பின்வரு நிலையணி திருக்குறள் - நீதிநூல் மட்டுமல்ல, நீதி இலக்கிய நூல்!



குறளின் குரல்-123

அணிகள்தான், இலக்கணப்படி அமைந்த ஒரு செய்யுள் நூலை அழகு நிறைந்த கவிதை நூலாக மாற்றுகின்றன. உவமை தொடங்கி எண்ணற்ற அணிகள் தமிழ்க் கவிதைகளை அழகு செய்கின்றன. அணிகளின் சிறப்புக் கருதி அவற்றை விளக்கவென்றே தண்டியலங்காரம் உள்ளிட்ட பல இலக்கண நூல்கள் தமிழில் எழுந்தன. திருக்குறள் ஒரு நீதிநூல் மட்டுமல்ல, அது அற்புதமான இலக்கியமும் கூட.

தான் சொல்ல வந்த நீதிகளை இலக்கிய மெருகோடு சொல்ல விரும்பிய வள்ளுவர் பல அணிகளைப் பூட்டித் தன் அறிவுரைகளை அழகழகாகச் சொல்கிறார். பல குறட்பாக்களில் தமிழ் நயங்கள் கொஞ்சுவதை நாம் பார்க்கலாம். சொல்லணி என்பது அணிகளில் ஒரு வகை.

ஒரு சொல்லே ஒரு செய்யுளில் மீண்டும் மீண்டும் வருமானால் அது படிப்பவர்க்கு ஒரு தனித்த இலக்கிய இன்பத்தைத் தருகிறது. ஒரு சொல் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வரலாம். அல்லாது ஒரு சொல் வெவ்வேறு பொருள்களிலும் வரலாம். இதைப் பொதுவாக `பின்வரு நிலையணி’ என்கிறது தண்டியலங்காரம்.

`முன்வரும் சொல்லும் பொருளும் பல வாயின்
பின்வரும் என்னில் பின்வரு நிலையே!`

என்பது தண்டியலங்கார நூற்பா.
ஒரே சொல் வெவ்வேறு பொருளில் வருவது சொற் பின்வரு நிலையணி எனப்படுகிறது.

`குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்’
(குறள் எண் -965)

என்ற குறட்பாவில் `குன்று’ என்ற சொல் ஓரிடத்தில் `மலை’ என்ற பொருளிலும்
இன்னோர் இடத்தில் `குன்றுதல்’ என்ற பொருளிலும் இடம்பெறுகிறது.
`இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை’
(குறள் எண் - 310)

என்பதில் `இறந்தார்’ என்ற சொல் முதலில் சினத்தை நீக்கியவர்களையும் பின்னர் இறந்தவரையும் சுட்டி நின்றது. அதுபோலவே `துறந்தார்’ என்ற சொல் சினத்தைத் துறந்தவர்களையும் துறவியரையும் என இருவேறுபட்ட பொருளில் வந்தது. சொற்பொருட் பின்வரு நிலையணி என்பதும் பின்வரு நிலையணியில் ஒரு வகை. அந்த அணியில், ஒரு சொல் மீண்டும் மீண்டும் ஒரே பொருளில் வரும். அதுவும் ஒரு தனித்த இன்பத்தைத் தந்து படிப்பவர்களை மகிழ்விக்கும். நாலடியாரில் `வைகல்’ என்ற சொல் `நாள்’ என்ற ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வருவது சொற்பொருள் பின்வரு நிலையணிக்கு எடுத்துக்காட்டாகப் பல அறிஞர்களால் சொல்லப்பட்டுள்ளது.

`வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவார்
வைகலும் வைகல்தம் வாழ்நாள் மேல்
வைகுதல் வைகலை வைத்துணரா தார்.’

வள்ளுவர் ஒரு சொல்லை, ஒரே பொருளைத் தரும் வகையில் மீண்டும் மீண்டும் எடுத்தாண்டு அழகிய குறட்பாக்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.

`சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.’
(குறள் எண் - 200)

`சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்
அச்சொல்லை வெல்லும் சொல்இன்மை அறிந்து.’
(குறள் எண் - 645)

`நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்
நோய் செய்யார் நோயின்மை வேண்டு பவர்.’
(குறள் எண் - 320)

`இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.’
(குறள் எண் - 623)

பின்வரு நிலையணி பயின்று வரும் குறட்பாக்களைப் பற்றிச் சொல்லும்போது, `வள்ளுவரின் கவிப்பண்பு’ பற்றிய தம் கட்டுரையில் டாக்டர் மு. வரதராசனார் `இவை தரத்தால் மேம்பட்டவை எனக் கூறுகிறார். எனவே பின்வரு நிலையணியில் அமைந்த குறட்பாக்கள் மற்ற குறட்பாக்களை விட கூடுதலான இலக்கிய இன்பம் தந்து தரத்தால் உயர்ந்துள்ளன எனக் கருதலாம். தாம் சொல்ல வந்த கருத்தைப் படிப்பவர் மனத்தில் நன்கு பதியும்படிச் சொல்வதற்கு இந்த அணி வள்ளுவருக்குப் பெரிதும் உதவுகிறது. இந்த அணியில் அமைந்த இன்னும் பல குறட்பாக்களில் மேலும் ஒரு சில இதோ:

`துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.’
(குறள் எண் 12)

`செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.’
(குறள் எண் 86)

`நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.’
(குறள் எண் 108)

`பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.’
(குறள் எண் 751)

`தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.’
(குறள் எண் 202 )
`தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.’
(குறள் எண் 236 )

`பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.’
(குறள் எண் 297)

ஏழே வார்த்தைகளை (சீர்களை) உபயோகித்து தாம் சொல்ல வந்த கருத்தைச் சொல்லும் வித்தகர் வள்ளுவர். `கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டிக் குறுகத்தரித்த குறள்’ என்றல்லவா திருக்குறளை இடைக்காடர் புகழ்கிறார்? வள்ளுவர் அந்த ஏழு வார்த்தைகளிலும் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார் என்பது அவரது அபாரமான வெளியீட்டுத் திறனுக்கான அடையாளம்.....
பின்வரு நிலையணியில் அமைந்த புகழ்பெற்ற பழைய நேரிசை வெண்பா ஒன்று உண்டு.

`வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான்
யானுமவன் வஞ்சியான் என்பதனால்
வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும்
வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ!’

வஞ்சி என்பது பெண்ணைக் குறிக்கும் சொல். கூடவே அது ஒரு நாட்டையும் குறிக்கிறது. வஞ்சித்தல் என்ற பண்பையும் குறிக்கிறது. ஒரு தலைவி தன் தோழியிடம் சொல்லும் கூற்றாக அமைந்துள்ளது இந்த வெண்பா.`தலைவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் எனத் தன் ஊரைச் சொன்னான். அவன் வஞ்சியேன் என்றதால் வஞ்சிக்க மாட்டான் எனப் பொருள்கொண்டு நான் அவனுக்கு உடன்பட்டேன்.

ஆனால் வஞ்சி நாட்டைச் சேர்ந்த அவன் வஞ்சிக்க மாட்டேன் வஞ்சிக்க மாட்டேன் என்று சொல்லியும் வஞ்சித்து விட்டான் பெண்ணே!’ என்று தமிழினிமை தோன்ற அங்கலாய்க்கிறாள் தலைவி.பின்வரு நிலையணியில் அமைந்த பாடல்கள் பலவற்றை மகாகவி பாரதியார் எழுதியுள்ளார்.

`துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாத விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத் திருக்கும் எரியே சக்தி
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி
பாம்பை அடிக்கும் படையே சக்தி
பாட்டினில் வந்த களியே சக்தி
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி!’

என மேலும் வளரும் பாடல் எத்தனை சக்தி நிறைந்தது என்று சொல்லத் தேவையில்லை! தமிழைப் பெருமைப்படுத்தி பாரதிதாசன் எழுதிய புகழ்பெற்ற பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பி. சுசீலாவின் குரலில் `பஞ்சவர்ணக் கிளி’ என்ற திரைப்படத்தில் ஒலிக்கிறது. அந்தப் பாடலின் அழகிற்கும் காரணம் பின்வரு நிலையணிதான்.

`தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் -இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!’

*கண்ணதாசனின் பல திரைப்பாடல்களில் பின்வரு நிலையணியைக் காணலாம். பாவமன்னிப்பு திரைப்படத்தில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், பி.சுசீலா குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல் மிகவும் புகழ்பெறக் காரணம் அதில் உள்ள பின்வரு நிலையணி என்ற அழகுதான்.
`அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்...
எப்படிச் சொல்வேனடி...
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான்...
எப்படிச் சொல்வேனடி...
ஏன் அத்தான் என்னைப் பார்அத்தான்
கேள்அத்தான் என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான்
அழைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படிச் சொல்வேனடி ...
பின்வரு நிலையணியில் எழுதப்பட்டு மிகவும் புகழ்பெற்ற கண்ணதாசனின் இன்னொரு திரைப்பாடல் `வீர அபிமன்யு’ படத்தில் இடம்பெற்றுள்ளது.
கே.வி. மகாதேவன் இசையில் பி.பி. னிவாஸ், பி. சுசீலா குரல்களில் ஒலிக்கும் அந்தப் பாடலின் சில வரிகள் இதோ:

`பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன் - அந்த
மலைத்தேன் இவளென மலைத்தேன்
கொடித்தேன் இனிஎங்கள் குடித் தேன் என ஒரு
படித்தேன் பார்வையில் குடித்தேன் ஒரு
துளித்தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
மலர்த்தேன் போல்நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன் பருவத்தில்
மணந்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்...’

என்ற பாடலில் இன்பத் தேன் வந்து பாய்கிறதே காதினில், அந்தத் தேன் என்ற சொல்தான் பின்வரு நிலையணியாக நம்மைச் சொக்க வைக்கிறது. `பலே பாண்டியா’ என்ற திரைப்படத்தில் விஸ்வநாதன்  ராமமூர்த்தி இசையில் பி.சுசீலா, டி.எம்.எஸ்., பி.பி.னிவாஸ், ஜமுனாராணி பாடிய புகழ்பெற்ற `அத்திக்காய்’ பாடலைத் திரை ரசிகர்கள் மறப்பார்களா? அதன் பெருமைக்குக் காரணமும் பின்வரு நிலையணி அதில் அமைந்திருப்பது தான்.

`அத்திக்காய் காய்காய் ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல்
பெண்ணல்லவோ!
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்!
மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?’

கவிதையில் கவிஞர்கள் பயன்படுத்திய இந்த அழகான பின்வரு நிலையணியை உரைநடையிலும் ஒருசிலர் பயன்படுத்தி, தங்கள் எழுத்துக்கு மெருகேற்றியிருக்கிறார்கள். தீபம் நா. பார்த்தசாரதி அவரது அழகிய தமிழ் நடைக்காகப் பெரிதும் போற்றப்படுபவர். அவர் தம் நாவலில் ஒரு பெண்ணைச் சித்திரிக்கும்போது பின்வருமாறு எழுதுகிறார்: `அவள் பார்வையே ஒரு பேச்சாக இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது.’  முதல் பார்வை கண்பார்வையையும் இரண்டாம் பார்வை சமூகப் பார்வையையும் குறிக்கின்றன.

திருக்குறள் ஒரு நீதிநூல் மட்டுமல்ல. அது காலத்தை வென்று நிற்கும் ஓர் இலக்கியம். அறக் கருத்துக்களைப் பல மொழிகளில் பலர் சொல்லியிருக்கக் கூடும். அந்தந்தப் பகுதி அறநெறிகளாக அவை திகழவும் கூடும். ஆனால் உலகம் முழுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அறக் கருத்துக்களை, வெறும் கருத்துக்களாக மட்டுமல்லாமல் அணிநயங்களைக் கலந்து இலக்கியமாகவும் சொன்ன பெருமை நம் திருவள்ளுவருடையது. வள்ளுவம் சொல்லும் கருத்திற்காக மட்டுமல்லாமல், அது சொல்லப்படும் முறைக்காகவும் அதன் இலக்கிய நயங்களுக்காகவும் கூட திருக்குறளைப் பலமுறை படிக்கலாம்.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்