சுகம் தரும் சுக (பச்சைக் கிளி) வாகனம்



பச்சை வண்ணத்துடன் இருக்கும் கிளி அழகிய சிறிய வடிவு கொண்ட பறவையாகும். எளிதில் மனிதர்களோடு பழகித் தோழமை கொள்ளும் இயல்பை உடையது.  வீடுகளில் பயமின்றித் திரிவது. பெண்கள் கிளியைப் பழக்கித் தனக்குத் துணைக்கு வைத்துக் கொள்கின்றனர்.

மனம் இன்பத்தில் திளைத்திருப்பதன் அடையாளம் பச்சைக் கிளியாகும். எந்நாளும் தாங்கள் இன்பத்தில் திளைத்திருப்பதைக் குறிக்கும் வகையில் பெண்கள்  கிளியைத் தோளிலும் கைகளிலும் ஏந்தியுள்ளனர். மதுரை மீனாட்சி, ஆண்டாள் போன்ற தெய்வங்கள் கிளியை ஏந்தியுள்ளனர். ஆலயங்களில் விளக்குகளை ஏந்தி  நிற்கும் நாச்சியார் திருவுருவங்களில் அவர்கள் இறைவன் சந்நதியில் இன்பமுடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் அவர்களின் தோள்களில் கிளிகளை  அமைத்துள்ளனர்.

தெய்வங்களை அலங்கரிக்கும் போது அவர்களின் மாலைகளில் தோளுக்கு நேராக அழகிய சிறிய கிளிகளின் வடிவங்களையும் பொருத்துகின்றனர். கிளி சுகத்தின்  அடையாளமாக இருப்பதால், வடமொழியில் அது சுகம் என்றே அழைக்கப்படுகிறது. காதல் இன்பத்தை வழங்கும் தெய்வமான மன்மதன் கிளியை வாகனமாகக்  கொண்டிருப்பது இங்கே சிந்திக்கத் தக்கதாகும். அவனைச் சுக வாகனன் என்றே அழைக்கின்றோம். தாம் வணங்கும் தெய்வங்களைத் தமக்கு இனிய சுகங்களை  வழங்கி, எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டு மென்ற பிரார்த்தனையின் குறியீடாக அவற்றைக் கிளி வாகனத்தில் அமர்த்தி உலாவரச் செய்கின்றனர்.

குறிப்பாக, பெண் தெய்வங்களைக் கிளி வாகனத்தில் அமர்த்தி உலா வரச் செய்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தங்கத்தாலான கிளி வாகனம்  இருக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட கிளி வாகனங்கள் பச்சை வண்ணம் பூசப்பட்டு, வனப்பூட்டப்பட்டுள்ளன. இதன் தலையில் அழகிய கொண்டை இருக்கிறது.  இக்கிளி தனது அலகில் நீண்ட காம்பைக் கொண்ட மலரைப் பற்றியுள்ளது. கிளியின் மீது அமர்ந்து வரும் தேவியரைத் தொழுவதால், மனதில் இன்பம்  பொங்குகிறது. இல்லற வாழ்வில் சுகம் கூடுகிறது.

தெய்வங்களின் மாலைகளில் கிளிகள்

தெய்வங்களுக்கு அணிவிக்கும் மாலையில் தெய்வங்களின் இரண்டு தோள்களுக்கும் மேலே அழகிய கிளிகள் பொருத்தப்படுகின்றன. இவை நெட்டிகள், வண்ணச்  சரிகைகள், பூச்சரங்கள் ஆகியவற்றால் வனப்புடன் செய்யப்படுகின்றன. இந்தக் கிளிகள் விரிந்த சிறகையும், நீண்ட வாலையும், அலகில் பூ மொட்டுக்களையும்  கொண்டுள்ளன. பறந்து வந்து தோளில் அமர்ந்து தலையைச் சாய்த்து தெய்வத்தைப் பார்க்கும் கோலத்திலுள்ள இக்கிளிகள் கண்ணையும் கருத்தையும்  கவர்கின்றன. சில கோயில்களில் இரண்டு பக்கங்களிலும் மாலையில் மேலிருந்து கீழாக வரிசையாகக் கிளிகளை அமைத்துள்ளனர்.