குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!?என் மருமகன் வெளிநாட்டில் வேலை பார்த்தார். கை விரல்களில் புண் மாதிரி வந்து சிகிச்சைக்காக இங்கு வந்துள்ளார். அவருக்கு வந்துள்ள புண் மறையுமா? மறுபடியும் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? என் மகள் மிகவும் மனக்குழப்பத்தில் இருக்கிறாள். இதற்கு தீர்வு என்ன?
- நாகரத்தினம், தேனி.

உங்கள் மருமகனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் உடல்நிலையைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீடு என்பது சுத்தமாக இருப்பதால் நீங்கள் பெரிதாக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கிறார். சத்ரு, ரோக, ருண ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டின் அதிபதி சனி ஆகிய லக்ன பாவகத்தில் செவ்வாயுடன் இணைவு பெற்றிருப்பது அவரது உடல்நிலையில் இதுபோன்ற பிரச்னையைத் தந்திருக்கிறது.

சனியும், செவ்வாயும் ஒரே சாரத்தில் அமர்ந்திருப்பதால் பிரச்னை சற்று பெரிதாகியிருக்கிறது. இவரது ஜாதகத்தை ஆராயும்போது வயிற்றுப் பகுதியில் உண்டான கோளாறு என்பது கையில் புண் போன்ற வடிவினில் வெளிப்பட்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனையில் எளிதாகக் கண்டுபிடித்து இதற்கான தீர்வினைக் காண இயலும். தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தியின் காலம் தொடங்கியிருப்பதால் இந்த நேரத்தில் மருத்துவ ரீதியான செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மருந்து மாத்திரைகளை ஒழுங்காக உட்கொண்டு வருவதன் மூலமும், உணவுப்பழக்கங்களில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் பத்தியத்தினையும் கடைபிடித்து வந்தாலே போதுமானது. இதுநாள் வரை ராகு தசை நடந்து வந்ததால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த உங்கள் மருமகன் இனிமேலும் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. 17.05.2021 முதல் குரு தசை துவங்குவதால் அந்த நேரம் முதல் உள்ளூரிலேயே நல்ல வேலையைச் செய்ய இயலும்.

ஜீவன ஸ்தானத்தில் லக்னாதிபதி புதன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதும், உடன் சூரியன் மற்றும் ராகு இணைந்திருப்பதும் நல்லதொரு உத்யோகத்தை உள்நாட்டிலேயே அமைத்துத் தரும். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளை எதற்கும் கவலைப்படாது இருக்கச் சொல்லுங்கள். கணவனின் உடல்நிலையைப் பேணிக்காப்பதில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

உங்கள் மகள் மற்றும் மருமகன் இருவரின் ஜாதகப்படியும் அவர்களுடைய பிள்ளைகள் நல்ல நிலைக்கு வருவார்கள். உங்கள் மகளிடம் செவ்வாய்கிழமை தோறும் ராகு கால வேளையில் அம்மனுக்கு விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். அவரது கணவரின் உடல்நிலை சீரடைவதோடு உயர்ந்த உத்யோகமும் உள்நாட்டிலேயே கிடைக்கும்.

?எனது பேத்தி அமெரிக்காவில் மருத்துவம் படிக்கிறாள். எனக்கும் எனது மனைவிக்கும் அவளது திருமணம் எப்பொழுது நடக்கும் என்று கவலை. சிலபேர் அவளுக்கு தோஷம் இருப்பதினால் தள்ளிப்போகும் என்கிறார்கள். உங்களது அபிப்ராயம் தேவை. ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எப்பொழுது திருமணம் நடக்கும்?
 - ராமன், சென்னை.

உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் பாவகம் சுத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஏழாம் பாவகத்திற்கு அதிபதி சந்திரன் மூன்றாம் வீட்டில் சனி மற்றும் கேதுவுடன் இணைந்திருப்பதால் களத்ர தோஷம் என்பது உண்டாகியிருக்கிறது. பூரட்டாதி நான்காம் பாதம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கிறார். தாமதமாகத்தான் திருமணம் நடக்கும் என்று சொல்வதை விட தாமதமாகத் திருமணத்தை நடத்துவதே நல்லது என்று சொல்ல வேண்டும். தாத்தா-பாட்டியின் ஆசைக்காக பேத்திக்கு அவசரப்பட்டு திருமண முயற்சியில் இறங்குவது நல்லதல்ல. 29வது வயதில் அவரது திருமணம் நடைபெறும். தற்போதைய சூழலில் கல்வியில் அவரது முழு கவனமும் இருப்பது நல்லது.

பெரியவர்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியம். களத்ர தோஷம் என்பது இருப்பதால் பரிகாரம் செய்தல் என்பது அவசியமாகிறது. ஆனால் தற்போது அதனைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்பொழுது தேவையோ அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் பேத்தியுடன் போனில் பேசி மகிழ்ந்து வாருங்கள். திருமணம் பற்றிய பேச்சு தற்போது வேண்டாம் என்பதையே அவருடைய ஜாதகம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

?எனது மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனுடைய எதிர்காலம் எப்படி உள்ளது? அவனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? எங்கள் குலத்தைச் சேர்ந்தவருடன் அவரது திருமணம் நடைபெறுமா?
 - பார்த்தசாரதி, தஞ்சாவூர்.

29 வயது ஆகும் நிலையில் மகனின் எதிர்காலம் குறித்த சந்தேகம் உங்கள் மனதில் எழுந்துள்ளது. உங்களுடைய மகனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் அவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீடு வலிமை பெற்றிருப்பதை அறிய முடிகிறது. உத்திரட்டாதி நக்ஷத்ரம், மீன ராசி. மிதுன லக்னத்தில் பிறந்திருக்கிறார். ஜீவன ஸ்தானம் ஆகிய 10ம் வீட்டில் லக்னாதிபதி புதன் நீசம் பெற்ற நிலையில் இருந்தாலும் உடன் சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கிறார்கள். அதோடு பத்தாம் வீட்டிற்கு அதிபதி குரு இரண்டாம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் நீசபங்க ராஜயோகம் என்பது கிடைத்துள்ளது.

தற்போது சுக்ர தசையில் சுக்ரபுக்தி நடப்பதால் இனி அவருடைய வாழ்வினில் ஏற்ற நிலை என்பது உண்டாகும். ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதால் நிரந்தர உத்யோகம் சாத்தியமாகும். சிறப்பான எதிர்காலம் என்பது நிச்சயம் உண்டு. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடாகிய களத்ர ஸ்தானத்திற்கு அதிபதி குரு, குடும்ப ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் உச்ச பலம் பெற்றிருப்பதால் உங்கள் குலத்தைச் சேர்ந்தவராகவும் நல்ல குணவதியுமாகவும் இருப்பார்.

தற்போது திருமணத்திற்கான யோகம் நடப்பதால் திருமண முயற்சியை துரிதப்படுத்துங்கள். இந்த வருட இறுதிக்குள்ளாக நல்லபடியாக திருமணத்தை நடத்துவதோடு அவருடைய எதிர்காலத்தையும் நல்லபடியாக அமைத்துக் கொடுக்க வேண்டிய காலத்திற்குள் நுழைந்திருக்கிறீர்கள் என்பதையே அவரது ஜாதகம் தெளிவாகக் காட்டுகிறது.

?என் பேத்தியின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். அவள் தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். படிப்பில் நன்கு ஆர்வத்துடன் இருக்கிறாள். அடிக்கடி முன்கோபம் வருகிறது. தற்போது மத்திய அரசுப் பணித் தேர்விற்கு தன்னை தயார் செய்து வருகிறாள். தேர்வில் வெற்றி கிடைக்குமா? பட்டப்படிப்பினை முடிப்பாளா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
 - விஷ்ணுசித்தன், வில்லிபுத்தூர்.

உங்கள் பேத்தியின் ஜாதகத்தைப் பார்த்ததில் மஹாலக்ஷ்மி அம்சத்தில் அவர் பிறந்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. லக்னாதிபதி சுக்கிரன் மட்டுமல்லாது தன ஸ்தானாதிபதி புதன், தைரிய ஸ்தானாதிபதி சந்திரன், களத்ர ஸ்தானாதிபதி செவ்வாய் என நான்கு கிரஹங்கள் தங்களது சொந்த வீட்டில் அதாவது ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கிறார்கள். நல்ல வாக்கு, திடமான சிந்தனை, இன்முகம் காட்டுதல் என்று தனது சொந்த திறமையால் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுவார்.

அவருடைய படிப்பிற்கும் அவருடைய ஒவ்வொரு முயற்சிக்கும் துணை நிற்பது பெரியவர்களின் கடமை ஆகும். பூசம் நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கிறார். அவரது ஜாதகத்தில் உத்யோக ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டிற்கு அதிபதி சனி ஜென்ம லக்னத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் நல்லதொரு உத்யோகம் என்பது நிச்சயமாக கிடைத்துவிடும்.

12ம் வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகின்ற மத்திய அரசுப் பணிக்கான தேர்வுகளுக்கு அவர் தயாராகி வருவதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போதைய சூழலில் அவர் அதனை மட்டும் நம்பியிராது தனது கல்வியில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. பட்டப்படிப்பு மாத்திரமல்லாது பட்ட மேற்படிப்பும் படிப்பதற்கான வாய்ப்பு அவரது ஜாதகத்தில் பிரகாசமாக உள்ளது.

மொழியியல் துறையில் பிரமாதமாக சாதிப்பார். அவருடைய ஜாதகத்தின் பலமும், பெரியவர்களின் ஆசியும் அவரது எதிர்காலத்தை சிறப்பான வடிவில் அமைத்துத் தரும் என்பதே அவரது ஜாதகத்தின் பலனாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். தோஷம் எதுவும் இல்லாததால் பரிகாரம் ஏதும் தேவையில்லை. உங்கள் பேத்தியிடமே தெய்வாம்சம் நிறைந்திருக்கிறது. அந்த வயதிற்கு உரிய கோபம் மட்டுமே அவரிடம் உள்ளது. மற்றபடி மிகவும் நல்ல குணத்தினை உடையவர் அவர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?என் மகனுக்குத் திருமணமாகி ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன் குழந்தையை என் மகனிடமே விட்டுவிட்டு அவனது மனைவி தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். காவல்நிலையத்தில் பொய் புகாரும் கொடுத்தார். தற்போது டைவர்ஸ்  கேஸ் கோர்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் வாழத்தயார் என்று வழக்கை இழுத்தடிக்கிறார். என் மகனுக்கு விவாகரத்து கிடைக்குமா?
 - மகாலிங்கம், செஞ்சி.

உங்கள் மகன் மற்றும் மருமகள் இருவரின் ஜாதகங்களையும் அனுப்பியுள்ளீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்களை சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் பெரியவர்கள் ஆகிய நீங்கள் இறங்குவதே நல்லது. பிரச்னை துவங்கிய காலத்திய கிரஹ நிலையை ஆய்வு செய்தால் தவறு என்பது இருதரப்பிலும் உள்ளதை அறிய முடிகிறது. கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் சுத்தமாக இருக்கிறது.

ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய சுக்கிரன் 11ல் அமர்ந்துள்ளார். ரோகிணி நக்ஷத்ரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள அந்தப் பெண்ணின் ஜாதகத்தில் கணவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் உச்ச பலத்துடன் ஐந்தில் அமர்ந்துள்ளார். இதுவும் நல்ல நிலையே. அழகான பெண் குழந்தை வேறு உள்ளது. அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை கருதியாவது உங்கள் மகனிடம் நடந்தவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் இணைந்து வாழச் சொல்லி அறிவுறுத்துங்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான நீங்கள் வாழ்வினில் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்திருப்பீர்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது உங்களைப் போன்ற பெரியோர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நாற்பதாவது வயதிற்குள் அடியெடுத்து வைத்திருக்கும் உங்கள் மகனிடம் பிடிவாதத்தை சற்று தளர்த்திக் கொண்டு தனிமையில் தனது மனைவியிடம் பிரச்னையை பேசித்தீர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். பெண்பாவம் பொல்லாதது என்பதோடு வம்சத்தினையும் வளரவிடாது என்பது நினைவில் இருக்கட்டும்.

இருவர் ஜாதகங்களிலும் தற்போது நடந்து வரும் நேரம் நன்றாக உள்ளதால் நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு மனைவியோடு இணைந்து ஒன்றாகக் குடும்பம் நடத்த உங்கள் மகனுக்கு ஆலோசனை கூறுங்கள். தான் செய்த தவறை அந்தப் பெண் உணர்ந்திருப்பார். அதுபோல உங்கள் தரப்பிலும் உள்ள தவறை சரிசெய்துகொண்டு தம்பதியரை சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். ஆண்டவனின் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004