மௌன விரதம் இருக்க முடியுமா?வணக்கம் நலந்தானே!

முடியும். ஆனால், எது மௌன விரதம். தற்போது நாம் நடைமுறையில் வாய் பேசாமல் ஜாடையில் பேசுவதைத்தான் மௌன விரதம் என்கிறோம். பரவாயில்லை. வாய் திறந்து பேசாமல் இருப்பதுவும் ஒரு அப்பியாசம்தான். அதில் தவறொன்றும் இல்லை. அவ்வப்போது பேசாமல் இருப்பதின் மூலம் மெல்ல மனம் மெல்ல அமைதியை பெறுகிறது என்பதும் ஒரு நடைமுறை உண்மை. ஏதேனும், தொணதொணவென்று பேசிக் கொண்டிருந்த மனமானது ஓய்ச்சல் அடங்கி நிம்மதியை அடைகின்றது. மேலும், நடைமுறையில் வீணாக நடைபெறும் வாக்குவாதங்களை தவிர்க்கலாம்.  

அவ்வப்போது பேசாமலிருப்பதால் செயல்திறன் கூடுகின்றது. சிந்தனையில் ஒரு ஒழுங்கு ஏற்படுகின்றது. எது யோசித்தாலும் மனம் அதில் ஆழமாக நகர்கின்றது. இதைத்தான் வாக் மௌனம் என்கிறார்கள். ரிஷிகள் கூறுவது மனோ மௌனம். அதாவது மனமானது அடங்கி அழிந்து பெரும் மௌனத்தில் ஆழ்ந்து விடுதல். அதுவே இறுதி லட்சியம். அதுவே, பிரம்மம். அந்த நிலையில்தான் மௌனத்தினாலேயே பிரம்மம் பிரகடனம் செய்யப்படுகின்றது என்கிறார்கள்.

‘பிரம்மத்தை சொல்லால் உரைக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அது மௌனத்தினால் மட்டுமே உணரப்படக் கூடியது. ஏன் சொற்களால் அறிய முடியாது என்பதை முதலில் பார்ப்போம். ஏகான்ம வஸ்துவான அந்த பிரம்மத்திலிருந்து பொய்த் தோற்றமாகிய அகந்தை எழுகிறது. இதுவே பலவீன விஷயமாகும்.

இப்படி எழுந்த நான் என்கிற போலி அகந்தையினின்று எண்ணங்கள் எழுகின்றன. இப்போது பிரம்மம் என்கிற மகத்தான சக்திக்கு அன்னியமாக இந்த எண்ணங்கள் இருப்பதால் இதுவும் பலமற்றதுதான். இந்த எண்ணங்களே சொற்களாக விரிகின்றன. இப்போது கூர்ந்து நோக்கின் மௌனத்தின் கொள்ளுப் பேரனே சொற்கள். ஆதி மூலமாகிய ஆன்மாவைப்பற்றி அதிபலவீனமான சொற்களால் என்ன கூற முடியும். துவைதப் பிரபஞ்சத்தில் மட்டுமே சொற்கள் உதவும். அத்வைத நிலையை கூறுவதற்கு சொற்களால் கிஞ்சித்தும் இயலாது.

ஆத்ம வஸ்துவானது சொற்களின் ஆளுகைக்கு அப்பாற்பட்டது. எனவே, அதன் மொழி என்பது மௌனமேயாகும். இது வாக்கினால் பேசாதிருக்கும் மௌனமல்ல. வாக்கினால் வெளிப்படுத்தாவிடினும் மனம் இயங்கிக் கொண்டேயிருக்கும். எனவே, மனம் இயங்குவதால் அதுவும் மௌனமாகாது. இந்த மோனம் என்கிற மௌனமானது இருதய ஸ்தானத்தில் தான் இருந்தபடியே அப்படியே இருப்பது.

மௌனமே உள்ளத்தில் ஆத்மாவின் விளக்கமாக பெருகியபடி இருக்கும் ஓர் ஒப்பற்ற மொழியும் ஆகும். இந்த மொழியானது மனதினால் உணரப் படும் ஸ்தூல, சூட்சும ஒலிகளை கடந்திருப்பதாகும். இவ்வாறான குருவின் மௌன மொழியானது சீடனை முதலில் விவேகத்தோடு இருக்கச் செய்யும்.

அதாவது மனம் முன்னிலை, படர்க்கை என்று அலையும் இயல்பை தடுத்து நிறுத்தி ஆன்மாவிலேயே ஓங்கி அமரும்படியான பூரண நிலையை எய்த வைக்கும். இதுவே மௌனத்தின் நிஜமான கருணையுமாகும். அவ்வியாஜ கருணை எனப்படும் எந்த எதிர்ப்புமற்ற கருணை மௌனத்தின் வழியேதான் ஜீவனுக்குள் பாயும். அதை அனுபவத்தில்தான், இன்னும் சொல்லப்போனால் அனுபூதியினால்தான் அறிய இயலும். அப்படி அந்த மோனத்திலேயே இருத்தலைத்தான் தட்சிணாமூர்த்தி மோனநிலையில் விளக்குகிறார்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)