, எனக்கோ அல்லது என் ராஜ்ஜியத்திற்கோ எந்தத் தீங்கும் வரக்கூடாது என்பதிலேயே இருந்தது. உங்கள் வாக்கைக்கேட்டு, அமைதி பெற்றேன்.

ஆனால், உங்கள் மறைவினால் வந்த இழப்பு, என் ராஜ்ஜியத்தை இழப்பதால் வரும் நஷ்டத்தைவிட அதிகம்’’ என்று கதறினார். பிறகு மன்னரின் உத்தரவுப்படி தீட்சிதரின் பூத உடலுக்குச் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாம் செய்யப்பட்டன; பிறகு அந்த இடத்தில் ஒரு சமாதியும் எழுப்பப்பட்டது.

பி.என். பரசுராமன்