திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா...



கடைச்சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படையில், முருகனுக்கு உகந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு தலங்களுள் முதன்மைத்தானம் வகிப்பது திருப்பரங்குன்றம்.
சிவலிங்க வடிவில் தோற்றமளிக்கும் ஒரு பெரிய மலையின் அடி வாரத்தில் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. சுப்ரமண்யர் தேவசேனா திருக்கோயில். மலையின் பெயராலேயே ஊரின் பெயரும் அமைந்துள்ள திருத்தலங்களுள் இதுவும் ஒன்று. மதுரையின் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பொன்னியல் கொன்றை பொறிகிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதியாகிய ஈசன் தொன்மறை
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே.
 - திருஞானசம்பந்தர்.
 
சிவன்மலை எனும் பொருளில் பரன்குன்றம் என்று அழைக்கப்பட்ட போதிலும் இன்று முருகனது ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவே இக்கோயில் மக்களிடையே அறியப்படுகிறது. எந்த மந்திரப் பொருளையும் குருமூலமாகத் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உலக நியதிக்குப் புறம்பாக, தாய்க்குப் பிரணவப் பொருளை தந்தையார் உபதேசிக்கும் பொழுது முருகன் ஒட்டுக் கேட்டதற்குப் பிராயச்சித்தமாக திருப்பரங்குன்றம் வந்து தவம் புரிந்தான். இறுதியின் அவன் தவத்தை மெச்சி சிவபெருமானும் பார்வதியம்மையும் காட்சியளித்தனர். அப்பன் பரங்கிரி நாதர் என்றும் அம்மை ஆவுடைநாயகி என்றும் பெயர் பெற்றனர். ஆவுடைநாயகி பற்றிய குறிப்பு ஊதிமலைத் திருப்புகழில் உள்ளது.

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
சிவ க்ஷேத்ர சிவ நாமக் கலிவெண்பாவில்
அன்பர் திருப்பரங்குன்றாவுடைய நாயகி சேர்
நன்பாற் பரங்கிரி நன்னாயகா
 - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரபத்மனை வதம் செய்து முருகப் பெருமான் தேவர்களை விண்ணுலகில் குடியேற்றியதற்கு நன்றி கூறும் விதமாக இந்திரன், தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் செய்து கொடுத்தான். இந்தத் திருமணம் நடைபெற்றது திருப்பரங்குன்றத்திலேயே என்று கந்தபுராணம் கூறுகிறது. கோயில் கருவறையில் தெய்வானையைத் தழுவிய முருகன் காட்சி அளிக்கிறான்.

சந்நதித் தெருவில் மயில் மண்டபம் ஒன்று திருக்கோயிலைப் பார்த்த வண்ணம் மயில் உருவத்துடன் அமைந்துள்ளது. கோயில் முகப்பில் அழகிய கண்கவர் சிற்பங்களைக் கொண்ட தூண்களை உடையதும் ராணிமங்கம்மாள் காலத்ததுமான ஆஸ்தான மண்டபம் உள்ளது. தூணில் கருப்பண்ணசாமி கோயில், நர்த்தன விநாயகர், பத்ரகாளி, துர்கை, வீரபாகு ஆகியோரது சிற்பங்கள் ஆகியவற்றைக் காணலாம். முருகன் தெய்வானை திருமணக் காட்சி மிகப் பெரிய ஒரு தூணில் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக 150 அடி உயரமும், ஏழு நிலைகள் கொண்டதுமான ராஜகோபுர வாயிலைக் கடக்கிறோம். 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட இக்கோபுரத்தின் கீழ் மூன்று விநாயகர் சிலைகள் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்ததும் வருவது திருவாட்சி மண்டபம். முருகப் பெருமானின் திருக்கல்யாண விழா பங்குனி உத்திரத்தின் போது இங்கு தான் நடைபெறும்.

அடுத்ததாக உள்ளது சும்பத்தடி மண்டபம். சில ஆண்டுகள் முன்புவரை இங்குள்ள கொடி மரம், மயில், நந்தி, மூன்றையும் தரிசித்துப் படிகள் ஏறி மகாமண்டபத்தை அடையலாம். தற்போது கொடிமரத்திலிருந்து வலப்புறம் திரும்பி கம்பிகள் போடப்பட்ட பாதை வழியாகச் சுற்றி வளைத்துச் சென்றுதான் கருவறையை அடைய முடிகிறது.

(விழாக்காலங்களில் மட்டும்தான் இந்த ஏற்பாடா என்பது தெரியவில்லை) கருவறையைக் கண்டு நம்மால் வியப்படையாமல் இருக்க முடியாது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குடவரைக்கோயில் இது. மலையை ஒட்டி புடைப்புச் சிற்பமாக முருகன் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்பக்கம் நாரதரும், இடப்பக்கம் தெய்வானையும், முருகனின் மேற்பாதியில் சூரியன், சந்திரன், கலை மகள், நான்முகன், இந்திரன் ஆகியோரும் உள்ளனர். கீழே யானை, மயில், ஆடு, சேவல் இவற்றுடன் அண்டராபரணர், உக்கிர மூர்த்தி (இவர்களைப்பற்றிப் பின்னால் பார்ப்போம்) ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர். முருகப் பெருமான் காலை மடித்த வண்ணம் அமர்ந்திருக்கிறார். புடைப்புச் சிற்பமாதலால் வேலுக்கு மட்டும் அபிஷேகம் உண்டு. முருகப் பெருமானுக்குப் புனுகும் மற்ற மூர்த்திகளுக்கு தைலக் காப்பும் சாத்தப்படுகிறது.

முருகனின் திருவுருவமுள்ள இடத்தை நோக்கிய வண்ணம் சற்று முன்னுக்கு நகர்ந்தால் மட்டுமே, குடவரை சந்நதியில் மேற்கு நோக்கி வீற்றிருக்கும் பவளக்கனிவாய்ப் பெருமாளையும் உடன் உள்ள தேவி, பூதேவி மற்றும் மதங்க மாமுனிவரையும் கண்டு பிரமிக்க முடியும்! அதேபோன்று நேர் எதிர்புறம் திரும்பினால் லிங்க வடிவிலுள்ள சத்யகிரீஸ்வரரைத் தரிசிக்கலாம். மிகவும் கவனித்துப் பார்த்தால் ஆவுடைநாயகியைக் காணலாம்.

இவர்களைத் தவிர மகிஷாசுரமர்த்தினி, கற்பக விநாயகர் ஆகியோரையும் சேர்த்து ஐந்து கருவறைகள் கட்டுவது எப்படி அந்நாளில் சாத்தியமாயிற்று என்றெண்ணி வியக்காமலிருக்க முடியாது. சிவன் சந்நதிக்குள் சோமாஸ்கந்தர் உருவம் உள்ளதாகக் கேள்விப்படுகிறோம்! அன்னபூரணி, சண்முகர், சனீஸ்வரர், வல்லப கணபதி ஆகியோரையும் தனிச்சந்நதியிலுள்ள செந்திலாண்டவர் தேவியருடன் பஞ்ச லிங்க மூர்த்திகள் ஜுரதேவர் அனைவரையும் தரிசித்துக் கீழே வருகிறோம். மகாமண்டபத்தின் கீழ்ப்பாகம் உள்ள கோயிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகனையும், நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோரையும் வணங்கலாம். திருப்பரங்குன்றத்தில் அருணகிரிநாதர் 14 பாடல்கள் பாடியுள்ளார். ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
 உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே

‘‘முருகா! உன்னைத் தினமும் தொழுகின்றேனில்லை; மலர்கள் கொண்டு அர்ச்சித்து உன் திருவடிகளைப் பணிகின்றேனில்லை; ஒப்பற்ற தவம் புரிகின்றேனில்லை; உன் அருள் மாறாத தூய உள்ளத்துடன் பக்தி புரியும் அன்பர்கள் எங்குள்ளார்கள் என்று அறிந்தேனில்லை;
நீ வாசம் புரியும் மலைகளை அன்புடன் வலம் வருகின்றேனில்லை; மகிழ்ச்சியுடன் உன் புகழை ஓத விரும்புகின்றேனில்லை.’’ என்கிறார். (16,000 பாடல்கள் பாடியிருக்கும் அருணகிரிநாதர் இவ்வாறு கூறியிருப்பது நம் போன்றவர்களுக்காகவே என்பதை நுண்ணறிவால் நாம் உணர வேண்டும்).

இவ்வாறு நற்காரியங்களில் நான் ஈடுபடாததினால் மலை போன்ற சரீரத்துடன், கோபத்தினால் கனைத்தவண்ணம் வரும் எருமைமீது பயணிக்கின்றவனும், கருத்த நிறமும் அதிககோபமும் உடையவனும் ஆகிய யமனுடைய தூதர்கள் என்னை நெருங்கி வந்து, உயிரைப் பறிக்கின்ற பாசக் கயிற்றையும், கதாயுதத்தையும் கொண்டு என்னுடன் சண்டை போடும் அத்தருணத்தில், என் செயலொடுங்கி, கருத்து அழிந்து நான் செய்வதறியாது திகைப்பேன். அக்கணமே எனது யம பயம் நீங்குமாறு மயில் முதுகினில் ஏறிவந்து அருள்வாயாக!கறுக்கும் அஞ்சன எனத் துவங்கும் பாடலில் யமன் சிவபிரானிடம் உதைபட்ட புராணக் குறிப்பு உள்ளது.

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
வுரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரவிரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர   அடுதீரா

திறற்க ருங்குழ லுமையவ ளருளுறு
புழைக்கை தன்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு மிளையோனே  
சினத்தொ டுஞ்சம னுதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.

நிறைகடல் மொகு மொகு மொகன ஒலிக்கவும், வலிமையுள்ள ஆதிசேஷன் முடி நெறு நெறு எனவும், அண்ட முகடு கிடு கிடு எனவும் மலையைப் போன்றவனும், திண்ணிய கழல்களைக் கொண்டவரும், அசுரர்களுடைய மார்பும், தலைகளின் கொடிய கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச் சொரியுமாறு வெட்டி வீழ்த்தியவருமான தீரனே!

வல்லபமுடையவளும், கருங்குழல் கொண்ட வளும் ஆகிய உமை பெற்றருளியவரும் தொளை உடைய துதிக்கையையும், குளிர்ந்த மதமுடைய யானை முகத்தையும் மிகக் கொண்டு விளங்கும் சிவக் கொழுந்து போன்ற  கணபதிக்கு இளையவனே! கோபத்துடன் யமனை உதைத்து அடியார் பெருமையை நிலைபெற வைத்த முருகப்பெருமானே என்று பாடுகின்றார்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி