தெளிவு பெறுஓம்12ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள என் மகனுக்கு மேற்படிப்பு என்பது எந்த துறையில் அமையும் என்பதை ஜாதகத்தினைக் கொண்டு தீர்மானம் செய்ய இயலுமா? ஒருசிலர் அவரவர் தலைவிதியின்படிதான் வாழ்க்கை அமையும் என்கிறார்கள். அதன்படி எதையாவது படிக்கட்டும் என்று விட்டுவிடலாமா?

- சரவணமுத்து, விருதுநகர்.

உங்களைப் போன்ற பல பெற்றோர்களுக்கும் ஏற்படுகின்ற நியாயமான சந்தேகம் இது. நான்காம் பாவகம் என்று சொல்லப்படக்கூடிய வித்யா ஸ்தானத்தின் வலிமையை வைத்து அதாவது அந்த இடத்தில் அமர்ந்துள்ள கிரகங்களின் தன்மையையும். காரகத்துவத்தையும் அல்லது அந்த ஸ்தானாதிபதியின் வலுவையும் வைத்து இவன் இந்த துறையில் நல்லறிவினைப் பெறுவான் என்று சொல்ல முடியும்.

உதாரணத்திற்கு மருத்துவம் சம்பந்தப்பட்ட படிப்பு, இன்ஜினியரிங் படிப்பு, இலக்கியத்துறை என்று வரையறுக்க முடியும். இந்தக் கல்விதான் இவனுக்கு வரும், இது வராது என்று வரையறுக்க முடியும். ஜாதகத்தில் உள்ள வித்யாஸ்தானம் இதனைத் தீர்மானிக்கிறது. எல்லோருக்கும் எல்லாத்துறை கல்வியும் வந்துவிடாது.

12ம் வகுப்பில் ஏ குரூப் என்று சொல்லப்படக்கூடிய கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் நல்ல மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர் மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டு துறைகளையும் எடுத்து படிக்க முடியும் எனும்போது அவரது எதிர்கால வாழ்க்கைக்கு எது நன்மையைத் தரும் என்ற ஆலோசனையைச் சொல்ல வேண்டியது ஜோதிடரின் கடமை. அந்த சூழ்நிலையில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை ஒப்பிட்டு இவன் இந்தத் தொழிலைத்தான் செய்வான் என்று வரையறுக்கும்போது அது சம்பந்தப்பட்ட படிப்பு இவனுக்கு நன்மையைத் தரும் என்ற கருத்தினை வரையறுத்து திடமாகச் சொல்ல முடியும். 10ம் பாவகம் எனப்படும் ஜீவன ஸ்தானமும், 4ம் பாவகம் எனப்படும் வித்யா ஸ்தானமும் நேரெதிர் பாவகங்கள். ஒன்றோடொன்று சம ஸப்தகமாக அமைந்திருக்கும் பாவகங்கள்.

ஒன்றுக்கொன்று பார்வை பலத்தின் மூலம் தொடர்பு பெறும். ஒரு சராசரி மனிதன் எல்லாத் துறைகளிலும் தனது அறிவினை வளர்த்துக்கொள்வது என்பது இயலாத காரியம். யார், யாருக்கு எந்தத் தொழில் என்று நிர்ணயம் செய்து கொள்கிறார்களோ அந்தத்துறையில் கல்வி அறிவு பெறுவது என்பது இன்றைய சூழலில் அவசியமாகிவிட்டது. மருத்துவத்துறை என்று எடுத்துக்கொண்டாலே மனித உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒவ்வொரு தனித்தனி சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர், இதய நோய் சிறப்பு மருத்துவர் என ஒவ்வொரு துறைக்கும் இருக்கிறார்கள். இவர்கள் அந்தந்த பாடங்களைக் கற்றால் மட்டுமே அந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும். அவ்வாறு இருக்க அதை அவர்களது ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானம் மற்றும் வித்யா ஸ்தானத்தின் வலிமையைக் கொண்டு கூற முடியும்.

தற்கால நவீன ஜோதிடவியலில் 9ம் பாவகத்தைக் கொண்டு வயதான பிறகு கல்வி கற்றலையும், 11ம் பாவகத்தைக் கொண்டு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளை இவன் கற்பான் என வரையறுக்கலாம். எல்லாம் விதிப்படியே நடக்கும் என பேசாமல் இருந்துவிடுவது கூடாது. ஜாதகத்தில் வலிமை இருந்தாலும் முயற்சித்தால் மட்டுமே வெற்றி காண இயலும்.

அதற்காக, இன்றைய நவீன உலகில் உள்ள ஆயிரக்கணக்கான துறைகளில் ஒவ்வொரு துறையாக ஒரு மனிதன் முயற்சித்துப் பார்க்க முடியுமா? அதற்கு கால அவகாசம்தான் கிடைக்குமா? அவ்வாறான சூழ்நிலையில் அவனது ஜீவன ஸ்தானத்தோடு வித்யா ஸ்தானத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த ஜாதகன் இந்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நல்லது என்பதை ஒரு ஜோதிடர் கணித்துக் கூற இயலும். தொழிற்கல்விக்கு கல்வியறிவைவிட அந்தத் தொழிலில் பழக்கமும் ஈடுபாடும் திறமையும் இருந்தால் போதும் முன்னேறிவிடலாம் என்று ஒரு சிலர் வாதம் செய்வர்.

ஒரு மருத்துவனுக்கு பழக்கமும் ஈடுபாடும் திறமையும் மட்டும் இருந்தால் போதுமா? மருத்துவத்துறையில் கல்வி அறிவைப் பெறாமல் அனுபவத்தைக் கொண்டு மருத்துவத் தொழில் செய்து வருபவர்களை போலி மருத்துவர் என அரசாங்கம் தடை செய்யாதா? அத்தொழிலைச் செய்யவும் கல்வி ரீதியான அங்கீகாரத்தை அவன் பெற வேண்டாமா? அவ்விதமான கல்வி அவனுக்கு வரும், வராது என்று ஜாதகத்தை வைத்து வரை
யறுக்க முடியும். நம்மில் பலருக்கும் படித்து பட்டம் பெறுவது ஒரு துறையிலும், வேலை பார்ப்பது என்பது மற்றோர் துறையிலும் அமைகிறது. அனுபவத்தில் சிறந்து விளங்கும் ஒரு ஜோதிடரிடம் உங்கள் பிள்ளையின் ஜாதகத்தைக் காண்பித்து எந்தத் துறையில் அவனது உத்யோகம் அமையும் என்பதைத் தெரிந்துகொண்டு அந்தத்துறை சார்ந்த படிப்பிற்கு வழிகாட்டுவதே நல்லது.

?திருமணத்தின்போது அம்மி மிதித்து அருந்ததி நட்சத்திரம் பார்ப்பது என்பது சம்பிரதாய சடங்காக காட்டப்படுகிறதே தவிர எந்த புதுமாப்பிள்ளையும் பார்த்தது இல்லை. சாஸ்திரிகளுக்குக் கூட தெரியுமா என்பது தெரியவில்லை. இதுபற்றி விளக்க முடியுமா?
- அரிமளம் தளவாய் நாராயணசாமி.

நீங்கள் சொல்கின்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள இயலாது. சாஸ்திரம் படித்தவர்கள் எல்லோருக்கும் இதன் தாத்பர்யம் என்ன என்பதும் அருந்ததி நட்சத்திரத்தின் அம்சமும் நன்றாகவே தெரியும். காலதேசவர்த்தமானத்தின் காரணமாக அதனை விளக்குவதற்கு உரிய அவகாசத்தினை
திருமணத்தை நடத்துகின்ற வீட்டார்கள் சாஸ்திரிகளுக்குத் தருவதில்லை. தற்காலத்தில் யாருக்கும் பொறுமை என்பதே இல்லை. திருமணவிழாவிற்குச் செல்லும்போது அங்கு நடக்கின்ற வைதீக சடங்குகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தாலிகட்டி முடித்தவுடன் மேடைக்குச் சென்று அவசர அவசரமாக கைகுலுக்கிவிட்டு வந்து விட வேண்டும் என்ற பரபரப்பு மட்டுமே மிஞ்சியுள்ளது. உங்களது ஆதங்கம் புரிகிறது.

திருமணத்தை நடத்தி வைக்கும் புரோஹிதரின் நோக்கம் வெறும் சடங்காக அருந்ததி நட்சத்திரத்தை காட்ட வேண்டும் என்பதல்ல. மாறாக மாலை நேரத்தில் அன்றைய பஞ்சாங்க கணக்கின்படி இந்த நேரத்தில் இந்த திசையில் அருந்ததி நட்சத்திரத்தை உனது மனைவிக்கு காண்பிக்க வேண்டும் என்று மணமகனிடம் அறிவுறுத்திச் சொல்கின்ற புரோஹிதர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இது குறித்த ஆர்வம் திருமணத்தை நடத்துகின்ற இருவீட்டாருக்கும் வேண்டும். அப்பொழுதுதான் சாஸ்திரிகள் அல்ல புரோஹிதர்களும் அதனை ஆர்வத்துடன் சொல்லித் தருவார்கள். அம்மி மிதித்தல் என்கிற நிகழ்வினை ‘அச்மாரோஹணம்’ என்று குறிப்பிடுவார்கள். இந்து மதத்தில் திருமணத்தின்போது செய்யப்பட வேண்டிய முக்கியமான சடங்கு இது. அச்மன் என்றால் கல் என்று பொருள். அசைவற்ற ஒரு கல்லின் மீது மணப்பெண்ணை நிற்க வைத்து மணமகன் ‘ஆதிஷ்டேமம்...’ என்று துவங்கும் மந்திரத்தைச் சொல்வார்.

“வாழ்க்கை என்பது கரடு முரடாக இருக்கும், சுகம் வரும்போதும் சரி, துக்கம் வரும்போதும் சரி, சோதனைக்குரிய தருணத்திலும் சரி, மனதில் எந்தவித சஞ்சலமும் இன்றி இந்தக் கல் போல ஸ்திரமான, திடமான மன உறுதியை நீ பெற்றிருக்க வேண்டும் ” என்று மணமகன், மணப்பெண்ணை நோக்கிச் சொல்வதே இந்த மந்திரத்தின் பொருள். அம்மியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அக்காலத்தில் திருமணத்தை அவரவர் இல்லத்திலேயே நடத்தினார்கள். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கல்லாக அம்மி இருந்ததால் அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அச்மன் என்ற வார்த்தை மருவி தமிழில் அம்மி என்று ஆகியிருக்கலாம். ஒரு கருங்கல்லின் மீது நிற்க வைத்து இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்பதே விதி.

அருந்ததி என்பவர் வசிஷ்ட மகரிஷியின் பத்னி. அருந்ததி என்ற வார்த்தைக்கு தர்மத்திற்கு விரோதமான காரியத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் செய்யாதவள் என்று பொருள். அருந்ததி பார்ப்பது என்கிற நிகழ்வு திருமண நாள் அன்று மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் செய்யப்பட வேண்டிய ஒன்று. தற்காலத்தில் நேரமின்மை காரணமாக மண்டபத்திற்கு உள்ளேயே இந்த சம்பிரதாயத்தையும் முடித்து விடுகிறார்கள். சூரியன் அஸ்தமனமானதும், ஆகாயத்தில் வடக்கு திசையில் கிழக்கு நுனியாக ஸப்தரிஷி மண்டலம் காணப்படும்.

அவற்றில் கிழக்கு மூலையில் இருப்பது மரீசி என்ற ரிஷியைக் குறிக்கும். அவருக்கு மேற்கு திசையில் சற்று கீழே காணப்படுவது வசிஷ்ட மகரிஷி. இதனை விஞ்ஞானிகள் Mizar என்று குறிப்பிடுவர். வசிஷ்டருக்கு தென்கிழக்கில் சற்று மங்கலாகத் தெரிவது அருந்ததி நட்சத்திரம். இதனை Alcor என்று குறிப்பிடுவார்கள். ஸப்தரிஷி பத்னிகளில் அருந்ததி மட்டுமே தனது கணவருடன் காட்சியளிக்கிறார்.

ஸப்தரிஷி பத்னிகளிலேயே சிறந்தவர் என்று மற்ற ஆறு ரிஷிபத்னிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபவர் அருந்ததி. அப்பேற்பட்ட அருந்ததியை நோக்கி புதுமணத் தம்பதியர் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மணமகன் அருந்ததி நட்சத்திரத்தை தனது இளம் மனைவிக்கு காண்பித்து இவளைப்போல் நீயும் கற்புக்கரசியாகவும், எந்தச் சூழலிலும் தர்ம நெறி மாறாதவளாகவும் நடந்து கொள்ள பிரார்த்தனை செய்துகொள் என்று அறிவுறுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு இது.

நமது இந்து மதத்தில் உள்ள சடங்குகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை மட்டுமல்ல., மனித உணர்வுகளோடு ஒன்றிணைந்தவை என்பதற்கு சிறந்த உதாரணமே மேற்சொன்ன இந்த இரண்டு நிகழ்வுகள். ஆக இந்த நிகழ்வுகளை சடங்குகளாக மட்டும் கருதாமல் அதனை முறைப்படி செய்ய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பகல்பொழுதில் திருமணச் சடங்குகள் நடைபெறுவதால் அந்த நேரத்தில் அருந்ததி நட்சத்திரத்தை காண இயலாது. அது மட்டுமல்லாது அருந்ததி நட்சத்திரமானது பெரும்பாலும் உத்தராயணத்தில் மட்டுமே தெரியும்.

இந்த காரணத்தினால்தான் அக்காலத்தில் உத்தராயணத்தில் மட்டும் திருமணத்தை நடத்துவதை வழக்கத்தில் கொண்டிருந்தார்கள் நம் முன்னோர்கள். காலநேரம் கருதி இந்த சடங்கானது மண்டபத்திற்குள்ளேயே நடத்தப்பட்டாலும் திருமணத்தன்று மாலை மணமகன் தன் மனைவியை வெளியில் அழைத்துச் சென்று வானத்தின் வடகிழக்கு திசையை நிமிர்ந்து பார்த்து நமஸ்கரித்தாலே அருந்ததி நட்சத்திரத்தை கண்டதற்கான பலன் என்பது வந்து
சேர்ந்துவிடும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா