சிறப்பான வாழ்வருளும் சின்னசடையம்மன்ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆலயம் கொண்டிருந்தாள் பெரியசடையம்மன். அப்போது அந்த மருத்துவமனையின் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்த ஆங்கிலேயர் மருத்துவமனையில் எதற்கு அம்மன் ஆலயம் என்று கூறி ஆலயத்தை அகற்றினார்.

அன்றே அவரின் கண்பார்வை பறிபோனது. வெளிநாடுகள் பலவற்றிலும் மருத்துவம் பார்த்தும் குணமாகாத அந்த ஆங்கிலேயர் பெரியசடையம்மனிடமே சரணடைந்து அதே இடத்தில் அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார்.

தேவியின் பஞ்சசக்திகள் சின்னசடையம்மன், மஞ்சசடையம்மன், சக்தி சடையம்மன், அருள்மகாசடையம்மன், திருச்சடையம்மன் என எழும்பூரைச் சுற்றிலும் ஆலயம் கொண்டருள ஆரம்பித்தனர். அதில் முதன்மையாக சின்னசடையம்மன் ஆலயம் பக்தர்களால்  போற்றப்படுகிறது.

மிகவும் தொன்மையான இத்தலத்தின் முகப்பின் இருபுறங்களிலும் தேவியின் வாகனமான சிங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிரதான கருவறையில் சின்னசடையம்மனுடன் ரேணுகாபரமேஸ்வரியும் திருவருள்புரிகிறாள். சின்னசடையம்மனின் திருவடிகளின் கீழ் யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து தலங்களிலும் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அருளும் ரேணுகாபரமேஸ்வரி இத்தலத்தில் இரு தலை நாகம் குடைபிடிக்க திருவருள் புரிவதால் இத்தலம் ராகு/கேது பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. காளஹஸ்தி சென்று காலசர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய முடியாத அன்பர்கள் இத்தலத்திற்கு வந்து காலசர்ப்பதோஷ பரிகாரம் செய்து வாழ்வில் வளம் பெறுகின்றனர்.

சின்னசடையம்மன் டமருகம், சூலம், வாள், கபாலம் ஏந்தி அழகே உருவாய் அருளே வடிவாய் திருவருள் புரிகிறாள். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது எனும் பழமொழிக்கேற்ப வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் கற்பகவிருட்சம் போல் அருள்பவள் இத்தாய் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

- ந.பரணிகுமார்