யானை வாகனம்



சாஸ்தா

தெய்வங்களுக்கான வாகனங்களில் யானை வாகனமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. சாஸ்தாவின் வாகனம் யானை ஆகும்.  யானையின் உடம்பு மிகப்  பெரியது. உலகப் பொருட்கள் அனைத்தும் அடங்கும் ஒரே பிண்டமாக யானையின் உடம்பு தோற்றம் அளிக்கிறது. அதிலிருந்து திரும்பித் தோன்றுவது லயத்தின்  பின் ஸ்ருஷ்டி தொடங்குவதைக் குறிப்பதாகும். ஜடத்துவம், சுவாச சூட்சுமம், ஜீவத்வம், பிராணாயாமம் இவைகளைக் குறிக்கிறது.

தேவர்கள் இழந்த சுபிக்ஷத்தை அடைய, மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் துணையுடன் பாற்கடலை கடைந்தனர்.  பகவான் கிருஷ்ணன் தன்வந்தரி வடிவத்தில் கைகளில் அம்ருத கலசத்தினை ஏந்தி தோன்றினார். அசுரர்கள் அம்ருதத்தை அவரிடமிருந்து பலவந்தமாக  அபகரித்துக் கொண்டனர். இருவர் செய்த உழைப்பின் கூலியை ஒருவர் மட்டுமே எடுப்பதை, அதுவும் பலவந்தமாக அபகரித்ததை பகவானால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. அம்ருதத்தில் ஒரு துளி கூட அசுரர்கள் இனி அருந்த கூடாது என்றெண்ணி, மோஹினி அவதாரம் எடுத்தார்.

அசுரர்கள், மோஹினியின் பேரழகை கண்டு திகைத்தனர். மோஹிகினி  ‘‘அனைவரும் வரிசையில் அமருங்கள் நானே பங்கிட்டு தருகிறேன்.’’ என்று கூறி  அம்ருதத்தை தேவர்களுக்கு முதலில் வழங்கினார். அதை உண்ட தேவர்கள், அசுரர்களை வென்றனர். தேவேந்திரன் மீண்டும்  மூவுலகையும் ஆட்சி புரியலானான்.  நடந்தவைகளை நாரதர், பரமேஸ்வரனிடம் கூறினார். மறுகனமே ஈசன் பரந்தாமனை காண பாற்கடல் வந்தார். அகிலத்தையே மயக்கிய மோஹினி அவதாரத்தை  எனக்கு காட்ட வேண்டும் என்றார்.

அடுத்திருந்து நந்தவனத்தில் ஈசனிடம், பரந்தாமன் தான் எடுத்த மோஹினி அவதாரத்தை காட்டினார். பேரழகுடன் இருந்த மோஹினியை கண்ட ஈசன்  மோஹினியுடன் நெருங்கினார். அரியும், அரனும் சங்கமமாகினர். அரிஹர சக்தியும் ஒருங்கே பெற்று மஹா சாஸ்தா அவதரித்தார். உயிர்களை தீய  சக்திகளிடமிருந்து காத்து இரட்சிப்பவர் சாஸ்தா. சாஸ்தா, பிரபஞ்ச இயக்கத்தின் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர். அதனால் தான், உலகப் பொருட்கள்  அனைத்தும் அடங்கும் ஒரே பிண்டமாக தோற்றமளிக்கும் யானையையே தனது வாகனமாக கொண்டிருக்கிறார் சாஸ்தா.

சு.இளம் கலைமாறன்