முயல் ஆமையும் - முயலாமையும்



ஒரு சமயம் கவிஞர் வாலி, கலைவாணரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது கலைவாணர், ‘‘ஏம்பா! கவிஞரே! முயல்-ஆமை கதை உனக்குத் தெரியுமில்ல! முயல் ஏன் ஆமைகிட்ட தோத்துச்சு? சொல்லு பா(ர்)க்கலாம்!” எனக் கேட்டார்.வாலியும் பல விதங்களிலும் முயன்று பார்த்தார்; சரியான பதில் வரவில்லை. கலைவாணர் சும்மாயிருப்பாராஎன்ன? ‘‘என்ன வாலி! பதில் தெரியலியா? முயல் - ஆமை; முயல் - ஆமைன்னு சொல்லிக்கிட்டே இரு! உனக்கே காரணம் புரியும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அவர் சொன்னபடியே வாலியும் ‘‘முயல் ஆமை, முயல் ஆமை” என்று வேகவேகமாகச் சொல்லத் தொடங்கினார். ஒருசில நிமிடங்களில், முயல் - ஆமை என்பது, ‘முயலாமை’ என வந்தது. விவரம் புரிந்ததும் வாலி எழுந்து கலைவாணரிடம் ஓடினார்; ‘‘அண்ணே! அண்ணே! புரிஞ்சுபோச்சு! முயல் ஆமைகிட்ட தோத்ததுக்குக் காரணம் ‘முயலாமை’தான். அது முயற்சி செய்யவில்லை. அதுதான் காரணம்” என்றார்.

கலைவாணர் மகிழ்ந்தார்; ‘‘சரியாகச் சொன்னாய்! சரியாகச் சொன்னாய்! முயலாமை, அதாவது, முயற்சி செய்யாமல் இருப்பதுதான் தோல்விகளுக்கெல்லாம் காரணம்” எனக் கூறினார். வழக்கப்படியான முயல் - ஆமை கதை, தெரிந்தது தான். ஆனால், இப்போது பார்க்கப் போகும் முயல் - ஆமை கதை, வித்தியாசமானது; அற்புதமான பாடம் ஒன்றையும் சொல்லக் கூடியது.

தன் ஓட்டத்திலும் தோற்றத்திலும் கர்வம் கொண்ட முயல், ஆமையிடம் வந்தது; “வேகவேகமாகத் தாவிக் குதித்து ஓடுவதில், நான்தான் திறமைசாலி” என்றது.ஆமை அமைதியாகப் பதில் சொன்னது; “முயலே! நிலத்தில் ஓடினால் நீ ஜெயிப்பாய்; தண்ணீரில் ஓடினால் (நீந்தினால்) நான்தான் ஜெயிப்பேன்” என்றது.  முயல் விடவில்லை; “சரி! நீ தண்ணீரில் நீந்தியபடி வா! நான் கரையில் ஓடுகிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம்! உன்னால் என்னை ஜெயிக்கவே முடியாது” என்றது.

ஆமையும் ஒப்புக்கொண்டது. ஐந்து கி.மீ. தூரம் ஓட வேண்டும்; ஆமை தண்ணீரிலும் முயல் த(க)ரையிலும் ஓட வேண்டும்; பந்தயம் மறுநாள் காலையில் என முடிவானது. முயல் தன் வழக்கப்படி, “ஹும்! ஆமையாவது; நம்மை ஜெயிப்பதாவது!” என்று எண்ணித் தூங்கப்போய் விட்டது.

ஆமையோ, புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தது; ஆமைக்கு நான்கு பிள்ளைகள் இருந்தன; தன் மனைவியையும்  பிள்ளைகள் நான்கையும் கூப்பிட்ட ஆமை, பந்தயம் தொடங்கும் இடத்தில் மனைவியை நிறுத்தி வைத்தது; பின் ஒவ்வொரு கி.மீ. தூரத்திலும் ஒவ்வொரு பிள்ளையாக நிறுத்தி வைத்தது; நிறைவாகத் தான்போய், பந்தயம் முடியுமிடத்தில் நின்றது. ஆறு ஆமைகளும் ஒன்றுபோலவே இருக்கும்; வித்தியாசம் கண்டுபிடிக்க இயலாது. மறுநாள் காலை, குறிப்பிட்ட நேரத்தில் முயல் வந்தது. தண்ணீருக்கு மேலே தலையை நீட்டியபடியிருந்த பெண் ஆமையைப் பார்த்து, ஆண் ஆமை என நினைத்து, “போட்டிக்குத் தயாரா?” என்றது. ஆமையின் மனைவி,  “நான் தயார்” எனப் பதில் சொன்னது.

பந்தயம் தொடங்கியது. முயல் ஓட, தண்ணீரில் நீந்தத் தொடங்கியது ஆமையின் மனைவி; முயல் சற்று தூரம் போனதும், ஆமையின் மனைவி தன் நீச்சலை நிறுத்தியது. வேகவேகமாக ஓடிய முயல், முதல் கி.மீ. தூரத்தை நெருங்கியதும்; அங்கே முதல் பிள்ளை ஆமையைப் பார்த்து, தன்னுடன் போட்டியிடும் ஆமையென நினைத்து, “அட! அதற்குள் வந்து விட்டாயே!” என்றபடியே, ஓடத் தொடங்கியது.இரண்டாவது கி.மீ. தூரத்தை நெருங்கும்போது முயல், ஆமையின் இரண்டாவது பிள்ளையை அங்கே பார்த்து, தன்னுடன் போட்டியிடும் ஆமையென எண்ணி, “எதிர்பார்க்காத அளவிற்கு வேகமாகத்தான் வந்து விட்டாய்” என்றபடியே ஓடத் தொடங்கியது.

இப்படியே ஒவ்வோர் இடத்திலும் ஆமையைப் பார்த்த முயல் வெகுவேகமாக ஓடிப்போய், பந்தயம் முடியும் இடமான ஐந்தாவது கி.மீட்டரில், தனக்கு முன்னால் ஆமை இருந்ததைப் பார்த்ததும், தான் தோற்று விட்டதாகவே எண்ணியது; ‘‘ஆமையே! முயலான நான் ஜெயித்து விடுவேன் எனக் கர்வப்பட்டேன். இப்போது உண்மையை ஒப்புக்கொள்கிறேன். நீ ஜெயித்தாய்! நீ தான் ஜெயித்தாய்! நான் தோற்றுப்போய் விட்டேன்” என்று சொல்லி, மனவருத்தத்துடன் திரும்பியது.

இந்தக் கதையில் ஆமை வெல்லக் காரணம், அதன் புத்திசாலித்தனம் என்று கூறினாலும்; அதையும் தாண்டிய ஓர் உண்மை உண்டு. ஆமை குடும்பத்தில் ஒற்றுமை மிகமிக அதிகம். ஆமையும் அதன் மனைவியும் பிள்ளைகளும் ஒற்றுமையாகச் செயல்பட்டதாலேயே வெல்ல முடிந்தது. ஒற்றுமை இல்லாமல் இருந்திருந்தால்? வேண்டாமே!குடும்பத்தில் ஒற்றுமையாகவே இருப்போம்! வெல்ல முடியாதவர்களைக்கூட வெல்வோம்! உயர்வோம்!

வி.ஆர்.சுந்தரி