சக்தி தத்துவம் - 58புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் கண்ணியம் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்பண்ணி, நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே
- பாடல் எண்  41

தீட்சையைப் பற்றி குறிப்பிடும் இப்பாடல் உமையம்மையின் அருளை அனுபவத்தில் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் அபிராமி
பட்டரின் மனநிலையை விளக்குகிறது.ஒரு சமயம் திருக்கடையூரில் கால சம்ஹார மூர்த்தி உற்சவமானது மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவின் போது பாட்டுக்கச்சேரி, நாட்டியம். சிறப்பு உபன்யாசம், சந்நியாசிகளின் அருளாசி என்று ஒவ்வொரு நாளும் சிறப்பாக விழா நடந்து கொண்டிருந்தது. அதில் பட்டர் ரசித்த ஒரு உபன்யாசம் அவர் நெஞ்சை மிகவும் நெகிழ்வித்தது.

மார்க்கண்டேயர் அருள் பெற்ற கதையை மிக அருமையாக சொல்லிக் கொண்டிருந்தார் அந்த உபன்யாசகர். இறைவன் மார்க்கண்டேயனின் உயிரை கவர வந்த காலனை காலால் உதைத்தார். எமன் இறந்தான். அதனால் மார்க்கண்டேயன் நீண்ட ஆயுளைப் பெற்றான் என்றும், அதுபோல் நம் அனைவருக்கும் நீண்ட ஆயுளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதை நாம் பெற அமிர்தகடேஸ்வரரை வணங்க வேண்டும் என்றும் கூறினார்.

அந்தக் கூட்டத்தில் திடீரென்று ஒருவர் எழுந்து எப்படி வணங்க வேண்டுமென்றார். அதற்கு அந்த உபன்யாசகர் மிகவும் பொறுமையாய் ‘‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’’ வேண்டுமென்றார். கேட்டவர் மிகவும் சரியாக கேட்டார் என்று அதை கேட்டுக்கொண்டிருந்த அபிராமி பட்டருக்கும் தோன்றியது.

தொடர்ந்து அந்த உபன்யாசகர் கூறுகையில்‘‘ஆவியுடையார் கோயிலில் எமனை காலால் உதைத்த இந்த சிவனின் திருவடிதான் மாணிக்கவாசகரின் தலையிலே வைத்து அவரை ஆட்கொண்டது.’’ என்ற (மாணிக்கவாசகர் திருவடி தீட்சை பெற்ற) கதையை கூறி சிவன் தான் அதற்கு தீட்சை தந்து அருள் புரிய வேண்டும் என்றார்.

அவர் சொன்ன உபதேச மொழிகள் பட்டரின் செவிகளை துளைத்துக் கொண்டேயிருந்தது இனி நாம் பாடலுக்குள் செல்வோம்.
‘‘புண்ணியம் செய்தனமே மனமே ’’
       
எனத்துவங்கும் இந்த நாற்பத்தி ஓராவது பாடல் முழுவதுமே தீட்சை பெறுவது பற்றி கூறப்படுவதால் அதைப்பற்றிய விபரம் அறிந்த பிறகு இப்பாடலில் நுழைவது நலம் பயக்கும். தீட்சையானது கொடுப்பதை பொறுத்து இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

1). குருவிடம் தீட்சை பெறுவது
‘‘பின்னே திரிந்து உன் அடியாரை பேணி பிறப்பறுக்க’’ - 25
2). இறைவியிடம் நேரிடையாக தீட்சை பெறுவது
‘‘தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட ’’- 32
என்பதனால் நன்கு உணரலாம்.
 தீட்சையை தெளிவுற விளங்கிக் கொள்ள வினா விடை முறையை பின்பற்றினால் மேலும் எளிதாக அமையும்.

தீட்சை என்றால் என்ன ?

 உலக உயிர்கள் இன்பத்திலும், துன்பத்திலுமிருந்து தடுமாறும் போது நம்பிக்கையை தூண்டுவது போல் சரியான காரணகாரிய அடிப்படையில் விளக்கங்களை எடுத்துக்கூறி இறை நெறியை பின்பற்றச் செய்யும் வழிமுறைகளுள் ஒன்று தீட்சை அதற்கு உமையம்மையை வழிபடுவோர்களை சான்றாக கூறுகின்றார்.

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன் அமரர்தங்கோன்
போதில், பிரமன், புராரி, முராரி, பொதிய முன்
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே - 97 .
மேலும் தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வரியை மனம் தரும் தெய்வ வடிவும் தரும்.
நெஞ்சில் வஞ்சம் இல்ல இனம் தரும் நல்லன
எல்லாம் தரும் அன்பர் என்பவாகே  69
       
‘‘தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே ’’- (நூல் பயன்) என்று வழிபடுவதனால் வரும் பலனை பட்டியலிட்டு நம்பிக்கை யூட்டுகிறார்.
இறையருளை நாம் பெறுவதற்கு மனம், வாக்கு, காயத்தால் நாம் செய்யும் முயற்சிக்கு தீட்சை என்று பெயர்.
‘‘தெய்வம் உண்டாக மெய்தொண்டு செய்தே’’ - 44 என்கிறார். யாரும் அறிந்து கொள்ள முடியாத இறையுடன் தொடர்பு கொள்ள உதவும் சாதனமான மந்திரத்தை குருவின் மூலம் அறிந்து கொள்வது தீட்சை.

‘‘அறிந்தேன் எவரும் அறியா மறையை ’’- 3
2. தீட்சையின் செயல்பாடு என்ன?
ஆன்மாக்களிடத்து இயல்பாக ஒட்டியிருக்கும் அழுக்கை (பாசம்) ஆணவமலம், கன்மமலம், மாயாமலம் என்ற மூன்று வகை பாசத்தை போக்குவதாகும்.
‘‘என் பாசத்தொடரை யெல்லாம் வந்தரி’’ - 8 என்கிறார்.
3. தீட்சையின் சிறப்பு என்ன?
அறியாமையாகிற, ஆணவ மலத்தினால் மறைப்புறு தன்மையே அறியாது இருக்கக் கூடிய மிகவும் தாழ்மையான நிலையை நீக்கி அறிவொன்றிலேன் - 81

( தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்