கருணை விழி கருட வாகனன்



* திருப்பதியில் உள்ள ஏழுமலைகளுள் ஒன்று கருடாசலம் எனப் போற்றப்படுகிறது.

* எந்த ஒரு முக்கியமான செயலைத் தொடங்கும்போதும் கருடனை தியானித்து கருட துதியைக் கூறினால் காரியசித்தி தரும் எனக் கூறப்பட்டுள்ளது.

*  சுவாமி தேசிகர் கருடனை உபாசனை செய்தல் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என தன் கருடதண்டகத்தில் அருளியுள்ளார்.

* கருடன் அருள் பெற்றால் நல்ல ஞாபகசக்தி, வேதாந்த ஞானம், பேச்சாற்றல் கிட்டும் என ஈஸ்வர சம்ஹிதை சொல்கிறது.

* கருடன் அருள் பெற்றால் பல அபூர்வ சக்திகள் சித்திக்கும் என்று பத்மபுராணத்தில் 4 துதிகளில் கூறப்பட்டுள்ளது.

* வில்லிபுத்தூரில் பெருமாளுடன் கருவறையில் எழுந்தருளச் செய்து கருட பகவானுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

* மன்னர்குடியில் நாச்சியார் சந்நதிக்கு எதிரில் கருடனின் தாயாரான சுபர்ணீயை தரிசிக்கலாம்.

* அதர்வண வேதங்களில் வரும் 32 வித்யைகளில் கருட வித்யையே முதலிடம் வகிக்கிறது.

* அமெரிக்காவின் சின்னம், கருடன். அதனால்தான் அந்நாடு செல்வச் செழிப்புடன் திகழ்கிறது என்பார்கள்.

* கருடனின் பார்வைக்கு உள்ள சிறப்பை ஸௌந்தர்யலஹரியில், ‘கிரந்திமங்கேப்ய:’ என்ற 21ம் துதியில் ஆதிசங்கரர் விளக்கியுள்ளார்.

* கார்க்கோடகன் எனும் நாகத்தின் பெயரைச் சொன்னால் ஏழரைச்சனி தோஷம் போகும் என்பது ஐதீகம். அந்த கார்க்கோடக நாகம் கருடனுள் அடக்கம். வீட்டின் முன் கருடக்கிழங்கை கட்டினால் அந்த வீட்டில் எவ்வித விஷ ஜந்துக்களும் நுழையாது என்பார்கள்.

* எல்லாவிதமான தர்ம ரகசியங்கள், நீதிகள், ஆத்மா கடைத்தேற வழி அனைத்தையும் கருடபுராணத்தில் அறியலாம்.

* கருடனைக் கொடியாகக் கொண்டதாலேயே கிருஷ்ணர் சிசுபாலனை வென்றதாக பாகவதம் கூறுகிறது.

* மௌரியர்களின் அதிர்ஷ்டக் கடவுளாக கருடபகவான் வணங்கப்பட்டிருக்கிறார்.

* குமாரகுப்த, சமுத்திரகுப்த மன்னர்கள் காலத்தில் செலாவணியான பொற்காசுகளில் கருட முத்திரை இட்டதால் சுபிட்சம் மேலோங்கியது என்கிறது வரலாறு.

* வானத்தில் கருடனைப் பார்ப்பதும், கருடன் குரலைக் கேட்பதும் சுபசகுனமாகக் கருதப்படுகிறது.

* மங்களவாத்தியத்தின் 16 வகையான தொனி, ஆதோத்யம் எனப்படும். அதன் நாதமே கருடன் எழுப்பும் ஓசையாகும்.

* வைணவர்கள் திருவாராதன மணியின் முடியின் மேல் சுதர்சனாழ்வாரோ, கருடாழ்வாரோ எழுந்தருளியிருப்பது வழக்கம்.

* கஜேந்திரன் எனும் யானையை முதலையிடமிருந்து கருடாரூடராக பெருமாள் காப்பாற்றியது ஒரு அக்ஷய த்ரிதியை தினத்தன்று.

- ந. பரணிகுமார்