அனந்தனுக்கு 1000 நாமங்கள்!202.ஸிம்ஹாயநமஹ: (Simhaaya namaha)

பராசர பட்டர் என்னும் வைணவ ஆச்சாரியர் திருக்கோட்டியூரில் சிலகாலம் தங்கியிருந்தார். அவ்வூரில் தெற்காழ்வான், கோளரியாழ்வான் என்ற இரண்டு  அடியார்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுள் கோளரியாழ்வான் என்பவர் வேதங்களைக் கற்று அதன்வழி நடப்பவர். ஆசார அனுஷ்டானங்களை எல்லாம்  குறைவின்றிக் கடைபிடிப்பவர். ஆனால் தெற்காழ்வானோ, ஆசார அனுஷ்டானங்கள் எதையுமே பின்பற்றாதவராக வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரின்  நடவடிக்கைகளையும் பராசர பட்டர் கவனித்து வந்தார். கிரகண காலம் வந்தபோது, கோளரியாழ்வான் ஒரு குளத்தில் புனித நீராடுவதற்காகச் சென்றார்.

அப்போது தெற்காழ்வானையும் அவர் நீராட அழைத்தார். “என்னை எதற்காக அழைக்கிறீர்கள்?” என்று கேட்டார் தெற்காழ்வான். “கிரகண காலத்தில் புனித  நீராடினால் நமது பாபங்கள் நீங்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால் தான் உங்களையும் நீராட அழைத்தேன்!” என்றார் கோளரியாழ்வான்.  தெற்காழ்வான், “நான் செய்த பாபங்கள் இவ்வாறு தண்ணீரில் போடும் ஒரு முழுக்காலோ, இரண்டு முழுக்காலோ தீராது! திருக்கோட்டியூர் கோவிலில்  எழுந்தருளியிருக்கும் நரசிம்மர் அவரது நகங்களால் கிழித்தால் மட்டுமே எனது பாபங்கள் தீரும்!” என்றார் தெற்காழ்வான்.

இந்த உரையாடலைக் கேட்ட பராசர பட்டர் ஓடி வந்து தெற்காழ்வானை அணைத்துக் கொண்டார். “என்னை மன்னித்து விடுங்கள்!” என்றார் பட்டர். “சுவாமி!  உங்களை நான் மன்னிப்பதா” என்று கேட்டார் தெற்காழ்வான். “ஆம்! நீங்கள் ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றாதவர், சாஸ்திரங்களில் நம்பிக்கை  இல்லாதவர் என இத்தனை நாளாக நினைத்திருந்தேன். ஆனால் நரசிம்மர் மேல் தங்களுக்குள்ள பக்தியை இன்று தான் புரிந்து கொண்டேன்!”என்று சொன்ன  பட்டர், ஒரு வரலாற்றை நினைவு கூர்ந்தார்: முன்னொரு சமயம் வியாசரும் மற்ற முனிவர்களும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து விவாதம் செய்து  கொண்டிருந்தார்கள்.

அப்போது சில முனிவர்கள், “நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியன் போன்ற அசுரர்களின் உடல்களைக் கிழித்து அவர்களை இம்சிப்பதால்,  ‘ஹிம்ஸன்’(இம்சை செய்பவர்) என்று அவரை அழைக்க வேண்டும்!” என்று கூறினார்கள். அதற்கு வியாசர், “முனிவர்களே!நம் பார்வைக்கு நரசிம்மர் தன்  நகத்தால் அசுரர் உடலைக் கிழிப்பது இம்சை போலத் தோன்றும். ஆனால் அது இம்சை அல்ல. ஏனெனில், அந்த அசுரர்கள் பற்பல பாபங்களைச் செய்தவர்கள்.  அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் பல ஊழிக் காலங்கள் நரகத்தில் வாட வேண்டியிருக்கும்.

அவ்வளவு நீண்ட காலம் நரகத்தில் அவர்கள் துன்பப்படுவதற்குப்பதிலாக, நரசிம்மர் தனது கூரிய நகங்களால் அவர்கள் உடலைக் கிழிக்கிறார். அந்த ஒரு  நொடியில் அசுரர்கள் அனுபவிக்கும் ஆழ்ந்த துயரம், அவர்களது அனைத்துப் பாபங்களையும் போக்கி அவர்களைத் தூய்மைப் படுத்துகிறது. இப்படித் தீயவர்களான  அசுரர்கள் மீதும் கூட கருணை கொண்டு, அவர்களைத் தூய்மைப் படுத்தும் நோக்கில் தான் நரசிம்மர் அவர்களை இம்சிக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால்  அவரது செயல் ஹிம்ஸை போலத் தெரியலாம். ஆனால் உண்மையில் ஹிம்ஸைக்கு நேர்மாறான அனுக்கிரகத்தைத் தான் அவர் செய்கிறார்.

எனவே ஹிம்ஸன் என்று நீங்கள் சொன்ன பெயரை நேர்மாறாக மாற்றிவிடுங்கள்!” என்றார் வியாசர். இவ்வரலாற்றைச் சொன்ன பட்டர், “ஹிம்ஸன் என்ற  சொல்லை நேர்மாறாக மாற்றி எழுதுகையில் ‘ஸிம்ஹன்’ என்று வருமல்லவா? எனவே அன்று முதல் நரசிம்மர் ‘ஸிம்ஹன்’ என்றழைக்கப்பட்டார். அந்த  ஸிம்ஹனைப் போன்ற முகத்தோடு இருப்பதால் தான் சிங்கமும் ‘ஸிம்ஹம்’ என்றழைக்கப்படுகிறது. அத்தகைய ஸிம்ஹனான நரசிம்மரின் நகங்கள் நம்  பாபங்களைப் போக்கி நம்மைத் தூய்மைப் படுத்தும் என்ற நுட்பத்தை அறிந்த உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை!” என்று சொல்லித்  தெற்காழ்வானைத் தழுவிக் கொண்டார்.

ஹிம்ஸை போல் தோன்றும் செயல்களைச் செய்தாலும், அதிலும் ஹிம்ஸைக்கு நேர் மாறான அனுக்கிரகத்தையே செய்பவரான நரசிம்மர் ‘ஸிம்ஹ:’  ஹிம்ஸைக்கு நேர்மாறானவர்என்றழைக்கப்படுகிறார். (ஆங்கிலத்தில் கூட HIMSA என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை மாற்றி அமைத்தால் SIMHA என்று  வரும்).அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 202-வது திருநாமம். “ஸிம்ஹாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நரசிம்மரின் அருளால் எப்போதும்  தூயவர்களாக விளங்குவார்கள்.

203. ஸந்தாத்ரே நமஹ: (Sandhaathre namaha)

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் பாசுரங்களுக்குப் பொருள் கூறுகையில், சிறு சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங்களை விளக்குவதில் வல்லவர் பராசர  பட்டர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்த மகான், நரசிம்மாவதாரத்தைப் பற்றி விளக்குகையில் இக்கதையைச் சொல்வார்: ஒரு தந்தை தன் மகனுக்குச்  சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார். “இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.  அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.  “தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது. இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம்,  வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன். இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக  வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை. ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக  எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும். எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும்  விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று  கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர். மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா?  பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா? வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற  பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா? இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர். சிங்கம், மனிதன்  இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார்.

பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார். தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த  நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார். வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து  இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார். நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர்  இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினாலும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம்.

தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர். சிங்கம் எப்படி யானையோடு போர்  புரிந்துகொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான  பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார். இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!”  என்று விளக்கினார் பட்டர்.

‘தாதா’ (Dhaathaa) என்றால் சேர்ப்பவர் என்று பொருள். சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று  அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 203-வது திருநாமம். “ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து  போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.

204. ஸந்திமதே நமஹ (Sandhimathe namaha)

நாதமுனிகள் எப்போதும் ஒரு வாசகத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். “குளப்படியில் மழை பெய்தால் குருவி குடித்துப்போம். வீராணத்தில் மழை பெய்தால்  நாடெல்லாம் விளையும்” என்பதே அந்த வாசகம். இவ்வாசகத்தின் பொருள் என்ன? ராமாநுஜரை வீராணம் ஏரியோடும், மற்ற குருமார்களைக் குளத்தோடும்  ஒப்பிட்டு இவ்வாசகத்தைக் கூறியுள்ளார் நாதமுனிகள். ராமாநுஜருக்கு முன் இருந்த குருமார்கள், சீடர்களுக்கு உபதேசம் செய்யும் முன் பலவகைகளில்  சீடர்களைச் சோதித்துப் பார்த்து, அதன்பின் தான் உபதேசம் செய்வார்கள்.

குளத்தில் பெய்யும் மழை எப்படி சில பேருக்குத் தான் பயன்படுமோ, அதுபோல் அத்தகைய குருமார்களிடம் உள்ள கருத்துக்களும் ஒரு சில சீடர்களையே  சென்றடையும். ஆனால் ராமாநுஜரோ, எந்த ஏற்றத்தாழ்வும் பாராமல் ஆசையுள்ள அனைத்து சீடர்களுக்கும் உபதேசம் செய்யும் காரேய் கருணை நிறைந்தவர்.  வீராணத்தில் பெய்யும் மழைநீர் எப்படி பல்லாயிரக்கணாக்கான மக்களுக்குப் பயன்படுமோ, அதுபோல் ராமாநுஜரிடம் உள்ள கருத்துக்கள் அனைத்துப் பாமர  மக்களையும் சென்றடையும். நாதமுனிகள் யோக சக்தி நிறைந்தவராகையால், ராமாநுஜரின் அவதாரத்துக்கு முன்பே ராமாநுஜரின் பெருமையை அறிந்து  இவ்வாசகத்தைக் கூறியுள்ளார்.

இவ்வாசகத்தைத் தமது சீடரான உய்யக்கொண்டாருக்கும் உபதேசித்தார் நாதமுனிகள். “இதன் பொருள் என்ன?” என்று கேட்டார் உய்யக்கொண்டார். “நீ உன்  சீடர்களுக்கு இதை உபதேசம் செய். புரிய வேண்டிய நேரத்தில், புரிய வேண்டிய நபருக்கு இதன் பொருள் புரியும்!” என்று சொன்னார் நாதமுனிகள்.  உய்யக்கொண்டார் இதைத் தமது சீடரான மணக்கால் நம்பிக்கு உபதேசித்தார். “இதன் பொருள் என்ன?” என்று மணக்கால் நம்பி கேட்டபோது, “எனக்குப் பொருள்  தெரியாது. எனது குரு சொன்னதை அப்படியே உனக்குச் சொல்லி விட்டேன். நீயும் உன் சீடர்களுக்கு இவ்வாசகத்தைச் சொல்!” என்று கூறினார்  உய்யக்கொண்டார்.

மணக்கால் நம்பி தமது சீடரான ஆளவந்தாருக்கும், ஆளவந்தார் தமது சீடரான பெரிய நம்பிக்கும் இதை உபதேசித்தார்கள். ஆனால் இவ்வாசகத்தின் பொருளைப்  பற்றி அவர்கள் ஆராயவில்லை. பெரிய நம்பி, தமது சீடரான ராமாநுஜருக்கு, “குளப்படியில் மழை பெய்தால் குருவி குடித்துப் போம். வீராணத்தில் மழை பெய்தால்  நாடெல்லாம் விளையும்!” என்ற இவ்வாசகத்தை உபதேசித்தார். “ராமாநுஜா! இதன் பொருள் என்னவென்று எனக்குத் தெரியாது. எனது குருமார்கள் சொன்னதை  உனக்கும் சொன்னேன்!” என்றார் பெரிய நம்பி. ராமாநுஜரோ, “குருவே அடியேனுக்கு இதன் பொருள் புரிந்து விட்டது!” என்றார்.

“என்ன பொருள்?” என்று கேட்டார் பெரியநம்பி. இவ்வாசகம் தனது பெருமையைச் சொல்வதாக அமைந்துள்ளபடியால், அதன் விளக்கத்தைத் தன் வாயால்  சொல்ல விரும்பாத ராமாநுஜர், “இதைப் பற்றி விளக்கம் தருவதில் நேரம் செலவிடுவதை விட, இந்த வாசகம் கூறும் கட்டளையை உடனடியாக நிறைவேற்றப்  புறப்படுகிறேன்!” என்று சொல்லிவிட்டு, காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரியை நோக்கிப் புறப்பட்டார். வீராணம் ஏரியில் எழுபத்து நான்கு மதகுகள்  வழியாகத் தண்ணீர் பிரிந்து சென்று நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுவதைக் கண்டார் ராமாநுஜர்.

அவ்வாறே தன்னிடம் உள்ள கருத்துக்களும் எழுபத்து நான்கு சீடர்கள் வழியாகச் சென்று பாமர மக்களை அடையவேண்டும் என்பது நாதமுனிகளின் கருத்து என்று  புரிந்து கொண்டார். தனது எழுபத்து நான்கு சீடர்களை சிம்மாசனாதிபதிகளாக நியமித்தார். அவர்கள் மூலம் வைணவ சம்பிரதாயம் பரவும்படி வழிவகை செய்தார்  ராமாநுஜர். அந்த எழுபத்து நால்வருக்கும் நரசிம்ம விக்கிரகங்களை வழங்கிய ராமாநுஜர், நரசிம்ம மந்திரத்தையும் அவர்களுக்கு உபதேசித்தார். “நரசிம்மர்  எப்போதும் அடியார்களோடு துணையாக நிற்பவர். அந்த நரசிம்மர் உங்கள் எழுபத்து நால்வரோடும் துணைநின்று இந்தச் சம்பிரதாயத்தை வளர்த்துக் கொடுப்பார்.

உங்களிடம் ஆசையுடன் வரும் அனைத்துச் சீடர்களுக்கும் எந்த ஏற்றத்தாழ்வும் பாராது நீங்கள் நற்கருத்துக்களை உபதேசிக்க வேண்டும்!” என்று  சிம்மாசனாதிபதிகளிடம் கூறினார். இன்றும் ராமாநுஜரால் நியமிக்கப்பட்ட எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளும் நரசிம்மரின் அருளால் இந்த வைணவ நெறியை  வளர்த்து வருகிறார்கள். இவ்வாறு எப்போதும் தன் பக்தர்களோடு கூடவே இருந்து அவர்களுக்கு அருள்புரிவதால், நரசிம்மர் ‘ஸந்திமான்’ என்றழைக்கப்படுகிறார்.  அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 204-வது திருநாமம்.

நரசிம்மர் எப்போதும் பக்தர்களோடு இருப்பது போலவே, பக்தர்களும் எப்போதும் அவரோடு இருக்கிறார்கள். அதனால் தான், நரசிம்மர் கோயில்களில் எப்போதும்  பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம். காடு, மலைகளைக் கடந்து அஹோபிலத்திலுள்ள ஒன்பது நரசிம்மர்களைக் காணக் கூட்டம் கூட்டமாக  மக்கள் செல்வதைக் காணலாம். அவ்வாறே சோளிங்கரில் 1300 படிகள் ஏறிப் பெருந்திரளான மக்கள் நரசிம்மரைத் தரிசிக்கச் செல்கிறார்கள். “ஸந்திமதே நமஹ”  என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு எப்போதும் நரசிம்மர் துணையாக நிற்பார்.

205. ஸ்திராய நமஹ (Sthiraaya namaha)

இரணியனை வதம் செய்த நரசிம்மர், அடுத்தபடியாக பக்தப் பிரகலாதனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நினைத்தார். எனினும் இரணியன் அமர்ந்த ஆசனத்தில்  பிரகலாதன் அமர்ந்தால், இரணியனின் எதிர்மறையான அதிர்வலைகள் பிரகலாதனைப் பாதிக்கும் என்பதால், நரசிம்மர் முதலில் அந்த ஆசனத்தில் அமர்ந்து விட்டு,  அதன்பின் தான் அமர்ந்த ஆசனத்தில் பிரகலாதனை அமர்த்தினார். நரசிம்மர் அமர்ந்தபடியால் தான், அரசர்கள் அமரும் ஆசனம் சிம்மாசனம் என்று பெயர் பெற்றது. அன்று முதல் மூவுலகங்களையும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான் பிரகலாதன். ஒருநாள் பிரகலாதன் தற்செயலாக ஒரு முனிவரை அவமானப் படுத்தினான்.

அதனால் கோபம் கொண்ட முனிவர், “உனது நற்பண்புகள் தான் உன்னை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தியுள்ளன. ஆனால் இப்போது என்னை அவமானப்  படுத்தியதால், நீ உனது நற்பண்புகளை எல்லாம் இழப்பாய்!” என்று அவனைச் சபித்தார். அன்று இரவு பிரகலாதன் சயனித்திருந்த போது, அவன் உடலில் இருந்து  ஓர் உருவம் புறப்பட்டுச் செல்வதைக் கண்டான் பிரகலாதன். “நான்தான் தருமம். நீ நற்பண்புகளை இழந்துவிட்டதால், நான் உன்னை விட்டுச் செல்கிறேன்!”  என்று சொன்னது அவ்வுருவம். அடுத்து மற்றொரு உருவம் அவன் உடலில் இருந்து வெளியேறியது.

“நான் தான் வாய்மை. தருமம் உன்னை விட்டுச் சென்றதால் நானும் செல்கிறேன்!” என்று அது சொன்னது. அதைத் தொடர்ந்து இன்னொரு உருவம்  வெளியேறியது. “நான் தான் நன்னடத்தை. வாய்மை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன்!” என்றது அது. கடைசியாக ஓர் உருவம் வெளியேறியது.  “நான் தான் ‘ஸ்ரீ’! (செல்வம்) நன்னடத்தை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன்!” என்று கூறிவிட்டுச் சென்றது. இப்படி, நற்பண்புகளை இழந்ததன்  விளைவாக, தருமம், வாய்மை, நன்னடத்தை, செல்வம் அனைத்தையும் இழந்தான் பிரகலாதன்.

இத்தகைய நற்பண்புகளை இழந்ததால், திருமாலிடம் அவன் கொண்டிருந்த பக்தியும் குறையத் தொடங்கியது. இந்நிலையில், தனது அசுர சேனையைத் திரட்டிக்  கொண்டு தேவலோகத்தின் மீது படையெடுத்தான் பிரகலாதன். பிரகலாதனின் சேனை இந்திரனையும் மற்ற தேவர்களையும் தாக்கியது. திருமாலின் உதவியை  நாடினான் இந்திரன். “எங்களைத் துன்புறுத்திய இரணியனை நீ வதம் செய்து விட்டாய். இப்போது நாங்கள் நல்லவன் என்று கருதிய இரணியனின் மகனான  பிரகலாதன் எங்களைத் தாக்க வருகிறானே! நீ தான் இவனிடமிருந்து எம்மைக் காத்தருள வேண்டும்!” என்று திருமாலிடம் பிரார்த்தித்தான் இந்திரன்.

அப்போது போர்க்களத்துக்கு வந்தார் திருமால். பிரகலாதனைத் திருமால் தாக்குவார் என்று ஆவலுடன் காத்திருந்தான் இந்திரன். ஆனால் திருமால் பிரகலாதனைத்  தாக்கவில்லை. ஓடிச் சென்று தனது பக்தனை ஆரத் தழுவிக் கொண்டார். திருமகள் கேள்வனான திருமாலின் ஸ்பரிசம் பிரகலாதன் மேல் பட்டவுடன்,  பிரகலாதனிடம் ‘ஸ்ரீ’ திரும்ப வந்து விட்டது. ‘ஸ்ரீ’ வந்தவாறே, நன்னடத்தை வந்தது. நன்னடத்தையைத் தொடர்ந்து வாய்மையும், வாய்மையைத் தொடர்ந்து  தருமமும் பிரகலாதனிடம் வந்தன. முன்போல் நற்பண்புகள் வாய்ந்தவனாக மிளிரத் தொடங்கினான் பிரகலாதன்.

அடுத்த நொடியே தனது தவறை உணர்ந்து திருமாலிடம் மன்னிப்பு கோரினான். “முனிவரின் சாபத்தால் எனது நற்குணங்களையும் பக்தியையும் இழந்தேன்.  இறுதியில் தேவர்களையும் தேவாதி தேவனான உன்னையும் எதிர்த்துப் போரிடவும் துணிந்து விட்டேனே! என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று  வேண்டினான். அதற்குத் திருமால், “பிரகலாதா! நான் உன் மீது கோபமே கொள்ளவில்லையே. கோபம் கொண்டால் தானே மன்னிப்பதைப் பற்றிப் பேச வேண்டும்.  என் பக்தர்களிடம் எனக்கு என்றுமே கோபம் வராது!” என்று சொன்ன திருமால், பிரகலாதனுக்கு அனுக்கிரகம் செய்து அவனை அனுப்பி வைத்தார்.

பிரகலாதன் தொடர்ந்து நல்ல முறையில் மூவுலகுகளையும் ஆண்டு வந்தான். இவ்வாறு தனது பக்தர்கள் பிழைகள் செய்தாலும், அப்பிழைகளைப் பொறுத்துக்  கொண்டு, அந்த பக்தர்களைக் காக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியோடு இருப்பதால், நரசிம்மர் ‘ஸ்திர:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸ்திர:’ என்றால்  உறுதியோடு இருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 205-வது திருநாமம்.

“தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அதுசெய்யார் செய்தாரேல் நன்கு செய்தார் என்பர் போலும்” என்ற பாசுரத்தில்,  மகாலட்சுமியே ஒரு பக்தனைப் பற்றித் திருமாலிடம் குறை சொன்னாலும், திருமால் அதை ஏற்காமல், என் பக்தன் செய்தது எப்போதுமே சரிதான் என்று  வாதிடுவதாகப் பெரியாழ்வார் பாடுகிறார். “ஸ்திராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை எந்நிலையிலும் கைவிடாமல் நரசிம்மர் காத்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)
திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்