ஆணவத்தை அழித்த ஆறுமுகன்



திருச்செந்தூர் சூரசம்ஹாரம்  2-11-2019

பிரம்மனின் இரு புதல்வர்கள் தட்சன், காசிபன். காசிபன் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றான். அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியாரால்  அனுப்பப்பட்ட மாயை என்ற பெண்ணிடம் கொண்ட மோகத்தால் தான் பெற்ற தவ வலிமைகளை இழந்தான். இந்த மாயைக்கும், காசிபனுக்கும் பிறந்தவர்கள்  சூரபத்மன், சிங்கமாசூரன்,தாரகன் ஆகிய மகன்களும் அஜமுகி என்ற மகளுமாவர்.

இந்த நால்வரும் சிவனை நோக்கி தவமிருந்தனர். அதன் பயனாக பல வரங்களைப் பெற்றனர். இவர்களில் சூரபத்மன் தான் கொண்ட கடும் தவத்தால் 108 யுகம்  உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திரஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு யாராலும் இறப்பு நேரக்கூடாது என்றும் கேட்டான்.  மண்ணில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் மரணம் அடைந்தே தீரவேண்டும். இது தான் பிரபஞ்ச நியதி என்று சிவன் கூற, அப்படியானால் எனக்கு பெண்  வயிற்றில் பிறவாத பாலகனால் இறப்பு நேரவேண்டும் என்று சூரபத்மன் கூறினான். அதற்கு சிவனும் அப்படியே ஆகட்டும் என்றான். எந்த நிலையிலும் தனக்கு மரணம் நேரப்போவதில்லை என்று இறுமாப்புக்கொண்டு  கொடுங்கோல் ஆட்சி புரிந்தான்.

திருச்செந்தூர் கடலைத்தாண்டி அமைந்திருந்த  வீர மகேந்திரபுரியைத் தலைநகராகக் கொண்டு சூரபத்மன் ஆட்சி புரிந்து வந்தான். அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம்  முறையிட்டனர். சினம் கொண்ட சிவனார் தனது நெற்றிக் கண்ணை திறந்தார். அதனிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று  சரவணப் பொய்கையில் சேர்த்தார். தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக தோன்றின. அவர்களை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு  குணங்களைக் கொண்ட ஆறுமுகனை பார்வதி தேவி ஓர் உரு ஆக்கினாள்.  

தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்த முருகன்,  தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத்  திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரனோ, பாலகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் எனை வீழ்த்த முடியாது என்று வீராவேசமாகக் கூறினான். மறுகனமே தாய்,  தந்தை ஆசி பெற்று, அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து சக்திவேல் பெற்றுக்கொண்டு, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி வசித்து  வந்த சூரனை வீழ்த்த புறப்பட்டார் முருகபெருமான். தன் உருவத்தைப் பெரிதாக்கி பாலகன் முருகனை பயமுறுத்தினான். அவன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன்.

உடனே அவன் மகா  சமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான்.  நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பின்  வாங்கியது. முருக பெருமான் எதிரே நெருங்கி வருவதைக்கண்ட சூரபத்மன் மாமரமாய் மாறி நின்றான். அவன் மாயத்தோற்றத்தை அறிந்த முருகபெருமான் தனது  சக்தி வேலால் வீழ்த்தினார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்ததும் சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன்.  அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, நற்கதி பெற வேண்டும்  என்றான்.

அதன்படியே ஆகட்டும் என்றார் முருகபெருமான். சூரபத்மனின் ஒரு பாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி தனது வாகனமாகவும்,  கொடி சின்னமாகவும் ஆக்கினார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருக பெருமான் கடற்கரையில் பஞ்ச லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். திருச்செந்தூர் கோயில் மூல ஸ்தானத்தின்  பின்பகுதியில் முருக பெருமான் பூஜித்த சிவலிங்கத்தைக் காணலாம். தேவர்களுக்கு இடையூறு செய்த சூரபத்மனை முருகபெருமான் அழித்ததால், அதற்கு  கைமாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருக பெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். சூரபத்மனை முருகபெருமான் சம்ஹாரம் செய்தது  திருச்செந்தூரில்.

அதனை நினைவு படுத்தும் விதமாத இத்தலத்தில் சூரசம்ஹார விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு சஷ்டி விழா 28.10.2019 அன்று  துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் நவ. 2ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடக்கிறது. சம்ஹாரம் முடிந்தபின் சந்தோச  மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடந்து, கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்வார்.  அன்றிரவு 108 மகாதேவர் சந்நதி  முன் சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடக்கும். பின்னர் சஷ்டி தகடுகள் கட்டப்படும். மறுநாள் (3ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசுக்  காட்சிக்கு புறப்பாடு நடக்கிறது.

மாலை 3 மணிக்கு திருக்கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி 6.30 மணிக்கு தெற்கு ரதவீதி, மேல ரதவீதி (5ம்  சந்தியில்) மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. இதையடுத்து இரவில் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் கோயில் வளாக  மேலக்கோபுரம் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் வைத்து நடக்கிறது. 4ம் தேதி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள்  பூம்பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம், திருவீதி வலம் வருவர்.  5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் குமரவிடங்க பெருமான்  தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சல் காட்சி நடக்கிறது. 8.11.2019 அன்று மாலையில் சுவாமிக்கு மஞ்சள் நீராட்டும், சுவாமி அம்பாள் திரு வீதி வலம் வருதலும்  நடக்கிறது.

சு.இளம் கலைமாறன்