விநாயகருக்கு ஏன் எலி வாகனம்?



விநாயகருக்கு எலி வாகனமாக இருக்கிறது. வடமொழியில் எலியை மூஷிகம் என்பர்.

அதையொட்டி அவருக்கு மூஷிக வாகனன் என்பது பெயராயிற்று. பெருச்சாளி அல்லது எலியை ஆகு எனவும் அழைப்பர். அதனால் விநாயகர் ஆகுவாகனன்  எனப்படுகிறார், அனைத்துச் சிவாலயங்களிலும், விநாயகர் ஆலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் பெருச்சாளி வாகனங்கள் இருக்கின்றன.  பெருங்கோயில்களில் வெள்ளியாலான மூஷிக வாகனங்களை வைத்திருப்பார்கள். விநாயகர் என்றால் நமது ஞாபகத்திற்கு முதலில் வருவது, விநாயகரின்  வாகனமான எலிதான். பொதுவாக குண்டாக இருப்பவரை பிள்ளையார் என்று பலரும் கேலி செய்வது வழக்கம்.

அப்படி கொழுக் மொழுக்கென்று இருக்கும் பிள்ளையார் எதற்காக சின்னஞ்சிறு எலியில் மேல் பயணம் செய்கிறார் என்று தெரியுமா? இதுகுறித்து கேரளாவில்  வாழ்ந்த நாராயணகுருவை தொடர்ந்து அவரது குரு பரம்பரையில் வந்த தத்துவஞானியான நித்ய சைதன்ய யதி அவர்களின் கருத்துகளை சற்று பார்ப்போம்  வாருங்கள். ‘‘யானைக்கு சவாரி செய்ய ஒரு சுண்டெலி! விந்தையாக இல்லையா..? ஆனால் இங்குதான் அக்காலக் கலை மேதைகளின் அழகுணர்வும் முரண்  நுண்மையும் வெளிப்படுகிறது.  இந்திய சமயங்களில் நகைச்சுவை ஒருபோதும் விலக்கப்பட்டதல்ல, குறிப்பாக தெற்கில்.  

தாயுமானவ சுவாமிகள் சிவனை “பித்தன்” என்று அழைக்கிறார்.  நாராயண குரு சுப்பிரமணியனை, “பிச்சைக்காரனின் மகன்” என்கிறார்.  ஆனால்  நகைச்சுவைகளுக்கு அப்பாற்பட்டு, சுண்டெலி மீது பயணிக்கும் யானை என்ற முரண், புலப்படுத்தவே முடியாமல் எப்போதும் மறைந்தே இருக்கும் அதிசயம் ஒன்று  இருப்பதைக் குறிக்கிறது.  கேனோபநிஷத் இதனை, “ஆஹா!” என்ற வியப்பின் ஒலியால் குறிப்பிடுகிறது.  கீதை இதனை, ஒருவர் பிரம்மத்தோடு பேசும் வியப்பு,  பிரம்மத்தை கவனிக்கும்போது கொள்ளும் வியப்பு என்று குறிப்பிடுகிறது. தரைவாழ் விலங்குகளில் அளவில் பெரியது யானை.  

சுண்டெலியோ ஒரு சிறிய உயிர்.   இங்கு, கணபதியும், சுண்டெலியும் கொழுக்கட்டையை வைத்திருக்கிறார்கள்.  இது எல்லா உயிர்களும் சமமாக, உணவு என்ற  பௌதிக தளத்தில் பிணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.  எந்த உயிருக்கும் முதல் இயல்பூக்கம் உணவே.  குழந்தை பிறந்த கணம் உணவுக்காக அழுகிறது.  விலங்குகளும் அவ்வாறே.  முதலில் அவை தாய்ப்பாலை நாடுகின்றன.  அனைத்து உயிரினங்களுக்கும் அதனதன் தேவைக்கேற்ப உணவும் நீரும் கிடைக்க  வழிவகுத்துள்ள இயற்கையின் தன்மை, நாம் காணும் அதன் ஆச்சரியங்களுள் முதன்மையானது. தைத்திரிய உபநிஷத், உணவை முழு முதல் பிரம்மத்தோடு  ஒப்பிடுகிறது.

ஏனெனில் உயிரின் முதல் உவகை என்பது உணவு குறித்த உவகையே. உணவு ஊட்டமே உயிர் என்பது.  சிதைவு மரணம் ஆகும்.  உயிரின் அனைத்து  வடிவங்களையும், மிகப் பெரியது முதல் நுண்ணியது வரை உணவின் தங்கச் சரடு ஒன்றாய் இணைக்கிறது.  உளவியல் ரீதியில் ஆராய்ந்தால், உணவு உண்பதன்  உவகை என்பது ஆத்ம தியானத்தின் உவகைக்கு இணையான ஆன்மீக முக்கியத்துவம் கொண்டது, இந்த உவகையில் கணபதியுடன் சுண்டெலி  தொடர்புறுத்தப்படுகின்றது. தனித்தனியாய் குறிப்பிடப்படும் ஒவ்வொன்றின் தொகையே பிரபஞ்சம்.

உன்னதத்தின் வடிவம், தூலமாக நாம் காண்பவற்றின் தொகையாக இருக்கலாம். அதுபோல உணர்வு கடந்து அதீதமாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மா  ஒவ்வொரு ஜீவனிலும் ஒளிர்கிறது. சுண்டெலியின் மீது சவாரி செய்யும் யானை எனும் உருவகம், எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள் பக்தனுள் துடிக்கும் சிறு  இதயத்திலும் உறைகிறார் என்ற விளக்கம் தருகிறது’’ என்று தத்துவப் பார்வையை தீர்க்கமாக வைக்கின்றார். முத்கல பூர்ணா என்ற இந்து நூலில் விநாயகரின்   எட்டு அவதாரங்களை கூறியிருப்பர். அதில், 5 அவதாரங்களில் விநாயகர், எலியையே வாகனமாக பயன்படுத்துவார்.

வக்ரதுண்டர் என்ற அவதாரத்தில் சிங்கத்தையும், விகட அவதாரத்தில் மயிலையும், விக்னராஜா அவதாரத்தில் புனிதமான பாம்பையும் வாகனமாக  பயன்படுத்துவார். அதேபோல், கணேஷ பூர்ணா என்ற இந்து நூலில், விநாயகர் எலி, சிங்கம், மயில் மற்றும் குதிரை ஆகியவற்றை வாகனங்களாக  பயன்படுத்துவதாகவும், ஜெயின் மத நம்பிக்கைகளில் விநாயகர் எலி, யானை, ஆமை, ஆடு மற்றும் மயில் ஆகியவற்றை வாகனங்களாக பயன்படுத்தியதாகவும்  கூறப்படுகிறது. மேலும் ஒரு புராணக் கதையில்… .

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகப் பெரிய தொல்லைகள் கொடுத்தவன் கஜமுகாசுரன். அவனை எப்படியாகிலும் ஒழித்துவிடும்படி பிள்ளையாரை  வேண்டினான் இந்திரன். கணபதியும் அவர்களுடைய வேண்டுக்கோளுக்கிணங்க அவனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். கடுமையான சண்டையில் விநாயகப்  பெருமான், தனது ஒரு தந்தத்தை ஒடித்து கஜமுகாசுரன் மீது எறிந்தார். கீழே விழுந்து இறந்தவன் போல நடித்த அவன், திடீரெனப் பெருச்சாளி ரூபம் எடுத்து  கணேசர் மீது பாய்ந்தான். பிள்ளையார் அவன் மீது தாவி ஏறி அமர்ந்தார். இனி எப்போதும் இதுபோலவே என்னைச் சுமக்கக்கடவாயாக என்றும் ‘ஆசிர்வதித்தார்’.

“கசமுகத்தவுணனைக் கடியானை” (ஆதாரம்: புராணம்)

இதைத் தவிர, பழங்காலங்களில் விவசாயமே அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்தது. அப்போது, எலிகள் விவசாய நிலத்தை நாசம் செய்ததால்,  அவற்றை வீழ்த்த விநாயகர் அவற்றை வாகனங்களாக பயன்படுத்தியதாகவும் கதைகள் உள்ளன. மற்றொரு நம்பிக்கை என்னவென்றால், எலிகள் மிகவும்  சிறியதாக இருப்பதாலும், அவற்றால் எந்த சிறு துளையிலும், இருள் சூழ்ந்த இடங்களிலும் நுழைய முடியும் என்பதாலும், விநாயகர் இருளை நீக்கவும், மூலை  முடுக்கில் உள்ள தீய சக்திகளை அழிக்கவும் எளிதாக இருக்கும் என்பதற்காக எலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.