படவேடு ரேணுகாதேவி1. தன் கணவர் ஜமதக்னி முனிவரின் கட்டளைப்படி தன் மகன் பரசுராமரால் தன் தலை வெட்டப்பட, அதே நிலையில் ரேணுகாதேவி இத்தலத்தில் அருள்கிறாள்.

2. இத்தலம் முன்பு குண்டலப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்க்ருத மொழியில் இத்தலம் குண்டலிபுரா என்றும் குண்டலினிநகரா
என்றும் அழைக்கப்படுகிறது.

3. தல தீர்த்தமாக கமண்டலு நதி விளங்குகிறது.

4. எல்லையில் நின்று காப்பதால் எல்லையம்மன் என்றும் இந்த ரேணுகாதேவி வணங்கப்படுகிறாள்.

5. தேவியின் கருவறையில் குங்குமத்தோடு திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

6. ஆதிசங்கரர் பாணலிங்கத்தை ரேணுகாதேவியின் திருவுருமுன் பிரதிஷ்டை செய்துள்ளதாக தலபுராணம் கூறுகிறது.

7. அதேபோல ஆதி சங்கரரால் மகாமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் கருவறையை நோக்கிய வண்ணம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தனாகர்ஷணம் எனும் சக்கரமும் பக்தர்களால் வணங்கப்படுகிறது.

8. ராவண வதம் முடிந்தபின் ராமர், லட்சுமணர், அனுமன் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து தேவியை வழிபட்டிருக்கிறார்கள்.

9.  இத்தலம், திருமாலின் தசாவதாரங்களுள் ஒன்றான பரசுராமரின் அவதாரத் தலம்.

10. சக்தி தலங்களுள் ஒன்றாக படவேடு போற்றப்படுகிறது.

11. பரசுராமரால் சிரச்சேதம் செய்வதற்கு முன், ரேணுகாதேவிக்கு அடைக்கலம் தந்த பெண்ணும் இத்தலத்தில் வழிபடப்படுகிறாள்.

12. ஆடி மாதம் முதல் வெள்ளியன்று துவங்கி தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமைகள் இத்தலமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

13. காவ்யகண்ட கணபதிமுனி என்ற சித்தர், இந்த தேவியைக் குறித்து உமாஸஹஸ்ரம் எனும் துதியை அருளியுள்ளார்.

14. காமீக ஆகம முறைப்படி தினமும் மூன்று கால பூஜைகள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

15. ஒவ்வொரு வருடமும் ஆனித்திருமஞ்சனம் அன்று ஜமதக்னி முனிவர் யாகம் செய்த குண்டத்திலிருந்து யாக விபூதியைத் திரட்டி, அதை கருவறையில் வைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள். இந்த விபூதி பிரசாதம் அம்மை நோய்களிலிருந்தும், தீய சக்திகளிலிருந்தும் காப்பாற்றுவதாக ஐதீகம்.

16. திருமண வரம், மழலை வரம், நல்ல உடல்
நலம், மனநலம் ஆகியவற்றை அருள்வதில் நிகரற்றவளாகத் திகழ்கிறாள் இந்த ரேணுகாதேவி.

17. காமதேனு பசுவை தர மறுத்ததால் ஜமதக்னி முனிவரை கார்த்தவீர்யார்ஜுனன் கொன்றான். அப்போது ரேணுகாதேவி உடன்கட்டை ஏறி தெய்வமானாள் என்கிறது தலவரலாறு.

18. பார்வதியின் அம்சமான ரேணுகாதேவி சிவாம்சமான தன் கணவரைத் தேடி அலைந்தபோது தன் படையுடன் இத்தலத்தில் தங்கியிருந்ததால் இத்தலம் படைவீடு என அழைக்கப்பட்டு நாளடைவில் மறுவி, படவேடு என அழைக்கப்படுகிறது.

19. தேவி சுயம்புவாக அருள்கிறாள். மும்மூர்த்திகளும் அரூப வடிவில் கருவறையில் அருள்வதாக ஐதீகம். இந்த தேவியின் பின்புறம் அத்திமரத்தாலான அதியற்புத எழிலுடன் அம்பிகையின் முழு திருவுருவை தரிசிக்கலாம்.

20. ஜவ்வாது மலையில் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ ஆலயம் அமைந்துள்ளது. வட ஆற்காட்டில் வேலூருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே உள்ள சந்தவாசல் எனும் ஊருக்கு அருகில் இத்தலம் உள்ளது.

பரணிகுமார்