ஆளுமைத் திறனை அருளும் அதிகார நந்திசிவபெருமானின் அருட்கோலங்கள் இருப்பினும் அவர் விடையின் மேல் பவனி வரும் கோலமே அதிக சிறப்புடன் போற்றப்படுகின்றது. இதையொட்டியே  ஆலயங்களில் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாள் இரவு வெள்விடைக் காட்சி என்னும் பெயரில் ரிஷப வாகன சேவை விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

அனைத்துச் சிவாலயங்களிலும் இத்தகைய ரிஷப வாகன சேவைகள் நடைபெறுகின்றன. சகோபுரம் எனப்படும் ஓசைச் சப்பர விழாவிலும் சப்பரத்தின் நடுவே  ரிஷப வாகனத்திலேயே பெருமானை அமர்த்தி வலம் வரச் செய்கின்றனர். ரிஷப வாகனக் காட்சிக்கு அடுத்தபடியாகப் பெருமை பெற்றுத்திகழ்வது அதிகாரநந்தி  சேவையாகும். அதிகார நந்திதேவர் தோள் மீது அமர்ந்து பெருமான் வீதியுலா காண்கிறார். நந்தி என்பதற்கு வளர்வது என்பது பொருள் ஞானத்தாலும்,  செல்வச்செழிப்பாலும், வலிமையாலும், வளர்ந்து கொண்டே இருப்பதை நந்தி எனும் சொல் குறிக்கின்றது.

அளவற்ற உடல் வலிமையாலும், ஞானத்தால் நிறையப் பெற்றுச் செல்வச் செழிப்பிலும் திளைத்துக் கொண்டிருக்கும் மேன்மை பெற்றவர்கள் நந்திகள் என்று  அழைக்கப்படுகின்றனர். அவர்களது கூட்டம் நந்தி கணம் என்று அழைக்கப்படுகிறது. உலகிலுள்ள அளவற்ற ஆற்றலுக்கும், பெருகும் ஞானத்திற்கும் முழுமுதற்  பொருளாக இருப்பதால், சிவபெருமான் நந்தி எனப்படுகின்றான். அவனைச் சார்ந்து அவனது பேரருளைப் பெற்றவர்களும் நந்தி என்று அழைக்கப்படுகின்றனர். நந்தி  கணத்தினரில் முதன்மை பெற்றவராக இருப்பதுடன், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலை மலையைக் காத்து நிற்கும் அதிகாரம் பெற்றவராகவும் இருப்பவர்  அதிகார நந்திதேவராவார்.

இவர் சிலாதல முனிவரின் குமாரராகத் தோன்றியவர். இவர் தனது கடும் தவத்தால் சிவபெருமானை மகிழ்வித்து அவர் அருளைப் பெற்றவர். சிவபெருமான்  இவருக்குத் திருமணம் செய்து வைத்துத் தமது கணங்களுக்கு அதிபதியாகப் பட்டம் சூட்டி அதிகார நந்தி என்று பெயரும் இட்டார். இவர் திருக்கயிலையில்  கோபுரவாசலின் அதிகாரியாக இருப்பதைக் குறிக்கும் வகையில் பூ மண்டலத்திலுள்ள சிவாலயங்களில் கோபுரத்தின் குடை வரைப் பகுதியில் இவரது  திருவுருவத்தை அமைக்கின்றனர். இவரது சிந்தனை செயல் யாவும் திருக்கயிலை மலையின் காவல் பணியைப் பற்றியதாகவே இருக்கிறது என்பதால், இவரது  திருவுருவத்தை வடக்கிலுள்ள கயிலை மலையைப் பார்த்தவாறு இருப்பதாக அமைப்பது வழக்கம்.

கோபுரக் குடைவாயிலில் எழுந்தருளியிருக்கும் நந்திதேவர் சிவபெருமானைப் போலவே மூன்று கண்களைக் கொண்ட அழகிய முகம் கொண்டவர். சிவபெருமானின்  சாரூபம் பெற்றவராதலின், நான்கு தோள்களும் தலையில் சடைமுடியும் அதில் கங்கையுடன் சந்திரனையும் தாங்கியவராக விளங்குகின்றார். புலித்தோலை  அணிந்தவர். இடையில் நீண்ட வாள் உள்ளது. மேற்கரங்களில் மான், மழு, பொற்பிரம்பு ஆகியவற்றைத் தாங்கியுள்ளார். இவர் முன்னிரு கரங்களைக் கூப்பி,  சதாகாலமும் சிவபெருமானை அஞ்சலித்துக் கொண்டிருப்பவராக இருக்கிறார். இவருடைய இடப்பாகத்தில் இவருடைய தேவியான சுயம்பிரபா ( சுயம்சை)  நிற்கின்றாள். இவரைப் பெருமான் பவனி வரும் அழகிய வாகனமாகவும் அமைத்துள்ளனர்.

அதற்கு அதிகாரநந்தி வாகனம் என்பது பெயராகும். ஒரு சமயம் அதிகாரநந்திதேவர் தருமத்தின் வடிவாக விளங்குவதும். சிவபெருமானின் முதன்மை பெற்ற  ஊர்தியாக இருப்பதுமான ரிஷபத்தின் பெருமைகளையும், அது சிவபெருமானைச் சுமந்து வருவதால், அவர் பெற்றுள்ள சிறப்புகளையும் சிவபெருமானின்  வாயிலாகவே அறிந்தார். மேலும், வேதங்களும், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்களும் கூடச் சமயம் நேரும் போது இடபவடிவம் கொண்டு பெருமானைச்  சுமந்து வலம் வந்து பேறு பெற்றதையும். அறிந்தார். பிரம்மன் இடப வடிவம் தாங்கிய வேளையில் பொன்னிற இடபமாக இருந்தான். அந்த நந்தி வடிவைச் சுவர்ண  ரிஷபம் என்றும் பிரம்ம ரிஷபம் எனவும் அழைத்தனர்.

திரிபுரசங்காரத்தின் போது திருமால் நீலநிற இடபமாகத் தோன்றிப் பெருமானைத் தாங்கினார். அதனை மால் விடை என்பர். வேதங்கள் தூயவெண்ணிறக்காளை  வடிவம் கொண்டு பெருமானைச் சுமந்தன. அதையொட்டி அது சுவேத ரிஷபம்  என்றும் வேதவெள்விடை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விதமாக இடப  வாகனத்தின் பல்வேறு சிறப்புக்களை அறிந்த நந்தி தேவர் தானும் இடப (காளை) வடிவம் கொண்டு பெருமானைச் சுமந்து வர விரும்பி, அதற்குரிய வேளையை  எதிர் பார்த்துக் காத்திருந்தார். உரிய வேலை கிடைக்கப் பெற்ற போது அவர் மேன்மை மிக்கதான (காளை) வடிவம் தாங்கிச் சிவபெருமானைச் சுமந்து உலகை  வலம் வந்து மகிழ்ந்தார்.

ஞான வான்கள் அதைக் கண்டு மகிழ்ந்தனர். அக்காட்சி என்றும் நினைவில் நிலைத்திருக்கும் பொருட்டு, அவர்கள் அக்கோலத்தைச் சிலையாகச் செய்து  வழிபட்டனர். அக்கோலமே அதிகார நந்தி வாகனக் காட்சி என்று அழைக்கப்படுகின்றது. இதில் நந்தி தேவரை இடப வடிவத்துடன் அமைக்காமல், மனித உடலும்  இடப (காளை) முகமும் கொண்டவராக அமைத்துள்ளனர். இந்திர நந்தி, வேத நந்தி, பிரம்ம நந்தி போல் இவரையும் காளை வடிவுடன் அமைத்தால் அது  சிவசாரூபம் பெற்ற அதிகார நந்தி தேவரை அடையாளம் காட்டாது. இயல்பான மனிதமுகத்துடன் அமைத்தால், அறியாதவர்கள் சிவபெருமானே சிவபெருமானைத்  தாங்கி வருகிறார் என எண்ணுவர்.

எனவே இயல்பான தேவ உடலும் காளை முகமும் கொண்டவராக அவரை அமைத்துள்ளதாகக் கூறுகின்றனர். இக்கோலத்தில் அதிகார நந்தி தேவர் ஒரு காலை  மடித்து, மறுகாலை ஊன்றி முழந்தாளிட்டு அமர்ந்தவாறு உள்ளார். நாற்கரங்களுடன் திகழமும் இவரது, மேற்கரங்களில் மானும் மழுவும் திகழ, முன்கரங்களை  முன்னே நீட்டித் தனது தோளில் அமர்ந்திருக்கும் இறைவனின் திருவடிகளைத்  தாங்கும் கோலத்தில் உள்ளார். தனது இடையில் ஞான வாளைக் கட்டியுள்ளார்.  இவரது தோள் மீது அமைந்த பீடத்தில் பெருமானை அமர்த்தி உலாவரச் செய்கின்றனர். பெருந் திருக்கோயில்களில் மரத்தால் செய்து பலவிதமான வண்ணங்கள்  தீட்டிப் பொலிவுடன் விளங்கும் அதிகார நந்தி வாகனங்கள் உள்ளன.

திருக்கழுக்குன்றம், மயிலாப்பூர், திருவண்ணாமலை முதலிய சில தலங்களில் வெள்ளியாலான அதிகார நந்தி வாகனங்கள் இருக்கின்றன. சென்னை மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அதிகார நந்தி சேவை உலகப் புகழ் பெற்றதாகும். இங்குள்ள அதிகார நந்திவாகனம் வெள்ளியால் செய்யப்பட்ட அற்புதக்  கலைப்படைப்பாகும். அளவால் பெரியது. நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டது. சில திருக்கோயில்களில் தங்க அதிகார நந்தி வாகனங்களும் உள்ளன.  பெரும்பாலான தலங்களில் விழாக் காலங்களில் மூன்றாம் நாள் காலங்களில் மூன்றாம் நாள் காலையிலும், சில தலங்களில் ஐந்தாம் நாள் இரவிலும், அதிகார  நந்தி வாகன சேவை நடைபெறுகின்றது.

திருக்கழுக்குன்றத்தில் கழுக்குன்ற நாதரான வேதகிரீசர் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாள் காலையில் அதிகார நந்தியில் பவனி வருகின்றார். அவருடன்  அறு பத்து மூன்று நாயன்மார்களான அடியவர்கள் திருக்கூட்டமும், திருமலையை வலம் வருவது அற்புதக் காட்சியாக இருக்கிறது. நந்திதேவரின் வடிவம்  ஞானத்தோடு தொடர்புடையது என்பதால், அதிகார நந்தி தேவர் விழாவானது அன்பர்களுக்கு ஞானம் அளிக்கும் விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது.  அதிகாரநந்தி சேவையன்று திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் அளிக்கும் விழாவும் சேர்த்து நடத்தப்படுகிறது.

சைவமும் தமிழும் தழைத்தோங்க தரணிக்கு வந்த ஞானசம்பந்தர், சீர்காழியில் கௌணியர் கோத்திரத்தில் பிறந்து, ஆளுடைய பிள்ளை என்னும் பெயருடன்  வளர்ந்து தம் மூன்று வயதிலேயே சிவன் அருளால் உமையம்மை பால் அமுது ஊட்ட அக்கணமே திருப்பெருகு சிவஞானமும் உவமையிலாக்கலை ஞானமும்  உணர்வரிய மெய்ஞ்ஞானமும் கைவரப் பெற்றுத் திருஞான சம்பந்தரானார். அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுவதே திருஞானசம்பந்தருக்கு  ஞானப்பால் அளிக்கும் ஐதீக விழா அதிகார நந்தி சேவையன்று நடத்தப்படுகிறது.

இவ்விழாவில் அதிகார நந்தியில் சிவபெருமானும், காமதேனு அல்லது இடப வாகனத்தில் அம்பிகையும் பவனி வர, பல்லக்கு அல்லது விமானத்தில்  திருஞானசம்பந்தர் அருளிய முதற்பதிகமான தோடுடைய செவியன் என்ற பதிகம், முழுமையாகப் பாடப்படுவதுடன், சம்பந்தருக்குப் பால் அமுதூட்டிய புராண  வரலாறு கூறப்படும். ஞான சம்பந்தருக்குப் பால் நிவேதிக்கப்படும். அந்தப் பால் நிவேதனத்தை ஞானப் பால் என்று அழைக்கின்றனர். அன்பர்களுக்குப் பிரசாதமாக  அந்தப் பால் வழங்கப்படும். இப்பாலை அருந்தும் குழந்தைகள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்று நம்புகின்றனர். ஞானவடிவாக விளங்கும்  அதிகார நந்திதேவர் சிவபெருமானைச் சுமந்து வரும் விழா, அஞ்ஞானத்தைக் களைந்து மெய் ஞான மளிக்கும் விழாவாகவும், ஞான சம்பந்தருக்கு ஞானப்பால்  ஊட்டும் விழாவாகவும் நடைபெறுகிறது.

பூசை. ச.அருண வசந்தன்