அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-79



சரணம் அரண் நமக்கே

ஈசன் மன்மதனை அழித்தார். அனங்கன் என்ற பெயரில் ஆக்கினார். இது சகித முத்தி எனப்படும். துணையிறதி பதிசயமானது அபசயமாக முன் பார்தவாதம் - 17 ‘‘விழியால் மதனை அழிக்கும் தலைவர்’’- 87. அந்தகாசூரனை சூலத்தினால் குத்தி அதன் மூலம் அவனுக்கு ஞானத்தை அளித்து, அவன் விரும்பிய படியே சிவபக்தி அளித்து, தன்னடிமையாக்கி கொண்டு சாதிகார முத்தியளித்தார். ‘‘யாமம் வைரவர்’’- 73 துறக்கம் தரும் நின் துணைவரும் - 89 என்பதிலிருந்து அறியலாம். ஜலந்தரனுக்கும் அவன் மனைவி ப்ருந்தைக்கும் ப்ருந்தை மயானத்தில் (விற்குடி) சாயுஞ்ய பதவியளித்து மோட்சத்தை அருளினான்.

அயன் சிரம் ஒன்று செற்றகை யான் - 88.
பிரம்மாவின் ஒரு தலையை மட்டுமே கிள்ளியெடுத்து அவரின்
ஆணவத்தை அழித்தார். பிரம்மாவை அழிக்கவில்லை. புத்ர சகித
முத்தியளித்தார்.

ஆரணத்தோன் கற்தரி - 8
காலனுக்கு பூமாதேவியின் பிராத்தனையால் மீண்டும் உயிர் பிச்சையளித்தார். காலனுக்கு பரிவார முத்தியளித்தார். ‘‘மாயா முனிவரும்’’ - 4.

கஜத்தின் உடலை கிழித்தாலும் அதன் உயிர் போகாமல் அதே சமயத்தில் அழிக்கவுமில்லாமல் அதன் நான்கு கால்களிலும் கணபதி, விநாயகர், துர்க்கை, சூரியன் இவர்களை அமர்த்தியும் தலைமீது தன் திருவடி ஊன்றியும், சாரூப முத்தியளித்தார். திருத்துறைப்பூண்டியில் இன்றும் காணலாம்.

கரி உரி போர்த்த செஞ்சேவகன் - 62 தட்சனை அழித்தாலும் மீண்டும் ஆட்டுத் தலையை வைத்து சாமீப முத்தியளித்தார். (கைதொழுதபடியிருத்தல்) அரண்மைந்தபுரத்தில் இன்றும் காணலாம் (அனுமந்தபுரம்).

செம்முகனும் முந்நான்கிரு  மூன்று - 65
திரிபுராசூரனை அழித்தாலும் துவாரபாலகராக இருவரையும் குடமுழா வாசிப்பவராகவும் அமர்த்தி சாலோக முத்தியளித்தார். ‘‘அன்று மும்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்து வில்லான் பங்கில் வாணுதலே’’ - 39 சிவபெருமான் தன்னால் அழிக்கப்பட்ட பகைவரின் பகைமையை அதாவது முரணை அழித்தார். அதோடு மட்டுமல்லாமல் மீண்டும் அவர்களுக்கு வாழ்வும் அளித்தார். இது சிவபெருமானின் தனிச்சிறப்பு இதையே ‘‘முரண் அன்று அழிய முனிந்த பெம்மான்’’ என்றார்.

‘‘முகுந்தனுமே’’
உயிர்களை விடுவிப்பவன் முத்தியளிப்பவன் என்பது பொருள். துன்பம் தருகின்ற அசுரர்களிடமிருந்து தேவர்களை விடுவிப்பவன். அதனாலும் முகுந்தன் என்று பெயர். முகுந்தையின் சாபத்தினால் பிறந்த மஹாபலியை வென்றதனால் முகுந்தன் என்று பெயர். எதிரிகளை முழுவதுமாய் அழித்த உயர்ந்த வீரத்தை முகுந்தனுமே என்கிறார்.சிவபெருமானும் பகைவரை அழிக்கிறார். விஷ்ணு பகைவரை அழிக்கிறார். இரண்டு பேரும் பகைவரை அழிக்கும் முறையில் உள்ள வித்தியாசத்தை தெளிவாக நமக்கு அறிவுறுத்தவே முகுந்தனுமே என்கிறார்.

    அந்த வித்தியாசம் என்பது பகைவனையே அழித்துவிடுவது. பகைமையை மட்டும் அழிப்பது, அந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ‘‘முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும்’’ (சிவன்) முகுந்தனுமே (விஷ்ணு) என்கிறார்.முகுந்தனும் + ஏ இந்த ‘ஏ’ காரம் பேராற்றலுடைய தன்நிகரற்ற பகைவனையும், பகையையும் அழிக்கக் கூடிய முனிந்த பெம்மானும் முகுந்தனு + ஏ சரணம் சரணம் என சரணடையும் தனித்தன்மைகொண்ட பெரும் தலைவி அபிராமி அம்மையின் சிறப்பையும், தனிதன்மையையும் சூட்டவே ‘‘முகுந்தனுமே’’ என்கிறார்.

‘‘சரணம் சரணம்’’ என நின்ற என்ற சொல்லானது சரணாகதியை குறிக்கிறது. அதை அபிராமி பட்டர் நோக்கில் விரிவாய் இனி காண்போம். தன் காரியம் நிறைவேற யாரை சார்ந்தால் நடக்கும் என்று ஆராய்ந்து [சரண்] அவரிடத்தில் செல்லுதல் சரணாகதி. அவனைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுக்கே - 38 துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவும், பிறருடைய துன்பத்தை நீக்கவும் யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களை அண்டி (சரணடைந்து) நிற்கின்ற பண்பை இங்கு குறிப்பிடுகின்றார்.

வந்தே சரணம் புகும் அடியார் - 34.
அச்சத்தால் தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு பிறரை அண்டி அதைப் போக்கும்படி யாசித்தல் ‘‘சரணம்’’ எனப்படும்.
‘‘சரணம் அரண் நமக்கே’’ - 50

பலரிடத்தும் செல்லாமல், பிற வழியில் முயற்சிக்காமல், ஒருவரிடத்திலேயே செல்லுகின்ற பண்பு சரணாகதி ‘‘சரணாம் புயமும் அல்லல் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே’’ - 58 உயர்வான ஒருவரிடம் ஒரு பயன் கருதி, ஒன்றையே பின்பற்றி, அதன் வழி ஏகி அதை அடைய முயல்வது சரணாகதி. அடியினையை பயன் என்று கொண்டவர் - 74. இதற்கும் சரணம் என்று பெயர். தனக்குள்ள உரிமை, பொறுப்பு, கடமை, உடைமை அனைத்தையும் பிறரிடம் ஒப்படைத்து தன்னைக் காத்து வாழ்வருளும்படி வேண்டுவது சரணாகதி. இதையே ‘‘கரையேற்றுகை நின் திருவுளமே’’ - 30 எனக்குள்ளவெல்லாம் அன்றே உனதென்றளித்துவிட்டேன் - 95. என்கிறார் பட்டர்.

‘‘நாயகி தன் அடியார்’’- என்பது உமையம்மையை வணங்குகின்றவர்களை குறிக்கும். அப்படி வணங்குகிறவர்கள் தேவர், மானுடர், ரிஷிகள் படிவடியார் என்று அனைவருமே உமையம்மையை தொழுகின்ற அடியவர்கள்தான் என்றாலும் அபிராமி பட்டர் நோக்கில் உமையம்மையால் தன் அடியாராக அறிவிக்கப்பட்டவர்களை ஆட்கொள்ளப்பட்டவர்களை மட்டுமே சிறப்பாக குறிக்க ‘‘தன்’’ அடியார் என்று குறிப்பிடுகின்றார்.

உமையம்மைக்கு பல உருவங்கள் இருப்பதால் அதில் எந்த உருவம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட ‘‘நாயகி’’ என்ற வார்தையை சொல்கிறார். எல்லாச் சிவாலயங்களிலும் இலக்குமி, துர்கை, சப்தமாதர்கள், சிவகாமி, ஆனந்தவல்லி போகசக்தி என்று பல திருவுருவங்கள் உமையம்மைக்கு இருந்தாலும் அதில் உடனாய என்ற பதத்திற்கு சொந்தமாக உமையம்மையையே ‘‘நாயகி’’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார் உதாரணமாக மீனாம்பிகா சமேத ராஜசேகரசுவாமி, அபிராமி  உடனாய அமிர்த கடேஷ்வரர் என்று கூறுவதுபோல... இந்தப் பாடலை பொறுத்தவரை அபிராமியை நாயகி என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ஆகமம் இந்த சத்தியை மனோன்மணி என்கிறது.

திருக்கடவூரை பற்றி சொல்வதால் அங்கு அருள் பெற்றவர்களை இங்கே குறிப்பிடுகின்றார்.இது பொது அடியார். கூட்டியவா என்னை தன் அடியாரில் - 80 திருக்கடையூரிற்கே உடைய அடியார்களும் உளர். இனியும் உருவாகலாம். அந்த வகையில் நாயகி தன் அடியார் என்பது குங்குலி கலய நாயனார், உய்யவந்த தேவநாயனார், சந்திர பூஷணன் என்னும் மன்னன் இவர்கள் அனைவருமே மானுடர்கள்.

 இதைத் தவிர அகத்தியர், புலத்தியர், வாசுகி, மார்க்கண்டேயர் போன்ற முனிவர்களும், பிரம்மா, துர்க்கை, விஷ்ணு போன்ற தேவர்கள், இவர்களையே நாயகி தன் அடியார் என்கிறார். பொதுவாக ‘‘ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன் அமரர்தங்கோன் போதில் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்’’- 97 .இவர்களும் நாயகி தன் அடியார் என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.

‘‘மரணம் பிறவி’’- ஆன்மாக்களுக்கு ஒரு உடல் கிட்டுமாயின் அது பிறவி எனப்படும்.ஆன்மாக்கள் பெற்ற உடலை இழக்குமாயின் அது மரணம் எனப்படும்.ஆன்மாவானது தன்னை அறிவிக்க அறியும் தன்மை கொண்டது. அப்படி ஆன்மா அறிவு பெறுவதற்கு சாதனம் இந்த உடல். ஆன்மா தன்னை வளர்த்துக் கொள்வதற்காக (அறிவை பெறுவதற்காக) இறைவனால் தரப்படுகிற சாதனம் உடல். அந்த உடலை பெறுவது ஆன்மாக்களுக்கு பிறப்பு.அறிவு என்பது கண்டு, கேட்டு, உற்று நுகர்ந்து ருசித்து பெறப்படும் எண்ணப்பதிவோ, அனுபவமோ ஆகும்.

இந்த அறிவு ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பிறவிக்கு ஓர் அறிவின் வீதம் அறுவகை பிறவி எடுத்து அந்த அறிவினால் பெறப்படும் அனுபவத்தை ஆன்மா பெறும். அது உடல் அனுபவத்திற்குரிய சாதனமாய் அமையும். உடல் இன்றி ஆன்மா அனுபவத்தை பெற இயலாது. ஆனால், ஒவ்வொரு உடலும் ஆன்மாவிற்கு வெவ்வேறு விதமான அறிவைத் தரவல்லது.அந்தந்த உடல் சார்ந்து மரம், ஊர்வன, பறப்பன நடப்பன, கிடப்பன என்று எண்பத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு உடல்கள் இருப்பதாகவும், அவற்றின் வழி பெறப்படும் அறிவு ஈரேழு வகையாகவும் சாத்திரங்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதையே ‘‘புவனம் பதினானன்கையும்’’ - 13 என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.

அந்த அறிவை பெறத்தக்க தன்மையானது ஆன்மாக்களுக்கு தான் பெற்ற உடல் சார்ந்து மற்றும் உயிர் சார்ந்ததும் அமையும் உடல் சார்ந்து ஏழுவகை அறிவும், கண்டு, கேட்டு, நுகர்ந்து, ருசித்து, உற்று, உணர்ந்து அறிந்து. இது சரீர நலத்தைத் தரும்.

இறைவனை அறியும் அறிவு, உடலோடு கூடிய பிற ஆன்மாவை அறியும் அறிவு, தேவர்களை அறியும் அறிவு, பித்ருக்களை அறியும் அறிவு (உடலற்ற ஆன்மா) ரிஷிகளை அறியும் அறிவு (ஒளிமயமான ஆன்மா), பஞ்ச பூதங்களை அறியும் அறிவு பஞ்சபூதங்களை பற்றிய உடல் சாராத மெய்யறிவு, உண்மையை அறியும் அறிவு, இந்த அறிவு பெறும் தன்மையையே வாழ்க்கை என்றும், அதை இழக்கும் தன்மையை மரணம் என்கிறார்.

இதுபோல அறிவைப் பெறும் முயற்சியில் ஆன்மா ஈடுபட்டு தன்னை அறிந்து, தன்னைச் சூழ்ந்த உலகமறிந்து, தன்னையும் உலகத்தையும் இணைக்கும இறையை அறிந்து, மரணம் பிறவி இரண்டிலிருந்தும் விடுபடும் முயற்சியில் ஈடுபடுவதையே மரணம் பிறவி என்கிறார்.

‘‘உடம்போடு உயிர் உறவை அற்று அறிவுமறப்பது மரணம்’’உடலோடு உயிர் உற்று பெறுவது பிறப்புஇப்படி உடலை பெறுவதன் பயன் தன்னை அறிவது. தன்னை அறிவதன் பயன், தன்னை படைத்த இறைவியை அறிவது. இறைவியை அறிவதன் பயன் துன்பமற்று எந்நாளும் இன்பமாய் சலிப்பற்று அழிவின்றி நிலைத்திருப்பதாகும். இதையே பட்டர் ‘‘ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்’’ - 11 என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம். இதன் வழி மரணம் பிறவி என்று ஆன்மாக்களுக்கு இறைவன் அளித்த உடலின் வழி நன்மையாகும். இதையே மரணம் பிறவி என்கிறார்.

‘‘இரண்டும் எய்தார்’’ - என்பது முன் சொன்ன மரணம் பிறவி இவற்றை குறிக்கும். இது இறைவனின் திருவடியில் சென்று கலக்கும்வரை தொடர்ந்துகொண்டேயிருக்கும். கலக்கும் வரையுள்ள இடைப்பட்ட நிலையில் ஞானம் என்பது ஆன்மாக்களுக்கு உண்டாகும். அது ஒரே பிறவியில் உண்டாகாது. பெற்ற அறிவு சார்ந்தும், பக்குவம் சார்ந்–்தும், பாவ புண்ணியம் இறைவன் ஆன்மாக்களோடு உடலை சேர்த்தும் பிரித்தும் செயல்படுகிறார்.

இந்த செயலானது மரணம் பிறவி என்ற சொற்களால் அழைக்கப்படுகிறது. இடைப்பட்ட பகுதிக்கு வாழ்க்கை என்று பெயர். ஒருவருக்கு முழு ஞானம் வந்த பிறகு தன்னைத் தான் அறிதலால் பிறவி மரணம் முற்றுப் பெறுகிறது. இதை தற்கால நோக்கில் ஒரு உதாரணத்தால் அறியலாம். ஒரு மாணவனின் பள்ளிக்கூட சேர்க்கையின்போது கொடுக்கப்படுகிற விண்ணப்பம், பள்ளியை விட்டு செல்லுகிறபோது பெறப்படும் மாற்றுச் சான்றிதழ் போன்றது நம் உடல்.

மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, கல்லூரி இளங்கலைக் கல்வி, முதுகலைக் கல்வி, ஆய்வு இவை ஏழிலும் நிரப்பப்படும் தகவல் சார்ந்து கல்வித் தகுதி உயர்வதுபோல ஒன்று முதல் ஏழு வரையுள்ள ஐம்புலன், மனம், ஆன்ம அறிவு சார்ந்து பிறவி, மரணம் ஆன்மாக்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த இடத்தில் ‘‘இரண்டும் எய்தார்’’ என்பது மழலைக் கல்வியில் துவங்கிய படிப்பானது ஆய்வுக் கல்வியில் முடிவடையும் படிப்பைப்போல... பிறவி, மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. அந்த முற்றுப்புள்ளியை வைப்பதென்பது இறையருளால் மட்டுமே சாத்தியம். மானுட உடல் எடுத்தல் மட்டுமே சாத்தியம். அப்படி இல்லாமல் உமையம்மையின் அருளால் படிநிலை முத்தியை பெறலாம் என்கிறார்.

உமையம்மையே ஞானத்தின் வடிவாய் இருக்கிறாள். அந்த ஞானம் விரைவாகவும், சரியாகவும், அமைய வேண்டும் அதற்கு குருவருளும் திருவருளும் வேண்டும்.இவ்விரண்டையும் தருவது சரணடையும் பண்பு உணர்ந்து, அறிந்து, செயல்பட்டு பின் அடைவது சரணாகதி அந்த சரணாகதியை உமையம்மையே ஏற்க வேண்டும்.

ஏற்பதற்கு உபாசகனிடத்தில் பக்குவம் வேண்டும். அந்த பக்குவத்தையே ‘‘இரண்டும் எய்தார்’’ என்கிறார். மேலும் இரண்டும் என்பது இருமை என்கிற துன்பம் இன்பமாகும். இது உடல் சார்ந்து வியாதி யாகவும், இளமையாகவும் உள்ளம் சார்ந்து - மகிழ்சியாகவும், துக்கமாகவும், அறிவு சார்ந்து குழப்பமாகவும், தெளிவாகவும், ஆன்மா சார்ந்து- கர்மாவாகவும், ஆசையாகவும் திகழ்கிறது.

இந்த இரண்டில் ஒன்று இன்பம் தந்தாலும் அந்த இன்பத்தை விட்டு விலகுவதே துன்பமாகிறது. மேலும் நிலையான பண்பு அதற்கு இல்லை. இவற்றை நீக்கி துன்பம் முழுவதுமாய் நீக்கப்பட்டு, இன்பம் முழுவதுமாய் பெறப்பட்டு அது நிலைத்து இருப்பதும் அப்படி இருந்தால் சலிக்காது.

இருக்கிற ஆன்மநிலை என்பது மரணம், பிறவி என்ற இருமை நீங்கியோருக்கே வரும். இதைத்தான் முக்திக்கான பக்குவமான சக்தினிபாதம் என்கிறது. மேலும், இரண்டும் என்பது இருமை என்கிற துன்பம் இன்பமாகும். இது உடல் சார்ந்து - வியாதியாகவும், இளமையாகவும், உள்ளம் சார்ந்து - மகிழ்ச்சியாகவும், துக்கமாகவும், அறிவு சார்ந்து குழப்பமாகவும், தெளிவாகவும், ஆன்மா சார்ந்து  கர்மாவாகவும், ஆசையாகவும் திகழ்கிறது.

இந்த இரண்டில் ஒன்று இன்பம் தந்தாலும் அந்த இன்பத்தை விட்டு விலகுவதே துன்பமாகிறது. மேலும், நிலையான பண்பு அதற்கு இல்லை. இவற்றை நீக்கி துன்பம் முழுவதுமாய் நீக்கப்பட்டு, இன்பம் முழுவதுமாய் பெறப்பட்டு அது நிலைத்து இருப்பதுவும் அப்படி இருந்தால் சலிக்காது.

இருக்கிற ஆன்ம நிலை என்பது மரணம், பிறவி என்ற இருமை நீங்கியோருக்கே வரும் இதைத்தான் முத்திக்கான பக்குவமான சக்தினிபாதம் என்கிறது. இது உடன் நிகழ்ச்சி. இதைத்தான் ‘‘இரண்டும் எய்தார்’’ என்கிறார். உடன் நிகழ்ச்சி என்பது ஒளி வந்ததும் இருள் விலகுவதுபோல் ஒளி வருவதும், இருள் விலகுவதும் ஒரே நேரத்தில் நிகழ்வது. அதுபோலவே மரணமும் பிறவியும் ஒரே அடிப்படையிலானது.

‘‘இந்த வையகத்தே’’ - அபிராமி பட்டர் வசிப்பிடம் குறித்து பதினான்கு இடங்களை குறிப்பிடுகின்றார். தேவர்கள், மானுடர்கள், ரிஷிகள், முதன்மை தேவர்கள். இவர்கள் வசிக்கும்  இடங்கள் அவைகளின் பெயர் இவற்றை மறைமுகமாக குறிப்பிடுகின்றார்.

விண்ணுலகம், கயிலாயம், பாற்க்கடல், நரகம், தென்புலத்தார் உலகம், சக்தியின் இருப்பிடமாகிற முக்திலோகம் நாம் வசிக்கும் இந்த பூமி என்று எழுவகையான இருப்பிடங்களை குறிப்பிடுகின்றார்.

இவை ஏழும் உடல் சார்ந்தும், உயிர் சார்ந்தும் என ‘‘புவி ஏழையும் பூத்தவளே’’- 12. அதில். அதல, விதல, சுதல, தராதல, ரசாதல, மகாதல, பாதாள போன்ற ஏழு லோகமாகும். இதையே புவனம் பதினான்கையும் - 13 என்கிறார்.அதில் வாழ்பவர் அவரின் தன்மை. இவைகளையும் குறிக்கின்றார்.

‘‘பொன் சயனம் பொருந்து தமனியக்
காவினில் தங்குவரே’’- 74.

தங்கப் படுக்கை என்று சொல்லக்கூடிய பெருமதிப்பிற்குரிய செல்வச் செழிப்பை குறிப்பதற்காக இவ்வார்த்தைகளால் சூட்டுகிறார். இது தேவர் உலகம்.
மலம் மிகுந்த இடத்தில் அதை நீக்க முடியாமல் மிகவும் துன்புறுவர் என்கிறார். நரகத்தில் உள்ள சூழலை ‘‘பாழ்நரகக் குழிக்கே’’
என்பதிலிருந்து அறியலாம்.

அந்த வகையில் இந்த வையகத்தே என்று குறிப்பிடுவது நாம் வாழும் இந்த உலகத்தை. இது எல்லா உலகங்களையும் விட மிகவும் சிறப்பானது. எந்த வகையில் என்பதை நாம் புரிந்துகொள்வது இச்சொல்லின் நுட்பத்தை புரிந்துகொள்ள உதவும். பொதுவாக பாவம் செய்தவர்கள் அது தீரும் வரை நரகத்தில் இருந்தாக வேண்டும். புண்ணியம் செய்தவர்கள் அது தீரும் வரை சொர்க்கத்தில் இருப்பார்கள். ஒரு உடலை விட்டு இன்னும் ஒரு உடலை எடுக்கும் இடைப்பட்ட காலத்தில் பித்ரு உலகத்தில் இருப்பார்கள்.

உபாசகர்கள் அவரவர்கள் கடவுள் சார்ந்த உலகத்தில் என்றும் மீளாமல் வசிப்பார்கள் உதாரணமாய் கயிலாயம் சிவன், வைகுண்டம் பெருமாள் என்பது போல உமையம்மைக்கு சிந்தாமணிகிரஹம் என்பார்கள். இந்தத் துணை உலகங்களும் செய்த பாவம், புண்ணியம் அல்லது ஞானத்தில் வழியாக வெவ்வேறு உலகங்களில் அதை அனுபவிக்க மட்டுமே முடியும்.

ஆனால், இந்த வையகமானது அவர்கள் செய்கிற கர்மபலனை பெறுவதற்குறிய இடமாகும். ஞானத்திற்கான பூசனையும், பாவத்திற்கான செயலையும், புண்ணியதிற்கான அறத்தையும், ஆன்மாவானது கர்மபலனை சம்பாதிக்கும் இடம் இதுவே. எந்த உலகத்திற்குச் சென்றாலும் அதற்கான பாவ, புண்ணிய, ஞானத்தை இப்பூவுலகில் மட்டுமே பெற முடியும். அத்தகைய வேறு எந்த உலகத்திற்கும் இல்லாத சிறப்பு இந்த பூவுலகில் மட்டுமே இருக்கிறது என்பதை ‘‘இந்த வையகத்தே என்று குறிப்பிடுகிறார்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்