தேவி பிடித்து வைத்த நீர் லிங்கம்

காகினீ தேவி (ஸ்வாதிஷ்டானம்)
ஸ்வாதிஷ்டானத்தில் ஆறு இதழ்கள் கொண்ட தாமரையில் எழுந்தருளும் தேவி காகினீ. நான்கு முகங்கள் கொண்டு சூலம், பாசம், கபாலம், அங்குசம் இவற்றைக் கரங்களில் ஏந்தியிருக்கிறாள். ஆகாயம், வாயு, அக்னி, நீர் எனும் நான்கையும் நான்கு முகங்களாகக் கொண்டவள். முக்கண்ணி. மஞ்சள் கலந்த செந்நிற திருமேனி கொண்டவளாதலால் பீதவர்ணி என அழைக்கப்படுபவள். குங்குமப்பூவிற்கும் பீதம் என்று பெயர். மிக கர்வமுள்ளவள். கொழுப்பு எனும் மேதஸ் தாதுவில் வசிப்பவள்.  கொழுப்பு தாதுவில் வசிப்பதால் அதிக கர்வமுள்ளவள். கர்வம் அதிகமாக உள்ளவர்களை கொழுப்பு பிடித்தவர் என்று சொல்வதுண்டு. தேன் மற்றும் தயிர் சாதத்தில் பிரியமுள்ளவள்.

லலிதா ஸஹஸ்ரநாமம் இதையே, ஸ்வாதிஷ்டானாம் புஜகதா சதுர்வக்த்ர மனோஹரா
சூலாத்யாயுத ஸம்பன்னா பீத வர்ணா அதிகர்விதா
மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி ஸமன்விதா
தத்யன்னாஸக்த ஹ்ருதயா காகினீ ரூபதாரிணீ
-எனப் போற்றுகிறது.
இந்த ஸ்வாதிஷ்டானத்தில் ஆறு நாடிகள் ஆறு தளங்களாக உள்ளன. ஆறு அக்ஷரங்களான  ப2, ம, ய, ர, ல இங்கு பிறக்கின்றன. அந்த அக்ஷர தேவதைகளான பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினீ, ரக்தா, லம்போஷ்டீ எனும்  காகினீ தேவியின் பரிவார தேவதைகளாக விளங்கு கின்றனர். இந்த ஸ்வாதிஷ்டானம் புவர்லோகத்துடன் தொடர்பு உடையது. சாவித்ரி, சரஸ்வதியுடன் கூடிய நான்முகன் இந்த ஆதாரத்தின் தெய்வமாக விளங்குகிறார். வம் என்பதே இந்த ஸ்வாதிஷ்டானத்தின் பீஜாட்சரமாக உள்ளது. ஆண், பெண் குறிகளின் மூலஸ்தானம் எனப்படும் தொடங்குமிடத்தில் உள்ளது ஸ்வாதிஷ்டானம்.
ஸ்வாதிஷ்டானத்தில் சரஸ்வதி பிரம்மா
ஸஹஸ்திரமாறு தளத்தினில்
ஹம்ஸ வாகனந் தன்னில் ஏறிய
அகிலம் சிருஷ்டிக்கும் நாதனைக் கண்டு தொழுதேன்
-எனும் துதியும் ஸ்வாதிஷ்டானத்தின் தேவதை நான்முகனோடு கூடிய நாமகள் என்பதை நிரூபிக்கிறது.
ஸ்வாதிஷ்டானம் தூண்டப் படும்போது மனோமயகோசத்தில் முழு உடம்பும் எழுச்சி பெறுகிறது. பிராணமய கோசத்தில் மனோமய கோசத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவிற்கு வருகின்றன.

51 சக்தி பீடங்களுள் தண்டினீ பீடம் எனப் போற்றப்படும் திருவானைக்காவல் ஸ்வாதிஷ்டானத் தலமாக  விளங்குகிறது. பத்மபுராணம் இத்தலத்தின் பெருமைகளைப் பேசுகிறது. பஞ்சபூத தலங்களுள் அப்புத்தலம் இது. இங்கு தேவி நீரினால் லிங்கத்தைப் பிடித்து பூஜித்ததால் இந்த லிங்கம் அமுதலிங்கமாக போற்றப்படுகிறது. இத்தல கருவறையில் அருளும் ஜம்புகேஸ்வரர் ஆவுடையின் கீழ் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. அத்தீர்த்தம் சிவ தீர்த்தமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இத்தலம் யானைகள் உலாவும் சோலையாக இருந்ததால் ஆனைக்கா என்று பெயர் பெற்றது. யானை வழிபட்டதால் இப்பெயர் வந்தது என்போரும் உண்டு.

ஒரு சமயம் உமையன்னைக்கு ஒரு சந்தேகம் தோன்றியது: அர்த்த நாரீஸ்வரராக இருக்கும்போது ஈசன் மட்டும் தனியாகத் தவம் புரிய முடியுமா? அது பற்றி அன்னை ஈசனிடம் கேட்க, ‘‘நீ பூவுலகம் சென்று அங்கு என் பக்தன் ஜம்புமாதவன் நாவல் வடிவாக விளங்கும் திருவானைக்காவலில் சென்று தவம் புரி. அப்போது உன் சந்தேகத்தை தீர்த்தருள்கிறேன்’’ என்றார். அதன்படி இறைவி இங்கு வந்து நாவல் மரத்தடியில் காவிரி நீரால் அமுதலிங்கம் செய்து வழிபட்டு வர, ஈசனும் அம்பிகைக்கு யோகம், போகம் பற்றி குருவாய் இருந்து உபதேசம் செய்தருளியதால் இத்தலத்தில் ஈசனுக்கும், அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை. இங்கு கணங்களாய் இருந்த இரு சிவகிங்கரர்கள் சாபம் பெற்று யானையாகவும், சிலந்தியாகவும் மாறி சிவத்தொண்டு செய்து இறுதியில் முக்தி பெற்றனர்.

தேவி அகிலாண்டேஸ்வரி ஆனந்த வடிவில் திருவருட்பாலிக்கும் திருத்தலம் இது. தேவியே ஈசனை பிரதிஷ்டை செய்ததால் உச்சிகால பூஜையின் போது ஆலய அர்ச்சகர் பெண் வேடமணிந்து இறைவனை பூஜிப்பது இத்தல விசேஷம்.
முன்பொரு சமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் பேரழகில் நான்முகன் மயங்கினார். அதனால் படைக்கும் தொழில் பாதிக்கப்பட, மீண்டும் தன் சக்தியைப் பெற ஈசனைக் குறித்து தவம் புரிந்தார் பிரம்மா. ஈசன் அவருடைய தவத்திற்கு  மகிழ்ந்து காட்சி தந்தபோது, பார்வதியின் பேரழகில் பிரம்மா மயங்கி விட்டால் என்ன செய்வது என நினைத்து பார்வதியை ஆணாகவும், தான் பெண்ணாகவும் மாறி காட்சியளித்தார். அந்நிகழ்வை நினைவூட்டும் பஞ்சப் பிராகார விழாவில் ஈசன் பெண் வேடத்துடனும், இறைவி ஆண் வேடத்துடனும் உலா வருவது இத்தல சிறப்பு.

உக்கிரமாக விளங்கிய அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் ஸ்ரீசக்ரம், சிவசக்ரம் இரண்டையும் பொருத்தி சாந்தஸ்வரூபிணியாக்கினார் ஆதிசங்கரபகவத்பாதாள். ராஜ ராஜேஸ்வரியின் சேனாநாயகியான வாராஹியின் அம்சமாக விளங்கும் அகிலாண்டேஸ்வரி தன்னை நம்பும் அடியார்களுக்கு சகல நலன் களையும், வளங்களையும் வாரி வாரி வழங்குபவள். இவள் சம்சாரம் எனும் காட்டுத் தீயை அணைக்கும் அம்ருத மழை. பாவமென்னும் வனத்தை அழிக்கும் தீ. துர்ப்பாக்கியம் எனும் பஞ்சுகளை சுழற்காற்றாக வீசி எறியும் காற்று, மூப்பு எனும் இருட்டை விரட்டும் சூரியன், பாக்கியம் எனும் கடல் பொங்க நிலாவாக இருப்பவள். பக்தர்கள் மனதில் கார்மேகம் கொண்ட மயிலின் மனதைப் போல குதூகலம் தருபவள், ரோகம் எனும் மலையை உடைக்கும் வஜ்ராயுதம், ம்ருத்யு எனும் மரத்தை வெட்டும் கோடரி, நம்மை எல்லா நிலைகளிலும் காத்து ரட்சிக்கும் கருணைக்கடல் தேவி.

ஸௌந்தர்ய லஹரியின் 39ம் ஸ்லோகமான ‘தவ ஸ்வாதிஷ்டான’ எனும் துதியில் அக்னி தத்துவத்தில் இடைவிடாது பிரகாசிக்கும் காலாக்னி ரூபிணியான அந்த ருத்திரனையும் சந்திரகலா சக்தியான உன்னையும் போற்றுகிறேன். ஈசனின் பார்வை உலகை எரித்தாலும் உன் பார்வை குளிர்ச்சியைத் தந்து கருணை பொழிகிறது என்கிறார் ஆதிசங்கரர். அந்த அக்னி தத்துவத்திற்கு அதிஷ்டானமானது இந்த ஸ்வாதிஷ்டான அஷ்டதளபத்ம சக்கரம், ஸம்ஹார மூர்த்தியான அக்னி வடிவான ஈசன் இங்கு அருள்கிறார். இந்த இடத்தில் உள்ள அக்னிக்கு ஸம்வர்தாக்னி என்று பெயர். ஈசனின் நெற்றிக்கண்ணால் தகிக்கப்படுபவர்கள் தேவியின் கருணா கடாக்ஷத்தால் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதே இந்த ஸ்வாதிஷ்டான உபாசனையின் தத்துவம். மன்மதன் ஈசனின் நெற்றிக்கண்ணால் அழிந்து மீண்டும் உயிர் பெற்று எழுந்து சக்தி பெற்று இந்த உலகையே ஆட்டிப்படைப்பது இந்த உபாசனையால்தான்.
‘ஹர நேத்ராக்னி ஸந்தக்த காம சஞ்சீவ நௌஷதி’ எனும் லலிதா ஸஹஸ்ரநாம நாமாவே இதற்கு சாட்சியாய் விளங்குகிறது.த்யான ஸ்லோகங்கள்
ஸ்வாதிஷ்டானாக்ய பத்மே ரஸதள லஸிதே
வேத வக்த்ராம் த்ரிநேத்ராம்
ஹஸ்தாப்யாம் தாரயந்தீம் த்ரிசிக குணக
பாசாங்குசான் ஆத்த கர்வாம்
மேதோ தாது பிரதிஷ்டாம் அலிமத
முதிதாம் பந்திதி முக்யயுக்தாம்
பீதாம் தத்யோதனேஷ்டாம் அபிமதபலதாம்
காகினீம் பாவயாமி.
ஸ்வாதிஷ்டானே ஷட்தளபத்மே
ஸ்வாதிஷ்டான விஹாரிணீம்
குணமயீம் ஸ்ருஷ்டி க்ரியா காரிணீம்
பாலந்தக்ஷர ஷட்தளாப்ஜ
நிலயாம் ப்ராம்ஹீம் தயா ஸாகராம்
ப்ராலேயாத்ரி குலால பால
லதிகாம் பந்தூக புஷ்பப்பிரபாம்
தேவீம் தாம் த்ரிதசார்ச்சிதாங்க்ரி
யுகளாம் வந்தேபராம் சித்கலாம்.

லாகினீ தேவி (மணிபூரகம்)
நாபிப் பகுதியில் உள்ள மணிபூரக சக்கரத்தில் 10 இதழ்கள் கொண்ட தாமரையில் அமர்ந்தருளும் தேவி லாகினீ. முக்கண்கள். ஆகாயம், அக்னி, வாயுவாகத் திகழும் மூன்று முகங்களுடன் கைகளில் வஜ்ராயுதம், சக்தி, தண்டம் மற்றும் அபயமுத்திரை தரித்தவள். கறுப்பு நிறமுடைய இவள் (சில தந்திரங்களில் சிவப்பு என்ற குறிப்பும் உள்ளது) மாமிச தாதுவின் அதி தேவதையாகத் திகழ்கிறாள். இத்தேவி வெல்லம் கலந்த அன்னமான சர்க்கரைப்பொங்கலை உண்பதில் பிரியமுடையவளாக கூறப்பட்டுள்ளது. தன்னை வழிபடும் சாதகர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அருளும் அன்னை இவள். ஸ்திர ஸௌதாமினி என்ற பெயருடன் சகல அணிமணிகளோடு பக்தர்கள் செய்யும் உபசாரங்களையும் பூஜைகளையும் ஏற்கும் தேவி லாகினீ. அம்பிகையை அறுபது நாழிகைப் பொழுதும் நினைந்து நினைந்து தேவியாகவே மனோபாவத்தில் ஒன்றாகி ஸாரூப்ய எனும் நிலை நமக்கெல்லாம் கிட்ட வேண்டும் என மூக கவி தன் ஸ்துதி சதக ஸ்லோகத்தில் கூறியுள்ளார். பக்தியில் பலவகை உண்டு. ஞானசம்பந்தர் ஈசனையும், அம்பிகையையும் தாய்-தகப்பனாகக் கண்டார். நாவுக்கரசர் தொண்டராகக் கண்டார். சுந்தரர் சக்யபாவம் எனும் தோழனாகக் கண்டார். மணிவாசகப்பெருமாள் குருவாகவும் தெய்வமாகவும் கண்டு பக்தி செலுத்தினார். இதில் தோழபாவம்  எனும் சக்யபாவம் மிகவும் விசேஷமானது. ஈசனுக்கு மட்டுமே கட்டுப்பட்ட தேவியின் திருவடிகளில் எல்லா தேவர்களின் திருமுடிகளும் தொட்டு அலங்கரிக்கின்றன. தேவியை நம் தோழியாக்கி அவளுடன் மனதால் விளையாடி அவளருள் பெற வேண்டும்.

தேவி அமர்ந்தருளும் 10 இதழ் தளங்கள் பத்து அக்ஷரங்களைக் குறிக்கின்றன. டகாரம் 2, தகாரம் 4, பகாரம் 2 மற்றும் ண, ந  என்பதே அந்த அக்ஷரங்கள்.  டாமரீ, டங்காரிணீ, ணார்ணா, தாமஸி, தாணவீ, தாக்ஷாயணீ, தாத்ரீ, நாரீ, பார்வதீ, பட்காரிணீ போன்ற அந்த அக்ஷரதேவிகள் லாகினீ தேவியின் பரிவார தேவதைகளாக அருள்கின்றனர். இந்த மணிபூரக சக்கரத்தின் பீஜாட்சரம், யம். அதற்குச் சமமான லோகம் ஸுவர்லோகம். இந்த சக்கரத்தின் தேவதை, ஸ்ரீதேவி-பூதேவி சமேத மகாவிஷ்ணு. குண்டலினி சக்தி ஸஹஸ்ராரத்தில் அமுதப் பெருக்கை உண்ணும்போது அவை மிகவும் நுண்ணிய திவலைகளாக சிதறிய மணிகளைப் போல இந்த ஆதாரத்தில் விழுகின்றனவாம்!
மணிபூரகம் தன்னில் மகாவிஷ்ணு லக்ஷ்மி
மட்டில்லாத தசதளத்தில்
மணியணி பூட்டி கருடன் மீதினில்
அறிவின் ஸ்வரூபனும் ஆதியைக் கண்டு தொழுதேன்
-எனும் பாடல் மணிபூரக சக்கரத்தின் தேவதை, தேவியருடன் கூடிய திருமால் என்று நிரூபிக்கின்றது.
லலிதா ஸஹஸ்ரநாமம்,
மணிபூராப்ஜ நிலயா வதனத்ரய  ஸம்யுதா
வஜ்ராதிகா யுதோ பேதா டாமர்யாதி பிராவ்ருதா
ரக்தவர்ணா மாம்ஸ நிஷ்டா குடான்ன ப்ரீத  
மானஸா
ஸமஸ்த பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணி
- என இத்தேவியை போற்றுகிறது.
தடித்வந்தம் சக்த்யா திமிர
பரிபந்த்தி ஸ்புரணயா
ஸ்புரந் நானாரத்னாபரண பரிணத்
தேந்த்ர தனுஷம்
தவச்யாமம் மேகம் கமபி
மணிபூரைக சரணம்
நிஷேவ வர்ஷந்தம் ஹரமிஹிர
தப்தம் த்ரிபுவனம்
- ஸௌந்தர்யலஹரி 40ம் ஸ்லோகத்தில் மணிபூரக சக்கரத்தைப் பற்றி ஆதிசங்கரர் விளக்கியருளியுள்ளார். இதில் சதாசிவ தத்துவம் விளக்கப்படுகிறது. இதுவும் பராசக்தியின் வடிவமே. சக்தியின் வடிவிலேயே சிவவடிவம் அடங்கியுள்ளது. சக்தியுள் சிவம் அடக்கம் என்பதை நினைவில் வைத்து தியானிக்க வேண்டும் என்று ஆதிசங்கரர் கூறியுள்ளார். அம்பிகை தாபங்களை நிவர்த்தி செய்பவள். ஆத்யாத்மீகம் எனப்படும் சரீரத்திலுள்ள தாதுக்களின் கோளாறுகளால் ஏற்படும் நோய்கள், ஆதி பௌதீகம் எனப்படும் நீர், நெருப்பு இவற்றால் ஏற்படும் விபத்துகள், ஆதி தெய்வீகம் எனப்படும் பூர்வஜென்ம கர்மாக்களால் ஏற்படும் நோய்கள் போன்ற தாபங்கள் தேவியின் அருள் எனும் மழையில் கரைந்து ஓடிவிடுகின்றன. சதாசிவம் எனும் மேகத்தில் தேவி மின்னலாகக் காட்சியளிப்பவள் என்பதால் இந்த மணிபூரக தேவதையான லாகினி மணிபூரக மின்னல் மோகினி என வணங்கப்படுகிறாள். மணிபூரகம் இருட்டு மயம். எனவே இச்சக்கர தேவதை மின்னல் போல் ஒளி வீசியருள்கிறாள்.
‘சொல்லும் பொருளுமென நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே’ என்று தன் அபிராமி அந்தாதியில்(28) ‘சொல்வடிவம் உமா தேவியென்றால் பொருள்வடிவம் சிவபெருமான்’ என அபிராமி பட்டரும், ‘வாகர்த்தா விவ ஸம்ப்ருக்தௌ: வாகர்த்த ப்ரதிபத்தயே ஜகத: பிதரோ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ:’ என காளிதாசரும், ‘பரா, ப்ரத்யக்சிதீரூபா, பச்யந்தீ பரதேவதா, மத்யமா, வைகரீ ரூபா’ என லலிதா ஸஹஸ்ரநாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகளும் உமாமகேஸ்வரனை வணங்குகின்றனர். தேவியின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டால் எல்லா ஆபத்துகளையும் நாம் கடந்து விடுவோம். தேவியின் பாதங்கள் நம்மை விபத்துகளிலிருந்து காப்பதாக உள்ளது.

மணிபூரகம் தூண்டப்படும்போது மனோமய கோசத்தில் நிகழ்ச்சிகளின் காரணம் தெரியும். ப்ராணமய கோசத்தில் மனோமய கோசத்தைத் தாக்கும் எல்லா சக்திகளும் இக்கோசத்திலும், அன்னமயகோசத்திலும் அறியப்படும்.
திருவண்ணாமலை மணிபூரகத்தலமாக போற்றப்படுகிறது. தேயுஸ்தலமாக விளங்கும் இத்தலத்தை நினைத்தாலே பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் பெருகி முக்தி கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நான்முகனும், நாரணனும் தங்களில் யார் பெரியவர் என்று வாதிட, அப்போது ஒரு பேரொளி விண்ணுக்கும் மண்ணுக்குமாய் நின்றது. அந்தப் பேரொளியின் அடி-முடியைக் காண, நான்முகன் அன்னப்பறவையாக மாறி முடி தேடியும், நாரணன் பன்றியாக உருமாறி அடி தேடி பூமியைப் பிளந்து கொண்டு சென்றும் அடிமுடியைக் காணவில்லை. பின் நாரணன் தன்னால் அடியைக் காண முடியவில்லை என அப்பேரொளியை சரணடைய, அவருக்கு தன் அடியைக் காட்டி அருளினார் பேரோளியாய்த் திகழ்ந்த ஈசன். ஆனால், நான்முகனோ பேரொளியாகத் தோன்றிய ஈசனின் திருமுடியிலிருந்து உதிர்ந்த தாழம்பூவின் துணை கொண்டு முடியைக் கண்டதாக பொய் கூறினார். அதனால் கோபம் கொண்ட ஈசன் நான்முகனுக்கு உலகில் பூஜைகள் இல்லாமல் போகட்டுமென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை சிவபூஜையில் இடம்பெறக்கூடாது என்றும் சாபமிட்டார். இந்த புராண சம்பவம் நிகழ்ந்த திருத்தலம் திருவண்ணாமலை. இங்கு ஈசன் அண்ணாமலையாராகவும், அம்பிகை உண்ணா முலையம்மையாகவும் அருட்காட்சியளிக்கின்றனர். அருணகிரிநாதருக்கு முருகன், ‘சும்மா இரு சொல்லற’ என உபதேசித்த திருத்தலம். ஈசனின் சாபத்தால் காஞ்சியில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்ட காமாட்சி இங்கு தவம் புரிந்து ஈசனின் வாமபாகத்தில் இடம் பெற்ற பெருமை பெற்ற தலம். சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், யோகி ராம்சுரத்குமார் உட்பட அநேக மகான்கள் வாழ்ந்த திருத்தலம். எட்டு திக்குகளிலும் அஷ்ட லிங்கங்கள் அருளாட்சி புரியும் திருத்தலம். இத்தலத்தில்தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடியருளினார்.  

பல மகான்கள் நிரந்தரமாக வாசம் செய்யும் பொருட்டு, இங்கே மரங்களாகவே நிலைத்திருக்கிறார்கள் என திருவண்ணாமலை மகாத்மியம் கூறுகிறது. தேவாரத்தின் முதலாம் திருமுறையிலும் நான்காம் திருமுறையிலும் திருவண்ணாமலையைப் பற்றிய பதிகங்கள் நிறைய இருக்கின்றன 24 ஏக்கர் பரப்பில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் நான்கு திசைகளிலும் விண்ணை முட்டும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. அண்ணாமலை லிங்கம் அஷ்டபந்தனம் இல்லாமல் ஸ்வர்ண(தங்க)பந்தனம் செய்யப்பட்டுள்ள பெருமை பெற்றது.
த்யான ஸ்லோகங்கள்
திக்பத்ரே நாபி பத்மே த்ரிவதன விலஸத்
தம்ஷ்ட்ரிணீம் ரக்த வர்ணாம்
சக்திம் தம்போனி தண்ட அபயமத புஜைர்
தாரயுந்தீம் மஹோக்ராம்
டாமர்யாத்யை: பரீதாம் பசுஜனபயதாம்
மாம்ஸ தாத்வேகநிஷ்டாம்
கௌடான்னா ஸக்த சித்தாம்
ஸகல சுபகரீம் லாகினீம் பாவயாமி.
மணிபூரகே தசதளபத்மே
மாகேந்த்ரீம் மணிபூரகாம்புஜ
தளே ஸம்ஸ்தாபிணீம் வைஷ்ணவீம்
கல்யாணீம் டபவர்ணபங்க
நிலயாம் பீதாம்பராலங்குதாம்
வித்யுத்கோடி மயூக ஸஞ்சய
நிபாம் லோகாளிஸம் காளிகாம்
தேவீம் தாம் த்ரிதசார்ச்சிதாங்க்ரி
யுகளாம் வந்தே பராம் சித்கலாம்.
(யோகினி வைபவம் தொடரும்)
யோகினியர் படங்கள் உதவி:
பெ.ரஜினி