ஆனந்த வாழ்வருளும் அபீதகுஜாம்பாள்நினைக்க முக்தி தரும் தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை. ஈசன் அண்ணாமலையாராகவும் அம்பிகை உண்ணாமுலையம்மன் எனும் அபீதகுஜாம்பாளாகவும் திருவருட்பாலிக்கும் திருத்தலம். இத்தலத்தில் நடைபெறும் பெரியவிழா கார்த்திகை தீபத் திரு விழாவாகும். இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நன்நாளில் நடைபெறும்.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு பிரமோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணமும் ஆறுநாள் விழாவும், மாசிமகத்தில் வல்லாளன் திருவிழாவும், தைமாதம் திருவூடல் விழாவும், ஆனி விழாவும், ஆடியில் அம்பிகைவிழாவும், பவித்ரோற்சவம், நவராத்திரி, கந்தசஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவாதிரை முதலியனவும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன. இத்தலம் பஞ்சபூதத்தலங்களுள் அக்கினி தலமாக போற்றப்படுகிறது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் அருணை சக்தி பீடமாக போற்றப்படுகிறது.

ஒரு சமயம் கயிலை மலை மீது பார்வதி தேவியுடன், ஈசன் அமர்ந்திருந்தார். அப்பொழுது ஈசனைக் காண வந்த பிருங்கி முனிவர் ஈசனை மட்டும் வணங்கி வலம் வந்தார்.  ஆனால் பார்வதி தேவியை வணங்கவில்லை.  அதனால் பார்வதி தேவி கோபமடைந்தாள்.  சினம் கொண்ட பார்வதி தேவி பிருங்கியின் உடலில் உள்ள சதை மற்றும் ரத்தம் நீங்கி சக்தியை இழக்குமாறு சாபமளித்தார்.  பிருங்கி முனிவர் சதையும் ரத்தமும் நீங்கி எலும்பு தோல் போர்த்திய உடம்பினைப் பெற்றார்.  

ஈசன் தம்முடைய பக்தனின் தளர்வடைந்த நிலையினைக் கண்டு இரக்கமுற்றார்.  ஈசன் பிருங்கி முனிவருக்கு மூன்றாவது காலாக ஊன்று கோலினை அளித்தார். ஊன்று கோலினை பெற்ற முனிவர் மகிழ்ச்சி அடைந்து, ஈசனின் முன்பாக நடனம் ஆடி பக்தியைச் செலுத்தினார்.  இதனைக் கண்ட பார்வதி தேவி மனம் வருந்தி ஈசனில் பாதி உருவை அடையவேண்டும் என்று கருதி ஈசனை நோக்கிக் கடுமையான தவத்தினை மேற்கொண்டாள். ஈசன் மனமகிழ்ந்து தம்முடலில் பாதியினைத் தருவதாக வரமளித்தார்.

பார்வதி தேவி சிவனுடன் ஒன்றிணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார்.  பிருங்கி முனிவர் இருவரையும் வணங்க வேண்டிய நிலை ஏற்பட்டு வணங்கினார். பார்வதி ஈசனின் பாதி உடலை பெற்ற தலம் இத்திருவண்ணாமலையாகும்.  கார்த்திகை தீபத்தின் போது அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தின் ஆனந்த நடனத்தை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே தரிசிக்க முடியும். பின் அடுத்த வருட கார்த்திகை தீபத்தின்போதுதான்
அத்திருவுருவை தரிசிக்கமுடியும்.

உண்ணாமுலை அம்பிகையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? லலிதா ஸஹஸ்ரநாமம் தேவியைப் போற்றும் நாமங்களில் நிஸ்துலா - சிறந்த பொருள் அனைத்திலும் சிறந்தவள். எவருக்கும் ஒப்பிலாதவள் என்கிறது. மேலும் ஸமானாதிக வர்ஜிதா - ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள் ஒப்பார் இல்லாத போது மிக்கார் எப்படி இருக்க முடியும்? தர்ம, அர்த்த, காம, மோட்சம் எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் அளிக்க வல்லவள்.

தேவியின் தாமரை போன்ற சிவந்த அம்பிகையின் பாதங்களுக்கு அவற்றின் நகங்களின் பிரகாசமே நிலவாகிறதாம். தாமரையின் கொழுப்பை அடக்கும் திருப்பாதங்கள் என்று மூககவியும் தன் மூககவியின் பாதாரவிந்த சதகத்தில் அம்பிகையின் பாதங்களைப் புகழ்கிறார். இதைத்தான் அருணகிரிநாதரும் சரண கமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க என்கிறார். சரணங்கள் என்ற கமலங்களாலேயே ஆன ஆலயம் தேவியின் திருப்பாதங்களாகும்.

தேவியின் கண்களோ அதற்கும் மேலான கருணையைப் பொழிகின்றது. மிகவும் குளிர்ந்ததான, அழகான, சலனமான பார்வையை அம்பிகை நம்மீது செலுத்த வேண்டும். அன்பு கனிந்த பார்வை என்பது குளிர்ச்சியாக இருக்கும் தேவியின் பார்வை. அதன் மகிமையாலேயே ஈசனால் சாம்பலாக்கப்பட்ட மன்மதன் மீண்டும் உயிர்பிழைக்கப் பெற்றான். அம்பிகையின் குழந்தை என்ற பெருமையையும் பெற்றான். தேவியின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டால் போதும். யுகங்களில் செய்த பாவங்களும் பறந்தோடிவிடும்.

கங்கை என்னும் புண்ணிய நதியானது இமயத்தில் உற்பத்தியாகி அங்கிருந்து இறங்கிவந்து சூரிய புத்ரியான யமுனை நதியுடன் கலக்கும்போது கருப்பு நிறமாக மாறி அங்குள்ள அன்னப்பறவைகளுடன் கூடியிருக்கும்.அம்பிகையின் புன்சிரிப்பை கங்கை என்று வைத்துக்கொண்டால் அவளின் புன்னகையின் ஒளி குங்குமம், கஸ்தூரி சேர்ந்த கலவைச்சாந்தில் ஒரு விசித்ர நிறம் அடைந்து, ஹாரத்திலுள்ள முத்துக்களில் வீசும்போது கங்கை அன்னப்பறவைகளுடன் கூடியது போலும் பருத்த மார்பகங்களின் மேல் அவ்வொளி பரவுவது இமய மலைச்சிகரத்தில் சஞ்சரிப்பது போலவும் தோன்றுகிறது.  

சிவந்த உதடுகளில் புன்சிரிப்புடன் கூடிய தேவியின் கருணையை அடைந்தபின் பிற அன்னியர்களால் ஆக வேண்டியது எதுவும் இல்லை. இதையே அபிராமிபட்டரும் அம்மா நீ என்னிடம் வைத்த பெருங்கருணை இருக்கும்போது தேவியின் அன்பர்களைத் தவிர மற்றவர்களுடன் உறவு கொள்ளேன். தேவியின் அன்பர்களே எனக்கும் அன்பர்கள் என்கிறார்.     

முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும்.      
திருவண்ணாமலை  உண்ணாமுலையம்மன் தன்னை நினைத்து வணங்கும் அன்பர்களுக்கு ஆனந்த வாழ்வருளும் அபீதகுஜாம்பாளை மனமாற வணங்கி வளங்கள் பெறுவோம்.