குதிரைச் சாமி



அருணகிரி உலா-88

அருணகிரி உலாவின் நமது அடுத்த இலக்கு, மாணிக்கவாசகருக்காக ‘ஞான பிரசங்கம்’ செய்த ஆத்மநாதர், யோகாம்பிகையுடன் உறையும் திருப்பெருந்துறை  எனும் திருத்தலமேயாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறத்தாங்கியிலிருந்து 16 கி.மீ தொலைவிலுள்ளது இத்தலம். கோயிலின் பெயராலேயே தலமும் இன்று ஆவுடையார் கோயில்  என்று அழைக்கப்படுகிறது. சொல்லில் அடங்காத அழகைத் தாங்கிய எண்ணற்ற சிற்பங்கள் கொண்ட இக்கோயில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்வது  அதிசயமில்லை. பிற்காலத்தில் மாணிக்கவாசகர் என்று இறைவனால் பெயர் சூட்டப்பட்ட திருவாதவூரர் இங்கு குருந்த மரத்தடியில் வீற்றிருந்த சிவபெருமானிடம்  ஞானோபதேசம் பெற்று திருவாசகம் பாடியருளியதால் திருவாசக அன்பர்களின் முதன்மைத் தலமாகவும் இது விளங்குகிறது. திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளில்  சிவபுராணம் உட்பட 20 பகுதிகள் இத்தலத்தில் பாடப்பட்டவையே.

திருப்பெருந்துறை என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்று பார்ப்போம். சுகுண பாண்டியன் எனும் அரசன் காலத்தில் ஆலய வழிபாடுகள் எங்கும் சிறப்புற  நடைபெற்றன. முந்நூறு வேதியர்களைப் பணியிலமர்த்தி அவர்களுக்குத் தேவையான நிலங்களை மானியமாக அளித்தான் அரசன். பின்னால், கௌமார  பாண்டியன் காலத்தில், உலுண்டாக்ஷன் எனும் சிற்றரசன் வேதியர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்களைப் பறித்துக் கொண்ட போது வேதியர்கள் அல்லலுற்றனர்.  இறைவனே எவரும் அறியாமல் பரமசாமி என்ற பெயரில் முன்னூற்று ஓராவது வேதியராகத் தோன்றித் தலைமை தாங்கி அரசனிடம் சென்றார்.

‘‘இது உங்கள் நிலம் தான் என்பதற்கு என்ன அத்தாட்சி என்று அரசன் கேட்ட போது ‘எங்கள் நிலத்தில் எங்கே தோண்டினாலும் ஊற்று நீர் பெருக்கெடுத்து  வரும்’’ என்றார் பரமசாமி. அருகிலுள்ள சுவேதநதி ( வெள்ளாறு) யை மட்டுமே நம்பியிருந்த வேதியர்கள், பரமசாமியின் உண்மைக்குப் புறம்பான பதிலைக்  கேட்டு நடுநடுங்கினர். அரசன் குறிப்பிட்ட இடத்தில் பரமசாமி நிலத்தைத் தோண்ட நிலத்தடி நீர் பெருக்கெடுத்து வந்தது கண்டு அனைவரும் திகைத்தனர்.  இவ்வாறு இறைவனருளால் நீர் பெருக்கெடுத்து வந்த இடமே ‘திருப்பெருந்துறை’ எனப் பெயர் பெற்றது. அரசன் வேதியர்களுக்கு நிலத்தை மீட்டுக் கொடுத்தான்.

ஊரில் தங்கியிருந்து சிலகாலம் குழந்தைகளுக்கு வேதம் கற்றுக் கொடுத்தார் பரமசாமி. தினமும் ஒரு வீட்டிலிருந்து புழுங்கலரிச் சாதம், பாகற்காய்க் குழம்பு,  முளைக்கீரை (அ) தூது வளைக்கீரைச் சுண்டல் இவை பரமசாமிக்கு அளிக்கப்பட்டு வந்தன. திடீரென ஒரு நாள் மறைந்து போன இறைவன், கோயிலில் இதே  உணவுகளைத் தொடர்ந்து நைவேத்தியமாக அளிக்கும்படி அசரீரியாக உணர்த்திச் சென்றார். இப்போது ஆத்மநாதர் திருக்கோயிலை நோக்கிச் செல்கிறோம்.  கோயிலின் முன்புறம் தெற்கு ரத வீதி உள்ளது. அதனை ஒட்டி உள்ள மண்டபம் ரகு நாத பூபாலன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது.

இதன் தூண்களில் நரசிம்மர், காளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வேலாயுதன், ரிஷபாந்தகர் மற்றும் சங்கர நாராயணரின் உருவங்கள் உள்ளன. இறைவனும்  இறைவியுமே அருவமாக விளங்கும் இக்கோயிலில் கொடி மரம், நந்தி, பலிபீடம் போன்றவை இல்லை. வாதவூராரருக்கு இறைவன் குருந்தமரத்தடியில் உபதேசம்  செய்ததால் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் தட்சிணா மூர்த்தி வடிவமும் இங்கு கிடையாது. அகோர வீர பத்திரர், அக்னி வீரபத்திரர், துவாரபாலகர்கள்,  நான்கு குதிரை வீரர்கள் ஆகியோரின் கம்பீரமான சிலைகளைக் கண்டு வியக்கிறோம்.

அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் கிழக்கு நோக்கிய தனிச் சந்நதியில் மாணிக்கவாசகர் வீற்றிருக்கிறார். இங்கு இவர் நந்திகேசுர மாணிக்கவாசகர் என்று  அழைக்கப்படுகிறார். இதன் காரணத்தைத் திருப்பெருந்துறைப் புராணம் விளக்குகிறது. நந்தி கணத்தவர் ஆயிரவருக்குச் சிவபிரான் ஆகமப்பொருளை உபதேசித்துக்  கொண்டிருந்த போது, ஒருவர் கருத்து மட்டும், ஆடம்பர வீதியுலா சென்று கொண்டிருந்த இந்திரன் மேல் நிலைத்தது. அது கண்ட இறைவன் அவரைப் பூமியில்  பிறந்து சகல போகங்களையும் அனுபவித்து விட்டுத் தன்னிடம் வருமாறு ஆணையிட்டார்.

மன்னிப்புக் கோரி அழுது அரற்றிய அவரை நோக்கி ‘‘பூவுலகில் பிறந்த செல்வ  போகங்களையெல்லாம் அனுபவித்திருக்கும் போது தக்க வேளையில் உம்மைத்  தடுத்தாட் கொள்வோம். தலங்கள் தோறும் சென்று எம் புகழைப்பாடுவாயாக’’ என்று கூறி மறைந்தார் இறைவன். அந்த நந்தி கணத்தவர்தான், திருவாதவூரில்  பிறந்த, பின்னால் இறைவனால் குருந்தமரத்தடியில் ஞானோபதேசம் செய்யப் பெற்று மாணிக்கவாசகர் எனப் பெயர் பெற்றார். இவரே இக் கோயிலின் நந்தியாகக்  கருதப்படுகிறார். ஏழு நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் அருகில் வருகிறோம்.

முன்பு ஐந்து நிலைகளாக இருந்த ராஜ கோபுரத்தை மாற்றி திருப்பணி செய்து ஏழு நிலைகளாக்கி 27- 6- 1990 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன்  வடக்குப்புறம் வடகிழக்குமுனையில் கோபுர மாடத்தில் கோபுரக்குமரர் வீற்றிருக்கிறார். நாம் நிற்குமிடமே கோபுரக் குமரர் வீற்றிருக்கிறார்.  நாம் நிற்குமிடமே  மூன்றாம் பிராகாரம். இதன் தென்மேற்கு மூலையில் வெயிலுகந்த விநாயகர் கிழக்கைப் பார்த்து வீற்றிருக்கிறார். மூன்று விநாயகர் திருவுருவங்கள் உள்ளன.  நடுவில் உள்ள பிரதான மூர்த்தியை வணங்கிய பின்னரே கோயிலுள் செல்ல வேண்டும் என்பது மரபு. தல புராணம் இவரை ‘வெயிலு கந்த மதக்களிறு’  என்கிறது.

இவரே வாதவூரரை, எல்லாம் கடந்த அரூபமான நிர்க்குணனான பரப்பரமத்திற்குக் கொயில் கட்டும்படி பணித்தார். ‘‘மூலாதாரத்தில் ஆவுடையாரை வைத்து [  ரிஷபம்) அதற்குமேல் வெற்றிடமாக இருக்கும்படி அமைத்து ஆத்ம நாதராக வழிபாடு செய்வாய் ; குரு நாதராக வந்து என் தந்தை உபதேசம் செய்வார்; அதன் பின்  கோயிலைக் கட்டுவாயா’’ என்று இவ்விநாயகரே மாணிக்க வாசகரைப் பணித்தாராம். இவர் மணிவாசகர் கனவில் மும்மூர்த்திகளாகக் காட்சி அளித்தமையால்  இங்கு மூன்று விநாயகர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பர்.

கோபுரத்தின் உள் வலப்புறம் வந்து பார்த்தால் ‘‘கோபுரக்குமாரர் எனப்படும் முருகனைக் காணலாம்’’ விநாயகரை வணங்கி மீண்டும் கோபுரவாசலுக்கு வந்து,  கருவறைக்கு நேர் எதிரே காணப்படும் பஞ்சாட்சர சபையை அடைகிறோம். இதற்குக் கனக சபை என்ற பெயரும் உண்டு. நடுவில் சதுர அமைப்பும், நான்கு புறமும்  தாழ்வார அமைப்பும் கொண்ட மண்டபம் இது. இங்குள்ள தூண்களில் நடுநாயகமாக நம் கண்களைக் கவர்பவவ் குதிரைச்சாமி. இவர் தவிர மாணிக்கவாசகர்,  அரிமர்த்தன பாண்டியன் சிற்பங்களும் உள்ளன. அமைச்சர் கோலத்திலுள்ள மணிவாசகர்க்கும், குதிரைச் சாமிக்கும் தினசரிபூஜைகள் நடைபெறுகின்றன. குதிரைச்  சாமி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அநேகம்.

ஈசனின் அறுபத்து நான்கு வடிவங்களுள் என்று அச்வாரூட மூர்த்தி [ பரியேறும் பெருமாள்] ‘‘நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாயமெல்லாம் நிகழ்வித்து பெரிய  தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறாயன் ’’ என்று மேலே எழுதிவைக்கப்பட்டுள்ளது. [ திருவாசகம்] புதிய குதிரைகளை ஆவணி மூல  நாளன்று கொண்டு வருவதாக மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியின் படி [ நரிகளைப் பரிகளாக்கி] ஒரு குதிரைப் படையை மதுரைக்கு அழைத்து வந்தார்  சிவபெருமான். மற்ற வீரர்களுக்கு நரிகளே பரிகளாகி வந்த போது இறைவனுக்கு மட்டும் வேதமே பரியாகி வந்ததாம் ! கம்பீரமான குதிரை வீரனாக பெருமான்  வந்ததை அருணகிரியார் பலவாறாகப் பாடியிருக்கிறார்.

‘‘வாதவூரனை மதித்தொரு குருக்களென
ஞானபாதம் வெளியிட்டு நரியிற் குழுவை
வாசியாமென நடத்துவகையுற்று…’’
[மதுரை]

‘‘நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
கையில் பிடித்தெதிர் நடத்திடும் ஈசன்………….’’
[பொதுப்பாடல்]

‘‘வாசிவாணிகனெனக் குதிரை விற்று மகிழ்
வாதவூரன் அடிமைக் கொளு க்ருபைக் கடவுள்…’’
[சோலைமலைத் திருப்புகழ்]

வள்ளலார் பாடுகிறார்:-

‘‘திருவாதவூரர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே
வெருவாத வைதிகப்பாய்பரி மேற்கொண்டு மேவி நின்ற
ஒருவாத கோலத்து ஒருவா! அக்கோலத்தை உள் குளிர்ந்தே
கருவாத நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவிலே ’’

( அந்தக் காட்சியை என் கனவிலேனும் காட்டு என்று இறைஞ்சுகிறார்!)

இறைவனின் பரியேறும் கோலத்தைச் சிற்பி வடித்திருக்கும் அழகை உற்றுப் பார்த்தால், அந்த சிற்பியின் பாதங்களையாவது இறைவன் கனவில் காட்ட மாட்டாரா  என்று எண்ணத் தோன்றுகிறது! எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் புதிது புதிதாக ஒரு அழகு தோன்றுகிறது. இவரைத் தான் மக்கள் அன்புடன் குதிரைச் சாமி  என்று விளிக்கின்றனர். ஈசன் செலுத்தும் குதிரையைத் தான் வள்ளலார் ‘வெருவாத வைதிகப் பாய் பரி’ என்று குறிப்பிடுகிறார்.

குதிரை வீரனாக எம்பெருமான் அமர்ந்திருக்கும் கம்பீரம், கையில் பிடித்திருக்கும் ஈட்டி, கடிவாளக் கயிறு, கை நரம்புகள், காலை வைத்திருக்கும் குதிரைச் சேணம்  என்று எதைப் பார்த்தாலும் பிரமிப்பு ஏற்படுகிறது. பாய்ந்து வரும் வேதக் குதிரையின் வாய், பற்கள் தெரியும் படித் திறந்திருப்பதைச் சிற்பி வடித்திருக்கும் அழகை  நாமும் வாய் திறந்தபடி பார்க்கிறோம்! பஞ்சாட்சர மண்டபத்தின் மேற்கில் அமைந்த பெரிய சந்நதியில் மணிவாசகர் உள்ளார். இவரைச் சிவமணைந்த  மாணிக்கவாசகர் என்பர். இதன் முகப்பிலுள்ள தூண்களில் நவக் கிரகங்கள் உள்ளனர். மற்றோர் தூணில் சிவராத்திரி புராணங்களையும் காணலாம்.

இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்ததும் இரண்டாம் பிராகாரத்தை அடைகிறோம். இதன் நான்கு மூலைகளிலும், நான்கு விநாயகர் திரு உருவங்களைக்  காணலாம். தெற்கிலுள்ள விநாயகர் அன்னபூரணிக்கருகில் அமர்ந்திருப்பதால் அன்னபூரணி விநாயகர் எனப்படுகிறார். வடமேற்கிலுள்ள விநாயகர் கோபாலக்  கட்டளை விநாயகர் எனவும், வடகிழக்கு முனையிலுள்ளவர் நடன கணபதி எனவும் அழைக்கப்படுகின்றனர் இங்குள்ள வாயிலின் இருபுறமும் இரண்டு  விநாயகர்கள் உள்ளனர். இது இடைக்கட்டு வாசல் எனப்படும். முதல் கோபுர வாயிலை ஓட்டியபடி தில்லை மண்டபம் உள்ளது.

இது நடன சபை எனப்படும். இங்கு மந்திரியும் துறவியும் இணைந்த  கோலத்தில் மணிவாசகர் காட்சி தருகின்றார். [ சிவனிடம் உபதேசம் பெற்ற பின்னர், அவரே  மாணிக்கவாசகரை அமைச்சர் கோலம் பூண்டு அரசனிடம் சென்று ஆவணி மூல நாளில் குதிரைகள் வந்து சேரும் என்று கூறிவிடும் படி ஆணையிட்டார்]. முதல்  பிராகாரத்தை அடைகிறோம் . நடுவில் தெற்கு நோக்கி நிற்கும் மூலவரான ஆத்ம நாதர் சந்நதி உள்ளது. கருவறையில் ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டுமே  உள்ளது. அடியார்கள் கண்டு உய்வதற்காக தங்கக் குவளை ஒன்று மேலே சாத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக, சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனி மூன்று பகுதிகளாக அமைந்திருக்கும். மேலே இருப்பது குழவி போன்ற பாணம்; அதன் அடியில் வருவது  சக்தி பீடம். அதற்கு கீழே வருவது பிரம்ம பீடம். இங்கு பாணம் இல்லை. சக்தி பீடம் உள்ளது. உருவம் இல்லாத அருவமாக, வெயிலுவந்த பிள்ளையார் கூறியபடி  ஆன்மோபதேசம் செய்த  இறைவன் ஆத்மநாதர் என்ற பெயர் தாங்கி இருக்கிறார். ஆ+ உடையார் =( பரமனைத் தாங்கும்) ரிஷபம் - மாடுகளுக்கெல்லாம்  தலைவன். அதன் மேலே வெற்றிடம் - அனைத்திற்கும் மூலமான பரவெளி .

எனவே இத்தலம் ஆவுடையார் கோயில் எனப்படுகிறது. ஆவுடையாரின் பின்புறம் சுவரில் 27 நட்சத்திர தீபங்களும், சூரியன் - சந்திரன் - அக்னி எனும்  முச்சுடர்களும் உள்ளன. கருவறை ஆனந்த சபை எனப்படுகிறது. அதை அடுத்த அர்த்த மண்டபம் சித்சபை; அதற்கடுத்த அமுத மண்டபம் எனும் சத்சபையில்  படைகல்லில் அன்னதானம், ஆவி பறக்கச் சுடாகப் பரப்பி, பட்சணங்கள், பாகற்காய் குழம்பு, முளைக்கீரைச் சுண்டல் இவை நை வேத்தியம் செய்யப்படுகின்றன.  வந்திக் கிழவி அளித்த புட்டை உண்ட இறைவனுக்குப் புட்டும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

சுமார் ஏழு அடி நீளமுள்ள படைகல்லில் அன்னபூரணி மந்திர வடிவமாக நிலைப்படுத்தப்பட்டுள்ளாள். இப்படைகல்லில் நிவேதிக்கப்படும் உணவு அன்னபூரணியின்  பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இறைவனுடைய சக்தியாகிய அன்னபூரணி உயிர்களின் உடற்பசியைத் தீர்க்க உணவு அளிக்கிறாள். அத்துடன் ஞானத்தையும் ஊட்டி  ஆன்ம தாகத்தையும் தணிக்கிறாள்.

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி