இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-44



பிறவாமை வேண்டும் பெருமானே!

தெய்வப் புலவர் திருவள்ளுவர் தம் திருக்குறளின் முதல் அதிகாரத்தில் நிறைவுக் குறட்பாவாக
பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடி சேராதார்என்று கூறுகின்றார்.

எளிதாக எய்திவிடமுடியாத மானுட தேகத்தை நாம் பெற்றிருக்கின்றோம்.
‘‘வாய்த்தது ஈதோர் பிறவி! இதை மதித்திடுமின்’’ என்று அருளாளர்கள் பாடுகின்றனர்.
 ‘‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ’
 என்று அவர்கள் நம்மை எச்சரிக்கின்றனர்.

ஆனால் மனிதர்கள் பலர் ‘‘இப்பிறவி அரிய பிறப்பு. இச்சந்தர்ப்பத்தை ஏற்ற முறையில் பயன்படுத்தி நற்செயல்கள் செய்து மேலான கதியை அடைய வேண்டும்’’ என்று சிறிது கூட சிந்திப்பதாகத் தெரியவில்லை.

 அதனால் தான் திரைப்படப் பாடல் ஒன்று இவ்வாறு தெரிவிக்கின்றது.
வாழ்ந்து பார்க்க வேண்டும் - மனிதன் மனிதனாக வேண்டும்!
கண், காது, முகம் என உறுப்புகள் அமைந்து விட்டதனாலேயே ஒருவரை மனிதர் என்று ஒப்புக்கொள்ள முடியுமா? இக்கேள்வியை திருவள்ளுவர் தான் நம்மைப் பார்த்துக் கேட்கின்றார்.

 ‘‘உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு’’

  ஆகவே இவ்வுலகில் பிறந்த நாம் பண்பினால் சிறந்து மேலான அறச் செயல்கள் செய்து வாழ்வாங்கு வாழ வேண்டும். பெற்றுள்ள இம்மனிதப் பிறப்பிலேயே அனைத்திற்கும் மூலாதாரம் முதல்வனே என்று தெளிந்து இறை அருட் பணிகளிலே நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அவன் அடி அடைந்து விட்டால் மீண்டும் அவனியில் பிறக்கும் அபாக்கியட் நமக்கு அமையாது.

‘ஏன் பிறந்தோம்? என்ன செய்கின்றோம்? எங்கே செல்கின்றோம்?’ என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டு பயனுள்ள வழியில் இவ்வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

தேடிச் சோறு நிதம் தின்று  பல
சின்னஞ் சிறு கதைகள்  பேசி  மனம்
வாடித் துன்பம்மிக உழன்று - பிறர்
வாடப் பல்செயல்கள் செய்து  நரை
கூழக் கிழப் பருவம் எய்தி  கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்  பல
வேடிக்கை மனிதரைப் போலே  நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ?
என்று பாரதியார் ‘யோகசித்தி’ என்ற பாடலிலே அதி அற்புதமாகப் பாடுகின்றார்.

கற்றலின் பயன் கடவுளைத் தொழுதல் என்று உணர்ந்து, செல்வத்தின் பயன் பிறருக்கு உதவி செய்தாய் என்று அறிந்து, ஆறறிவு வாய்க்கப் பெற்றதின் பயன் ஆண்டவனைத் தொழுது பிறவா நெறி அடைதல் என்று தெளிந்து சீரிய வாழ்வு வாழவேண்டும் என்கின்றனர் சான்றோர்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல பல்வேறு பிறப்புகளில் மீண்டும் மீண்டும் நாம் பிறக்கிறோம் என்கின்றனர் ஞானிகள்.

‘எல்லாப் பிறப்பும் பிறந்து இணைத்தேன்’ என்றும்
‘எண்ணரிய பிறவி’ என்றும்
 ‘‘எழுகடல் மணலை அளவிழன் அதிகம்
எனது இடர் பிறவி அவதாரம்’’ என்றும்
இப் பிறவித்துன்பத்தின் அழுத்தத்தைப் பாடுகின்றனர் அருளாளர்கள்.

‘எத்தனை முறை இம்மனிதன் மீண்டும் பாவங்கள் செய்து பிறந்து கொண்டே இருக்கின்றான். தொடர்ந்து இவனுக்கு கை, கால், கண் வைத்து சிருஷ்டிப்பதே பெரும்பாடாக, இருக்கிறதே! என் கைகளுக்கு ஓய்வு தர மாட்டான் போலிருக்கிறதே’ என்று பிரம்ம தேவரே சலித்துக் கொள்ளும் அளவுக்கு நாம் பிறந்து கொண்டே இருக்கின்றோம் என்கிறார் பட்டினத்தடிகள்.

பிரம்ம தேவர் என்னும் படைப்புக் கடவுளான நான் முகன் மட்டுமா? மீண்டும் மீண்டும் நம்மைப் பத்துமாதம் சுமந்து கண்களை விளக்காக்கி, ரத்தத்தைப் பாலாக்கி, கைகளைத் தொட்டிலாக்கி தாய்மார்கள் உடல் சலித்துப் போய்விட்டனர்.
நாம் பிறந்து பிறந்து கால் சலித்துப் போயிவிட்டோமாம்.

இவ்வாறு கவிச்சுவைததும்ப பிறப்பின் அவலத்தைப் பாடுகின்றார் பட்டினத்தார்.
மாதா உடல் சலித்தாள். வல்வினையேன்
கால் சலித்தேன்வேதாவும் கைசலித்து விட்டானே!  நாதா
இருப்பையூர் வாழ்சிவனே! இன்னம் ஓர்
அன்னைகருப்பை ஊர் வாராமைக் கா.

மேற்கண்ட கருத்தையே கவியரசர் கண்ணதாசன்
எளிமையாகப் புரியும் படி பாடுகின்றார்.
பெற்றவள் உடல் சலித்தாள்!
பேதை நான் கால் சலித்தேன் !
படைத்தவன் கை சலித்து
ஓய்ந்தான் அம்மா!  மீண்டும்
பாவி ஒரு தாய்வயிற்றில்
பிறவேன் அம்மா!

ஒவ்வொரு மனிதனிடமும் எது இருக்கிறதோ இல்லையோ பற்றும், ஆசையும் கட்டாயம் இருக்கும்.
இந்த பொருட் பற்றும், உலக இன்பங்களின் மீது ஆசையும் இருக்கும் வரை தொடர்ந்து மனிதனுக்கு பிறப்புகள்
தோன்றிக் கொண்டே தான் இருக்கும்.

‘சிவபோக சாரம்’ என்னும் நூல் கூறுகின்றது.
ஆசை அறாய்! பாசம் விடாய்!
ஆன சிவ பூசை பண்ணாய்!
நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய்
- சீச்சீ
சினமே தவிராய்! திருமுறைகள் ஓதாய்!
மனமே உனக்கென்ன வாய்!

அலைபாயும் மனத்தை அதன் போக்கில் செல்ல விடாமல், ஆசையையும் பற்றையும் ஆண்டவன் மீது நாம் வளர்த்துக் கொள்வதே பிறவிக்கடலிலிருந்து நம்மைக் கரைசேர்க்கும். என்று திருமுருக கிருபானந்த வாரியார் குறிப்பிடுகின்றார். நமக்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒன்று: ஆகும் வழி. மற்றொன்று: சாகும் வழிஆகும் வழி சென்றால் இறைவனின் பாதத்தை சரணம் அடையலாம்.  பிறவா நிலை பெறலாம். சாகும் வழி சென்றால் கிடைப்பது மரணம் மீண்டும் ஜனனம். சிவத்தைப் பேணி தவத்தைச் செய்வது தான் ஆகும் வழி.
அவ நெறி சென்று வீணே பொழுதைக் கழிப்பது தான் சாகும் வழி.

ஆகும் வழியில் பயணம் மேற்கொண்டு ஆண்டவனின் புகழ்பாட வேண்டும்.
அவன் அடியார்களுக்கு உதவ வேண்டும். நமக்கு அக்கங்கை அமைந்தது எதற்காக?

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்,
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித்து தியாதே
வீழ்க்கவா வினையேன் நெடுங்காலமே!
ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் !
அன்புருகேன் ஆம்+ஆறு ஆகும் வழி என்று பொருள்
சாமாறே விரைகின்றேன். சதுராலே சார்வானே
சாம் + ஆறு சாகும் வழி என்று பொருள்.
திருவள்ளுவர் கூறுகின்றார்.

பிறப்பு என்னும் பேதமை நீங்க, சிறப்பு என்னும் செம் பொருள் காண்பது அறிவு.ஆண்டவனாலேயே அன்னை என்று அழைக்கப் பெற்ற மேலான சிறப்பு வாய்ந்தவர் காரைக்கால் அம்மையார். அவர் கயிலை அடைந்து கண்ணுகள் பெருமான் திருவருள் பெற்றார். அப்போது சிவபெருமான் ‘‘அம்மையாரே! தாங்கள் வேண்டும் வரத்தைத் தருகின்றேன் கேளுங்கள்’’ என்றார்.   
 
அப்பொழுது காரைக்கால் அம்மையார் பொன் வேண்டும். பொருள் வேண்டும் என்றா கேட்டார் ?
ஏனென்றால் கல்வி அறிவு, அனுபவ அறிவு இரண்டும் வாய்ந்தஅம்மையார் இரண்டே வரங்கள் தான் கேட்டார்
என்ன தெரியுமா ?ஐயனே! பிறவாமை வேண்டும்! மீண்டும் பிறப்பு உண்டேல், உன்னை என்றும் மறவாமை வேண்டும்.
மேற்கண்ட வண்ணமே நாமும் கடவுளிடம் வேண்டுவோம்! நமக்காக அருணகிரி நாதர் அருளிச்செய்த அற்புதத் திருப்புகழை நாளும் ஓதி நற்கதி பெறுவோம்.

எருவாய்க் கருவாய் தனிலே உருவாய்
இதுவே பயிராய் விளைவாகி
இவர்போய் அவராய் அவர் போய் இவராய்
இதுவே தொடராய் வெறிபோல
 ஒரு தாய் இருதாய் பல கோடிதாய்  உடனே
அவமாய் அழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா என ஓத அருள் தாராய் !

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்