அம்பிகை ஆணையிட்டால்...அம்பிகை ஆணையிட்டால் இந்த
அகிலம் அடுத்தநிலைக்கு உயரும்
அல்லிவிழிமணிகள் உருட்டினால்
ஆசையில் உயிரினங்கள் வளரும்
அருட்கரம் நீட்டினால் அலைகடல்
அமைதியாகி அடங்கி ஒடுங்கும்
அச்சத்தில் மனம் பதைப்பதேன்
அம்பிகை திருவடியை பணிந்துவிடு!

சுகந்தம் வீசும் தென்றல் தழுவ
வசந்த நவராத்திரி பிறந்தது
வைகை  பொங்கியெழ மீனாட்சி
வரங்கள் தரும் திருவிழா
வெம்மை கிருமிகள் பரவாது
வெயில், அனல் தாக்காது
பக்தர்கள் நலனில் உறவாடி
பக்கம் சேர்ப்பாள் நலம்கோடி!

சியாமளா தேவியின் அருளால்
சிகரம் தொடும் பக்திசாதனை
சிட்டுக்குருவியாய் மனம் சிறகடிக்கும்
சிங்கார முகம் தெளிவாகும்
சீறிப்படமெடுக்கும் அரவம்
சித்தரை கண்டு அமைதியாகும்
சிந்தனையில் வசந்தம் வீசும்
சித்தாந்தம் மவுனம் பேசும்!

மலைமுகடில் அருவி பிறந்து
மாலை சூட்டும் நிலத்துக்கு
மாதங்கியின் நெய்கூந்தல் கலைந்து
மழை பெய்யும் கோடையில்
மன்னரின் தர்மம் தழைத்து
மக்கள் மகிழ்வர் நீரோடையில்
மண்குடிசை  பொன்மாளிகையும்
மாற்றம் காணும் சக்திபார்வையில்!

கருணை மனம் அருள்விழிகள்
காதல்மொழி கனியின் சுவை
கண்டோர் வியக்கும் பேரழகு
கற்பனைக்கெட்டாத வடிவழகு
கல்மனம் படைத்தோரும் கைகட்டி
கண்ணீர்மல்க வணங்கிட செய்வாள்
கலியுலகில் நடப்பதையெல்லாம்
கண்காணித்து நலம்புரிவாள் அம்பிகை!

அம்பிகையருளால் அறம் நிலைக்கும்
நம்பியோருக்கு வரம் கிடைக்கும்
தும்பியினம் பருக தேன்சுரக்கும்
அம்பிகையே அனைத்துக்கும் ஆதாரம்
அருள்மணிப்பார்வை காதோரம்
அள்ளிவீசிட செய்வோம் மாதவம்
அச்சம் சிறிதுமில்லை வாழ்க்கையில்
அமுதக்குடம் நிரப்புவாள் அம்பிகை!

விஷ்ணுதாசன்