உள்ளம் கனிந்தவர்கள்!
வணக்கம் நலந்தானே!
அடிக்கடி நாம் காணும் காட்சிதான். ஆனால், சட்டென்று கடந்து சென்று விடுகின்றோம். பேருந்துகளிலும், ரயில்களிலும், தெருக்களிலும், வரிசைகளிலும் முதியோர்கள் வந்து நிற்கும்போது அவர்களுக்குரிய இடத்தை அளிக்காது அவர்களை நிற்க வைத்து வேடிக்கை பார்க்கின்றார்கள்.
 பெரும்பாலும் பேருந்துகளிலும் ரயில்களிலும் வயதானவர்கள் அருகே நிற்கும்போதும் அவர்களால் ஒரு கட்டம் வரையிலும் நிற்க முடியாமல் நெளியும்போது அருகிலுள்ளோர் துளிகூட இரக்கமற்று அப்படியே அமர்ந்து கொண்டிருப்பதை பார்க்கின்றோம். முக்கியமாக இளைஞர்களும், யுவதிகளும்கூட அப்படியே இருக்கிறார்கள். முதியோர்கள் மட்டுமல்ல… கர்ப்பிணிப் பெண்கள் நின்றபடியே பயணிக்கும்போதுகூட பெண்களே அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றார்கள். குறிப்பாக ரயில்களில் பெரியவர்கள் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு நேராக கால்களை நீட்டியபடி அமர்ந்திருப்பார்கள். பலசமயம், ‘‘இப்படி அமராதீர்கள். உங்கள் வீட்டில் பெரியவர்கள் அமர்ந்திருந்தால் இப்படித்தான் செய்வீர்களா’’ என்று கேட்ட பெரியவரை ரயிலில் வைத்து அவமானப்படுத்தியவர்களை பார்த்திருக்கிறேன்.
ஒரு முன்னேறிய சமூகம் அந்த முன்னேற்றத்தின் பிரதிநிதிகளாக விளங்கிய மக்களான முதியோர்களை மதிக்கும். இவர் யார் என்று தெரியாது. ஆனால், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏதேனும் ஒருவகையில் இவர் உதவியிருக்கலாம் என்று பார்க்கும். அப்படித்தான் பார்க்க வேண்டும். உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நாம் பெரியவர்களுக்கும் முதியோர்களுக்கும் மரியாதை செலுத்தி வந்திருக்கின்றோம். இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியபடி இருக்கிறார்கள்.
கல்யாணத்துக்கு அப்புறம் தனிக்குடித்தனம்தானே… என்று கேட்பதிலிருந்து தொடங்குகிறோம். நாம் பெரும் சேவைகளை மனிதாபிமானத்தோடு முன்னெடுப்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். மிக மிகச் சாதாரணமாக நம்முடைய அன்பையும் இரக்க உணர்வையும் வெளிப்படுத்த வேண்டிய தருணங்கள் நிறைய உள்ளன.
சாலையில் ஒருவர் தடுக்கி விழுகிறார் எனில் அவருக்கு ஒரு கை கொடுத்து தூக்கி விடுவதுபோலத்தான் இதெல்லாம். சமீபத்தில் ஒரு விழாவில் ஒலிபெருக்கியின் வாயிலாக, ‘‘ஐம்பதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் முதலில் சென்று உணவருந்திவிட்டு வாருங்கள்’’ என்று அறிவித்தார்கள். அவர்கள் உண்ட பிறகு மற்ற அனைவரும் சென்றனர்.
மரபுக்கும், கலாச்சாரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் பேர்போன நம்நாட்டில் இன்று வயதானவர்கள் பல இடங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். வீட்டிலிருந்து முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றார்கள். பெரியோர்கள் சொற்களை கேட்க முடியாத பொறுமையின்மையோடு இருக்கின்றார்கள். முதியோர்களிடம் எப்போதும் கனிவு கொள்வோம். நாமும் கனிவோம்.
கிருஷ்ணா
பொறுப்பாசிரியர்
|