இருக்கன்குடி மாரியம்மன்



*சுமார் 450 வருடங்களுக்கு முன் சிவயோக ஞானசித்தர் எனும் முனிவர் தவம் செய்து யோக சித்தியடைந்த தலம் இது. தான் அவ்வாறு சித்தியாகும் இடத்தில் மாரியம்மன் கோயில் கொண்டு அருளவேண்டும் என்ற அவரது வேண்டுகோளின்படியே இங்கே அன்னை அருள்கிறாள்.

*வைப்பாறு, அர்ஜுனா ஆறு  என்ற இரு நதிகள் இங்கே கூடுவதால், இத்தலம் இருக்கங்(ன்)குடி என்று போற்றப்படுகிறது. இந்த ஆறுகள் கங்கைக்கு ஒப்பானவை என்பார்கள்.

*பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் தன் சகோதர்களுக்காக உருவாக்கிய நதிதான் அர்ஜுனா நதி என வழங்கப்படுகிறது.

*சம்புகன் எனும் வேடனைக் கொன்ற பாவம் தீர ராமபிரான் இத்தலத்தில் தவம் செய்த போது தண்ணீர் வேண்டி ராமர் அகத்திய முனிவர் புதைத்திருந்த தண்ணீர்க்குடத்தை உடைத்து தோற்றுவித்த ஆறே வைப்பாறு. (வைப்பு என்றால் புதையல்) இச்சம்பவ வர்ணனையை ராமாயணம் உத்தர காண்டத்தில் காணலாம்.

*இத்தல தீர்த்தங்களாகப் போற்றப்படும் இந்த ஆறுகளில் புனித நீராடினால் ராமேஸ்வரம், காசி போன்ற தலங்களில் நீராடிய புண்ணியம் கிட்டும் என நம்பப்படுகின்றது.

*உற்சவமாரியம்மன் பேரெழிலுடனும் பேராற்றலுடனும் திகழ்கிறாள். உற்சவங்களின்போது அலங்காரம் கொண்டு அன்னை நகர்வலம் வரும்போது அந்த அன்னையைப் பார்த்த அந்தக் கணமே தம் குறைகள் தீர்ந்ததாக பல பக்தர்கள் சொல்கிறார்கள்.

*ஆறுகள் புடைசூழ உள்ள ஆற்றுத்திட்டில் அழகிய விமானத்துடன் கூடிய கருவறையில் அருள்கிறாள் அம்பிகை.

*திருத்தண்கால்புராணம் எனும் நூலில் இத்தல வரலாறு, மகிமை மற்றும் மாரியம்மனின் ஆற்றல்கள் எல்லாம் விவரிக்கப்பட்டுள்ளன.

*ஆலய மகாமண்டபத்தின் முன் கொடிமரத்து மண்டபம் அமைந்துள்ளது. அதில் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. இங்கே வழக்கமான அன்னையின் வாகனம் சிங்கத்திற்குப் பதிலாக நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

*இத்தலத்தில் சேவல் கூவுவதில்லை. சேவல் கூவும் காலைப்பொழுது நேரத்துக்கும் முன்னரே மக்கள் எழுந்து அம்மன் வழிபாட்டுக்காக கோயிலுக்குப் போகும் வழக்கம் இருந்ததால் சேவலே கூவ வெட்கப்பட்டதாம்.

*பார்வைக் குறைபாடுள்ளவர்கள் இங்குள்ள நயன மண்டபத்தில் இருபது நாட்கள் தங்கி தினமும் ஆறு முறை அன்னையை அபிஷேகம் செய்த நீரால் தம் கண்களைக் கழுவி வந்தால் கண்பார்வைக் குறை நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது.

*கருவறையில் வலதுகாலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அழகிய தோற்றத்தில் இருக்கன்குடி மாரியம்மன் அருள்கிறாள்.

*இந்த அன்னையின் பரிவார தேவதைகளாக பேச்சியம்மன், முப்பிடாரி அம்மன், வீரபத்திரர், பைரவர், காத்தவராயர், கருப்பசாமி ஆகியோரும் அருள்கின்றனர்.

*அரசமரத்தடியில் தல விநாயகர் தரிசனம் தர, அவரை அடுத்து வாழவந்தம்மன், இராக்காச்சி அம்மன் என்ற தேவியின் தோழியர் அருட்பாலிக்கின்றனர்.

*அன்னைக்கு தினமும் ஆறுகால வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

*ஒவ்வொரு வருட ஆடி மாதமும் ஆடிப் பெருந்திருவிழா மிக விமரிசையாக கொடியேற்றதுடன் இத்தலத்தில் நடக்கிறது.

*ஆடி கடைசி வெள்ளிக்கிழமையன்று அன்னையின் உற்சவத் திருமேனி ரிஷபவாகனத்தில் ஆரோகணித்து அர்ஜுனா நதியில் தீர்த்தவாரி காணும்.  

*பங்குனி உத்திரத்திருவிழா இருபத்தியோரு நாட்கள் விமரிசையாக நடக்கிறது.

*விழாக் காலங்களில் தலைமுடி காணிக்கை செலுத்துதல், அங்கபிரதட்சிணம் செய்தல், அக்னி சட்டி ஏந்துதல் போன்றவற்றோடு, ஆயிரங்கண்பானை எடுத்து  நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றுவது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.

*மனமுருகி வேண்டுபவர்க்கு இந்த அன்னை மாங்கல்ய பாக்யம் அருள்கிறாள். தீராத நோய்கள் இறைவியின் பெருங்கருணையால் தீர்கின்றன. மக்கட்செல்வம் இல்லாதோருக்கு அச்செல்வம் கிட்டுகிறது.

- ந. பரணிகுமார்