அனந்தனுக்கு 1000 நாமங்கள்!



333. வாயுவாஹநாய நமஹ (Vaayuvaahanaaya namaha)

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சுற்றி யுள்ள பகுதி ஒரு காலத்தில் சுவேத கிரி என்று அழைக்கப்பட்டது. அப்பகுதியைச் சுவேத சக்கரவர்த்தி என்னும் அரசன் ஆண்டு வந்தான். சுவேத சக்கரவர்த்தியின் மனைவி ராணி விஷ்ணுப்பிரியா. விஷ்ணுப்பிரியா மிகச்சிறந்த திருமால் பக்தையாகத் திகழ்ந்தாள்.ஒவ்வொரு ஏகாதசியிலும் தண்ணீரைக்கூட அருந்தாமல் திருமாலைக் குறித்து விரதம் இருந்து வந்தாள் விஷ்ணுப்பிரியா. அப்படி ஒருநாள் அவள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்திருக்க, சுவேத மன்னன் மனதில் காமத்துடன் அவளை அணுகினான்.

“சுவாமி! நான் இன்று திருமாலைக் குறித்து விரதம் இருக்கிறேன். விரத நாட்களில் காமம் கொள்வது முறையல்ல. நாளை விரதம் நிறைவடையட்டுமே!” என்று பணிவுடன் கோரினாள்.ஆனால், மன்னனின் காமவெறி மிக அதிகமாக இருந்தபடியால், தன் ஆசைக்கு இணங்கும்படி விஷ்ணுப்பிரியாவை வற்புறுத்தினான். தன் கணவனின் பிடியிலிருந்து தப்பிக்க  எவ்வளவோ முயன்றாள் விஷ்ணுப்பிரியா. ஆனால் அவளால் முடியவில்லை. “கூர்ம நாராயணா! முன்பு தேவர்கள் அசுரர்களிடம் சிக்கித் தவித்தபோது, கூர்மாவதாரம் எடுத்துக் காத்தாயே! அதுபோல் இப்போது அசுரமனம் கொண்ட இந்த ஆணின் பிடியில் இருந்து என்னை நீயே காக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தாள்.

அடுத்த நொடியே விஷ்ணுப்பிரியாவுக்கும் சுவேத சக்கரவர்த்திக்கும் இடையே கங்கை வெள்ளம் பொங்கி வந்து இருவரையும் பிரித்துவிட்டது. அந்த வெள்ளத்தின் ஒரு கரையில் விஷ்ணுப்பிரியா அமர்ந்து தனது விரதத்தைத் தொடர்ந்தாள். மறு கரையில் மாட்டிக்கொண்ட சுவேதனை வெள்ளம் அடித்துச் சென்று ஒரு மலைக்கு மேலே தள்ளிவிட்டது.

மலையில் விழுந்து கிடந்த சுவேதன் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டான். தன்னைக் காக்க யாரேனும் வருவார்களா என அவன் ஏங்க, அங்கே நாரதர் தோன்றினார். “ஸ்வேத மன்னா!  உன் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவளை நீ நெருங்கியது தவறு! அதற்குத் தண்டனையாகத்தான் திருமால் உன்னை இங்கே தள்ளி விட்டார்!  உன் மூச்சுக்காற்று வலிமை இழந்து கொண்டே வருகிறது! அதனால்தான் நீ இப்போது

இப்படித் தவிக்கிறாய்!” என்று கூறினார்.

“என் உடல்நிலை சீராக வழி கூறுங்கள்!” என்று சுவேதன் பிரார்த்திக்க, “முன்பு தேவர்களும் இப்படித்தான் துர்வாசரின் சாபத்தால் வலிமை இழந்து அசுரர்களிடம் தோற்று நின்றார்கள். அவர்கள் திருமாலைப் பிரார்த்தித்தபோது, திருமால் கூர்மாவதாரம் எடுத்து அவர்களுக்கு அமுதைப் பெற்றுக் கொடுத்து அவர்கள் வலிமை பெறும்படிச் செய்தார். தேவர்களுக்கு உயிர்மூச்சு அளித்துக் காத்த அந்தக் கூர்ம மூர்த்தியை வழிபட்டால் நீயும் நல்ல உயிர்மூச்சைப் பெறலாம்!” என்று கூறிய நாரதர், கூர்ம மூர்த்திக்கான மந்திரத்தைச் சுவேதனுக்கு உபதேசம் செய்தார்.

அந்த மந்திரத்தைச் சுவேதன் ஜபம் செய்தவாறே, மனம் உவந்து அவன் முன்னே கூர்ம நாராயணனாகத் திருமால் காட்சி அளித்தார். தனது சுதர்சனச் சக்கரத்தை அருகிலிருந்த இடத்தில் அவர் செலுத்தவே அங்கே ஒரு பொய்கை உருவானது. அந்தப் பொய்கையில் சுவேதன் நீராடியவாறே, நல்ல மூச்சுக்காற்றைப் பெற்றான். அவனது உடல்நிலையும் சீரானது. சுவேதன் நீராடியதால் சுவேத புஷ்கரிணி என்று அப்பொய்கை பெயர் பெற்றது.

விஷ்ணுப்பிரியாவும் அங்கு வந்து சேரவே, அவளும் சுவேத சக்கரவர்த்தியும் இணைந்து திருமாலை வழிபட்டுத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.அங்கே பிரம்மா தோன்றி கூர்மநாயகித் தாயாரோடு கூர்ம நாராயணப் பெருமாளை அவ்விடத்தே பிரதிஷ்டை செய்தார். அதுதான் இன்று ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளத்துக்கு அருகிலுள்ள ஸ்ரீகூர்மம் என்னும் திருத்தலம் ஆகும். உலகிலேயே கூர்ம மூர்த்திக்காக ஏற்பட்ட வெகுசில திருக்கோவில்
களில் இது முதன்மையானதாகும்.

பதினொன்றாம் நூற்றாண்டில் இவ்வூருக்கு வந்த ராமாநுஜர், இப்பெருமாளின் தல வரலாற்றைச் செவியுற்று மிகவும் பூரிப்படைந்தார். “கூர்மநாதா! முன்பு தேவர்களுக்கு நீதான் உயிர்மூச்சு அளித்து, வலிமையூட்டி அசுரர்களை அவர்கள் வெல்லும்படி அருள்புரிந்தாய். இவ்வூரில் சுவேத மன்னனுக்கும் உயிர்மூச்சை அருளி அவனையும் காத்துக் கொடுத்தாய். அகில உலகங்களையும் இயக்குகின்ற உயிர்மூச்சுக் காற்றையே நீதான் நடத்திச் செல்கிறாய் என்பதை இவ்வூரில் நீ உலகுக்கு உணர்த்துகிறாய்!” என்று ராமாநுஜர் துதித்தார்.

‘வாயு’ என்பது பிராணவாயு அல்லது மூச்சுக்காற்றைக் குறிக்கிறது. ‘வாஹன’ என்றால் அதை வழிநடத்திச் செல்பவர் என்று பொருள். அனைவருடைய உயிர்மூச்சையும் வழிநடத்திச் செல்பவராகவும், அந்த உயிர்மூச்சை அருளிக் காப்பவராகவும் கூர்ம மூர்த்தி திகழ்வதால், அவர் ‘வாயுவாஹன:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 333-வது திருநாமம்.“வாயுவாஹநாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் உயிர்மூச்சை அளித்துக் காத்தருள்வார்.

334. வாஸுதேவாய நமஹ(Vaasudhevaaya namaha)
தேவகி என்ற ஒப்பற்ற ஒருத்தியின் மகனாக, ஆவணி ரோகிணி அஷ்டமி  திருநாள் என்னும் ஒப்பற்ற ஓர் இரவில் மதுராவில் அவதரித்த கண்ணன், அதே இரவில் ஒப்பற்ற மற்றொருத்தியான யசோதையின் மகனாகக் கோகுலத்தில் ஒளிந்து மறைந்து வளர்ந்துவருகிறான்.கண்ணன் தோன்றி சுமார் ஒரு வருட காலம் ஆகியும் அவனுக்கு இன்னும் பெயர்சூட்டு விழாவை நந்தகோபர் நடத்தவில்லை. இந்நிலையில் ஒருநாள் யாதவர்
களின் குலகுருவான கர்காச்சாரியார் வந்து நந்தகோபரைச் சந்தித்தார். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆயிற்றே நீங்கள் ஏன் இன்னும் பெயர் சூட்டாமலே வைத்திருக்கிறீர்கள் என்று வினவினார்.

அதற்கு நந்தகோபர், ஆயர்களான நாங்கள் எப்போதுமே அதை நிதானமாகத் தான் செய்வோம் என்று விடையளித்தார். என்னம்மா யசோதா நீயாவது பெயர் சூட்ட வேண்டும் என்று உன் கணவருக்கு நினைவூட்டி இருக்கக் கூடாதா என்று யசோதையிடம் கர்காச்சாரியார் கேட்க, என் குழந்தை தினந்தோறும் புதியவனாகத்தான் எனக்குத் தெரிகிறான் அவனுக்கு வயதாகிறது என்றே எனக்குத் தெரியவில்லை என்று விடையளித்தாள் யசோதை.

மற்ற உறவினர்களிடம், நீங்களாவது பெயர்சூட்டு விழாவைக் காலாகாலத்தில் நடத்த வேண்டும் என்று இவர்களுக்குச் சொல்லமாட்டீர்களா என்று கர்காச்சாரியார் கேட்க, இந்தக் குழந்தை பிறந்த நாளிலிருந்தே பற்பல ஆபத்துகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கவே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றார்கள் உறவினர்கள்.

எதிர்வீட்டில் இருந்து பலராமனின் தாயான ரோகிணியும் அங்கே வந்து கர்காச்சாரியாரை வணங்கினாள். ரோகிணி உன் குழந்தைக்கும் இன்னும் பெயர் வைத்ததாகத் தெரியவில்லையே என்று கேட்டார் கர்காச்சாரியார். ஆம் சுவாமி நீங்களே பார்த்து நல்ல பெயராகச் சூட்டிவிடுங்கள் என்று ரோகிணி பிரார்த்தித்தாள்.

இரண்டு குழந்தைகளுக்கும் நானே பெயர் சூட்டு விழாவை நடத்தி விடுகிறேன். ஆனால் நந்தகோபரே விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடினால் கம்சனால் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் ரகசியமாக நடத்திவிடுவோம் என்றார்
கர்காச்சாரியார்.

அவ்வாறே ஒரு நல்ல நாளில், பலராமன் கண்ணன் இருவரையும் மாட்டுக் கொட்டகையில் இரு தொட்டில்களில் கிடத்திய கர்காச்சாரியார், முதல் குழந்தையைப் பார்த்து, இவன் காண்பவர்களின் கண்களுக்கும் மனங்களுக்கும் ஆனந்தம் தருபவன். எனவே ராமன் ரமிக்கச் செய்பவன் என்று இவன் அழைக்கப்படுவான். மேலும், வலிமை மிக்கவனாக இவன் இருப்பதால், பலராமன் என்றும் அழைக்கப்படுவான் என்று பெயர் சூட்டினார்.

அடுத்த குழந்தையைப் பார்த்த கர்காச்சாரியார், கருமை நிறத்துடன் இவன் இருப்பதால் கிருஷ்ணன். கிருஷ்ண என்றால் கருமைநிறம் என்று அழைக்கப்படுவான். அத்துடன் இவன் வாசுதேவன் என்றும் அனைவராலும் அழைக்கப்படட்டும் என்று கூறினார்.இவ்வாறு கர்காச்சாரியார் பெயர் சூட்டியவாறே, தொட்டிலில் இருந்த கண்ணன் அவரைப் பார்த்துச் சிரித்தான். மானசிகமாக அவரோடு உரையாடினான். கர்கரே ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்து விட்டீர்களே என்றான் கண்ணன். என்ன சொல்கிறாய் என்று கேட்டார் கர்காச்சாரியார்.

கண்ணன், ஆம் ஒருபுறம் வாசுதேவன் என்றால் வசுதேவனின் மகன் என்று பொருள். என்னை ஈன்ற தந்தை வசுதேவர் என்பதை இந்தப் பெயரின் வாயிலாகச் சூசகமாகத் தெரிவித்துவிட்டீர்கள். அது மட்டுமா வாசு என்றால் எல்லா இடங்களிலும் வசிப்பவன் என்று பொருள். தேவன் என்றால் அப்படி எல்லா இடங்களிலும் வசித்தாலும், அந்தப் பொருட்களில் உள்ள தோஷங்களால் தீண்டப்படாதவனாக எப்போதும் ஒளிவீசிக் கொண்டு, லீலைகள் புரிந்துகொண்டு திவ்வியமாக இருப்பவன் என்று பொருள். எனவே எங்கும் நிறைந்த இறைவன் நானே என்பதையும் உணர்த்தி விட்டீர்களே என்று தனது புன்னகையாலேயே கர்காச்சாரியாரிடம் கூறினான்.

ஆக, வாஸு என்றால் எல்லாப் பொருட் களுக்குள்ளும் வசிப்பவர். தேவ என்றால் திவ்வியமாக விளையாடிக்கொண்டு ஒளிவீசுபவர். அதாவது, திருமால் உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்குள்ளும் இருக்கிறார். ஆனாலும் அந்தப் பொருள்களில் உள்ள தோஷங்கள் எதுவும் அவரைப் பாதிப்பதில்லை. தெளிந்த  நீரோடைகளிலும் திருமால் உள்ளார், அதற்கு நேர்மாறான நீரிலும் திருமால் உள்ளார்.

ஆனால் அவற்றிலுள்ள எந்த வாசமோ தோஷமோ அவரிடம் ஒட்டாது. அதனால் தான் வாஸுதேவ என்று அவர் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 334-வது திருநாமம்.வாஸுதேவாய நம என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உள்ளங்களில் எந்தத் தீய எண்ணங்களும் வாசனைகளும் ஒட்டாதபடித் திருமால் அருள்புரிவார்.

335. ப்ருஹத்பானவே நமஹ (Bruhadhbhaanave namaha)
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவிண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலின் தல வரலாறு நம் வாசகர்கள் அனைவருமே அறிந்த ஒன்றுதான். துளசி வனம் என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட அத்திருத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தவம்புரிந்து வந்தார். அவரது வளர்ப்பு மகளாக ஒரு துளசிச்செடியின் அடியில் பூமாதேவி தோன்றினாள்.

அவளை மணக்க விரும்பிய திருமால், பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று, வயோதிகராக வேடம் தரித்து மார்க்கண்டேயரிடம் வந்து அவரது மகளைத் தனக்கு மணம் முடித்துத் தருமாறு கோரினார். “என் மகள் வயதில் மிகவும் சிறியவள். பழைய சாதத்துக்கு எவ்வளவு உப்பு போட வேண்டும் என்று கூட அவளுக்குத் தெரியாதே!” என்று மார்க்கண்டேயர் கூற, “இனி நான் உப்பில்லாத பண்டங்களையே அமுது செய்வேன்!” என்று சபதம் செய்தார் முதியவர்.

வீடு தேடி வந்தவரின் கோரிக்கையை நிராகரிக்கலாகாது என்ற எண்ணத்தில் தனது மகளை அவருக்கு மணம் முடித்துத் தருவதற்கு மார்க்கண்டேயர் சம்மதிக்கவே, அடுத்த நொடி முதியவர் வேடத்தைக் கலைத்துத் திருமால் தனது இயற்கையான வடிவத்துடன் காட்சி தந்தார். உப்பில்லாத பண்டங்களையே உண்பதாகச் சபதம் ஏற்றதால், உப்பிலியப்பன் என்று அப்பெருமாள் பெயர் பெற்றார். பின் மார்க்கண்டேயர் ஏற்பாடுகளைச் செய்ய, ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் உப்பிலியப்பனுக்கும் பூமாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதன்பின் மார்க்கண்டேயருடைய கோரிக்கைக்கு இணங்கி, ஒப்பிலியப்பன் கோவில் என்ற அத்திருத்தலத்தில் என்றென்றும் பூமாதேவியுடன்தான் குடியிருப்பதாகத் திருமால் உறுதி பூண்டார். திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்துக்கு என்னென்ன பெருமை உண்டோ, அத்தனை பெருமைகளும் ஒப்பிலியப்பன் கோவிலுக்கும் இருப்பதால், விண்ணகர் என்று அவ்வூர் பெயர்பெற்றது. விண்ணகர் என்றால் விண்ணில் உள்ள நகரமான வைகுண்டம் என்று பொருள்.

ஒப்பிலியப்பன் கோவிலில் குடிகொண்ட பெருமாளிடம் மார்க்கண்டேயர்,“உப்பிலியப்பா! இந்தத் திருத்தலம் வைகுண்டத்துக்குச் சமமானது என்று நீயே கூறி, இதற்குத் திருவிண்ணகர் என்ற திருப்பெயர் ஏற்படும்படிச் செய்து விட்டாய். அத்துடன் இன்னொரு இன்னருளையும் நீ செய்தருள வேண்டும்! நீ இந்த ஊருக்கு முதன்முதலில் வந்து என்னிடம் பெண் கேட்ட நாள் பங்குனி மாதத் திருவோண நன்னாள்.

அதன்பின் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ வந்து பூமாதேவியை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாதத் திருவோண நன்னாள். எனவே வைகுண்டத்தில் எப்படி நீ ஒளிமிக்க சுடராக அடியார்களுக்குத் தரிசனம் தருகிறாயோ, அதுபோலவே வைகுண்டத்துக்கு நிகரான இவ்வூரிலும் திருவோண நட்சத்திரத்தன்று  சோதி வடிவில் நீ காட்சி அளிக்க வேண்டும்!” என்று பிரார்த்தித்தார்.

அதற்குப் பெருமாளும் இசையவே, அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று ஒப்பிலியப்பன் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்படும். பரம்பரையாகத் தீபம் பிடிக்கும் தொண்டைச் செய்து வரும் அடியார்கள், அகண்ட தீபத்தைக் கையில் ஏந்தியபடி கோவிலை வலம் வருவார்கள்.

சாட்சாத் உப்பிலியப்பனே அந்தத் தீப சோதியின் வடிவில் வந்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதிஹ்யம்.இதைக் கருத்தில் கொண்டுதான் ‘பரஞ்சுடர் உடம்பாய்’ என்று நம்மாழ்வாரும், ‘சுடர்போல் என் மனத்திருந்த தேவா’ என்று திருமங்கை ஆழ்வாரும் சோதி வடிவமாகவே ஒப்பிலியப்பனைப் பாடியுள்ளார்கள். இப்போதும் ஸ்ரீ.உ.வே. தீபம் ரவி சுவாமிகள் ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று காலை 10.30 மணிமுதல் 12.30 மணி வரை அகண்ட தீபத்தைக் கையில் ஏந்தியபடிக் கோவிலை வலம் வருவதைக் காணலாம்.

திருவிண்ணகர்த் திருத்தலத்தில் காணும் சோதி நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன? இந்த சோதி ஒளிவீசுவது போலத்தான் விண்ணகரம் எனப்படும் வைகுண்டத்தில் ஒளிமிக்க திருமேனியோடு, எண்ணிறந்த சூரியன்களை விஞ்சும் பிரகாசத்தோடு திருமால் காட்சி தருகிறார் என்பதே இதன் தத்துவம்.‘ப்ருஹத்’ என்றால் பெரிய என்று பொருள். ‘பா’ என்றால் ஒளி. ‘பானு:’ என்றால் ஒளிமிக்கவர்.

‘ப்ருஹத்பானு:’ என்றால் எப்போதும் விளங்கக் கூடிய, விரிவான, தேஜஸ் நிறைந்த, ஒளிமிக்க திருமேனியோடு கூடியவர் என்று பொருள். வைகுண்டத்திலே அத்தகைய ஒளிமிக்கவராகத் திருமால் திகழ்வதால், அந்த வாசுதேவனுக்கு ‘ப்ருஹத்பானு:’ என்று திருநாமம். அதுவே சஹஸ்ரநாமத்தின் 335-வது திருநாமம்.“ப்ருஹத்பானவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.

336. ஆதிதேவாய நமஹ (Aadhi-Dhevaaya namaha)
கண்ணன் துவாரகையை ஆண்டுவந்த காலம். மக்கள் ஏதேனும் குறை என்று கண்ணபிரானிடம் விண்ணப்பித்தால், உடனே கண்ணன் ருக்மிணியின் அறைக்குச் சென்று அவளோடு சதுரங்கம் விளையாடத் தொடங்குவான். அவன் சதுரங்கம் ஆடி முடித்தவாறே மக்களின் குறை தீர்ந்து விடும். இது துவாரகையில் வழக்கமாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் ஒருநாள் கண்ணனைத் தரிசிக்க துவாரகைக்கு வந்தார் நாரதர். அப்போது நாட்டின் குடிமக்கள் சிலர் கண்ணனிடம் வந்து தங்கள் குறைகளை முறையிட, அதைக் கேட்டுவிட்டு ஏதும் செய்யாமல் ருக்மிணியின் அறைக்குக் கண்ணன் செல்வதைக் கவனித்தார் நாரதர். கண்ணன் ருக்மிணியோடு ஆலோசனை நடத்துகிறாரா என்று பார்ப்போம் என்று கண்ணனைப் பின்தொடர்ந்தார் நாரதர். ஆனால், கண்ணனோ ருக்மிணியோடு சதுரங்கம் விளையாடத் தொடங்கி விட்டான்.

அப்போது நாரதர் தம் மனதுக்குள், “இவன் என்ன மன்னன்? மக்கள் குறைகளைக் கேட்டுவிட்டு, அதைப் போக்க நடவடிக்கை எடுக்காமல் சதுரங்கம் விளையாடுகின்றானே!” என்று சிந்தித்தார். அவரது சிந்தையை அறிந்துகொண்ட கண்ணன் நாரதரின் மனக்கண்ணில் ஒரு விசேஷ காட்சியைக் காட்டினான். அது என்ன காட்சி?இந்தப் பிரபஞ்சமே ஒரு சதுரங்கப் பலகையாக இருக்கிறது. பொதுவாக நாம் பார்க்கும் சதுரங்கப் பலகைகளில் அறுபத்து நான்கு கட்டங்கள் இருக்கும். அவை கறுப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இருக்கும்.

ஆனால் பிரபஞ்சமாகிய சதுரங்கப் பலகையில் இருபத்து நான்கு கட்டங்கள் இருக்கின்றன (ஐம்பூதங்கள், ஐந்து உணர்ச்சிகள், ஐம்புலன்கள், ஐந்து செயல் கருவிகள், மனம், அகங்காரம், மகான், மூலப் பிரகிருதி ஆகிய இருபத்து நான்கு ஜடத் தத்துவங்களே கட்டங்கள்). மேலும், அவை வெள்ளை, சிவப்பு, கறுப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் இருக்கின்றன. ஏனெனில் வெண்மை என்பது சத்துவ குணம், சிவப்பு என்பது ரஜோ குணம், கறுப்பு என்பது தமோ குணம். எனவே அந்த மூன்று குணங்களுக்கு ஏற்றபடி வெள்ளை, சிவப்பு, கறுப்பு ஆகிய மூன்று நிறங்களில் மொத்தம் இருபத்து நான்கு கட்டங்கள் கொண்ட ஒரு சதுரங்கப் பலகையே இந்தப் பிரபஞ்சம்.

அதில் ஒருபுறம் திருமாலாகிய கண்ணன் அமர்ந்திருக்கிறார். மறுபுறம் திருமகளான ருக்மிணி தேவி அமர்ந்திருக்கிறாள். சதுரங்கத்தில் நகர்த்தப்படும் காய்கள் யார்? வேறு யாருமில்லை! நாம் அனைவரும் தான். புல், செடி, கொடி, ஈ, எறும்பு முதல் பிரம்மா, இந்திரன் வரை உள்ள அத்தனை உயிரினங்களும் சதுரங்கக் காய்களாக அதில் உள்ளார்கள். அவர்களை ஒரு கட்டத்தில் இருந்து மறுகட்டத்துக்கு நகர்த்திச் சதுரங்கம் விளையாடுவது போல், இறைவனும் இறைவியும் இவ்வுலகின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தச் சதுரங்க விளையாட்டைக்  கண்டு களிப்பவர்கள் யார்? வைகுண்டத்தில் உள்ள நித்திய சூரிகள், வேதங்கள் ஆகியோர் பார்வையாளர்களாக இருந்து இதைக் கண்டு களிக்கிறார்கள். இக்கருத்தை வேதாந்த தேசிகனும் பாடியுள்ளார்:

“பச்யந்தீஷு ச்ருதிஷு பரித ஸூரி ப்ருந்தேன ஸார்தம்
மத்யே க்ருத்ய த்ரிகுண பலகம் நிர்மித ஸ்தான பேதம்
விச்வாதீச ப்ரணயினி ஸதா விப்ரம த்யூத வ்ருத்தௌ
ப்ரஹ்ம ஈசாத்யா: தததி யுவயோ: அக்ஷசார ப்ரசாரம்”
“மூவண்ணக் கட்டங்கள் கொண்ட சதுரங்கப் பலகையாகிய இந்த உலகில்,

உயிரினங்களை எல்லாம் சதுரங்கக் காய்களாக வைத்து நகர்த்தி, இவ்வுலகின் நிர்வாகத்தை விளையாட்டு போல் திருமகளும் திருமாலும் நடத்தி வர, அதை வேதங்களும் நித்திய சூரிகளும் கண்டு மகிழ்கிறார்கள்!” என்பது இதன் பொருள்.இக்காட்சியை மனக்கண்ணில் கண்ட நாரதருக்கு விஷயம் புரிந்துவிட்டது.

இவ்வுலகின் நிர்வாகத்தையே ஒரு விளையாட்டு போல் அவலீலையாக நடத்தி வருகிறான் கண்ணன். தனது பிரஜை தனக்கு ஒரு குறை என்று வந்து முறையிட்டால், கண்ணன் உடனே சதுரங்கம் விளையாடச் செல்கிறான், அதாவது உலகமாகிய சதுரங்கத்தில் உள்ள காய்களை அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக நகர்த்துகிறான். உடனேயே அந்த மனிதனின் குறை நீங்கி விடுகிறது. இவை அனைத்தையும் கண்ணனுடைய அருளாலே புரிந்து கொண்ட நாரதர், கண்ணனை வணங்கி விட்டுத் தேவலோகம் திரும்பினார்.

இக்கதை நமக்கு உணர்த்தும் தத்துவம் என்ன? இறைவன் தனது விளையாட்டாக, லீலையாக இவ்வுலகின் நிர்வாகத்தை நடத்திவருகிறான். விளையாட்டு என்பதற்காகத் தன் மனம்போன போக்கில் எல்லாம் அதைச் செய்வதில்லை. விளையாட்டுக்கென்று சில சட்டதிட்டங்கள், நெறிமுறைகள் இருப்பது போல், அவனும் நெறிமுறையோடு உலகின் நிர்வாகத்தை நடத்தி, விளையாடி மகிழ்கிறான்.

“அலகிலா விளையாட்டு உடையார்” என்று கம்பனும், “அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே” என்று ராமாநுஜரும் இதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.‘திவ்’ என்றால் விளையாட்டு. ‘தேவன்’ என்றால் விளையாடுபவன். உலகுக்கெல்லாம் ஆதி காரணமாக இருந்து அனைத்தையும் படைத்து, அதன்பின் தனக்குக் கீழ்ப்பட்ட அந்த உயிர்களையும் உலகங் களையும் தனது விளையாட்டுக் கருவி போல் வைத்து விளையாடி மகிழ்பவராகத் திருமால் திகழ்வதால் அவர் ‘ஆதிதேவ:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘ஆதிதேவ:’ என்றால் தன்னால் படைக்கப்பட்ட உலகங்களோடும் உயிர்களோடும் விளையாடுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 336-வது திருநாமம்.“ஆதிதேவாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்க ள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்