ஆதலின் மௌனமாக இருங்கள்…வணக்கம் நலந்தானே!

அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன்.
என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவேதிண்ணம்.
ஆதலின் மெளனமாயிருக்கை நன்று.’
- ஸ்ரீ ரமண பகவான்.

மேலேயுள்ள பாடல் பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவருடைய தாயாருக்கு மணலில் எழுதிக்காட்டியது ஆகும். தாயாருக்கு மட்டுமல்ல நமக்கும்தான். இந்தப் பாடலை எப்போதும் நம்முடைய தியானத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வாழ்வில் நடக்கும் எல்லாமும் ஈசனின் செயலே என்பதை அறுதி உண்மையாக விளக்கும் ஒரு பாடல் இது.

முற்றிலும் சரணாகதியை நோக்கி ஒரு சாதகனையோ அல்லது பக்தனையோ நகர்த்தும் ஒப்பற்ற பாடல். அதுவும் தற்போது உலகில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ற வரிகள் இது. இந்தப் பாடலை வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருத்திப் பார்த்துக்கொண்டே செல்லலாம்.

ஒரு செயலை நாம் செய்கிறோம். நான் தானே செய்கிறேன். முயற்சி என்னுடையதுதானே என்று தோன்றலாம். நான் எந்த முயற்சியும் செய்யாமல் அதெப்படி இறைவன் எனக்கு பலனை தருவார் என்றெல்லாம் பழைய விவாதங்கள் உள்ளன.

ஆனால், நுட்பமாக பார்த்தால் முயற்சி என்கிற செயலுக்கான விளைவை, விதையை கொடுப்பதும் அந்த பெருஞ்சக்திதான். முயற்சி என்னுடையது என்று சொல்லும் உங்களின் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுகிறதா என்ன? அதேபோல எல்லாமும் தோல்வியிலா முடிகின்றன? எனவே, உண்மையிலேயே செயலை செய்யவே நமக்கு உரிமை உண்டு.

அந்த உரிமையையும் உள்ளிருந்து உந்தித் தள்ளுபவனும் அவனே என தெளிந்து விட்டால் போதும். எனக்கு பலன் கிடைக்காமல் நான் ஏன் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்று தோன்றலாம்.

ஆனால், உங்களுக்கு அந்தப் பலனை கிடைக்கச் செய்வதற்கு இந்த ஒரு செயல் மட்டும் போதாது. இன்னும் பல்வேறு செயல்களை நீங்கள் செய்துதான் ஆகவேண்டும் என்பதை அவன் மட்டுமே அறிவான். மேலும் நீங்கள் என்னவாக வரவேண்டும் என்பதை உங்களை விட அந்தப் பெருஞ்சக்தி நன்கு அறிந்திருக்கின்றது.

அதை நீங்கள் தெளிவாக அறிய காலமும் பக்குவமும் தேவைப்படுகின்றது. உலகம் திடீரென்று ராட்சச வேகத்தோடு செல்லும். திடீரென்று நத்தை போல மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து நகரும். இப்போது நத்தைபோல மெல்ல ஊர்ந்து செல்வதையே நாம் பார்க்கின்றோம். எல்லாமும் அவன் செயல் என்பதை வெறும் சொல்லாக பார்க்கக் கூடாது. அது அனுபூதியில் கனிந்த ஞானம். புடம் போடப்பட்ட பக்குவம் என்பதை அறிந்தால் மௌனமாக இருப்போம்.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)