தன்னிகரற்ற தரணி பீடம்-குற்றாலம்



தமிழக சக்தி பீடங்கள்

தமிழகத்தில் அமைந்துள்ள குற்றாலம் பராசக்தி பீடம், அகத்தியரால் வழிபடப்பெற்ற சிறப்புடையது. தேவியின் சக்தி பீடங்களில் இது, பராசக்தி பீடம் என்று வணங்கப்படுகிறது.
திருக்குற்றாலத்தில் அருளும் அம்பிகை, குழல்வாய்மொழி அம்மை என்ற அழகுப் பெயர் கொண்டுள்ளாள். மூலவரான குற்றாலநாதரின் சந்நதிக்கு வடதிசையில் 51 சக்தி பீடங்களில் ஒன்றான தரணிபீடம், யோகபீடம் மற்றும் பராசக்தி பீடம் என்றெல்லாம் அழைக்கப்படும் சந்நதி சிறுகோயிலாக அமைந்துள்ளது.

இது சிவன் சிற்பரையின் மந்திர சக்திகள் அடங்கிய ஆலயம்.இங்கு பராசக்தியானவள் அரி, அயன், அரன் மூவரையும் படைத்து அருளினாள். இவளின் சந்நிதானத்தில் தாணுமாலயப் பூந்தொட்டில் ஆடிக்கொண்டே இருக்கிறது.

மலையுருவாய் மிளிர்கின்ற அம்பிகை, ஆலயத்தினுள்ளே மேரு உருவாகவும் திகழும் சிறப்பைக் கொண்டவள்.திரிகூடமலை என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. இங்கு  நான்கு வேதங்களும் நான்கு வாயில்களாக விளங்குகின்றன.

திருக்குற்றாலம் முதலில் விஷ்ணுத் தலமாக இருந்து, அகத்தியரால் பின்னர் சிவத்தலமாக மாற்றப்பட்டது.சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை குழல்வாய்மொழி அம்மையாகவும், பூதேவியை பராசக்தியாகவும் மாற்றினார் என்பார்கள். இங்கு பராசக்தி, ஸ்ரீசக்ரமேரு அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவிலேயே அருட்சுடரை பரப்புகிறாள்.

பூமாதேவியாக இருந்தவளே இந்த அம்பிகை என்பதால் பூமி எனும் பொருளிலேயே தரணி பீடம் எனும் பெயர் பெற்று விளங்குகின்றது.ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இப்பீடம் இருப்பதாக நம்பிக்கை. எனவே, பௌர்ணமி இரவில் நவசக்தி பூஜை நடத்தப்படுகிறது.அப்போது, பாலும் வடையும் நிவேதனமாக படைக்கப்படுகின்றன.

பராசக்தி உக்கிர ரூபியாக இருப்பதாலேயே இவளுக்கு எதிரேயே காமகோடீஸ்வரர் எனும் திருப்பெயரில் ஈசன் லிங்கமாக பிரதிஷ்டை ஆகியுள்ளார். பௌர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனையோடு விசேஷ பூஜைகள் நிகழ்த்தி வழிபட்டால் எண்ணியது ஈடேறும்.

இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தின்போது குற்றாலநாதர், குழல்வாய்மொழி இருவரும் அகத்தியர் சந்நதிக்கு அருகே எழுந்தருளி, அகத்தியருக்கு திருமணக்காட்சி
தந்தருள்கின்றனர்.

குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூட நாதர், திரிகூடாசலேஸ்வரர் என்றெல்லாம் பல்வேறு திருப்பெயர்களில் அழைக்கப்படுகின்றார் இத்தல ஈசன். சுயம்பு லிங்கமாக கிழக்கு திக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அதுபோல குழல்வாய் மொழியம்மை சந்நதி, ஈசனின் சந்நதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை அழகும் அருளுமாக கோலோச்சுகின்றாள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையே தென்காசியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து  7 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.