திருக்குறளும் திருவாய்மொழியும்கல்வியிலே சிறந்த காஞ்சி மாநகரம்! சான்றோர்கள் வாழும் அற்புத பட்டினம்! வரதராஜனாக நமது மால வன் கோவில் கொண்டு விட்ட திவ்ய தேசம்! அந்த அற்புத மாநகரத்திலே தமிழு லகம் செய்த தவப்பயனாக ஒரு மகவு உதித்தது. காஞ்சி மாநகரத்தில் பல திவ்ய தேசங்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்று தான்.
அந்த திவ்ய தேசங்களில் ஒன்றான உலகளந்த பெருமாள் கோயிலின் பட்டர் செய்த புண்ணியமே உருவெடுத்தது போல ஒரு குழந்தை அவருக்கு பிறந்தது. மூன்று வேளையும் மாலவனின் திருமேனியை தீண்டி, அதை அற்புதமாக அலங்கரித்து, உபசரித்து, பூஜித்த புண்ணியம் எங்கே போகும்? ( முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் என்ற சுந்தர மூர்த்தி சுவாமிகளின் வாக்கு நினைவுக்கு வருகிறது).

அற்புதமாக பிறந்த அந்த குழந்தைக்கு “பரிமேலழகர்” என்று அழகாக நாமகரணம் செய்தார் அந்த பட்டர். குழந்தை  மட மடவென்று வளர்ந்தது. தமிழ் மொழியையும் வடமொழியையும் நன்கு ஆராய்ந்து, அறிந்து, தெளிந்தது அந்தக் குழந்தை. பிறப்பால் ஒரு வைஷ்ணவராக இருந்த போதிலும் மற்ற சம்பிரதாயங்கள் மற்றும் மரபின் மீது மாறாத அன்பு வைத்திருந்தது. இதற்கு அவரது திருமுருகாற்றுப்படை உரையே ஒரு ஆதாரம்.

உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறளை நன்கு ஓதி உணர்ந்தது அந்தக் குழந்தை! தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் போன்ற பெரும் புலவர்கள் திருக்குறளுக்கு எழுதிய உரைகள் அனைத்தையும் வாசித்து உணர்ந்து தெளிந்தார் பரிமேலழகர்.

அனைத்து உரைகளின் நிறை குறைகளையும் ஆராய்ந்து அறிந்து, தனது முன்னோர்கள் காட்டிய வழியில் மாலவன் அருளோடு திருக்குறளின் மெய் பொருளை உலகிற்கு எடுத்துக்காட்ட, தான் அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தார். தனது உரையின் பல இடங்களில் திருக்குறள் வழியாக திருமாலை வணங்கி, அனுபவித்திருக்கிறார். அந்த தேன் துளிகளை நாமும் அனுபவிப்போமா?1103 ஆவது குறளை அன்னவர் பின்வருமாறு விளக்குகிறார்.

“தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.”அதாவது தலைவன், தலைவியை காதலோடு ஆரத் தழுவுகிறான். அப்படித் தழுவியவன், அவளது அணைப்பு தந்த சுகத்தில் மயங்கி, இந்த சுகம் அந்த தாமரைக் கண்ணனின் உலகில் கிடைக்குமோ? என்று (மடமையால்) எண்ணினான்.

பொருள்: இதில் தாமரைக் கண்ணன் என்ற சொல்லுக்கு, பரிமேலழகருக்கு முன்னே உரை எழுதிய பலர், அந்த சொல் இந்திரனை குறிக்கும் என்று சற்றும் பொருந்தாத ஒரு பொருளை கூறி இருந்தார்கள். இதை படித்த பரம வைஷ்ணவரான அழகருக்கு மனம் நொந்து போய் இருக்க வேண்டும். இருக்காதா பின்னே? “கப்யாசம் புண்டரீகம்” என்று வேதங்களே புகழும் தாமரைக் கண்ணன் அந்த மாயவன் மட்டும் தானே? ஹிரண்யாக்ஷன் என்ற அரக்கன் பூமியை கடலுக்கு நடுவே ஒளித்து வைத்து விட்டான். பூமாதேவி தன்னை காத்தருள வேண்டும் என்று அந்த கோவிந்தனை சரண் புகுந்தாள். அவளைக் காக்க அந்த மாயவன் ஒரு பன்றியின் வடிவம் தாங்கி வருகிறான்.

இப்படி அவன் ஒரு பன்றியாக உருமாறி வந்த போதும் அவனது கண்கள் தாமரையைப் போலவே இருந்தனவாம். இதற்கு “நமஸ்தே கமலாக்ஷ” என்று தொடங்கும் பூமாதேவி செய்த துதியே சாட்சி. அரக்கி சூர்ப்பனகை இராமனைப் பற்றி தன் அண்ணன் இராவணனிடம் சொல்லும் போதும் அந்த தாமரைக் கண்களையே முதலில் சொல்கிறாள். “ பத்ம பத்ர நிபேக்ஷனம்.” என்று. தசரதனும் “ராமோ ராஜீவ லோசன:” என்று ராமனை சொல்லும் போது அவனது தாமரைக் கண்களையும் சேர்த்தே சொல்கிறான்.

முருக பக்தரான அருணகிரிநாதர் கூட திருப்புகழில் “அரவனையில் இனிது துயிலும் விழிகள் நளினன்” என்று திருமாலை தாமரைக் கண்ணன் என்றே அழைக்கிறார். இப்படி தாமரைக் கண்ணன் என்றாலே மாயவன் தான் என்ற அளவுக்கு அவனது கண்களின் வனப்பு இருக்க, இந்திரனை அந்த கண்களின் அழகோடு ஒப்பிடலாமா? என்று அழகரின் மனம் நொந்தது. ஆகவே, “துறந்த யோகிகள் எய்தும் செங்கண் மால் உலகம்” என்று “தாமரைக் கண்ணான் உலகு” என்ற சொல்லுக்கு உரை எழுதினார். அதாவது தாமரைக் கண்ணான் உலகம் என்று வள்ளுவர் சொன்னது செங்கண் மாலின் வைகுண்ட பட்டினத்தையே என்று ஆணித்தரமாக உரைக்கிறார். இப்படி அற்புதமாக ஒரு உரையை எழுதி  தான் ஒரு வைஷ்ணவர் என்பதை நமக்கு காட்டினார். (ராமானுஜர் வாழ்விலும் இதே தாமரை கண்களைபற்றிய சர்ச்சைதானே திருப்புமுனையாக அமைந்தது?)

வைஷ்ணவ சம்பிரதாயத்தை பொறுத்த வரையில் திருமாலை சரணாகதி செய்யும் அனைத்து ஜீவனுக்கும் துணையாக இருப்பவர் நம்மாழ்வார் தான். அதனால் தான் அவரை “பிரபன்ன ஜன கூடஸ்தர்” என்று அழைப்பார்கள். அதாவது திருமால் அடியார்களின் உற்ற தோழன் என்று பொருள். அப்படி பார்க்கும் போது பரிமேலழகருக்கும்  துணை நம்மாழ்வார் தானே! அவரது திருவாய்மொழி காட்டும் அற்புத வழியில் தானே மாலவன் அடியார்களான நாம் செல்கிறோம்.

அப்படியிருக்க பரிமேலழகர் என்ற திருமால் அடியாருக்கு நம்மாழ்வார் மீது பற்றில்லாமல் போகுமா?

ராம காதை எழுதிய கம்பன் அதை அரங்கேற்ற திருவரங்கம் வருகிறார். வந்தவர் அரங்கனிடம் அதற்கு அனுமதி வாங்கச் சென்றார். அரங்கன் அவரது கோரிக்கையை கேட்டான். பிறகு மெல்ல பேச ஆரம்பித்தான்.  “கம்பா! நீ எழுதியது ராம காதையே ஆனாலும் அதில் திருவாய்மொழியின் மணம் இல்லை! மேலும் நீ நமது சடகோபனை (நம்மாழ்வாரை) பாடவும் இல்லை.

அப்படி இருக்க நான் எப்படி உன் நூலை ஏற்பேன்.” என்று மெல்ல கம்பரை பார்த்து கேட்டானாம். அப்போது தான் கம்பருக்கு, ஆழ்வாரை பாடாதது, நினைவுக்கே வந்தது. உடன் நம்மாழ்வார் மீது சடகோபர் அந்தாதி பாடினார். அவரது சடகோபர் அந்தாதியின் அமுத சுவையில் மயங்கிய அரங்கன், அவரது இராமாயணத்தை அரங்கேற்ற உத்தரவு தந்தான்.

இப்படி திருமால் அடியார்களில் முதன்மை பெற்று விளங்கும் நம்மாழ்வாரை நமது பரிமேலழகர் விடுவாரா?. திருக்குறளுக்கு அவர் விளக்கம் கூறும் பல இடங்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியையே மேற்கோள் காட்டுகிறார்.

ஒரு மன்னவனின் மாட்சியையும், வல்லமையையும் விளக்கும் அதிகாரத்துக்கு, “இறைமாட்சி” என்று பெயர் வைத்திருந்தார் வள்ளுவர்.  இறைவன் என்ற சொல் ஆதியும் அந்தமும் இல்லாமல் மூல பரம் பொருளாக இருக்கும் அந்த பகவானையே குறிக்கும். அப்படி இருக்கும் போது கேவலம், இந்த உலகில் பிறந்து இறக்கும் ஒரு மனிதனான அரசனை குறிக்க அந்த உயர்ந்த சொல்லை பயன்படுத்தலாமா? என்று பரிமேலழகரை பலர் கேட்டனர். அவர் புன்னகைத்த படியே திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தை காட்டி பின் வருமாறு உரை பகன்றார்.

“ திருவாய்மொழியின் 448  ஆம் பாசுரத்தில் நம்மாழ்வார், “திருவுடை மன்னரை காணின் திருமாலை கண்டேனே” என்று சொல்லுகிறார். பல விதமான செல்வங்களைப் பெற்று அரசனாக வாழ்பவனை காணும் போது எல்லாம், எல்லா செல்வங்களுக்கும் அதி தேவதையாக இருக்கும் மகாலட்சுமியை மணந்த மாலவனையே அங்கு அவர் காண்பதாக சொல்லுகிறார்.

மேலும், நாட்டை காக்கும் அரசனை ஈரேழு புவியை காக்கும் இறைவனோடு ஒப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது” என்று கேட்டார் அழகர்.  ( “திருவுடை மன்னரை காணின் திருமாலை கண்டேனே'' என்று பெரியாரும் பணித்தார் என்பது அன்னவரின் உரை.) அருணகிரிநாதர் கூட,“ இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை புகல வரு மாயன்” என்று அவனை அரசனாவதற்கு முன்பே, கோசலை “அரசன்” என்று அழைத்ததாக சொல்கிறார்.

மேலும் பல இடங்களில் அவர் திருக்குறளை விளக்க திருவாய்மொழியை எடுத்தாள்கிறார் பரிமேலழகர்.
உதாரணமாக 349 ஆவது குறளை, பார்ப்போம்.

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.”

அதாவது, இருவகை பற்றுகளையும்  துறந்தாலோழிய, பிறப்பை ஒழிக்க முடியாது. பற்றை விடா விட்டால், அந்த பற்றினால் வரும், இன்ப துன்பங்களையும் விட முடியாது. அதை அனுபவிக்க,  மாறிமாறி மீண்டும் மீண்டும் பிறந்தே ஆக வேண்டும் என்று பொருள். இந்த திருக்குறளை விளக்கும் போது பரிமேலழகர் முதல் பத்து, இரண்டாம் திருவாய்மொழி ஐந்தாம் பாசுரத்தை மேற்கோள் காட்டுகிறார். அந்த
திருவாய்மொழியையும் காண்போமா?

“ அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே”
அதாவது,உலகப் பொருட்களின் மீது

பற்றின்றி வாழ்வதே ஒரு வகை மோக்ஷம் தான். ஆனால் உண்மையான இறையடியார்கள் அந்த பற்றற்ற நிலையையும் விரும்ப மாட்டார்கள்.
“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்” என்று ஆண்டாள் சொன்னது போல, ஏழேழ் பிறவிக்கும் மாலவனுக்கே தொண்டு செய்ய வேண்டும் என்றே விரும்புவார்கள். அதுவே உண்மையான முக்தி என்கிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் இந்த பாசுரத்தை மேற்கோள் காட்டி, வள்ளுவர் கூறும் முக்தி நிலையை வர்ணிக்கிறார் பரிமேலழகர். எத்தனை அழகான விளக்கம்!
திருவாய்மொழி என்னும் வைரத்தை திருக்குறள் என்னும் தங்க ஆரத்தில் வெகு அற்புதமாக பதித்து விட்டார். தனது ஆச்சார்ய பக்தியை வெகு நேர்த்தியாக காட்டியும் விட்டார். இது போல பல மெய் சிலிர்க்கும் ஒப்புவமைகள் அவரது உரை எங்கும் இருக்கிறது. சுருங்கச் சொன்னால் அவரது திருக்குறள் உரையே ஒரு விருந்து தான்.

பரிமேலழகர் தனது திருக்குறளின் உரை மூலம் உலகிற்கு மறைமுகமாக ஒரு செய்தி சொல்லவருவதாக தோன்றுகிறது. அதாவது ஒரு மனிதன் எப்படி நீதி  நெறியோடு வாழ வேண்டும் என்பதை காட்டுவது திருக்குறள். அதே மனிதன் எப்படி இறவா மோட்ச இன்பம் அடைவது என்று காட்டுவது திருவாய்மொழி.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் அடைய இது இரண்டும் ஒரு மனிதனுக்கு அவசியம். ஆகவே, தமிழர்களான நமக்கு இவை இரண்டும்  இரு கண்களுக்கு சமமானவை. இதை உணர்த்தவே இரண்டையும் இணைத்து அவர் உரை செய்திருக்க வேண்டும்! ஆகவே, தமிழர்களான  நாம் இதை உணர்ந்து, வைகாசி விசாகத்தன்று அதாவது நம்மாழ்வாரின் அவதார நந்நாளன்று அவரை போற்றி நற்கதி பெறுவோம்.