அடியார்க்கும் அடியேன் ஆனோம்!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

அறுபத்து மூவர் சிறப்பிதழ் அட்டைப்படமே, அற்புத தரிசனமானது. திருவாரூர் முதல் திருச்சி வரை, நெல்லை முதல் தில்லை வரை, நாட்டுப்புறம் தொட்டு, மலேசிய நாடு வரை அறுபத்து மூவர் திருவிழா நடக்கும் தலங்களுக்கெல்லாம் எங்களை கூட்டிச் சென்றதுபோல இருந்தது, சிறப்பிதழ். வித்தியாசமானதொரு அம்மன் கோயிலை அடையாளம் காட்டி, விசேஷமான வழிபாட்டை உணர்த்தி சர்வ மங்களம் பெற சென்னை, நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு புறப்பட வைத்தது கட்டுரை.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

மனதை ஏன் உள்முகமாகத் திருப்ப வேண்டும். உண்மையான இன்பம் ஏது? போன்ற விவரங்களை பொறுப்பாசிரியர் காரண காரியங்களோடு விளக்கி, எது ஆத்ம ஸ்தானம் என்பதை உணர்த்தி விட்டார்!
- ஆர்.கே. லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.

‘மங்களம் தருவாள் ஸர்வமங்களா’’ கண்டேன். கங்காநகரில் முதன் முதலாக அமைந்த வித்யா மந்திராலய சிறப்புக்களை எங்களுக்கு தந்தது அற்புதம். மற்றும் பூஜை குங்குமம் போடும் விசேஷம் கூறியதும், ‘போகம் யோகம்’, வேண்டும் என்றால் அம்பாளை எப்படி சுற்ற வேண்டும், மற்றும் தெய்வச் சிலைகளிலிருந்து வௌிப்படும் ஆன்மீக கதிர் வீச்சால் மனம் லேசாகும் என்பதை படித்தபோது மெய் சிலிர்த்தது. ஒரு வித தெய்வீகம் என் இதயத்தில் புகுந்த மாதிரி இருந்தன.

தலங்கள் தோறும் அறுபத்து மூவர் பெருவிழா கண்டேன். திருவாரூர், திருக்கழுக்குன்றம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, சேலம், மதுரை போன்ற தலங்களில் நிகழ்ந்த அறுபத்து மூவர் விழாவினை அழகாக படம் பிடித்து காட்டியது இன்னும் என் கண் முன்பு நிற்கிறது. அறுபத்து மூவர் விழாவின் புகைப் படங்கள் என் இதயத்தில் ஒட்டிக் கொண்டன.
- வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு.

அகிலமெங்கும் ஆன்மிக ஒளி பரப்பி இறை பக்தியின் மேன்மையினை உணர்த்தி நற்கதியடைந்த நாயன்மார்கள் அறுபத்து மூவரைப் போற்றி வணங்கிடும் பொன்னான திருநாளான அறுபத்து மூவர் உற்சவம்’ எனும் பெருவிழா, திருத் தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுவதை தொகுத்து படைக்கப்பட்ட கட்டுரை ஆயுளுக்கும் மறக்க முடியாத தெய்வீக விருந்து.

அற்புதமான அறுபத்து மூவர் சிறப்பு மலரை உருவாக்கிய தாங்களின் இறை சேவையை கை கூப்பி வணங்குகிறோம். அழகன் முருகப் பெருமான் பல்வேறு அபூர்வ வடிவமெடுத்து பல திருத்தலங்களில் காட்சி தந்து அருள்புரிந்து வருவது கண்கூடு! இந்த அற்புதங்களைத் தொகுத்து எழுதப்பட்ட கட்டுரையை பங்குனி உத்திரம் சமயத்தில் படித்து பரமசிவ மைந்தனை தரிசித்து பரவசமடைந்தோம்.
-  த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ‘‘அறுபத்துமூவர் பெருவிழா’’ எந்தெந்த திருத்தலங்களில் எப்படி சிறப்பாக கொண்டாடப் படுகிறது என்பதை புள்ளி விவரமாக தொகுத்து வழங்கி பக்தர்களின் இதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டீர்கள்!
- கே. பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

சிவனைப் பற்றிய செய்திகளை ஏராளமாய் தாராளமாய் தந்தது மனதை நிறைவு செய்தது. அதிலும் குறிப்பாக ருத்திராட்சத்தின் மகிமை, செஞ்சடை வேடுவன் போன்ற தகவல்கள் மனதிற்கு இதமாகயிருந்தது. அனைத்தும் ஆத்மார்த்தத் திருப்தியைத் தந்தது.
- சு. இலக்குமணசுவாமி, மதுரை.