முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி...அருணகிரி உலா -  97

மதுரை சோமசுந்தரரின் கருவறைக்கு வெளியே அமைந்திருக்கும் இரண்டாம் பிராகாரம் கம்பத்தடி மண்டபம் எனப்படுகிறது. இங்கு தூண்களில் சிவபெருமானது சிறந்த 25 வடிவங்களுடன் அக்னி வீர பத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர், காளி ஆகிய சிற்பங்கள் உள்ளன. நவகிரக கோயிலும் இங்கு உள்ளது. சுவாமி சந்நதிக்கு நேர் வெளியே எதிரே உள்ள நந்தி மண்டபம் கண்டு மகிழ வேண்டி தொன்றாகும்.

கம்பத்தடி மண்டபத்திலிருந்து முதற் பிராகாரத்திற்குள் நுழையும் இடத்தில் அதிகார நந்தியும் சாமுண்டியும் உள்ளனர். 12 அடி உயரமுள்ள காவலர்கள் சிற்பங்கள் இரண்டு உய்யக்கொண்டார், ஆட் கொண்டார்] 4 அடி உயரமுள்ள பீடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இருபக்கத் தூண்களில் ஐந்து தலைகளுடைய சதாசிவ மூர்த்தியும், ஐந்து தலைகளுடைய பஞ்ச சக்தி எனப்படும். காயத்ரிதேவியையும் மயில்மேல் முருகனையும் கண்டு வணங்கலாம். ஒருபுறம் அனுக்ஞை விநாயகரும், மறுபுறம் தண்டாயுதபாணி, கழுகுமலை முருகன், பால முருகன் ஆகியோர் தனிச்சந்நதிகள் உள்ளன. தூணில் உள்ள சந்திரசேகரர் மிகுந்த அழகுடன் விளங்குகிறார்.

கொடி மரத்தருகில் நின்று வலப்புறம் பார்த்தால் எல்லாம்  வல்ல சித்தர் தியான மண்டம் உள்ளதைக் காணலாம். மதுரையில் அபிஷேக பாண்டியன் காலத்தில் சொக்க நாதர் எனப்படும் சிவபெருமான் பல சித்து விளையாட்டுகளைக் காட்டி மகிழ்வித்த காரணத்தினால், ‘எல்லாம் வல்ல சித்தர்’ எனப்பட்டார். அருணகிரியாரும் முருகனை ‘சித்தன் மகனே’ என்றும், இறைவனை ‘சிவகாமி கர்த்தன், மிகு சுகவாரி சித்தன்’ என்று அழைக்கிறார். கல்யானைக்குக் கரும்பு அளித்த பெருமான் கையில் கரும்புடன் காட்சி அளிக்கிறார். கருவறையை அடுத்து இருக்கும் முதற் பிராகாரத்தின் கிழக்கில் உஷா - பிரத்யுஷாவுடன் சூரியன், அறுபத்து மூவர், கலைமகள், சப்த மாதர் விநாயகர் ஆகியோரைத் தரிசிக்கலாம், சோமாஸ்கந்தர் மண்டபத்தின் வலப்புறம் இரு விநாயகர் சிலைகள் உள்ளன.

மேற்குப்புறம், ஷோடஸ லிங்கம், முருகன், ஜ்வர தேவர், பஞ்சமுக லிங்கம், பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நதி அருகில் மதுரையின் தல விருட்சமான கடம்ப மரம் உள்ளது. இறைவன் கருவறையைக் கண்டு மகிழ்கிறோம். கடம்ப மரத்தடியில் சுயம்புவாய் எழுந்தருளிய சோமசுந்தர மூர்த்தமே எல்லாத் தலங்களுக்கும் முன்னே தோன்றிய பெருமை உடையது என்பதால் ‘மூல லிங்கம்’ எனப் பெயர் பெற்றது. திருத்தாண்டகத்தில், நாவுக்கரசர் ‘‘முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி . . . ’’ என்று பாடுகிறார். சதுரக் கருவறையாக அமைந்துள்ளது. கி.பி .
பன்னிரண்டாம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன், சுவாமி சந்நதிக்குக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான பகுதிகளைக் கட்டினான் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால் தற்போது காணப்படுபவை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மீனாட்சி கோயிலில் நடராஜருடைய பஞ்ச சபைகளும் உள்ளன. முதற் பிராகாரத்தில் கனகசபையும், ரத்தின சபையும், மகாமண்டபத்தில் இறைவன் கால் மாறி ஆடிய ரஜத சபையும் (வெள்ளியம்பலம்) நூற்றுக்கால் மண்டபத்தில் தேவசபையும், ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபையும் உள்ளன.


வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடியதன் பின் ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது. சோழ நாட்டிலிருந்து வந்த ஒரு புலவன், தங்கள் அரசன் கரிகாலன், ஆடல் கலை உட்பட அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ச்சி பெற்றவன்  ஆதலின் அவனே ‘ அறுபத்து நான்கு கலை வல்லான்’ எனும் பட்டத்திற்குத் தகுதியுடையவன் ஆவான் என்று கூறினான். இது கேட்ட பாண்டியன் தான் இதுவரைக் கற்றிராத நடனக் கலையையும் கற்று விட வேண்டும் என்ற வெறியுடன் கற்கத் துவங்கினான்.

அது உடலுக்கு மிகுந்த சோர்வைத் தருவது கண்டு வெள்ளியம்பலத்தில் கூத்தாடும் இறைவனிடம் ‘‘ யுகயுகமாக இடது பதம் தூக்கி ஆடும். நீ கால் வலிக்காமலிருக்க வலது திருவடியையும் நன்கு வீசி ஆடுவாயாக; இல்லாவிடில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்’’ என்று மனமுருக வேண்ட, இறைவனும் அவனது அன்புக்கு ஆட்பட்டு, காலை மாற்றி ஆடினான்.

‘‘ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி மாறி ஆடும் இறையவர்’’
என்று இந்நிகழ்ச்சியைக் குறித்து அருணகிரி நாதர் பாடியுள்ளார்.அருணகிரியார் பொதுப் பாடலொன்றில், ஆலவாய் அழகர் ‘ பழியஞ்சு’ சொக்கனாய் விளங்கிய குறிப்பை வைத்துப் பாடியுள்ளார். இக்குறிப்பு, ‘திரு ஆலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில்’ வருகிறது.

குலோத்துங்க பாண்டியன் மதுரையில் ஆண்ட காலத்தில் அந்தணன் ஒருவன், ஒரு வேடனை உடன் அழைத்து வந்து, ‘‘ஆலமர நிழலில் என்  மனைவியை அமர்த்திவிட்டுத் தண்ணீர் கொண்டு வர நான் சென்ற வேளையில் அம்மரத்தின் கீழ் நின்றிருந்த இவ்வேடன் அவளைக் கொன்று விட்டான்’’ என்றான். ஆனால் வேடன் இதை முற்றிலுமாக மறுத்து விட்டான். உண்மையைத் தனக்கு உணர்த்துமாறு பாண்டியன் சொக்கனை மனமாற வேண்டினான். இறைவன் அசரீரியாக, ‘‘இன்று செட்டித் தெருவில் நடக்கவிருக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு அந்தணனோடு  வா; உண்மையை உனக்குப் புரிய வைப்பேன்’’ என்றான்.

பாண்டியனும் அந்தணனுடன் மாறு வேடத்தில் திருமண வீட்டிற்குச் சென்றான். அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த யம தூதர்கள் ‘‘இன்று காலை, மரத்தில் ஏறுண்டு கிடந்த அம்பை அதன் கீழ் அமர்ந்திருந்த அந்தணி மீது விழ வைத்து அவள் உயிரைக் கவர்ந்தது போல, இங்குள்ள பசுவை மிரளச் செய்து மணமகனை முட்டச் செய்தால், யமனது ஆணைப்படி அவன் உயிரைக் கவர்ந்து விடலாம்’’ என்று கூற, அதன் படியே நடந்தது. இது கண்ட அரசன் வேடனிடம் பலவாறு மன்னிப்புக் கேட்டு, பொன்னும் பொருளும் கொடுத்துஅப்பினான். பின்னர் கோயிலுக்குச் சென்று ‘‘ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டு எம் அடிகள் நீர் பழியஞ்சு நாதராய் இருந்தீர் ’’ என்று உருகிப் போற்றினான்.

‘‘அத்தன் அப்  படு  பழிக்கே அஞ்சிய கணத்து      தோன்ற
உத்தம பத்தி மாறற்கு உணர்வுற   உணர்த்தலாலே
பக்தர்கள் பக்தனுக்கு ‘பழியஞ்சுஞ் சொக்கன்’ என்றோர்
வித்தகப் பெரிய நாமம் விளங்கியத வனி மீது ’’
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்.
இதையே அருணகிரி நாதர்,
‘‘பழியஞ்சி , எனதருகிலுறை புண்டரிக வடிவ
பவளஞ்சொல் உமை கொழுநன்’’
என்று பாடியுள்ளார்.

‘கடடிமுண்ட கர’ எனத் துவங்கும் பாடலில் சிவபிரான் மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல் பற்றிய குறிப்பைத் தருகிறார், அருணகிரிநாதர். தாருகாவனத்திலிருந்த முனிவர்களின் மனைவிமார், பிட்சாடனராக வந்த சிவபெருமானின் அழகில் மனதைப் பறிகொடுத்து கை வளையல்கள் சோர நின்றனர். ‘‘கற்பு நிலை வழுவிய நீங்கள் மதுரையில் சென்று பிறக்கக் கடவீர்கள். அப்போது சிவபெருமான் வளையல் செட்டியாக வந்து உங்கள் கைகளைத் தொடும் பொழுது சாபவிமோசனம் கிட்டும்.’’ என்று முனிவர்கள் மனைவிமாரைச் சபித்தனர். அவ்வாறே சிவனார் மதுரையில் வளையல் செட்டியாய் வந்து அப்பெண்களுக்கு வளையல் இட்டு மறைந்தார். அவர்களும் சாப விமோசனம் அடைந்தனர்.

இதை,‘‘செட்டியென்று சிவகாமி தன் பதியில்
கட்டு செங்கை வளை கூறும் எந்தையிட
சித்தமுங் குளிர் அநாதி வண் பொருளை நவில்வோனே ’’
என்று பாடுகிறார். [ மதுரையை,
‘சிவகாமி தன் பதி’ என்று அழகாகக்
குறிப்பிடுகிறார் !]

பொருள் : செட்டி வடிவெடுத்துத் தேவி சிவகாமி அரசாட்சி புரியும் பதியாகிய மதுரையில், செவ்விய கைகளில் வளையல் கட்டுகளை விலை கூறி விற்ற எந்த சிவபிரானது உள்ளம் குளிரும்படி தனித்த மூலப் பொருளை உபதேசித்தவனே! [ தந்தையைப் போன்றே, முருகப் பெருமானும் வளையல் செட்டி வேடம் பூண்டு, வள்ளியிடம் சென்ற லீலை தணிகை உலாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.]

சைவப் பெருமக்களுக்கே உரிய திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்தியது மதுரைத் திருத்தலமே என்றால் அது மிகையாகாது. கூன் பாண்டியன் அரசாண்ட காலத்தில் ஞான சம்பந்தர் மதுரைக்கு விஜயம் செய்ய விரும்பி ஊருக்கு வெளியே மடம் அமைத்து அடியார்களுடன் அங்கு தங்கியிருந்தார். அக்காலத்தில் பாண்டியன் சைவ நெறியைக் கை விட்டுச் சமண நெறியைத் தழுவியிருந்தான். சமணர்கள் ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குத் தீவைத்தனர்.

அத்தீயை, ‘‘பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’’ என்று பதிகம் பாடிப்பணித்தார் சம்பந்தப் பெருமான். பாண்டியனைக் கொடிய வெப்பு நோய் பற்றியது. எந்த மருந்திற்கும் ஜூரம் கட்டுப்படாதது கண்டு வருந்திய அரசி மங்கையர்க் கரசியார், பாண்டியனின் அரண்மனைக்கு வரும்படி சம்பந்தரை வேண்டினாள். அவள் அழைப்பை ஏற்ற சம்பந்தரும் அரசனைக் காண அரண்மனைக்குச் சென்றார்.

பாண்டியனுக்கு உற்ற ஜூரத்தால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக சமணர்களின் மயில் பீலி, குண்டிகை நீர், அசோகந்தளிர்யாவும் அவன் மீது பட்டவுடன் வெந்து போயின. ஆளுடைய பிள்ளையார் பதிகம் பாடி அரசனுடலில் திருநீறு பூசியதும் வெப்பு ஜூரம் குறைந்து போயிற்று.
‘‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே’’
என்பது அப்பதிகத்தின் முதற்பாடல்,
இந்நிகழ்ச்சியைக் கடைக்காப்பில் பின்
வருமாறு பதிவும் செய்துள்ளார்.

‘‘ஆற்றல் அடல் விடையேறும் ஆலவாயன் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
 தேற்றித் தொன்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே !

இதன்பின் அனல் வாதம் - புனல் வாதம் இரண்டிலும் சமணர்களை  ஜெயித்தார் சம்பந்தப் பெருமானார். ‘‘தோல்வியுற்றால் கழுவேறுவோம்’’ என்று கூறியிருந்தபடிச் சமணர்கள் கழுவேறினர். பழநிப் பாடலில் அருணகிரியார் பின் வருமாறு பாடியுள்ளார்.[ ஞானசம்பந்தரை முருகப் பெருமானாகவே பாவிக்கும் அவர் எண்ணம்
பாடலில் எதிரொலிக்கிறது ]
 ‘‘பீலி    வெந்துயராலி  வெந்து     அசோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே ’’
தணிகைத் திருப்புகழில்,
‘‘பொறியுடைச் செழியன் வெப்பொழிதரப் பறிதலை
பொறியில் அச்சமணர்    அத்தனைபேரும்
பொடிபடச் சிவமணப் பொடி பரப்பிய ,
திருப்புகலியில் கவுணிய புலவோனே ’’
என்கிறார். [ சிவமணப் பொடி  = திரு நீறு]
[ அறிவுடைய பாண்டியனது சுரம் நீங்கவும், மயிர் பறித்துக் கொள்ளும் தலையராம் அறிவிலிகளாகிய அச் சமணர்கள் அத்தனை பேரும் அழியவும், சிவமணப் பொடியாகிய திருநீற்றின் பெருமையை மதுரையில்
பரப்பிய சீகாழிப் புலவனே !]

மதுரைப் பாடலொன்றில்
‘‘திறத்தினாற்பல  சமணரை  யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்தமாய்ப் புகழ் மதுரையி   ஓறைதரும்   
அறுமுகப் பெருமாளே’’என்று பாடுகிறார்.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி