மகத்தின் மகத்துவத்தை உணர்ந்தோம்



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

தொல்லியல் சிற்பக்கூடமாக மட்டுமே தெரிந்த மகாபலிபுரத்தில் இருளர்களின் தீர்த்தவாரி, அம்மன் வழிபாடு, பெருமாள் கடல் நீராடல் வைபவங்களை முதன்முதலாக அறிந்து, கடல் கன்னியை வழிபட்டு, கடலுக்கு மரியாதை செலுத்தி, பௌர்ணமி நீராடி, கடலம்மாவின் ஆசி பெறுவதைப் படித்து சிலிர்த்தேன்.
- மல்லிகா அன்பழகன், சென்னை-78

மாசி மகத்தன்று பிறந்த எனக்குரிய திண்டுக்கல் கோயிலைக் காட்டி, மாசிமக மகத்துவத்தை பக்கம், பக்கமாக விளக்கியதில் மனம் பூரிப்பில் மகிழ்ந்தது.  
- ரேவதி ரமேஷ், சோளிங்கர்.

மகிழ்ச்சி என்பது வெளியில் இருக்கிறது என்று தேடி அலையாமல் ஞானிகள் சொன்ன வழிமுறைகளின்படி அதை உள்ளுக்குள் தேடி அடைவதை வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று தலையங்கத்தில் கூறியிருந்தது அருமை.
- மு.மதிவாணன், அரூர்.

‘‘குகைக்குள் குடிகொண்டருளும் ஆனந்த பத்மநாப ஸ்வாமி’’ கண்டேன். நான்கு அடுக்கு அற்புதங்கள் கண்டேன். குடைத்தெடுத்த குகைக்குள் இத்தனை அதிசயங்களா வியக்க வைத்தன. மற்றும் ஒவ்வொரு அடுக்குள்ளும் நரசிம்மர், அடுத்து சயன திருக்கோலத்தில் பத்மநாப ஸ்வாமி, மற்றும் முழுமையடையாத திரிகூட ஆலயம் காண கண் கோடி வேண்டும். பார்க்க பார்க்க பக்தி பரவசம்தான் ஏற்பட்டது. இதெல்லாம் படித்து முடித்தபிறகு கண்டிப்பாக அந்த இடத்திற்குச்சென்று தரிசனம் செய்ய வேண்டும். என எண்ணத்தோன்றியது.
- வண்ணை கணேசன், சென்னை-600 110.

மாசி மகம் என்றதும் கும்பகோணம் இடத்தில்தான் நடக்கும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் மாமல்லபுரம் கன்னியம்மனை ஆதிவாசிகள் என்று இருளர் இனமக்கள் வழிபடுவது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். மற்றும் ஸ்தல சயனப் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிப்பார் என்றதும் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தேன். மேற்கொண்டு இடம் பெற்ற புகைப்படங்கள் என் இதயத்தில் ஆழ பதிந்துவிட்டன.
- தீபக் ஜெயன் - ஈரோடு.

மகத்துவம் நிறைந்த மாசி மகம் கண்டேன். மாசி மகத்தில் கும்பகோணம் இடத்தில் நீராடினால் ஏதோ பாவம் போகும். புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், குழந்தை பிறக்கும், ராஜயோகம் உண்டாகும் கணவன்-மனைவி பிரச்னைகள் தீரும் என்பதை இன்றுதான் கண்டேன். மற்றொரு அதிசயம் காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் தீரும் என்பதை படிக்கும்போது மெய்சிலிர்த்தேன். மாசி மகத்தின் மகிமை மனதில் மகிழ்ச்சி பொங்கின...
- சரோஜா கிருஷ்ணன், விழுப்புரம்.

குடந்தையே குதூகலிக்கும் மாசி மகம், மற்றும்  புராணங்கள் உறைக்கும் மாசிமக நீராடல் ஆகிய கட்டுரைகள், ‘மாசி மகம்’ என்ற அப்புனித வைபவம் குறித்து பொருள்பட எடுத்துரைத்திருந்தன!
- இரா.வளையாபதி,  51, தோட்டக்குறிச்சி அஞ்சல்,

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் விளக்கம் பயனுடையதாயிருந்தது. மாமல்லபுரம் மாசிமகம் தகவல்கள் அனைத்தும் மெய்சிலிர்த்தது. பிரம்ம தீர்த்தங்கள் தகவல்கள் மனதில் இடம் பெற்றன. எந்தெந்த கோயில் என்ன பிரசாதம் படிக்க படிக்க ருசி தட்டியது. முகப்பு அட்டையில் லிங்கம் வண்ணப்படம் மிகவும் அருமை; இதழுக்கு அழகு கூட்டியது.
- சு.இலக்குமணசுவாமி,திருநகர், மதுரை.

குலதெய்வமான கடல் கன்னியம்மனை இருளர்கள் மாமல்லையில் வழிபடும் மாசி மகவிழா குறித்து ஆன்மிக பலன் வாயிலாக விலா வாரியாக அறிய முடிந்தது.
- முனைவர்.இராம.கண்ணன்,
சாந்தி நகர், திருநெல்வேலி - 627002.

தமிழின் வேதம்தான் திருக்குறள் என்றாலும் அதிலுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இன்றைய தமிழன் அர்த்தம் உணர முடியாதே! உரையாசிரியர்களும் ஆளுக்கொரு கருத்தைச்சொல்லி வைத்ததால் குழப்பம். ஒப்புரவு அறிதல் அதிகாரத்தில் ஒப்புரவு என்பதற்கு நானே அறியாத எங்கள் மாவட்டத்து அறிஞர் நாகை தண்டபாணி பிள்ளை சொன்ன விளக்கம் வரை சொல்லி, இன்றைய தமிழனுக்கு புரியும்படி ஈகைக்கும், ஒப்புரவுக்கும் வித்தியாசத்தை விளக்கியது, திருப்பூர் கிருஷ்ணன் திருக்குறள் வகுப்பு நடத்துவதுபோல இருக்கிறது.
- அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை-611102.

ஆந்திர மாநில அனந்த பத்மநாப சுவாமி, அறம் வளர்த்தாளை ஆட்கொண்ட தாணுமாலையன் ஆகிய இரண்டு கட்டுரைகளும் இவை சார்ந்த படங்களும் மனதுக்கு புத்துணர்வை வழங்கின என்பது உண்மை.
- ப.மூர்த்தி, பெங்களூரு-97.