யாளி வாகனம்



சிலிர்த்துக் கொண்டிருக்கும் பிடரியுடன் அகன்ற முகமும், அதில் துருத்திக்  கொண்டு பிதுங்கி நிற்கும் விழிகளும், நீண்ட துதிக்கையும் கொண்ட விலங்கு யாளி.  இதன் உடன் சிங்கத்தைப் போன்றது. பறப்பதற்கான இறக்கைகளைக் கொண்டது. உறுதியான கால்களும் அவற்றில் கூரிய நகங்களும் நீண்ட தூக்கிய வாலையும்  கொண்டது.

யாளிகள் வலிய யானைகளைக் கொன்று தின்பவை. அடர்ந்த காட்டில் வாழ்ந்தவை. கால வெள்ளத்தில் காணாது போன விலங்குகளில் யாளிகளும் ஒன்றாகும்.  இலக்கியங்கள் யாளியின் பெருமைகளைப் பேசுகின்றன. யாளியின் பெயரால் கோவை மாவட்டத்தில் மலை ஒன்று உள்ளது. ஆளிகள் வாழ்ந்த இந்த மலையின்  காவல் தேவதை யாளியம்மன் என்றே அழைக்கப்பட்டாள். அந்த மலையில் தோன்றும் ஆறு ஆளி ஆறு எனப்பட்டது.

ஆளி என்பது அனேக சிங்கங்களின் பலத்தையும் வலிமையையும் கொண்டது. பெரிய வடிவான இது அச்சமூட்டுவது. கால ஓட்டத்தில் மறைந்து விட்டாலும்,  கலை உலகில் நீங்காத இடம் பிடித்து விட்ட விலங்காக இருப்பது ஆளியாகும். தூண்களில் நெடிய சிற்பங்களாகவும், அலங்கார வேலைகள் துணைச்  சிற்பங்களாகவும் ஆளிகளைக் காண்கிறோம். தமிழில் ஆளி என்பது வடமொழியில் திரிந்து யாளி என்று அழைக்கப் படுகிறது.

ஆளி என்பது துர்க்கைக்கே உரிய வாகனம் என்றாலும், அனைத்துத் தெய்வங்களும் அதில் ஏறி பவனி வருகின்றனர். கோயில்களில் உள்ள யாளி வடிவங்கள் பின்  கால்களை ஊன்றிக் கொண்டு முன் காலைத் தூக்கி தாவிப் பாயும் நிலையிலேயே அமைக்கப்படுகின்றன. வால் தூக்கி வளைந்துள்ளது. முன்னம் கால்களிலும்,  பின்னங்கால்களிலும் கூரிய நகங்கள் காணப்படுகின்றன. அத்துடன் துணை நகங்களின் தொகுதியும் கொண்டுள்ளது.

முகம் சிங்கத்தின் முகமும், யானையின் முகமும் இணைந்து தோன்றும் கலவை யாக இருக்கிறது. துதிக்கையை ஒட்டி நீண்ட தந்தங்களும், வாயில் வளைந்த  பற்களும் காணப்படுகின்றன. துருத்தி விரித்து வெருட்டும் கண்களில் கனல் பறக்கிறது. அதன் வலிமையைக் காட்ட அது தன் துதிக்கையால் பற்றி அதைத்  தூக்குவது போல் அமைத்துள்ளனர். யானை அஞ்சி அலறும் கோலத்தில் அமைக்கப்படுகிறது.

ஆளி என்ற சொல் ஆளி என்ற விலங்கைக் குறிப்பதுடன் ஆளும் அரசனையும் குறிக்கிறது. சிவபெருமானை ஆளியின் மீது அமர்த்தி விழா காண்பவர் அரச  போகத்தை அடைந்து சுகமாக இருப்பதுடன் அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமையைப் பெறுவர் என்று நம்புகின்றனர். சிவபெருமான் யாளி மீது வலம் வரும்  போது அம்பிகை சிங்க வாகனத்திலும், விநாயகரைச் சிறிய சிங்க வாகனத்திலும்.

வள்ளி தெய்வயானை உடனான முருகனைப் பெரிய புலி வாகனத்திலும், சண்டேஸ்வரரை சின்ன புலி வாகனத்திலும் அமர்த்தி உலாவரச் செய்கின்றனர். யாளி  வாகனமானது, எதிர்முக வாகனம், பக்கவாட்டு வாகனம், ஆகிய இரண்டு நிலைகளிலும் அமைக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தங்கயாளி  வாகனமும், வெள்ளி யாளி வாகனமும் உள்ளன. சில இடங்களில் யாளியோடு போரிடும் வீரனையும் அமைத்துள்ளனர்.