மனிதன் யாருக்கு வாகனமாகிறான்?இந்த இதழ் முழுவதும் தெய்வங்களின் வாகனங்களை குறித்து தெரிந்து கொள்வீர்கள். பறவைகள், விலங்குகள் என்று எல்லாவற்றையும் தெய்வங்களின்  வாகனங்களாக நம் மதங்கள் வரையறுத்து திருவிழா காலங்களில் வலம் வரச் செய்கின்றன. இதெல்லாம் சரிதான். மனிதனும் ஒரு விலங்குதானே. இவன்  யாருக்கு வாகனன். இவனை எந்த தெய்வம் வாகனமாக உபயோகப்படுத்திக் கொள்கின்றது. அந்த தெய்வம் வேறு யாருமல்ல… சாட்சாத் குபேரன்தான்.  அதனாலேயே குபேரனின் வாகனத்தை நர வாகனம் என்று குறிக்கின்றார்கள்.  

‘‘நர வாகனனா…’’
ஆமாம். குபேரன் நம்மை வாகனமாகக் கொண்டு நகர்த்திச் சென்று உலகிலுள்ள சகல, அழியும், நிரந்தரமற்ற சுகங்களை அனுபவிக்கிறான். நாம் குபேரனுக்கு  கட்டுப்பட்டவர்கள். நன்கு கவனியுங்கள். அகங்காரம் தன்னுடைய மாபெரும் ஆளுமையாக நினைப்பது செல்வத்தைத்தான். சகல செல்வங்களும் இருந்தால்  எல்லோரையும் வசப்படுத்தி ஆளுமை செய்யலாம் என்பதே குபேரனின் அடிப்படை தன்மையாகும். அதனாலேயே தூய ஞானியர் நீங்கள் செல்வம் என்று எதை  நினைக்கிறீர்களோ அதை தங்களின் சுண்டு விரலால் கூடத் தொடுவதில்லை.

அவ்வாறு தொடாமல் இருப்பதையே தங்களின் முதல் உபதேசமாக வைத்திருக்கின்றனர். அதாவது குபேரனை தொடராதே என்பதுதான் அது. இன்னொன்று, நீங்கள்  உங்களை மனிதனாக நினைக்கின்ற வரையிலும் உங்களை விலங்காக வைத்து அவன் ஏறி சவாரி செய்து கொண்டிருப்பான். அதனாலேயே வேதாந்தங்களும்,  மகரிஷிகளும், ஞானிகளும் நீ இந்த மனிதன் என்ற விலங்கல்ல. நீ அகங்காரம் அல்ல. மனமல்ல. நீயே பிரம்மம் என்று அறைகூவுகிறது. ’’

‘‘ஏன் அத்தனை பயம் குபேரனிடம்’’
‘‘குபேரனின் உச்சகட்ட ஆசை என்னவெனில், உலகிலுள்ள அனைத்தும் ஏதேனும் ஒருகணம் என்னைப் பார்க்க வேண்டும். அப்படி பார்ப்பதற்கு இந்த  அகங்காரத்தை எவ்வளவு உயரம் எழச் செய்ய முடியுமோ அத்தனை உயரம் உயரச் செய்வான். வேதாந்தம் மிகக் கறாராக உலகியல் பொருட்களை தள்ளும்.  ஏனெனில், ஈசனிடமிருக்கும் பேரானந்தம், பிரம்மத்தின் சுகத்தை ஆயிரம் குபேரனாலும் கொடுக்க முடியாது என்பது குபேரனுக்கே தெரியும்’’ ‘‘அப்போது இந்த செல்வங்கள் வேண்டாமா? குபேரனின் அருள் வேண்டாமா?’’

‘‘நீங்கள் உயர்ந்த ஆன்மிகத்தின் லட்சியத்தை நோக்கி பயணிக்கும்போது செல்வத்தின் நிலையாமையை உணர்வீர்கள். தனக்குள் இருக்கும் பெரும் ஞான நிதிக்கு  இணையானதாக வேறு எதுவும் இல்லை என்பதை அனுபவத்தில் அறிவீர்கள். குபேரனை இயக்குவதும் இயக்காததும் பிறகு உங்கள் கையில்...குபேரன் உலகியல்  வாழ்க்கைக்கு உதவுவார். ஆனால், ஆச்சரியமாக குபேரன், தன் கைகளில் கீரிப் பிள்ளையை வைத்திருக்கின்றார்.

கீரியைப் பார்த்தால் பாம்பு சீறி எழுவதுபோல அவர் கையிலிருக்கும் கீரிப் பிள்ளையால் குண்டலினி எனும் நாகம் யோகமாக மேலெழும்புகின்றது. இதுவும்  குபேரனின் செயல்தான். இந்த ஒட்டு மொத்த விஷயத்தையும் பார்த்துத்தான் நர வாகனமாக மனிதனையும் இந்து மதம் முன் வைக்கின்றது. நம் தோளின் மீது  யாரை வைப்பது என்று முடிவெடுப்பது நம் கையில் உள்ளது.’’

கிருஷ்ணா(பொறுப்பாசிரியர்)