வளங்கள் சேர்க்கும் ஆடிப்பெருக்கு-2-8-2020ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி18-ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினார். தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக் கரையில் பெருமாள்குடி கொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள்.

ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்தியரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள். இந்தநிகழ்வே, ‘ஆடிப்பெருக்கு’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம். இந்த விழாவை 18-ம்தேதி கொண்டாட சில காரணங்கள் உள்ளன. 18 என்பது ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும் எண்ணாகும்.

இந்நாளில் தீர்த்தமாடு வதன்  மூலம்,  ஆன்மிக  இன்பத்தில் திளைத்து, மன நிம்மதியைப் பெறலாம். இந்தஎண், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும் தன்மையுடையது. அதனால், இந்நாள் நகை முதலான மங்கலப் பொருட்கள் வாங்க ஏற்ற நாளாக இருக்கிறது. மாங்கல்ய கயிறை புதிதாகக் கட்டிக் கொள்வதன் மூலம், கணவருக்கு ஆயுள் பெருகும். புதிய படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இது பொன்னாள்.

ஆடிப்பெருக்கு என்பது ஆடிமாதம் 18-ஆம் நாளை குறிக்கிறது. இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.

முன்னோர் காலத்தில் தமிழக ஆறுகள் ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து ஓடும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ஆற்றுப் பெருக்கு எனக் கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.

இந்த ஆடி காலத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றாத நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது.

கரு கொண்ட பூமி தாய்க்கு, நிலமும் நீரும் சேர்ந்த இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தானிய அபிவிருத்தி அருளும் அம்பிகையை, பெண்கள் - வம்ச அபிவிருத்தி வேண்டி வழிபாடுகள் நடத்துவார்கள். குலம் விளங்க, நல்வாரிசுகள் அமைய அம்பிகையை மனமுருகிப் பிரார்த்தனை செய்வார்கள். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்து, இல்லறம் நல்லறமாக விளங்க அம்பிகையை வேண்டிக் கொண்டு, மஞ்சள் கயிறு அணிவிப்பார்கள்.

தமிழகத்தில் காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ் பெற்றது. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆடி பதினெட்டாம் பெருக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி-வேலூர், குளித்தலை, திருச்சி, பூம்புகார் ஆகிய இடங்களிலும், ஸ்ரீ ரங்கத்தில் புகழ் பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம் பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

சங்க காலங்களில் போன்று தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில
ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்துவிட்டு நீர்பெருக் கெடுத்து ஓடச் செய்கின்றனர். இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமயபுரத்திலுள்ள ஆதிமாரியம்மன் கோவிலில், சகோதரர்களின் நல்வாழ்வுக்காக சகோதரிகள் அர்ச்சனை செய்வதும் உண்டு. அன்று ஸ்ரீரங்கம் நம் பெருமாள் தங்கப் பல்லக்கில் காவிரிக் கரையிலுள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சுவாமி சூடிக்களைந்த மாலை, கஸ்தூரி திருமண்காப்பு, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தாலிப்பொட்டு, வடை, அப்பம், தோசை ஆகியவற்றை யானை மீது வைத்து ஊர் வலமாகக் கொண்டு வந்து நதியில் விடுகின்றனர்.

ஆடிப்பெருக்கன்று காவிரியில் மூழ்கும் போது, ‘ஸ்ரீரங்கா கோவிந்தா கோபாலா…’என பெருமாளின் நாமத்தையும், ‘தாயுமானவா தந்தையுமானவா சிவாயநம! ’ என்று மலைக்கோட்டை சிவன் நாமத்தையும் உச்சரிப்பதன் மூலம், நம் உடலுடன் உள்ளமும் தூய்மையடையும்.

- கார்த்திக்